இக்கட்டான சூழ்நிலையா? இஸ்லாம் உங்களைக் காப்பாற்றும்
அல்லாமா இக்பால் – பேருரையிளிருந்து ஒரு சிறு துளி..
(இஸ்லாமிய கவிஞர் அல்லாமா இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 1930 ஆம் ஆண்டு அனைத்து இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் ஆற்றிய தலைமைப் பேருரையின் ஒரு பகுதி)
குறிப்பு : இந்த உரை அடிமை இந்தியாவில் ஆற்றப்பட்டிருந்தாலும், இன்றைக்கும் சுதந்திர இந்தியாவில் அடிமைகளைப் போல நடத்தப்படுகின்றதொரு கூட்டம் இருந்து கொண்டிருக்கின்றது என்பதால், காலத்தினால் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், சூழ்நிலைக்கு ஒத்துவருவதால் இங்கு பிரசுரிக்கின்றோம்.
இக்கட்டான சூழ்நிலையா? இஸ்லாம் உங்களைக் காப்பாற்றும்!
இந்தியாவில் முஸ்லிம் அரசியல் வரலாறும், செயல்களும் மிகமிக நெருக்கடியை அடைந்துள்ள கட்டமொன்றில் நான் தலைமை உரை ஆற்றுகின்றேன். எந்த கட்சியையும் நான் தலைமை வகித்து நடத்தவிலலை. எந்த தலைவரையும் நான் பின்பற்றவில்லை. இஸ்லாத்தின் சட்டம், கொள்கை, கலை, சரித்திரம், வழிமுறை முதலிய ஒவ்வொன்றையும் ஆழ்ந்து வாசிப்பதில் என் வாழ்வின் பெரும் பாகத்தைச் செலவழித்திருக்கின்றேன். இஸ்லாத்தின் இவ்வித ஆராய்ச்சி என்னை உலக விவகாரங்களுடன் இணைத்து சேர்க்கும்படிச் செய்தது.
கிறிஸ்த்துவ மதம் ஐரோப்பாவில் பரவிய போது மதமென்பது ஒருதனிப்பட்ட நபரின் ஆத்மார்த்த விவகாரமென்றும், அவனது உலக வாழ்விற்கும், அதற்கும், எவ்வித சம்பந்தமுமில்லையென்றும் ஐரோப்பிய மக்கள் கருதினர். இஸ்லாமோ, மனிதனின் மனதில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக உலக விஷயங்களைத் தனித்தனியே துண்டித்து வைக்கவில்லை.
இஸ்லாத்தில் ஆண்டவனும் – உலகமும், உணர்ச்சியும், செயலும், பள்ளிவாயிலும், அரசாங்கமும் ஒன்றை விட்டொன்று விலக்க முடியாத அளவு பிணைப்பு வாய்ந்தவை எனக் கூறப்படுகின்றது. மனிதன் என்பவன் உணர்ச்சி உலகிலிருந்து அடியோடு அகற்றப்படக் கூடியவனாக உலகில் சஞ்சரிப்பவனல்ல. இஸ்லாத்தில் உணர்ச்சியும், செயலும் சம்பந்தப்பட்டு உணர்ச்சியே செயலாக பரிணமிப்பதாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பாவில் இவ்விஷயம் உணரப்படவில்லை. இன்று அவர்கள் தங்களுடைய தவறை உணர ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய மதங்களிலும், அரசியல் விஷயங்களிலும், பௌதீக – வைதீக வேறுபாடு இருக்கிறது. இதனால் ஐரோப்பிய அரசாங்க நிர்வாக வாழ்விலிருந்து கிறிஸ்தவ மதம் தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக ஐரோப்பாவில் நாடுகள் எல்லாம் மானிடத்துவ நலன்களை கொண்டல்லாமல் தேசீய நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன.
தற்சமயம் தேசியம் லட்சியம் முஸ்லிம்களின் மதக் கொள்கையுடன் போட்டியிட்டு வேகமாக வளர்கிறது. இதனால் இஸ்லாத்தின் மானிடத்துவ வேலைகளெல்லாம் எதிர்க்கப்படுகின்றன. ஜாதிய உணர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதால் தர வேறுபாடுகள் அதிகரித்து வருவதுடன் இஸ்லாத்தின் தரத்தையே எதிர்ப்பதாகவும் இருக்கிறது.
தனிப்பட்டவர்கள் வாழ்விலும், அரசாங்கங்களின் செயல்முறைகளிலும் மதமே மிக மிகச் சக்தி வாய்ந்ததென்று நம்புபவன் நான். இறுதிக்கதியோட்ட முடிவே இஸ்லாம். அதற்கு வேறொரு முடிவும் கிடையாது என்பது என் திட நம்பிக்கை.
மதம் என்பது தனிப்பட்ட நபரின் அந்தரங்க விஷயமென்ற மனப்பான்மையைத் தான் ஐரோப்பாவில் கிறித்துவ மதம் பரவச் செய்தது. ஆனால் பரிசுத்த குர்ஆன் ஷரீபில் அருளப்பட்டபடி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மத போதனைகளின் தன்மை முற்றிலும் மாறானவை. அது வைதீகக் கோட்டபாடுகளை மட்டும் கொண்டவையல்ல. அரசியலும் சட்ட கோட்பாடுகளும் இஸ்லாம் மதத்தின் அடிப்படைகளாக விளங்குகின்றன. ஆதலால் இஸ்லாத்தின் மத இலட்சியம் வாழ்வில் தீவிர தொடர்பு கொண்டுள்ளது. தேசிய அரசியல் இலட்சியம் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுத்தன்மையை அகற்றுவதாயிருப்பின் அதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்பொழுது நெருக்கடியை நீக்க ஒரே திட இலட்சியத்தில் கட்டுப்பாடான விசுவாசமும் ஆழ்ந்த விருப்பமுள்ள மக்களுக்குத் தான் சாத்தியமாகும். இத்தகைய கட்டுப்பாடான ஐக்கிய விருப்பத்தை ஏற்படுத்துவது உங்களுக்கு சாத்தியமா? ஆம்! சாத்தியம் தான். பிரிவு நலன்களை உதறித் தள்ளுங்கள். சொந்த விருப்பு வெறுப்புக்களை அடித்து விரட்டுங்கள். உங்கள் லட்சியங்களை மனதில் வைத்து உங்கள் தனிப்பட்ட செயல்களை அடையவும், கூட்டுச் செயல்களுடையவும், மதிப்பை உறுதிப்படுத்தவும் பயிற்சி செய்து கொள்ளுங்கள். சொல்லிலிருந்து உணர்வுக்கு மாறுங்கள். சொல் என்பது யூகம் தான். உணர்வு என்பது தீபம், வாழ்வு ஐக்கிய எனலாம்.
நான் முஸ்லிம்களின் வரலாறுகளிலிருந்து ஒரு பிடிப்பினையை கற்றிருக்கின்றேன்.
முஸ்லிம்களின் வரலாற்றில் நெருக்கடியான சமயங்களில் இஸ்லாம் தான் முஸ்லிம்களைக் காப்பாற்றி இருக்கின்றதே தவிர முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் காப்பாற்றிடவில்லை.
இன்று நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் உங்கள் கண்ணோட்டத்தைத் திருப்பி அதில் காணப்படும் முக்கிய இலட்சியங்களிலிருந்து ஏதேனும் உணர்ந்து கொள்ள விரும்பினால், சிதறுண்டு கிடக்கும் உங்கள் சக்திகளை ஒன்றுபடுத்தியவர்களாவீர்கள்! இழந்து போன உங்கள் சக்தியை பெற்றவர்களாவீர்கள்! குர்ஆன் ஷரீப் கூறுவதைக் கவனியுங்கள்.
விசுவாசிகளே! உங்களையே பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களைப் பாதிக்காது. (அல்குர்ஆன் 5:105)
அன்புள்ள சகோதரர்களே! அல்லாமா இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்னாள் கூறிய கருத்துக்கள் இன்றைய இந்திய அரசியலுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் மிகப் பொருத்தமானது தான். இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பேச்சிலிருந்து நாம் உணர வேண்டிவை இதை தாம் :
இந்திய முஸ்லிம்களைப் பாதுகாப்பது எந்தவொரு அரசியல் கட்சியோ, தலைவர்களோ அல்ல. மாறாக இஸ்லாமும் அதன் கொள்கைகளும் தான்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை புறக்கணித்து விட்டு வெறும் இனம், சமூகம், உணர்ச்சிகளின் அடிப்படையில் நடத்தப்படும் எந்தவொரு இயக்கமோ, கட்சியோ, இஸ்லாமிய இயக்கம் என்றோ கூற முடியாது. அதற்கு அல்லாஹ்வின் அருளும் கிடைக்காது.
எனவே இந்தியா சுதந்திரம் பெற்று 60 வருடங்களான பின்பும் இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அல்லது பறிக்கப்படுகின்றன என்றால், இந்திய முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி அச்சப்படுகின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் முஸ்லிம்கள் தங்களை ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களென எண்ணுகின்றனரே தவிர தாங்கள் உயர்ந்த கொள்கைகளை உடைய இலட்சியவாதிகள் என எண்ணுவதில்லை.
எப்பொழுது இந்திய முஸ்லிம்கள் தங்களை சுயநலமிக்க, கூடுவிட்டு கூடுபாயும் அரசியல்வாதிகளைத் தலைவராக கொண்ட கட்சிகளின் தொண்டர்களாகக் கருதாமல் எக்காலத்திற்கும் சிறந்த இஸ்லாத்தின் சித்தாந்தங்களை செயல்படுத்திக் காட்டும் கொள்கை வீரர்களாக மாறுவார்களோ அன்று தான் இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை மிக்க, அச்சமில்லா எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்ற சமுதாயமாகத் திகழ்வார்கள்.
குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!
மனிதர்களே! உங்களில் யார் உண்மையாக விசுவாசம் கொண்டு நற்செயல்கள் புரிகின்றனரோ அவர்களுக்கு கீழ்க்கண்ட வாக்குறுதிகளை அல்லாஹ் வழங்குகின்றான்.
அவர்களின் முன்னோர்களை ஆட்சியில் அமர்த்தியது போன்றே இவர்களையும் ஆட்சியில் அமர்த்துவான்
அவன் விரும்பும் நேரிய மார்க்கத்தில் அவர்களை உறுதிபட வாழ வைப்பான்.
அவர்களுடைய அச்சத்தைப் பாதுகாப்பாக்கி விடுவான்.
அல்லாஹ் கூறுகின்றான் :
அவர்கள் எனக்கு எதனையும் இணை வைக்காது என்னையே வணங்கவும். இதன் பின்னரும் உங்களில் எவரேனம் நிராகரிப்பாளர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும்பாவிகள் தாம். (அல்குர்ஆன் : 24:55)
Source: A ONE REALISM