AN EXCELLENT ARTICLE
முஸ்லிம் ஆடை: எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
முஹம்மது இத்ரீஸ்
(லண்டனிலிருந்து வெளிவரும் ‘எழுநா’ மே-ஜுன் 2013, இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)
[ பொதுவாக எல்லா நாகரிகங்களும் அதன் ஆடைகளைக் கொண்டே தனித்துவமாக அறியப்படுகின்றன.
நைல்நதிக்கரை நாகரிகமோ, பபிலோனிய நாகரிகமோ, சிந்துவெளி நாகரிகமோ அல்லது யங்சிடியாங், குவாங்கோ நதிக்கரை நாகரிகமோ எதுவாக இருந்தாலும் அங்கு வாழ்ந்தவர்கள் எல்லோரும் மானுடப்பொதுமையில் ஒத்த தன்மையையே கொண்டுள்ளனர். அவர்களை பெரிதும் வேறுபடுத்திக் காட்டி நிற்பது அவர்கள் அணிந்த அந்நாகரிகங்களுக்கே சொந்தமான ஆடைகளே என்பதில் சந்தேகமில்லை.
இதன் மூலம் எல்லா நாகரிகங்களிலும் மறைத்தல் என்ற அம்சம் பேணப்பட்டுள்ளது. மறைத்தலில் அளவுகளில்தான் நாகரிகங்கள் அல்லது பண்பாடுகளுக்கு மத்தியில் வித்தியாசங்கள் காணபடுகின்றன. இந்த வித்தியாசங்களை கொண்டாடுவதே இஸ்லாத்தின் நடுநிலைப் போக்காகும்.
வித்தியாசங்களை அழித்து ஒற்றைத்தன்மையாக மாற்றும் எந்த உள்நோக்கமும் இஸ்லாமிய போதனைகளுக்குக் கிடையாது.
இஸ்லாம் பரவிய எல்லாப் பிராந்தியங்களிலும் இந்த ஆடைப் பல்வகைமையை அங்கீகரித்துஅதன் அடிப்படையான ‘அவ்றத்’ எனும் மறைத்தலின் அளவுகளைப் பற்றிய தெளிவுகளையே வழங்கிச் சென்றுள்ளது.]
முஸ்லிம் ஆடை: எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
ஒவ்வொரு பண்பாடும் தனக்கான தனித்துவமான அடையாளங்களையும் வாழ்வியல் வெளிப்பாடுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பண்பாட்டிலும் சமய நம்பிக்கைகளும் வழிபாடுகளும் சடங்குகளும் செல்வாக்குச் செலுத்துவதைப் போன்று உணவு, உடை போன்ற வாழ்வாதார விடயங்களும் அவற்றுடன் தொடர்புற்றுக் காணப்படுகின்றன. இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் பௌத்தமதம் செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வாறே தமிழ் பண்பாட்டில் இந்து சைவமதத்தின் செல்வாக்கைக் காணலாம். இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய பண்பாட்டின் செல்வாக்கை அவதானிக்க முடியும்.
ஒவ்வொரு பண்பாட்டுக்கும் ஒரு உலக நோக்கும் அதன் அடியாக எழும் வாழ்வியல் வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் உலக நோக்கு இஸ்லாமிய நோக்குமுறையில் அமைகின்றது. மனிதன், பிரபஞ்சம், வாழ்வு குறித்த தனித்துவமான நோக்குமுறையை இஸ்லாம் கொண்டுள்ளது. மொத்தப் பிரபஞ்சமும் இறைவனால் படைக்கப்பட்டது என ஒரு முஸ்லிம் நம்புவதோடு அப்பிரபஞ்சத்தில் ஒரு பிரதிநிதியாக தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென அந்நோக்குமுறை அவனுக்குக் கற்றுத்தருகின்றது.
இவ்வாழ்வியல் நோக்குமுறைக்கான அனைத்து சட்டம் சார் வழமைகளை இஸ்லாமிய ‘ஷரிஆ’ அவனுக்கு வழங்குகின்றது. மனிதனின் பிறப்பிலிருந்து அவனது மரணம் வரை அந்த ஷரிஆ அவனுக்கு வழிகாட்டுகின்றது. சமய நம்பிக்கைகள், வழிபாடுகள், கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகள், திருமணம், உணவு, உடை, பொழுதுபோக்கு என வாழ்வின் பல்வேறு பரிமாணங்களுக்கான நெறிமுறைகளை ஷரிஆ பரிந்துரை செய்கின்றது.
இஸ்லாமிய ஷரிஆவின் அடிப்படை நோக்கம் மனித வாழ்வை போஷிப்பதும் பாதுகாப்பதுமாகும். ‘மஸ்லஹா’ எனும் மனித நலன் சார்ந்த சட்டங்களே அதன் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் பயன்தரக்கூடிய அத்தனை விடயங்களையும் இஸ்லாமிய ஷரிஆ ‘ஹலால்’ என அனுமதிக்கின்றது. மனித வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியவற்றை ‘ஹராம்’ எனக்கூறி தடுக்கின்றது. இவ்வாறே இஸ்லாமிய ஷரிஆவில் மனித நலன் சார்ந்த தேவைகளிலும் பல படிநிலைகளை அமைத்துள்ளது. ‘ழரூரியாத்’ என்பது வாழ்வின் நிலைபேற்றிக்கு உதவக்கூடிய இன்றியமையாத அத்தியவசிய தேவைகளாகும். அடுத்த நிலையில் ஹாஜியாத் என்பது மானுட வாழ்விற்குப் போதுமான தேவைகளாகும்.
‘தஹ்சீனியாத்’ என்பது மானுட வாழ்வை மேம்படுத்துவதற்கும் அழகுபடுத்துவதற்குமான அழகியல் தேவைகளாகும். உதாரணமாக, ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவு ‘ழரூரியாத்’ ஆகும். போதிய அளவுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட, வயிறாற உண்ணக்கூடிய உணவு ஹாஜியாத் ஆகும். அவ்வுணவோடு சேர்த்து ஏனைய உப உணவுகளும் சிற்றூண்டிகளும் உற்கொள்ளும் முறை, அமைப்பு, உணவை பாதுகாக்கும் ஏற்பாடுகள் ‘தஹ்சீனியாத்’ பகுதியில் அடங்குகின்றன. எனவே முஸ்லிம் பண்பாட்டில் ஒரு தனிமனிதனை அத்திவசிய தேவையிலிருந்து போதியளவு தேவைகளை நிறைவேற்றி அழகியலோடு அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்கும் இஸ்லாமிய ஷரிஆ தூண்டுகின்றது. இந்த ‘தஹ்சீனியாத்’ எனும் அழகியல் பகுதியில் இஸ்லாமிய ஷரிஆ மிகுந்த நெகிழ்வுத்தன்மையுடன் அதன் சட்ட வழமைகளை கொண்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இந்தப் பின்புலதிலிருந்தே ஆடை பற்றிய நோக்குமுறையும் அமைகின்றது. ஆடை என்பது மனித மானத்தை காப்பதற்கும் அவனை அழகுபடுத்துவதற்குமான ‘தஹ்சீனியாத்’ பிரிவில் அடங்கும் அழகியல் தேவையாகும். அது ‘ழரூரியா’த்தோ ‘ஹாஜியா’த்தோ அல்ல. ஆடை பற்றிய இஸ்லாத்தின் அதிகாரபூர்வமான பிரதிகளில் இக்கண்ணோட்டமே வலியுறுத்தப்படுகின்றது. பொதுவாக பைபிள், அல்குர்ஆன் ஆகிய புனிதப் பிரதிகளில் குறிப்பிடப்படும் ஆதாம், ஏவாள் கதையிலும் இந்த ஆடை பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. ஆதிமனிதன், பறவைகளின் இறகுகளையும் இலைகுழைகளையும் விலங்குகளின் தோல்களையும் ஆடையாகப் பயன்படுத்தியதை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. மனித நாகரிகத்தில் ஆடை கலாசாரம் என்பது பரிணாமம் பெற்று வந்துள்ளதை அல்குர்ஆனின் கூறும் முன்னைய சமூகங்களின் நாகரிகங்களின் ஊடாக புரிந்து கொள்ள முடிகிறது. இன்றும்கூட இந்த உலகமயமாக்கல் யுகத்தில் ஆடைக்கலாசாரமும் அதன் உற்பத்திப் பொரிமுறைகளும் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுச் செல்கின்றது.
பொதுவாக எல்லா நாகரிகங்களும் அதன் ஆடைகளைக் கொண்டே தனித்துவமாக அறியப்படுகின்றன. நைல்நதிக்கரை நாகரிகமோ, பபிலோனிய நாகரிகமோ, சிந்துவெளி நாகரிகமோ அல்லது யங்சிடியாங், குவாங்கோ நதிக்கரை நாகரிகமோ எதுவாக இருந்தாலும் அங்கு வாழ்ந்தவர்கள் எல்லோரும் மானுடப்பொதுமையில் ஒத்த தன்மையையே கொண்டுள்ளனர். அவர்களை பெரிதும் வேறுபடுத்திக் காட்டி நிற்பது அவர்கள் அணிந்த அந்நாகரிகங்களுக்கே சொந்தமான ஆடைகளே என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம் எல்லா நாகரிகங்களிலும் மறைத்தல் என்ற அம்சம் பேணப்பட்டுள்ளது. மறைத்தலில் அளவுகளில்தான் நாகரிகங்கள் அல்லது பண்பாடுகளுக்கு மத்தியில் வித்தியாசங்கள் காணபடுகின்றன. இந்த வித்தியாசங்களை கொண்டாடுவதே இஸ்லாத்தின் நடுநிலைப் போக்காகும். வித்தியாசங்களை அழித்து ஒற்றைத்தன்மையாக மாற்றும் எந்த உள்நோக்கமும் இஸ்லாமிய போதனைகளுக்குக் கிடையாது. இஸ்லாம் பரவிய எல்லாப் பிராந்தியங்களிலும் இந்த ஆடைப் பல்வகைமையை அங்கீகரித்து அதன் அடிப்படையான ‘அவ்றத்’ எனும் மறைத்தலின் அளவுகளைப் பற்றிய தெளிவுகளையே வழங்கிச் சென்றுள்ளது.
இஸ்லாமிய ஷரிஆவின் நோக்கில் ஒவ்வொரு மனிதப் பிறவியும் சுதந்திரமாகவே பிறக்கின்றன. அதன் மீது சட்டப் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு தெளிவான ஆதாரம் அவசியம் வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் ஒன்றை கடமையாக்குவதற்கோ, தடுப்பதற்கோ உரிய சட்டமியற்றும் அதிகாரத்தை இறைவனுக்கு வழங்கியுள்ளது. அவ்வாறே பொருட்கள், மனித நடவடிக்கைகள் அனைத்தும் அடிப்படையில் ஆகும் என்பது இஸ்லாமிய ஷரிஆ கூறும் மற்றொரு விதியாகும். நிறுவப்பட்ட முறையும் அது காட்டும் கருத்தும் திட்டவட்டமாக அமையும் ஒரு சட்டவசனத்தின் மூலமே ஒன்றை வலியுறுத்தவோ தடுக்கவோ முடியும். மற்றப்படி அடிப்படையில் அனைத்தும் ஆகுமானதே. ஆகும் என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை. முகத்தையோ கைகளையோ திறக்க முடியாது என்பதற்கு எந்தத் தெளிவான ஆதாரங்களும் இஸ்லாத்தின் புனிதப்பிரதிகளில் கிடையாது. அக்கால அறேபிய மேட்டுக்குடிப் பெண்களின் முகத்திரை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் வருகைக்கு முன்னரும் பின்னரும் அம்மேட்டுக்குடிப் பெண்கள் அவ்வாடைக் கலாசாரத்தையே பின்பற்றி வந்தனர்.
இஸ்லாத்தின் அதிகாரப்பிரதிகளான அல்குர்ஆனிலும் நபிகளின் ‘சுன்னா’ எனப்படும் வாழ்வியலை எடுத்துக் கூறும் பிரதிகளிலும் ‘அவ்றத்’ எனும் மறைத்தலின் அளவுகள் பற்றியே விளக்கப்படுகின்றன. மாறாக ஆடைகளின் வகைகள், அவற்றின் நிறத்தேர்வு போன்ற அனைத்தும் பலவீனமான ஆதாரமற்ற அறிவிப்புக்களாகவே காணப்படுகின்றன. காரணம், உலகில் பல்வேறு பூகோள, நிலவியல் அடிப்படையில் வேறுபட்டு பல்வேறு தட்பவெப்ப காலநிலைகளுக்கு ஏற்ப வாழும் மனிதர்களுக்கு தட்டையான ஒரே கறுப்பு ஆடையை பரிந்துரை செய்வது நியாயமாகாது.
ஒவ்வொரு பூகோளப் பிராந்தியத்திலும் வாழும் மக்கள் தத்தமது வாழ்வியலுக்கேற்ப அவற்றைத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானது. ஆனால் துரதஷ்டவசமாக மேற்கின் காலனித்துவத்திற்கெதிராக மத்தியகிழக்கில் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியில் இந்த ஆடை கலாசாரமும் முக்கியமானது. ஆடைக்கு ஒரு பண்பாட்டு அடையாளம் இருப்பதைப் போல அரசியல் தன்மையும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இந்திய மகாராஜாக்களை பிரித்தானிய வேலைக்காரர்களின் ஆடையை அணிவித்து சந்திப்புக்கள் நிகழ்ந்த வேளையில்தான் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளை பிரதிபலிக்கும் அரைவேட்டி உடை அரசியலை காந்தி காலனித்துவவாதிகளுக்கெதிராக தூக்கி நிறுத்தினார்.
அந்த வகையில், மத்தியகிழக்கில் இஸ்லாமிய புரட்சிகளின் விளைவாக முஸ்லிம் பெண்கள், கல்வி, பண்பாடு, தொழில், அரசியல் போன்ற பல துறைகளில் கால்பதிக்கும் நிலை ஏற்படுகின்ற போது அவர்களுக்கான ஆடைபற்றிய கரிசனைகளும் வரையறைகளும் இஸ்லாமியவாதிகளிடம் குறிப்பாக இஸ்லாமிய புத்துயிர்ப்புவாதிகளின் மத்தியில் தோற்றம் பெறுகின்றன. மரபுவாதிகள் மொத்தமாக பெண்களை பொதுவாழ்வில் பங்குபெறாமல் தடுத்து நிறுத்திய வேளையில் புத்துயிர்ப்புவாதிகள் பொதுவாழ்வுக்கு தயார்படுத்தும் வகையில் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்திலும் கவனம் செலுத்துகின்றனர். இதிலும் ஆணாதிக்க வாசிப்பு முறையே பெரிதும் தொழிற்பட்டது. ‘
அவ்றத்’ எனும் மறைத்தல் எல்லாப் பால்நிலைகளுக்கும் பொதுவாகக் கூறப்பட பெண்களை மையப்படுத்திய ஆடை பிரச்சாரங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன. இந்த எழுச்சியின் தாக்கங்களை எண்பதுகளுக்குப் பிந்திய இலங்கைச் சூழலிலும் அவதானிக்க முடியும். அதற்கு முன்பு எழுபதுகளில் பதியுத்தீன் யுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முஸ்லிம் தனித்துவப் பாடசாலை என்ற எண்ணக்கருவிலும் முஸ்லிம் மாணவியரின் ஆடை பற்றிய விடயம் வடஇந்திய அல்லது பாக்கிஸ்தானிய ஆடைக்கலாசாரத்தையே பின்பற்றுவதாக மாறுகிறது. அதிலிருந்து சற்று வேறுபட்டதாகவும் தீவிர முனைப்புடனும் கறுப்புநிற ‘அபாயா’ எண்பதுகளுக்குப் பின்னரே இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அறிமுகமாகின்றது. அதே சமகாலப்பிரிவில் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாகச் சென்றவர்கள் அவ்வாடைக்கலாசாரத்தை இலங்கைக்கு காவி வருவதையும் அவதானிக்கலாம்.
முஸ்லிம் புத்துயிர்ப்புவாதிகளுக்கும் இந்த ஆடை மாதிரி வசதியாகப் போய்விடுகின்றது. அதற்கு முன்பிருந்த முஸ்லிம் பெண்களின் ஆசிய பண்பாடுகளுக்கேயுரிய சேலை முறை, அதனோடு தொடர்புடைய முஸ்லிம்களின் நெசவுத் தொழில் சார்ந்த எந்த சமூகவியல், பொருளியல் சார்ந்த வாதவிவாதங்களும் ஆழமான சிந்திப்புக்களுமின்றி உணர்ச்சிபூர்வமான ‘மேற்கும் வேண்டாம், கிழக்கும் வேண்டாம், இஸ்லாம் வேண்டும்’ என்ற கோஷத்துடன் அமுலுக்கு வருகின்றது. ஆனால் இந்த கறுப்பு நிற அபாயக்கூட இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம் பெண்களாலும் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது. மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களே இவ்வாடையை அணிகின்றனர். இவ்வாடையினால் முஸ்லிம் பெண்களின் உடல் ஆரோக்கியம், குறிப்பாக தலைமுடி, தோல் சார்ந்த உபாதைகளும் ஏற்பட்டு வருவதையும் காணலாம்.
ஒரு பண்பாடோ அல்லது ஒரு பண்பாட்டின் ஆடை கலாசாரமோ மற்றொரு பண்பாட்டின் ஆடைக்கலாசாரத்தோடு ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பண்பாடும் தனக்கேயுரிய தனித்துவத்துடன் பண்பாட்டு அடையாளத்துடன் வாழ்வதற்கான உரிமையிருக்கிறது. பௌத்தமோ, சைவமோ, இஸ்லாமோ, கிறிஸ்தவமோ இலங்கையில் பரப்பப்பட்ட மதங்களே. இம்மதங்களின் தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இலங்கையில் பிறந்தவர்களுமல்ல. அந்த வகையில் இலங்கையில் வாழும் எல்லா பண்பாடுகளைச் சேர்ந்த மக்களும் சமத்துவமான பண்பாட்டு உரிமைகளை பெற்றவர்களே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அண்மைக்காலங்களாக முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும்போக்காளர்களின் விவேகமற்ற செயல்வாதங்களால் இந்த ஆடைக்கலாசாரம் முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்பையும் சந்தேகத்தையும் பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
இஸ்லாத்தை பிழையாக விளங்குவதும் பிழையாக நடைமுறைப்படுத்துவதும் மிக முக்கியமான காரணமாகும். அரேபிய நாடோடி ‘பதாவி’ பழங்குடிச் சமூகங்களின் ஆடைக்கலாசாரத்தை அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஆசிய வாழ்வியல் சூழலில் இரவல் வாங்குவது ஆரோக்கியமானதல்ல. இலங்கையில் கூட நுவரெலியாவில் அணியப்படும் ஆடையை இலங்கையின் கரையோரப் பகுதியில் வெப்பகாலத்தில் அணியாமுடியாதல்லவா? கறுப்பு என்பது கூட அறேபிய மேட்டுக்குடி வர்க்க பெண்களின் ஆடைதான். அப்பாஸிய ஆட்சியில்தான் இவ்வாடை அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் வாழும் தற்காலம் பெண்களுக்கான சம உரிமையும் பெண்கள் செயல்படும் வெளிகளை அகலிப்பது பற்றி மிகப் பரவலாக கதையாடப்படுகின்ற, அதற்கான செயல்வாதங்களை முன்னெடுத்து ஓரளவு வெற்றியும் கண்டுவருகின்ற காலமாகும். எனவே ஒரு நாடோடி அரேபிய யுகத்தில் தோன்றிய ஒரு ஆடைக்கலாசாரத்துக்காக மொத்த இஸ்லாத்தையும் அதன் வாழ்வியல் கோட்பாடுகளை மற்றமைகள் தூற்றுவதற்கும் அதற்கெதிராக கிளர்ந்தெழுவதற்கும் முஸ்லிம்கள் வழிவகுக்கக்கூடாது.
source: http://idrees.lk/?p=2492