மைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை! -டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஃபேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பார்க்க அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உரிமையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
சமூக வலை தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்கவும், இவைகளில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்க சமூக வலை தள நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
13 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பார்வையிட அனுமதி இல்லை என்ற வாசகத்தை ஃபேஸ்புக், ஆர்க்குட், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரியளவில் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
பகிரப்படும் தகவல்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் தகவல்கள், படங்கள் பகிரப்படுகின்றன. ஆபாசப் படங்கள், தகவல்களை 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பார்க்க நேரிடுவதும், பகிர்வதும் ஆபத்தானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கணக்கு தொடங்க முடியாது ஜி.மெயில் உபயோகித்து சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கினால் வயது தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது. அதில் 13 வயதிற்கு குறைவானதாக குறிப்பிடப்படுபவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க அனுமதி கிடையாது என்று கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
source: http://tamil.oneindia.in/news/