இரண்டே போதும்! இரண்டுக்கு மேல் வேண்டாம்!!
ஆமீனா முஹம்மது, B.Sc., B.Ed.
லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.
நமது மூலமந்திரமான இக்கலிமாவில் நாம் ஏற்றுக்கொள்வது, அல்லாஹுவையும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மட்டும்தான், இக்கலிமாவின்படி அல்லாஹுவையும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்லாஹுவின் ஆணைகளான திருக்குர்ஆன் வசனங்களையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு நெறியான ஹதீஸ்களையும் ஏற்று நடப்போம் என வாக்களிக்கிறோம்.
அடுத்து அன்றாட ஐவேளை தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கிலும், இதனை நாம் குரல் உயர்த்தி ஒலி பெருக்கிகள் மூலம் உலகறிய உச்சரிக்கிறோம். பாங்கில் நாம் 15 வாக்கியங்களை உச்சரிக்கும்படி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுத் தந்துள்ளனர்.
அதில் ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்), ஹய்ய அலல் Fபலாஹ்(வெற்றியின் பக்கம் வாருங்கள்) என இரண்டு தடவை (மொத்தம் 4 தடவைகள்) தொழுகைக்கும், அதன்மூலம் கிட்டும் வெற்றிக்கும் அழைப்பு விடுக்கிறோம். மீதியுள்ள 11 வாக்கியங்களில் அல்லாஹு அக்பர் (4+2)=6 தடவைகள் அல்லாஹு மிகப் பெரியவன் என்று கூறுகிறோம்.அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்கிறேன் என இரண்டு தடவைகள் கூறுகிறோம்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – திட்டவட்டமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுவின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன் என 2 தடவைகள் கூறுகிறோம்.
கடைசியாக லாயிலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை, என இருதடவை கூறி முடிக்கிறோம்.
இதில் 9 தடவைகள் அல்லாஹுவைப் பற்றியும், இரு தடவைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நினைவுறுத்தி தொழுகை என்னும் வெற்றியின் பக்கம் அழைக்கிறோம். அதாவது நாம் மேலே குறிப்பிட்ட மூலமந்திரமான கலிமாவின் கருத்தையே பாங்காக நமக்கு கற்றுத் தந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், இந்த பாங்கில் எதனையும் கூட்டவோ, குறைக்கவோ நமக்கு அனுமதி இல்லை.
நாம் இறந்தபின் ஜனாஸா தொழவைத்து கபுரில் அடக்கியபின் கேட்கப்படும் முதல் மூன்று கேள்விகளான:
1. மன் ரப்புக? உனது இரட்சகன்(இறைவன்) யார்?
2. மன் நபிய்யுக? உனது நபி யார்?
3. மா தீனுக? உனது மார்க்கம் என்ன?
என்ற கேள்விகளும், நமது மூலக் கலிமா, நமக்கு தெரிவிக்கும் கருத்தையே வலியுறுத்துகின்றன. இம்மூன்று கேள்விகளில் முதலிரண்டு கேள்விகளுக்கு சரியான விடையாக எனது இரட்சகன் அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என பதிலளிக்க வேண்டும். மூன்றாவது கேள்விக்கு எனது மார்க்கம் இஸ்லாம் என பதிலளிக்க, நமது சொல், செயல், நடைமுறை, பேச்சு அனைத்திலும் அல்லாஹ்வும், ரசூலும் நமக்குக் காட்டிய தூய இஸ்லாத்தையே மார்க்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நான் இஸ்லாத்தைச் சார்ந்தவன்; முஸ்லிம் எனக் கூறுவதில் ஒவ்வொருவரும் மனநிறைவு அடைதல் வேண்டும்.
எல்லோரும் முஸ்லிம்கள் தானே? இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் தானே? நாம் அவர்களிலிருந்து பிரித்துக்காட்ட தனிப்பெயர் வைப்போம் என நாடுவதும், வைப்பதும், நவீன வழியா(பித்அத்தா)கும். குர்ஆன் ஹதீஸை போதிக்கும், அதன்படி நடக்க எத்தனிக்கும் நாம், பிரித்துக் காட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் அவனது நல்லடியார்களைப் பிரித்து அவர்களுக்கான வெகுமதிகளைக் கொடுக்க போதுமானவன்.
இவ்விதமாக நமது வாழ்வின் இறுதிக்கட்டம் வரை, நாம் அல்லாஹ் – ரசூல்; அல்லாஹ் – ரசூல் என கூறவேண்டியதிருக்க, கூறிக் கொண்டிருக்க, அல்லாஹ்வும் ரசூலும் நமக்குக் காட்டிய வழிகளை விட, தூய தெளிவான உயர்வான ஒனன்றை எவராலும் தர முடியுமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
எனவே தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம், நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹுவின் (அருள்மறை) குர்ஆன் இரண்டாவது அவனது ரசூலின் வழிமுறை. (அறிவிப்பவர்: அனஸ் இப்னுமாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஅத்தா)
இவ்விரண்டையும் ஏற்றுக் கொண்டேமென கலிமாவில் வாக்களிக்கிறோம். இவ்விரண்டின்படி வாழ்வோம். வாழ்கிறோமென உரத்த குரலில் தினசரி உலகிற்கு பறைசாற்றுகிறோம் பாங்கு (இகாமத்துக்) களில், அவ்விரண்டின்படிதான் வாழ்ந்தோமென பதிலளிக்க இருக்கிறோம் கபுரில்.
இக்கூற்றில் முஸ்லிமான எவருக்கும் சந்தேகமிருக்க முடியாது, இவ்விரண்டின்படி நடந்தால் தான் இரு உலகிலும் நமக்கு ஈடேற்றம் கிட்டி இறையன்பு கிடைக்குமென நாம் உணரவெண்டும். இதனை விட்டு மூன்றாவது ஒன்றை பின்பற்ற நமக்கு இஸ்லாம் அனுமதி தரவில்லை. இவ்விரண்டை விட்டு மற்றொன்றை பிடித்தால் கட்டாயம் அது நம்மை வழிதவறவே வைக்கும், என மேலே குறிப்பிட்ட ஹதீஸ் காட்டுகிறது. இவ்விரண்டையும் எவர் சொன்னாலும், யார் கூறினாலும் அதனை ஆராய்ந்தறிந்து, விளங்கி எடுத்து நடக்க ஆணையிடும் இஸ்லாம், சொன்னவரை, கூறியவரை கண்மூடி பின்பற்றச் சொல்லவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்விதம் முஸ்லிம்களாகிய நாம், குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே போதும், “இவ்விரண்டிற்கு மேல் வேண்டாம்” என உறுதி பூணுவோமாக. நாமனைவரும் இவ்விரண்டை பற்றிப் பிடித்து பன்மக்கள் பெற்று நல்ல இறையடியார்களாக ஆவோமாக.
source: http://annajaath.com