Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மாதத்துடனான உறவு மார்க்கத்துடன் இருந்தால்…

Posted on July 14, 2013 by admin

மாதத்துடனான உறவு மார்க்கத்துடன் இருந்தால்…

    உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்     

ரமழான் அருள்களின் பொக்கிஷமாய் வருகிற மாதம். பாவமன்னிப்பு, சுவனம், நரக விடுதலை முதலானவற்றை அது நமக்காக சுமந்து வருகிறது.

அன்பு, மனிதநேயம், உபசரிப்பு, ஒத்துழைப்பு என்பவற்றை அது எம்மிடையே வளர்க்கிறது. சுய கட்டுப்பாட்டையும் உன்னதமான நற்குணங்களையும் அது நம் மத்தியில் உருவாக்கி விடுகிறது.

நற்செயல்கள் புரிய அது நம்மைத் தூண்டுகிறது. நல்லவற்றை ஏவி அதன்பால் மக்களை அழைக்கும் பண்பையும் தீமைகளை எச்சரித்து அதன்பால் செல்லாது மக்களைப் பாதுகாக்கும் கரிசனையையும் அது நமக்குள் உருவாக்குகிறது.

அமானிதங்களை ஒப்படைத்து இரத்த உறவுகளைப் பேணி சுமுகமாகவும் இணக்கத்தோடும் வாழும் பக்குவத்தை அது நமக்குள் ஏற்படுத்துகிறது.

ரமழான் இதுபோன்ற எண்ணற்ற சிறப்புகளுடன் வருகிற மாதம் என்பதால் அதனை ஆவலோடும் ஆசையோடும் முஸ்லிம்கள் வரவேற்கிறார்கள், சிறப்பிக்கிறார்கள்.

முஸ்லிம்கள் இந்த மாதத்தோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவைத் தமது மார்க்கத்தோடும் ஏற்படுத்திக் கொண்டால் எப்படியிருக்கும்? அதனால் விளையும் நன்மைகள் எத்துணை தாக்கமுள்ளதாக இருக்கும்? அவ்வாறு செய்தால் பன்னிரண்டு மாதங்களும் ரமழான் போன்றிருக்குமல்லவா?

மாதத்தோடு உள்ள உறவு மார்க்கத்தோடும் வந்து விட்டால் முஸ்லிம்களின் வாழ்வில் எப்போதும் ரமழான்தான். எனினும், இன்றோ ரமழான் சிறிது களைகட்டி பிரகாசித்துவிட்டு மறைந்து செல்கிறது. ஏனைய காலங்கள் அமாவாசையாகி விடுகின்றன. ஏன் இந்த நிலை என்று சிந்தித்தபோது ரமழானை எதிர்கொள்ளும் அன்பு நெஞ்சங்களோடு ஆலோசனையையும் வழிகாட்டலையும் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அதன் விளைவே இந்தப் பத்தியாகும்.

ரமழான் வந்துவிட்டால் பிறரது ஆலோசனைகளை செவிமடுக்காமலே நாம் செய்யத் துவங்கிவிடும் நற்செயல்கள் பல இருக்கின்றன. அவற்றை மீண்டும் வலியுறுத்தி ஒரு புதிய ஆலோசனைபோல முன்வைக்க வேண்டியதில்லை. அத்தகைய நற்செயல்களை வழமைபோன்று அல்லது அதனைவிடச் சிறப்பாக நிறைவேற்ற முயற்சிப்போம். நோன்பு நோற்று… இரவுத் தொழுகையை நீண்ட நேரம் தொழுது… ஸகாத்தையும் கொடுத்து… இரத்த உறவுகளைப் பேணி… ஏழைகளையும் எளியவர்களையும் கவனித்து… அன்பு சகோதரத்துவம் என்பவற்றை வளர்த்து ரமழானை சிறப்பாக கௌரவிப்போம்.

இவற்றில் எல்லாம் எந்தக் குறைவையும் வைக்காத அதேவேளை, மற்றுமொரு விடயத்திலும் கவனம் செலுத்துவோம் என்பதே இந்தப் பத்தியில் நாம் எடுத்துக் கொள்ளுகின்ற வழிகாட்டலும் ஆலோசனையுமாகும்.

முஸ்லிம்கள் மாதத்தோடு (ரமழான்) ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கமான உறவை தமது உயிரிலும் மேலான மார்க்கத்தோடும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த சிரத்தை முஸ்லிம்கள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது. அது அதிகரித்தால் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து மாதங்களும் ரமழான் போலவே இருக்கும். அந்நிலையை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதே நாம் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் விடயமாகும்.

ரமழான் மாதத்துடனான உறவு பற்றி எமக்கு நன்கு தெரியும். அதனை வலியுறுத்தாமல் இந்த மாதத்தில் எந்தவோர் உபந்நியாசமும் நடைபெறுவதில்லை. அதேநேரம், ரமழான் கொண்டு வந்த குர்ஆனினதும்… அந்தக் குர்ஆன் கொண்டு வந்த மார்க்கத்தினதும் உறவு எவ்வாறிருக்க வேண்டும் அந்த உறவை வளர்த்துக் கொள்வது எங்கனம் என்பன போன்ற விடயங்கள் வலியுறுத்தப்படுவது குறைவாகவே இருக்கிறது. அந்த உறவை நாம் ஒரு முறை மீட்டிப் பார்ப்போம்.

மார்க்கத்துடனான உறவு

மார்க்கத்துடனான உறவை ஒரே வார்த்தையில் சுருக்கிச் சொன்னால் “மார்க்கத்தின் மூலாதாரங்களுடனான உறவு” என்று கூறிவிடலாம். அதாவது, குர்ஆன் ஸுன்னாவுடனான உறவு என்பதே அதன் பொருள்.

“இந்த இரண்டையும் நான் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள்” என்று அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய செய்தி நாம் அனைவரும் அறியாததல்ல. பிரபல்யத்திலும் முக்கியத்துவத்திலும் அந்தச் செய்தி குறைந்ததுமல்ல. இன்னும் சொன்னால், ரமழானுடனான உறவு மார்க்கத்துடனான உறவின் ஒரு பகுதி மட்டுமே. ரமழான் மாதத்துடனான உறவைவிட பல பத்து மடங்குகள் மார்க்கத்துடனான உறவு விசாலமானதும் ஆழமானதுமாகும்.

மார்க்கத்துடனான அத்தகைய உறவில் பல படித்தரங்கள் இருக்கின்றன. மிகச் சாதாரணமான எளிய படித்தரம் முதல் உன்னதமான உயர்ந்த படித்தரம் வரை அந்த உறவு வளர்ந்து செல்கிறது. அந்த உறவை எங்காவது ஒரு படித்தரத்தில் நிறுத்திவிடாது. தொடர்ச்சியாக மேல் நோக்கி நகர்த்திச் செல்பவருக்கு எக்காலமும் ரமழான் போலவே இருக்கும் இருட்டில் பிரகாசித்து விட்டு மறைந்துபோன ஒரு வெளிச்சம் போன்று அது இருக்க மாட்டாது.

மார்க்கத்துடனான உறவின் ஆரம்பம்

மார்க்கத்துடனான உறவு என்பது குர்ஆன். ஸுன்னாவுடனான உறவாகும் என்று பார்த்தோம். அத்தகைய உறவின் ஆரம்பப் படித்தரம் குர்ஆனை ஓதுவதாகும். (ஸுன்னாவை குர்ஆன் ஓதுவதுபோல ஓதுவதில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்)

குர்ஆனை ஓதுதல், பிறர் ஓதுவதைக் கேட்டல், திக்கித் திக்கி ஓதுதல், குர்ஆனை மகத்துவத்தோடு பார்த்தல் போன்ற செயல்பாடுகளை மார்க்கத்துடனான உறவின் ஆரம்பம் எனலாம். இந்த செயல்கள் மூலம் எமது உறுப்புகளான கண், காது, நா என்பன புனிதமிக்க மார்க்கத்துடனான உறவைத் துவக்கி வைக்கின்றன. அதேநேரம் இந்தச் செயல்களுக்கு அல்லாஹ் நற்கூலியையும் கொடுக்கிறான். இது ஓர் ஆரம்ப உறவு மட்டும்தான் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்த உறவை ரமழானில் பலர் துவங்கி வைக்கின்றனர். ரமழான் முழுவதும் பலர் குர்ஆனைப் பாராயணம் செய்கின்றனர். ரமழான் முடிந்ததோடு அந்த உறவு முற்றுப் பெற்றுவிடுகிறது அப்பால் நகர்வதில்லை. மார்க்கத்துடனான உறவு பற்றிய அறியாமை இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

மார்க்கத்துடனான உறவின் அடுத்த கட்டம்

குர்ஆன், ஸுன்னாவைக் கற்றுக் கொள்வதே மார்க்கத்துடனான உறவின் அடுத்த கட்டமாகும். இந்தக் கட்டத்தில் ஒருவர் பலவகையான செயல்களை செய்து இந்த உறவைப் பலப்படுத்தலாம். இது உறுப்புகளுடன் மட்டுப்பட்டிருந்த மார்க்க உறவை அறிவோடும் சிந்தனையோடும் நெருக்கமாக்கிவிடுகின்ற முயற்சியாகும்.

1. குர்ஆனைப் பொருளறிந்து தர்ஜமாவுடன் ஓதுவது இந்த உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாகும். குர்ஆனின் ஒரு வசனத்தையோ அல்லது ஒரு பக்கத்தையோ ஓதி விட்டு அதன் (தர்ஜமா) மொழிபெயர்ப்பை வாசிப்பதன் மூலம் நாவில் பட்ட குர்ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக அறிவிலும் படத் துவங்குகின்றன.

2. குர்ஆனின் சொற்களைப் பொருளுடன் கற்பது மற்றுமொரு வழி:  சிறிய அத்தியாயங்களைக் கற்பதன் மூலம் இந்த முயற்சியைத் துவங்கலாம். சிறிய அத்தியாயங்களில் காணப்படும் அறபுச் சொற்களின் பொருள்களைக் கற்று அந்த அத்தியாயங்களை பொருளோடு ஓதும் நிலையை முதலில் அடைய வேண்டும். இவ்வாறு பல ஜுஸ்உக்களை கற்றறிந்து பொருளோடு ஓதுபவர்கள் இன்று எம்மத்தியில் இருப்பது ஒரு நற்செய்தியாகும். இதேபோன்று, நபிமொழிகள் பத்தையோ நாற்பதையோ படிப்படியாக அவற்றின் சொற்களோடும் பொருள்களோடும் கற்றறிந்து  கொள்ளளாம்.

3. குர்ஆனில் ஒரு சில அத்தியாயங்கள், தெரிவு செய்யப்பட்ட நபி மொழிகள் என்பவற்றுக்கான விரிவான விளக்கத்தை ஆலிம்கள் வாயிலாகவோ அல்லது தப்ஸீர்கள் மூலமாகவோ கற்றுக் கொள்ளலாம். அத்தகைய விளக்கங்களை கூட்டல் குறைத்தல் இன்றி பிறருக்கு எடுத்து சொல்லும் அளவுக்கு நுணுக்கமாக கற்றுக் கொண்ட பலர் இன்று நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்கள் வியாபாரிகளாக, பட்டதாரிகளாக, மருத்துவர்களாக இன்னோரன்ன துறைகளிள் இருக்கும் அதேவேளை, மார்க்கத்துடனான உறவில் இவ்வாறான ஒரு நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பது ஒரு சிறந்த முன்மாதிரி அல்லவா?

4. இஸ்லாத்தின் கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றிய மொத்தமான ஒரு பார்வையை சுருக்கமாகவேனும் விளங்கி வைத்திருக்ககும் நிலையை அடைதல் மார்க்கத்துடனான உறவில் இன்னுமொரு படித்தரமாகும். இது ஒவ்வோர் அத்தியாயமாக ஒவ்வொரு நபிமொழியாக கற்பதல்ல. மாறாக கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டையும் மொத்தமாக விளங்கிக் கொள்வதற்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பான பாடநெறிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் இந்த நிலையை அடையலாம். ஆலிம்களும்கூட இத்தகைய ஒரு விளக்கத்தைப் பெறாமலிருக்கும் நிலை சிலபோது ஏற்பட்டிருக்கலாம். அதேநேரம், இஸ்லாத்தைக் கற்கும் ஆர்வமுள்ள பலர் இத்தகையதொரு வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் பெற்றுமிருக்கிறார்கள். அது ஒரு பாக்கியமும்கூட. “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்க விளக்கத்தையும் கொடுக்கிறான்” என்பது நபிமொழியாகும்.

இன்னும் பல படித்தரங்கள் இஸ்லாத்தை கற்றுக் கொள்வதில் இருக்கத்தான் செய்கின்றன. விரிவஞ்சி அவற்றை வேறு சந்தர்ப்பங்களுக்கு விட்டுவிடுகிறேன்.

மார்க்கத்துடனான உறவின் மூன்றாம் கட்டம்

மார்க்கத்தை கற்றுக் கொண்டவுடன் செயற்படுத்த வேண்டும். அதுவே அடுத்த கட்டம் எனப் பலரும் நினைப்பதுண்டு. அது உண்மைதான். எனினும், கற்றலுக்கும் செயற்படுத்தலுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது என்பதை அதிகமானவர்கள் உணர்வதில்லை. அந்தத் தடுப்பை (தடையை) அகற்றினால்தான் கற்றதை செயற்படுத்துவது இலகுவாக இருக்கும். அந்தத் தடை வேறு எங்குமல்ல அவரவரது உள்ளங்களில்தான் இருக்கிறது.

அந்தத் தடை எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதற்கான ஒரு பயிற்சி கீழே தரப்படுகிறது. பயிற்சியில் ஈடுபடுங்கள். மார்க்கத்துடனான உறவில் அடுத்த கட்டத்திற்கு அது உங்களை நகர்த்தும், இன்ஷா அல்லாஹ்.

நாம் கற்று அறிந்து கொண்ட சில அம்சங்கள் வருமாறு:

1. ஸுபுஹ் தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்றிய மனிதனின் நாள் அவனுக்கு நல்ல நாளாகும்.

2. தனக்குப் பாதகமாக இருந்தாலும் உண்மையைப் பேசி நீதியின் பக்கம் இருக்க வேண்டும்.

3. வாங்கிய கடனை வாக்குறுதியளித்த நேரத்தில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

4. ஹராமான சினிமா, தொலைக்காட்சி, நாடகம் போன்றவற்றில் நேரத்தை செலவு செய்யக்கூடாது.

5. அடுத்தவர்களின் குறைகள், பலவீனங்களை மூன்றாமவரிடம் பேசுவது புறமாகும். அது விபசாரம் செய்வதைவிடக் கொடிய பாவமாகும்.

6. வாடகைக்கு எடுத்துள்ள வீடு அல்லது கடை அல்லது பிறருக்குச் சொந்தமான நிலம், சொத்து என்பவற்றை அமானிதமாகக் கருதி உரியவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

7. தாய், தந்தையரை மனம் புண்படாமல் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.

8. மனைவி, பிள்ளைகளுடன் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருக்க வேண்டும்.

9. எம்முடன் முரண்படுபவர்கள் நன்மைகள் செய்தாலும் அவற்றை அங்கீகரிக்கவும் பாராட்டவும் தவறக்கூடாது.

10. ஸகாத்தை உரிய முறையில் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

11. சீதனத்தை இழிவானதாகவும் சின்னத்தனமாகவும் கருதி விட்டு விட்டு பெருமனதோடு மஹர் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும்.

12. அல்லாஹ்வின் சட்டங்களுக்கேற்ப வாரிசுகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

13. தனது பிரச்சினைகளைப் பிறரிடம் எடுத்துக் கூறி முறைப்பட்டு மனம் சஞ்சலமடையாதிருக்க வேண்டும்.

14. பிறர் நல்வாழ்வு வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும்.

15. குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ என்னைக் கவனிக்கவில்லை என்பதை நினைத்து வருந்தாதிருக்க வேண்டும்.

16. பிறிதோர் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களை இஸ்லாமிய உம்மத்தின் அங்கத்தவர்களாகவும் தனது சகோதரர்களாகவும் கருதி அவர்களுடன் நல்லுறவு பேண வேண்டும்.

17. கருத்து வேறுபட்டவர்களை கௌரவித்தும் அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும்.

18. தவறு செய்கின்றவர்களை மன்னிப்பதோடு அவர்களுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

இவை போன்று நூற்றுக்கணக்கான இஸ்லாத்தின் நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை நாம் கற்றிருப்போம். மேலே கூறப்பட்ட 18ஐயும் நீங்கள் கற்றிருந்தால் ஒவ்வொன்றிற்கும் நேராக (சரி) என்றும் கற்றிருக்கா விட்டால் (பிழை) என்றும் குறியீடு வையுங்கள். அடுத்த அம்சமாக, இவற்றில் எத்தனை விடயங்களை செயல்படுத்தியுள்ளீர்கள் அல்லது செயற்படுத்த முடியும் என்பதையும் எத்தனை விடயங்களை செயற்படுத்த முடியாது என்பதையும் அடையாளப்படுத்துங்கள்.

செயல்படுத்த முடியாதவை இருப்பின், அவற்றை செயல்படுத்த முடியாதளவு உங்களது உள்ளத்தில் எது தடையாக அமைந்துள்ளது என்பதை நீங்களே தேடி அவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்தத் தடையை நீக்க முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் கற்றதை இலகுவாக செயல்படுத்தலாம்.

உள்ளத்தில் காணப்படுகின்ற அந்தத் தடையை நீக்குவதுதான் மார்க்கத்துடனான உறவின் மூன்றாவது கட்டமாகும். இஸ்லாத்தின் போதனைகளை செயல்படுத்த முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியானதொரு தடை உள்ளத்தில் தோன்றவே செய்யும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அத்தகைய தடைகளை நீக்கி தாம் கற்றவற்றை செயல்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

கற்ற நல்லம்சங்களை செயல்படுத்துவதற்கும் இஸ்லாத்தின் பார்வையில் தீய அம்சங்கள் எனக் கற்றுக்கொண்டவற்றை செய்யாதிருப்பதற்கும் உள்ளத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ அவற்றை உள்ளத்திலிருந்து அகற்றும் பணிக்கு அல்குர்ஆன் “உளத் தூய்மை” எனப் பெயரிட்டிருக்கிறது. காரணம், அந்தத் தடைகளை இஸ்லாம் அசுத்தங்களாகப் பார்க்கிறது. அந்த அசுத்தங்களை அகற்றி தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றி கண்டான். “(அந்த அசுத்தங்களை அகற்றாது) தனது உள்ளத்தை மாசுபடுத்தியவன் தோல்வியடைந்தான்” என அல்குர்ஆன் கூறுகிறது.

உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது மார்க்கத்துடனான உறவு, உறுப்புக்களைத் தாண்டி…. அறிவையும் தாண்டி… உள்ளத்தை அடைகிறது. உள்ளங்களிலிருக்கின்ற அசுத்தங்கள் அகற்றப்பட்ட பின்னர் கற்றவை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து ஈமானாக மாறுகிறது. அப்போது, அல்லாஹ் எதையெல்லாம் “சரி” என்று சொன்னானோ அவற்றை அந்த உள்ளமும் தயக்கமின்றி “சரி” எனக் கூறும் அதனால் தனது உயிருக்கு ஆபத்து வந்தபோதிலும் சரியே. மேலும், அல்லாஹ் எவற்றையெல்லாம் “பிழை” என்று கூறினானோ அவற்றை அந்த உள்ளமும் தயக்கமின்றிப் “பிழை” என்றே கூறும். அதன் மூலம் பலகோடி இலாபம் கிடைக்க இருப்பினும் சரியே.

மார்க்கம் வலியுறுத்துகின்ற “சரி”கள் அனைத்தையும் “சரி” கண்டு மார்க்கம் தடுக்கின்ற “பிழை”கள் அனைத்தையும் “பிழை”யாகப் பார்க்கின்ற ஈமானிய உள்ளம் இதன் மூலம் உருவாகிறது. இந்த உள்ளம் உருவாகி விட்டால் மார்க்கத்துடனான உறவின் அடுத்த கட்டத்திற்கு ஒரு மனிதனால் இலகுவாகச் செல்ல முடிகிறது.

மார்க்கத்துடனான உறவின் நான்காவது கட்டம்

இது ஈமான் கொண்டதைத் தயக்கமின்றி செயற்படுத்தும் கட்டமாகும். அதாவது, அல்லாஹ் “சரி” என்று கூறியவற்றை சிரமம் பாராது, இழப்புகளை அஞ்சாது, அச்சுறுத்தல்களுக்கு அசைந்து கொடுக்காது பாராட்டுகளுக்கு வளைந்து கொடுக்காது பின்பற்றி, “பிழை” என்று கூறியவற்றை தயக்கம் காட்டாது ஆசைகளுக்கு அடிபணியாது விட்டுவிடும் கட்டமாகும். இந்தக் கட்டத்தில் ஒரு மனிதன் எத்தகைய தியாகத்தையும் இலகுவாகச் செய்துவிடுவான். இஸ்லாத்தை அமுல்படுத்துவது அவனுக்கு ஒரு சுமையாக இருக்கவே மாட்டாது. அப்போது அவனது வாழ்க்கை முழுவதும் இஸ்லாமாகவே இருக்கும். நடத்தைகள் அனைத்தும் குர்ஆனாகவும் ஸுன்னாவாகவும் பரிணமிக்கும்.

இந்தக் கட்டத்திற்கு வரும்போது மார்க்கத்துடனான உறவு, உறுப்புக்களைத் தாண்டி,… அறிவைக் கடந்து… உள்ளத்தை அடைந்து… வாழ்க்கையாகப் பரிணமிக்கத் துவங்குகிறது. இனி மார்க்கத்துடனான உறவில் எஞ்சியிருப்பது இறுதிக் கட்டமாகும்.

மார்க்கத்துடனான உறவின் இறுதிக் கட்டம்

தனது வாழ்க்கையாக மாறிவிட்ட இஸ்லாத்தை பிறரது வாழ்க்கையாக மாற்ற முயலுகின்ற கட்டம்தான் இது. இந்தக் கட்டத்தில் அவன் ஒரு சேவகனாக… தொண்டனாக… பணியாளனாக… நன்மைகளை வாழவைத்து தீமைகளிலிருந்து ஏனையோரைப் பாதுகாக்கும் காவலனாக இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பதில் இன்பம் காண்பவனாக மாறுகிறான்… அவனது வாழ்வும் மரணமும் உயிரும் மூச்சும் நடத்தையும் குணமும் இந்த இலட்சியப் பணியாக மாறிவிடுகின்றன. நல்லவை வாழ்வதற்காகவே வாழ்ந்து நல்லவை வாழ்வதற்காகவே அவன் மரணித்துப் போகிறான்.

“மார்க்கத்துடனான உறவு” ஒரு மனிதனை எப்படிப்பட்டவனாக மாற்றியிருக்கிறது என்பதை சிறிது உன்னிப்பாக அவதானியுங்கள். அந்த உறவுதான் பூமியில் வாழ்கின்ற மனிதனை வானளாவ உயர்த்துகிறது. பிறக்கும்போது அற்பமாக இருந்த ஒருவனை இறக்கும்போது மா மனிதனாக மரணிக்கச் செய்கிறது. சுயநலம் நிறைந்த மனிதனை மக்கள் சேவகனாக மாற்றுகிறது.

எனவே, ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்!

ரமழான் மாதத்துடனான உறவை நாம் பலப்படுத்திக் கொள்வதுபோல் ரமழான் கொண்டு வந்த மார்க்கத்தோடும் எமது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டால் எமது வாழ்வு எப்படியிருக்கும்? அத்தகையவர்களின் வாழ்க்கை முழுவதும் ரமழானாக இருக்காதா?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

source: http://usthazhajjulakbar.org/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

88 − = 80

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb