சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன?
தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும், சமூகங்களுக்குமான பொது விடயம். ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு அரசியலில் தான் முடியும்.
அனேகமாக ஒவ்வொரு சிறுபான்மை வாழ்விடங்களிலும் இன, மத வாத பெரும்பான்மை அரசியலின் இரத்தம் குடிக்கும் மேலாதிக்க அரசியல் இருந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப் படாத விதி! இந்த விடயத்தில் அடிப்படைக் காரணத்தை பற்றி தெளிவு பெறாமல் விளைவுப் பகுதியில் இருந்து தீர்வு நோக்கி சிறுபான்மையை நகர்த்துவது ஒரு தவறான அணுகு முறை.
இந்தத் தவறுதான் மிகச் சிறந்த போராட்ட பாதையாக ஒவ்வொரு சிறுபான்மை நிலங்களிலும் உணர்த்தப் படுகின்றது. எல்லோராலும் மார்தட்டிப் பேசப்படும் ஜனநாயகமும் இந்த பக்கச் சார்பு அரசியலில் பெரும் பான்மையின் பக்கமிருந்து தான் தனது நியாயத்தை காட்டி நிற்கும்.
பெரும்பான்மைக்கு எதிராக வெளிப்படையாக சிறுபான்மையின் எந்த நடவடிக்கையும் பெரும்பான்மையின் ஆக்ரோசமான எதிர்ப்பு நிலையை மேலோங்கச் செய்து, மூர்க்கத் தனமாக சிறுபான்மைகள் மீது அத்து மீறவைக்கும். மிக அண்மைய தசாப்த இன, மத வாத அரசியல் நிகழ்வுகளில்இதற்கு சிறந்த ஆதாரங்களை எம்மால் காண முடியும்.
இந்த அடிப்படையில் வன்முறையோ, சார்பு, எதிர் நிலை அரசியலோ பெரும்பான்மையை எதிர் கொள்வதில் ஒரு வெற்றிகரமான பாதையாக உணர முடியாதுள்ளது. ஒரு தேசிய எல்லைக்குள் சிறுபான்மை உள்வாங்கப் படும்போதே ஒரு வகையான அடிமை வரையறைக்குள் புதைந்து போய் விடுகின்றன. இந்த பக்கச் சார்பு ஆதிக்க அரசியலின் அதி உச்ச நிகழ்வுதான் பெரும்பான்மையின் வன்முறை அடக்கு முறைகள். இந்த அநியாயத்தின் சூட்டில் இருந்து தான் சிறுபான்மை தனது வாழ்வுக்கான போராட்டப் பாதையை நியாமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
உரிமைகள் சலுகைகள் போல் காட்டப் பட, தப்பிப் பிழைத்து முடிந்தால் வாழு என்ற ‘jungle law பெருந்தன்மையுடன் அள்ளி வீசப்பட, பெரும்பான்மை அபிலாசை மீது நேர்ந்து விடப்பட்ட பலிக்கடா வாழ்வே சிறுபான்மை வாழ்வாகும் .மேலும் பெரும்பான்மை எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு அரசியல் வடிவமெடுக்க சிறுபான்மை முயலும் சந்தர்ப்பங்களில் அத்தகு சிறுபான்மை தலைமைகள் திட்ட மிட்டு அழிக்கப்படும், சிதறடிக்கப்படும் என்பதும் நாம் கண் கண்ட உண்மைகள் .
ஆகவே சிறுபான்மையை பொருத்தவரை (மற்றும் பொதுவாகவும்) ஜனநாயகம் ஒரு தோல்வி நிலை கோட்பாடுதான் என்பதில் சந்தேகமில்லை. அதில் தீர்வை விட பக்கச் சார்பும், அத்து மீறலும் அதிகமாக இருக்கின்றது .இந்த அரசியல் வடிவத்தை ஏற்றுக்கொண்டு சிறுபான்மை உரிமை மற்றும் சுயாதிபத்தியம் பற்றி சிந்திப்பது ஒரு வீண் வேலையாகும்.
அப்படியானால் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன? அதற்கான விடை மிக அவசரமாக இஸ்லாமிய அகீதாவின் ஆழ்ந்த தெளிவில் இருந்து தனது சிந்தனைத் தரத்தையும், கருத்து வெளிப்பாட்டையும் ,நடத்தையையும் தீர்மானிப்பதோடு, இஸ்லாத்தின் சித்தாந்த வாதத்தின் கருத்தியலை முற்படுத்திய பகிரங்க பிரச்சாரத்தை பெரும்பான்மை நோக்கி செய்வதாகும்.
இதன் பிரதி விளைவாக இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும் அதன் உலகியல் தேவைப் பாட்டை புரிந்து கொண்ட நிலையில், பெரும்பான்மைக்குள் இருந்து ஒரு சார்பாளர் வட்டத்தை உருவாக்க முடியும். இந்த நிலை முஸ்லீம் உம்மாவை இன, மத அடையாளப் படுத்தலை தாண்டிய அதன் இயல்பான தோற்றத்தை காட்ட முடியும்.
மேலும் இஸ்லாத்தின் பொதுத் தலைமையான ‘கிலாபா’ அரசியல் எனும் ஒரே தலைமையின் கீழான ஒன்றிணைவு தொடர்பில் ஆழமானதும் தெளிவானதுமான அறிவையும் அது பெற்றுத் தரும் ‘இன்ஷா அல்லாஹ்’.
“இமாம் ஒரு கேடயம் ஆவார் .அவருக்கு பின்னால் இருந்து மக்கள் போர் புரிவார்கள் .அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள்” (முஸ்லீம்)
source: http://aburukshan.blogspot.in/2012/12/blog-post_9655.html#more