பெண்களின் மான உணர்வும் ஆண்களின் மான உணர்வும்!
பெண்களின் மான உணர்வு :
பெண்களின் மான உணர்வு ஆண்களது மான உணர்வை விட உணர்ச்சிபூர்வமானது. ஓர் எளிய உதாரணத்தை நோக்கினால் இலகுவாக இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
ஓர் ஆணை ஒரு பெண் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தப் பார்வை ஆணை வெட்கத்துக்குள்ளாக்க மாட்டாது. மாறாக, அவனுக்குள் வேறு உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
இதற்கு நேரெதிராக தன்னை உற்றுநோக்கிய வண்ணம் ஓர் ஆண் இருக்கிறான் என்பதை ஒரு பெண் உணர்ந்தால் மறு கணம் வேகமாகச் சென்று அவள் மறைவிடுகிறாள்.
இயல்பான அவளது வெட்க உணர்வு அவளை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது.
அது மட்டுமல்ல, அவளது பௌதீகத் தோற்றமும் உடலமைப்பும்கூட இந்த உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
காவியங்கள், கதைகள் என்பன பெண்களை அணுவணுவாக வர்ணிப்பதற்கு காரணம் அவளது பௌதிகத் தோற்றமே. பெண்ணின் ஒவ்வோர் அங்கமும் அவளது மான உணர்வைக் கூர்மையாக்குகின்றன என்பது வெளிப்படையான ஒன்று.
ஆண்களின் மான உணர்வு :
ஆண்களைப் பொறுத்தவரை மான உணர்வு வித்தியாசமானது. பெண்களின் மான உணர்வில் வெட்கம் கலந்திருப்பதுபோல ஆண்களின் மான உணர்வில் கௌரவம் கலந்திருக்கிறது. ஒரு பெண் ஆடை அணியும்போது முதலில் வெட்க உணர்வை மறைத்துக் கொள்கிறாள். ஆடை அணிந்த பின்னரும்கூட மற்றொர் ஆண் அவளை நோக்கும்போது அவள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறாள். இந்த உணர்வைப் போக்குவதற்கு அவள் தனது உடலில் மேலும் சில பகுதிகளை மறைக்க வேண்டியிருக்கும். வெட்க உணர்வையும் பிறரைப் பார்க்கின்றபோதும் பிறரால் பார்க்கப்படுகின்றபோதும் ஏற்படுகின்ற சங்கடத்தையும் குறைப்பதற்கு அவள் ஒன்றில் வீட்டினுள் இருக்க வேண்டும். அல்லது, வீட்டுக்கு வெளியே வருவதானால் அந்த உணர்வுகளைக் குறைக்குமளவு போதிய பொருத்தமான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
ஒரு பெண்ணிடமிருக்கும் இயல்பான வெட்க உணர்வு, அதற்கு மேலால் பிறர் பார்க்கின்றபோது ஏற்படுகின்ற தர்மசங்கடம் என்பவற்றை மறைக்கும் ஆடையையே இஸ்லாம் அவளுக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒரு பெண் தனது முகத்தையும் மணிக்கட்டுக்குக் கீழால் இரு கைகளையும் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைக்கும்போது நாணம், அச்சம், தர்மசங்கடம் போன்றவற்றிலிருந்து அவள் பாதுகாப்புப் பெறுகிறாள். அதுமட்டுமல்ல, தனக்குள் ஒரு சௌகரியத்தையும் அவள் உணர்கிறாள். அத்தோடு, பிற ஆண்களைப் பார்க்காமல் தனது பார்வையையும் அவள் தாழ்த்திக் கொள்ளும்போது அவளது பாதுகாப்புணர்வு முழுமை பெறுகிறது.
முகத்தையும் இரு கைகளையும் மூடாதிருக்கும்போது நாணம் தர்மசங்கடம் என்பவற்றிலிருந்து ஒரு பெண் முழுமையாகப் பாதுகாப்புப் பெற முடியாது. எனவே, அவற்றையும் முடிவிட வேண்டும் என்று கூறுபவர்களும் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கிறார்கள். அந்தக் கருத்தை முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கா விட்டாலும் அதனைக் கட்டாயமாகக் கருதவில்லை. மூட விரும்பும் பெண்களின் உரிமை என்றே அதனை ஏனையோர் கருதுகின்றனர்.
முகம் மற்றும் மணிக்கட்டுகளுக்குக் கீழால் இரு கைகள் தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளை மறைக்கும்போது ஒரு பெண் வெட்கம், தர்ம சங்கடம் என்பவற்றிலிருந்து விலகி ஒரு சௌகரிய உணர்வைப் பெறுகிறாள் என்று பார்த்தோமல்லவா? அந்த சௌகரிய உணர்வு எல்லைமீறினால் ஓர் ஆணைப் போன்ற துணிவும் செயல்படும் தன்மையும் அவளிடம் வந்துவிடலாம். எனவே, அதனைத் தவிர்ப்பதற்கு முகத்தைத் திறந்திருப்பது நல்லது என்ற கருத்தும் முஸ்லிம்கள் மத்தியில் உண்டு.
எவ்வாறாயினும், ஒரு பெண்ணின் மான உணர்வோடு கலந்திருக்கும் வெட்கம், தர்ம சங்கடம் என்பவை ஆணின் மான உணர்வில் இல்லை. ஒரு பெண் தனது மான உணர்வை இழக்கும்போது வெட்கத்தால் கூனிக்குறுகிப் போகிறாள். ஆண் தனது மான உணர்வை இழக்கும்போது இழிவுக்குள்ளாவதாக நினைக்கிறான். மான உணர்வை மறைக்கும்போது கௌரவம் பாதுகாக்கப்படுவதாக ஆண் கருதுகிறான். ஆணின் ஆடைக் கலாசாரம் இந்தப் பின்னணியிலேயே வளர்ந்து வந்திருக்கிறது.
இஸ்லாமும் ஆணின் இயல்புக்கேற்ப அவனது மான உணர்வுகளுக்குப் பொருத்தமான ஆடை வரையறைகளைத் தந்திருக்கிறது. தொப்புளின் மேற்பகுதி முதல் முழங்காலின் கீழ்ப் பகுதி வரை ஓர் ஆண் தனது உடலின் அந்தரங்கத்தை அவசியம் மறைத்தாக வேண்டும். ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்வது அவனது கௌரவ உணர்வைப் பொறுத்தது. இந்த அடிப்படையிலேயே சிலர் எப்போதும் Smart Dressஐ விரும்புகிறார்கள். சிலர் Casualஐத் தெரிவு செய்கிறார்கள். சிலர் ஜம்பரோடு சுற்றித் திரிகிறார்கள்.
ஆண்பெண் பாலாரிடையே இருக்கும் இத்தகைய வேறுபாடுகள் இயல்பானவை. எனினும், அதிசயம் என்னவென்றால், பெண்களைவிட ஆண்களே தமது உடலின் அதிகமான பகுதிகளை மறைக்கிறார்கள். பெண்கள் தமது மான உணர்வுகளை வலிந்து புறக்கணித்துவிட்டார்களோ தெரியவில்லை. அவர்கள் ஆண்களைவிடக் குறைவாகவே உடலை மறைத்துக் கொள்கிறார்கள். மேலைத்தேய கலாசாரத் தாக்கமும் இந்த நிலையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அவர்களின் ”மானத்தைக் காத்து மகிமையை உயர்த்துவதே ஆடை” கட்டுரையிலிருந்து ஒருபகுதியே இவ்வாக்கம்.