மீளவியலாக் குழி
[ மருத்துவ முன்னேற்றங்கள் மனிதர்களின் ஆயுளைக் கூட்டியிருந்தாலும், அவனின் இறுதி நிமிடங்களை அமைதியாகக் கடக்க உதவுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
எப்படியாவது உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையை உறவினர்களுக்கு ஊட்டி, நோயாளியைப் பல பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று செய்வதைப் பார்க்கும்போது, ஏற்கனவே பரிதவித்துக் கொண்டிருக்கும் நோயாளியை மேலும்மேலும் துன்பங்களுக்கு உள்ளாக்குகின்றோமோ என்ற குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.
அதேசமயம், மீண்டுவிடவும் வாய்ப்பிருப்பதால், இச்சிகிச்சைகளை வேண்டாமெனச் சொல்லவும் மனது துணிவதில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாய் அலைபாயும் உறவுகள். மருத்துவரே வேண்டாமெனச் சொல்லிவிட்டால் நம் மனம் ஏற்கலாம். அப்படிச் சொல்லாவிட்டால், பணம் பிடுங்கும் உத்தி என்று அவருக்கும் பழிச்சொல். ஒருவேளைச் சொல்லிவிட்டாலோ, வேற நல்ல டாக்டராப் பாக்கலாம்பா என்று தூண்டிவிடவும் சிலர்.
எப்படியோ, பிறக்கும்போதும் போராடிப் பிறக்கும் மனிதன், இறக்கும்போது போராடித்தான் போகவேண்டியிருக்கிறது. அப்படிப் போனபிறகாவது உடனே அனுப்பி வைக்கிறார்களா? அதற்கும் இப்போது ஃப்ரீஸர் பாக்ஸ்!! ]
மீளவியலாக் குழி
“அப்போ ஒரு எம்.ஆர்.ஐ. எடுத்துப் பாத்துடுவோமா?” – டாக்டர்.
ஆயாசமாயிருந்தது எனக்கு. இதுதான் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், ஏதாவது அதிசயம் நடந்து, இது நடந்துவிடாமல் இருக்கக்கூடாதா என்ற எதிர்பார்ப்பு-நப்பாசை எதிர்பார்த்ததுபோலவே பொய்த்தது. “அதுஸ வந்துஸ எம்.ஆர்.ஐ.யேதான் எடுக்கணுமா டாக்டர்?” என்ற என்னை, ‘பெட்ரோமாக்ஸேதான் வேண்டுமா’ என்று கேட்டதுபோல டாக்டர் முறைத்தார். நான் மௌனமாகத் தலைகுனிந்து, இன்ஷ்யூரன்ஸ் ஃபார்மை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.
எம்.ஆர்.ஐ.யின் அதிகக் கட்டணத்திற்காகப் புலம்புகிறேன் என்று நினைத்தால், இல்லை, பணமல்ல பிரச்னை. பயம்!! எம்.ஆர்.ஐ. என்பது என்னவென்றே தெரிந்திராத அதிர்ஷ்டக்காரர்கள் நீங்கள், அதுதான் உங்கள் உதட்டில் எள்ளல் புன்னகை வருகிறது. விளக்கியபின் சிரிக்கிறீர்களா பார்ப்போம்.
வீராணம் குழாய் தெரியுமல்லவா? அதில் ஒரு காலேகால்வாசி அளவில் விட்டமுள்ள ஒரு எட்டடி அடி நீளத்துண்டை வெட்டி எடுத்ததுபோல ஒரு குழாய் இருக்கும். ஒருபுறம் மட்டும் திறந்திருக்கும்; மறுபுறம் மூடியிருக்குமோ இல்லை சுவற்றை ஒட்டி இருப்பதால் மூடியதுபோலத் தோன்றுமோ என்னவோ. குழாய் மிகச்சிறிதாய், ஒரே ஒருவர் மட்டும் உள்ளே படுக்க முடியும் என்பதாகத்தான் இருக்கும். அந்த வளையத்தினுள் போய் வரும்படி ஒரு தானியங்கி படுக்கை இருக்கும். உடலில் ஸ்கேன் எடுக்க வேண்டிய பகுதி அந்த வளையப் பகுதியினுள் இருக்குமாறு நோயாளி படுக்க வைக்கப்படுவார். உடலின் உட்பகுதிகளைப் படம்பிடிக்க காந்த அலைகள் பயன்படுத்தப்படுவதால் சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே போல கதிர்வீச்சு அபாயம் சிறிதும் இல்லை.
அந்தப் படுக்கையில் படுக்க வைத்து, ஆளை ‘உள்ளே’ அனுப்பி விடுவார்கள். படம் பிடிக்கும்போது கடகடா, குடுகுடுவென்று ஏதோ ஹைதர்காலத்து மோட்டார் ஓடுவதுபோல நாராசமாய்ச் சத்தங்கள் கேட்கும். அதுவும் சுமார் 20 முதல் 40 நிமிடங்களுக்கு!! முடியும்வரை ஆடாமல், அசையாமல் படுத்திருக்க வேண்டும் – மூச்சுகூட மெதுவாத்தான் விடணும். அசைஞ்சா போச்!! மறுபடியும் ‘முதல்லேர்ந்து’ ஆரம்பிக்கணும்.
இப்படியான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துவரத்தான் நானும் இன்று வந்திருக்கிறேன். வழக்கம்போல முதலில் ஏஸியை ஆஃப் பண்ணச் சொல்லிவிட்டேன். சும்மாவே பயம். இதிலே ஏஸியும் சேர்ந்து, உள்ளே இருக்கும்போது, ஏதோ ‘ஃப்ரீஸர் பாக்ஸ்ல’ இருக்கிற எஃபெக்ட் தரும்!! வழக்கம்போலவே கம்பளிப் போர்வையையும் கேட்டுவாங்கி கழுத்துவரை போர்த்திக் கொண்டேன். மூஞ்சிமேலே ப்ளாஸ்டிக்கில் கிளிக்கூண்டு மாதிரி ஒண்ணைப் போட்டுவிடுவாங்க. அதுதான் உடலின் படங்களைக் சேகரிப்பதால், அது இல்லாம முடியாதாம்.
வழக்கம்போல, கையில் ஒரு பஸ்ஸரைத் தந்து, ஏதாவது பிரச்னைன்னா அழுத்தணும்னு சொன்னாங்க. இப்பவே அழுத்தி, நான் போமாட்டேன்னு சொல்லலாமான்னு இருந்துது. வழக்கம்போல “எவ்ரிதிங் ஓக்கே?”ன்னு அவங்களே கேள்வியும் கேட்டுகிட்டு, அவங்களே “ஓக்கே”ன்னு பதிலும் சொல்லிகிட்டு, கையாட்டி ‘உள்ளே’ அனுப்பிவச்சாங்க. நான் படுத்திருக்கும் படுக்கை உள்ளே செல்லச் செல்ல, ரேடியாலஜிஸ்ட்டும், நர்ஸும் தூரத்தில் சென்று, பின் போயே விட்டார்கள். இனி நான் மட்டுமே இங்கு.
மிஷின் ஓட ஆரம்பித்தது. ‘கடகடா, குடுகுடு’ டமாரம் போலச் சத்தம். இதுக்குத்தான் முதல்லயே காதில ஹெட்ஃபோன் மாட்டிக்கிறியான்னு கேட்டாங்க, நாந்தான் மாட்டேனுட்டேன். எப்பப் பாத்தாலும் காதுல செவிட்டு மிஷின் மாதிரி ஹெட்போன் மாட்டி பாட்டு கேக்கிறவங்களைப் பாத்தாலே பத்திகிட்டு வரும். ரோட்ல நடக்கும்போதுகூட காதுல பாட்டு அல்லது ஃபோன்!! சுற்றியுள்ள உலகமும், அதன் ஓசைகளும் இதைவிட சுவாரசியமானது என்பது ஏன் இவர்களுக்குப் புரியவில்லையோ?
அப்ப நீயும் இந்த ‘கடமுடா’ சவுண்டை ரசிக்கத்தான் ஹெட்ஃபோனை வேண்டாமுன்னு சொல்லிட்டியான்னு கேட்பீங்க. இல்லை, ‘உள்ளே’ இருக்கும்போது வெளியே என்ன நடக்குது என்பதற்கு ‘காது’ ஒன்றுதான் ஒரே தொடர்பு சாதனம். ஹெட்ஃபோன் மாட்டினால், வெளியே ஏதாவது நடந்துதுன்னா எனக்கு எப்படிச் சத்தம் கேட்கும்? ஒருவேளை கரண்ட் கட்டானால் என்ன செய்வார்கள்? ச்சேஸ இது என்ன தமிழ்நாடா? இங்கே துபாயிலெல்லாம் கரண்ட் கட்டே கிடையாது. அப்படியே டெக்னிக்கல் ஃபால்ட் என்றாலும், உடனே தானியங்கி ஜெனரேட்டர்கள் இயங்கத் தொடங்கும்.
‘உள்ளே’ பேச்சுத் துணைக்கு யாருமில்லை என்பதால், என் மனதோடே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். கரண்ட் கட் கூடப் பிரச்னையில்லை. நான் படுத்திருக்கும் படுக்கையை, ஒருவேளை கையாலேயே இழுத்து என்னை ‘வெளியே’ எடுத்துவிடுவார்கள் என நம்பலாம். ஒருவேளை பூகம்பம் வந்தால்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவார்களா, என்னைப் பார்ப்பார்களா? மனமே அடங்கு! மற்றவங்களை விடு, வெளியே கவலையோடு நிற்கும் என்னவர் மீது கூடவா நம்பிக்கையில்லை? அது.. அப்படியில்லை, இருந்தாலும்ஸ
பேசாதே.. அமைதியாய் இறைவனை நினை. ஆமாம்.. ஆமாம், அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை. சின்னக் குழாய் என்றாலும், இந்தக் குழாய்க்குள் பளிச்சென வெளிச்சமாய் இருக்கிறது. இதேபோல மரணத்துக்குப்பின் அடக்கம் செய்வார்களே, அந்தக் குழியில்? கடும் இருட்டாக இருக்குமே? உடல் மரணித்திருந்தாலும், உயிர் – ஆத்மா, ‘உயிர்ப்போடு’ இருக்குமே. இப்போ துணைக்கு ஆள் வெளியே நிற்கும்போதே பதறுகிறேனே, அப்போ என்னைமட்டும் தன்னந்தனியா விட்டுட்டு எல்லாரும் – என்னவர் உட்பட- போய்விடுவார்களே, அப்போ என்ன செய்வேன்? நல்லவர்கள் என்றால், அந்தக் குழி விசாலமாய் இருக்குமாம். அதுவே கெட்டவர்கள் என்றால், குழி குறுகிப் போய் உடலை நெருக்குவதில் எலும்புகளே உடைந்துவிடுமாமே? நான் நல்லவளா, கெட்டவளா? செய்த தவறுகள் அத்தனையும் இப்போ நினைவுக்கு வருகிறதேஸ அய்யோஸ துடிக்கும் துடிப்பில் இதயம் வெளியே தெறித்துவிடும் போல இருக்கிறதே!!
இறைவசனங்களைச் சொல்லிக் கொண்டேன். ‘ஆல் இஸ் வெல்’லாக ஒரு ஆசுவாசம் கிட்டியது. கையில் இருக்கும் ‘பஸ்ஸரை’ அழுத்திவிடாதபடிக்கு ஒருமுறை இறுகப் பிடித்து, என் கையில் அது இருப்பதை உறுதி செய்துகொண்டேன். அது இருப்பது ஒரு தைரியம். பஸ்ஸர் அல்லது பெல் என்று பேர் வைத்திருந்தாலும், பார்ப்பதற்கு இரத்த அழுத்த மானியில், கைப்பட்டையில் காற்றடித்து ஏற்றுவதற்கு ஒரு பச்சை பல்பு போல இருக்குமே அதுபோலவே இருக்கும் ரப்பரால் செய்யப்பட்ட கையடக்கக் குமிழ். அதன் ஒரு முனையிலிருந்து நீண்ட ஒரு வயர் இணைக்கப்பட்டிருக்கும். அதுதான் மின் இணைப்பாக இருக்கும்போல.
இதற்குமுன் பல முறை எம்.ஆர்.ஐ. எடுத்திருந்தாலும், இந்த முறை கொஞ்சம் அதிகமாகவேப் படபடவென்றிருக்கிறது. கடைசியாக எடுத்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டது என்பதால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிதான் காரணமோ என்னவோ. கண்களை மட்டும்தான் அசைக்கலாம். அப்படிச் சுற்றிச் சுழற்றிப் பார்க்க அந்தக் குழாய்க்குள் என்ன இருக்கிறது? முன்பு வழமையாக ஸ்கேன் எடுத்துவந்த ஸ்கேன் சென்டரின் எம்.ஆர்.ஐ. மெஷினுள், நோயாளியின் மேல்பக்கம் ஒரு கண்ணாடி இருக்கும். அதில் தெரியும் நோயாளியின் முகம், ஸ்கேன் மெஷினை இயக்குபவருக்கும் முன் திரையில் தெரியும். இதில் அப்படியொன்றையும் காணோம். அந்தக் கண்ணாடி இருந்தாலாவது அதில் நம் முகத்தையே முறைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அது இல்லாததும் ஒரு ஆசுவாசம்தான். இல்லைன்னா, என் முகத்தில் அப்பியிருக்கும் பயத்தை ரேடியாலஜிஸ்டும் பார்ப்பாரே!!
கொஞ்சம் அசைந்தாலும் எல்லாமே “ரிப்பீட்டு” என்பதால் அப்போது யாரேனும் கிச்சுகிச்சு காட்டியிருந்தால்கூட அசைந்திருக்க மாட்டேன். முதல்முதலாய் எம்.ஆர்.ஐ. எடுக்கும்போது ஸ்கேனின் நடுவில் ‘கான்ட்ராஸ்ட்’ ஊசி போடும்போது, ரேடியாலஜிஸ்டிடம் ‘கொஞ்சம் எழுந்து உக்காந்துக்கிறேனே, வலி தாங்க முடியவில்லை’ என்று சொன்னபோது, “இல்லைம்மா, இப்ப நீங்க அசைஞ்சா முதல்லருந்து மறுபடி ஆரம்பிக்கணும்’ அவர் சொன்னப்ப “அய்யோ, வேண்டாம்”ன்னு அலறினது ஞாபகம் வந்தது.
அசையாமல் இருப்பது என்றதும் சின்னம்மா சொன்னது நினைவு வந்தது. உறவினர் ஒருவரின் திடீர் மரணம் குறித்துப் பேசியபோது, ‘ஒருநாளும் படுக்கையில் கிடந்துவிடக்கூடாது. கடைசி வரை கைகால் சுகத்தோடே இருந்துட்டுப் போய்டணும்’ என்று நான் சொல்ல, சாச்சி அந்த எண்ணம் கூடாதென்றார். அதாவது ‘நேற்றிருந்தான் இன்றில்லை’ என்று போவதைவிட, உடல்நலமில்லாமலோ அல்லது மூப்படைந்தோ மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணிப்பதுதான் சிறந்ததாம். ஏனென்றால், இனி மரணம்தான் விடுதலை தரும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் மனிதனுக்கு அதுவரைத் தான் வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. பரிட்சை எழுதிமுடித்ததும், மாணவன் தன் விடைத்தாளைச் சரிபார்ப்பது போல, தன் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, வருந்தி தவறிழைக்கப்பட்டவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வானாயின், மரணத்தைப் பயமின்றி எதிர்கொள்ள முடியலாம். இதுவே அகால மரணம் என்றால், அந்த மனிதனுக்குத் தன் தவறுகளை முழுமையாக உணரக் கிடைக்காமலே போய்விடுகிறது.
அது சரிதான், ஆனாலும்…. என்று இழுத்தபோது சொன்னார். எது நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நடக்கும். ஒருவேளை படுக்கையில் இருக்கும் நிலை வாய்த்தால் அதிலும் நன்மையை எதிர்பார்த்து ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர, இப்படியாகிவிட்டதே என்று மருகக் கூடாது. ‘இருந்தாலும், மத்தவங்களுக்குச் சிரமம்தானேஸ’ என்றதும் சின்னம்மா சொன்னார், ‘எப்படி இருந்தவர் இப்படிக் கிடந்துவிட்டார் என்று எண்ணிப் பார்த்து, இருப்பவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்கும் இதுபோல எதுவும் நேர்ந்தால், தன்னை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று தன் குடும்பத்தினருக்குப் பாடம் எடுப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கானப் பணிவிடைகளின் சிரமங்களால், தாமும் இந்நிலை அடையாதிருக்க உணவு, வாழ்க்கைமுறைகளைக் கட்டுப்படுத்தி உடல்நிலை பேண வேண்டும் என்கிற அக்கறை வரும்’. தாத்தா இறந்ததும், அவர் உணவுண்ட அலுமினியத் தட்டை, பேரன் தன் தந்தைக்கெனப் பத்திரப்படுத்திய கதை ஞாபகம் வந்தது.
எண்ணவோட்டங்களில் முங்கிப் போயிருந்த ‘கடமுடா’ சத்தம், மீண்டும் காதுகளைத் துளைத்தது. கையில் இருந்த பஸ்ஸரை தடவிக் கொண்டேன். சமீப காலமாக யாரும் வீட்டில் வைத்து இறந்ததாகக் கேள்விப்பட்ட நினைவில்லை. அந்த ஆஸ்பத்திரி ஐஸியூவில், இந்த ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டரில்.. இப்படித்தான் கேள்விப்படுகிறேன். முன்காலங்களில், ஆஸ்பத்திரிகளில் ஒரு கட்டம் வரை சிகிச்சை செய்து முயன்றுபார்த்துவிட்டு, ‘இன்னும் ஒரு வாரம்தான் தாங்கும். வீட்டுக்குக் கொண்டுபோயிடுங்க’ என்று சொல்வார்கள். இப்போ எந்த மருத்துவமனையில் அப்படிச் சொல்கிறார்கள்?
முன்பெல்லாம், அப்படி இறுதி நிமிடங்களில் இருப்பவர்களே ‘என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க’ என்பார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். அதேபோல வீட்டில் வைத்து, இறைவசனங்களைப் படித்துக் காட்டுவதும், புனித நீரை வாயில் ஊற்றுவதும் என அமைதியானச் சூழல் இருக்கும். இந்துமதத்தினர், இத்தருணத்தில் உறவினர்களைக் கொண்டு அவரது வாயில் பால் ஊற்றச் சொல்வார்களாம். கிறிஸ்தவர்களும் பைபிள் வசனங்களைப் படிப்பார்களாயிருக்கும். பள்ளியில் உடன் படித்த ரோஸி ஷரோன் தன் அண்ணன் விபத்தில் உயிரிழந்தபோது, இறுதிச் சடங்குகளின் ஃபோட்டோ ஆல்பம் என்று கொண்டுவந்து பள்ளியில் காண்பித்தபோது, இதையெல்லாமா படம்பிடிப்பார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது. பிறகு சில திரைப்படங்களிலும் அப்படியானக் காட்சிகளைப் பார்த்தபிறகு இது இறந்தவர்களின் நினைவாகப் பலரால் பின்பற்றப்படும் வழக்கம் என்று புரிந்தது.
மருத்துவ முன்னேற்றங்கள் மனிதர்களின் ஆயுளைக் கூட்டியிருந்தாலும், அவனின் இறுதி நிமிடங்களை அமைதியாகக் கடக்க உதவுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எப்படியாவது உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையை உறவினர்களுக்கு ஊட்டி, நோயாளியைப் பல பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று செய்வதைப் பார்க்கும்போது, ஏற்கனவே பரிதவித்துக் கொண்டிருக்கும் நோயாளியை மேலும்மேலும் துன்பங்களுக்கு உள்ளாக்குகின்றோமோ என்ற குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. அதேசமயம், மீண்டுவிடவும் வாய்ப்பிருப்பதால், இச்சிகிச்சைகளை வேண்டாமெனச் சொல்லவும் மனது துணிவதில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாய் அலைபாயும் உறவுகள். மருத்துவரே வேண்டாமெனச் சொல்லிவிட்டால் நம் மனம் ஏற்கலாம். அப்படிச் சொல்லாவிட்டால், பணம் பிடுங்கும் உத்தி என்று அவருக்கும் பழிச்சொல். ஒருவேளைச் சொல்லிவிட்டாலோ, வேற நல்ல டாக்டராப் பாக்கலாம்பா என்று தூண்டிவிடவும் சிலர்.
எப்படியோ, பிறக்கும்போதும் போராடிப் பிறக்கும் மனிதன், இறக்கும்போது போராடித்தான் போகவேண்டியிருக்கிறது. அப்படிப் போனபிறகாவது உடனே அனுப்பி வைக்கிறார்களா? அதற்கும் இப்போது ஃப்ரீஸர் பாக்ஸ்!! அமெரிக்காவிலிருந்து மகன், லண்டனிலிருந்து மகள், துபாயிலிருந்து பேரன், ஆஸ்திரேலியாவிலிருந்து தம்பி என்று பிணமான பின்னும் ஒவ்வொருக்காய்க் காத்திருப்பு!!
சரி, நான் இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வேன்? இறந்தவுடன் இறுதிச் சடங்குகள் செய்துவிடுங்கள், யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்று முன்பே சொல்லிவிடுவேனா? இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இறுதி நிமிடங்களில் என்னைக் காப்பாற்றும் முயற்சிகள் வேண்டாம் என்று சொல்வேனா? வாழும் ஆசை அப்போதும் விட்டுவிடுமா என்னை? ப்ச்.. இதெல்லாம் இப்போ எதுக்குத் தேவையில்லாம யோசிச்சுகிட்டுஸ பேசாம இறைதியானத்தில் மனதைச் செலுத்துஸ
மீண்டும் ஒருமுறை கையிலிருக்கும் பஸ்ஸரைத் வருடிப் பார்த்துவிட்டு, அப்படியே அதன் இணைப்பு வயரையும் தொடஸ ஆஸ வயரைக் காணோமேஸ எனில் வயர் அறுந்துவிட்டது போலவே??!! அப்படின்னா, நான் பஸ்ஸரை அழுத்தினாலும், அது ஒலியெழுப்பப்போவதில்லை!! அப்படியானால் எனக்கு ஏதாவது நேர்ந்தால், என்னை எப்படிக் காப்பாற்றுவார்கள்? எப்படி, என்ன செய்வேன் நான்ஸ நாக்கு உலர்ந்து போனதுஸ
பஸ்ஸர் ஒலிக்கவில்லையென்றால் என்ன இப்போ? நான் நல்லாத்தானே இருக்கேன். இதோ சற்று நேரத்தில் ஸ்கேன் முடிந்துவிடும். பின்னர் வெளியே வந்துவிடலாம் என்று அறிவு சொன்னாலும், மனம் அமைதியடையவில்லை. எப்படியேனும் இங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதாகவே எண்ணங்கள் அலைபாய்ந்தன. எப்படி, எப்படி என யோசித்துஸ. பதற்றத்தில், பயத்தில் என் முகம் மூடியிருந்த பிளாஸ்டிக் கூண்டைப் பிடுங்கி எறிய முயற்சித்தில், மெஷினின் அலாரம் அடிக்கஸ வெளியே இருப்பவர்கள் என்னவோ ஏதோ என்று பயந்து உள்ளே வந்து, என்னை வெளியே எடுத்துஸ
இந்தக் குழியிலிருந்து ஒருவழியாய் மீண்டுவிட்டேன்….
source: http://hussainamma.blogspot.in/2013/07/blog-post_17.html