இருவேறு பாதைகள்
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன்இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது. (அல்குர்ஆன் 92:1-11)
இவை ”ஸூரத்துல் லைலின்” வசனங்களாகும். இதன் ஆரம்பத்தில் அல்லாஹ் இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியம் செய்கிறான். வேறு சில ஸூராக்களில் சூரியன், சந்திரன், நட்சத்திரம், பேனா, காலம் போன்றவற்றிலும் அல்லாஹ் சத்தியம் செய்திருக்கிறான்.
அவன் இந்த படைப்புக்கள் பால் மக்களது கவனத்தைத் திருப்பி அவற்றின் மகத்துவத்தை அவர்கள் உணரும்படிச் செய்வதே இந்த சத்தியங்களது நோக்கம் என்பது குர்ஆன் விரிவுரையாளர்களது கருத்தாகும்.
ஒரு சொகுசான விலை உயர்ந்த வாகனத்தைப் பார்க்கும் நாம் அதனைச் செய்த பொறியியலாளரது அறிவை மெச்சுகின்றோம். அவன் மீது எமக்கு ஓர் அபிமானம் தோன்றுகின்றது. அதுபோலவே பிரபஞ்சத்தையும் அதன் செயற்பாடுகளையும் காணும் நாம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த வேண்டுமென அல்லாஹ் இந்த சத்தியங்கள் மூலம் நாடுகிறான்.
இங்கு இரவு மீதும் பகல் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்திருக்கின்றான். இந்த இரவும் பகலும் உண்மையில் அல்லாஹ் இருக்கின்றான் என்பதைக் காட்டும் மிகப் பெரும் அத்தாட்சிகளாகும். அல்லாஹ் வேறு ஓர் இடத்தில் ”இரவையம் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிடுகின்றான். இரவு பகல் மாறி மாறி வருவது தினந்தோறும் இடம் பெறுவதால் அவற்றின் பெறுமதி, முக்கியத்துவம், அவற்றை உண்டாக்குபவன் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஆனால், இது எப்பொழுதாவது ஒழுங்காக நடைபெறாது விடுமானல் அப்போது அதன் அருமை எமக்குப் புரியும்.
வேலைக்களைப்பாலும், சிந்தனைக் களைப்பாலும் பாதிக்கப்படும் மக்களுடைய உறுப்புக்களும் உள்ளங்களும் இரவில் தான் நிம்மதி காண்கின்றன. இரவின் குளிர்ச்சியும் இதமும் அமைதியும் உள்ளத்துக்குப் பெரும் ஆறுதலைத் தருகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள் கூட இரவை ஓய்வெடுப்பதற்கான காலமாகவே பயன்படுத்துகின்றன. இந்த ஓய்வும் தூக்கமுமில்லாமல் வாழ்வு இயங்க மாட்டாது என்பது விஞ்ஞானம் கூறும் உண்மையாகும். எனவே, அல்லாஹ், ”நாம் இரவை உங்களுக்கு ஒரு போர்வையாக ஆக்கினோம்” என்று கூறுகின்றான்.
பகல் பொழுதும் இரவை விட அணுவளவேனும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. மக்கள் பகல் காலத்தில் தான தமது ஜீவனோபாயத்தைத் தேடி பூமியில் பரந்து செல்கிறார்கள். பகலின் வெளிச்சமும், உஷ்ணமும் உழைப்பதற்கான சூழலை மனிதனுக்கு உருவாக்குகின்றன. மனிதன் சுறுசுறுப்பாகப் பணி செய்கின்றான். அல்லாஹ் வேறோர் இடத்தில், ”நாம் பகலை ஜீவனோபயாத்துக்காக ஆக்கினோம்” என்று கூறுகின்றான்.
ஆகவே ஒன்றன் பின் ஒன்றாக் இரவையும், பகலையும் அல்லாஹ் வரச் செய்வதில், மகத்தான் பல நோக்கங்கள் இருக்கின்றன. அதனை அவனையன்றி வேறு யாரும் செய்யவில்லை. செய்ததாக யாரும் வாதிடவும் முடியாது.
அடுத்து தொடர்ந்தும் பகலாக இருப்பதிலோ தொடர்ந்தும் இரவு நீடித்து விட்டாலோ அது பயனற்றுப் போய் விடும். இதனை குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றனது. ”மறுமை நாள் வரும் வரை அல்லாஹ் இரவை நீடித்ததாக ஆக்கி விடடால் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த இறைவன் வெளிச்சத்தைத் தர முடியுன். அதே போல் மறுமை வரைக்கும் அல்லாஹ் பகலை நீடித்ததாக ஆக்கி விட்டால் நீங்கள் நிம்மதி காணும் இரவை அல்லாஹ்வைத் தவிர வேறு யார் தான் கொண்டு வர முடியும்” என்று கேட்கின்றான்.
மனிதன் தொழில்நுட்பத்தில் எவ்வளவு முன்னேறினாலும் பகல் பொழுதில் அல்லது இரவு நேரத்தில் ஒரு வினாடியைக் கூட அவனால் அதிகரித்து விட முடியாது. அல்லது குறைத்து விட முடியாது. அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலுள்ள அம்சமாகும். இது இறைவனைக் காட்டும் அத்தாட்சியேயாகும். எனவே மனித வாழ்வுக்கு அவசியமான இரவையும், பகலையும் படைத்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவது அவசியமாகும்.
”ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக” என்பது ஸூரத்துல் லைலின் மூன்றாவது வசனமாகும். இங்கும் கூட ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டிலுள்ள அதிசயத்தையும் நோக்கத்தையும் பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். இதற்கு முன்னால் உள்ள வசனத்தில் அல்லாஹ் இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியம் செய்வது அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தியது போலவே இங்கும் ஆண்-பெண் என்ற இரு சாராரின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது.
பெண்ணுடைய கர்ப்ப அறையினுள் ஆண் செலுத்தும் இந்திரியத் துளிகள் அனைத்தும் உருவத்தில் ஒரே மாதிரியே இருக்கின்றன. ஆனால் சில இந்திரியத் துளிகள் ஆண் குழந்தை பிறக்கக் காரணமாக அமைகின்றன. இன்னும் சில பெண் குழந்iதை பிறக்கக் காரணமாக அமைகின்றன. இவ்வாறு ஆண்-பெண் என்று வெவ்வேறு அமைப்பில் சிசுக்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன என்று விஞ்ஞானத்தால் கூற முடியாதுள்ளது. மனிதன் தான் விரும்பும் வகையில் ஆண் குழந்தைகளை மட்டுமோ அல்லது பெண் குழந்தைகளை மட்டுமோ பெற்றெடுக்க முடியாது. அப்படியானால் இது இறைவனுடைய திட்டமிடலின் அடிப்படையிலும் விருப்பத்தின் பேரிலும் இடம் பெறும் அற்புத நிகழ்வாகும்.
உலகில் ஆண்களின் தொகையும், பெண்களின் தொகையும் சமமாகவே இருக்கிறது. இதனை ஒரு தற்செயல் நிகழ்வாக, எதேச்சையாக நடப்பதாகக் கூற முடியாது. வரலாற்று நெடுகிலும் இந்த சமநிலைத் தன்மை பேணப்பட்டு வந்திருக்கின்றது. அப்படியானால் யாரோ இந்த விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்கிறார் என்பது எமது பகுத்தறிவு சொல்கிறது. இதனை மனிதன் தீர்மானிக்கவில்லை என்று எமக்குத் தெரியும்.காரணம் தான் உலகில் பிறந்ததற்கே அவன் காரணமல்லவா! இங்கு இறைவனின் நாட்டத்தின் முன் மனிதனது தெரிவுரிமை தூசுக்கும் மதிப்பில்லாமல் போய் விடுகின்றது. ஆகவே, உலகில் ஆண் பெண் விகிதாச்சாரத்தை அல்லாஹ் தான் பேணி வருகின்றான்.
இதனையே குர்ஆன் வேறு ஓர் இடத்தில்,
”அல்லாஹ் தான் நாடியோர்க்கு பெண் குழந்தையையும் தான் நாடியோருக்கு ஆண் குழந்தையையம் அன்பளிப்பாக வழங்குகின்றான்” என்று கருத்தாழத்தோடு சொல்லுகின்றது.
எனவே, ஆண்-பெண் விகிதாச்சாரம் எப்போதும் சமநிலையில் வைத்துப் பேணப்படுகிறது. அதில் ஓர் ஒழுங்கும் நுண்ணிய திட்டமிடலும் காணப்படுகிறது. நிச்சயமாக இது இறைவன் ஒருவன் இருக்கிறான். அவனே இயக்குவிக்கிறான் என்பதற்கான பலமான அத்தாட்சியாகும்.
அதேபோல் ஆண்-பெண் என்ற இருபாலாரும் உலக இயக்கத்துக்குத் தேவைப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சிறப்பம்சங்களையும் பொறுப்புக்களையும் அல்லாஹ் கொடுத்து வைத்திருக்கின்றான். மனித நாகரீகத்தின் ஆரம்பம் ஆதம்-ஹவ்வா தம்பதிகளிலிருந்தே ஆரம்பமாகிறது.
ஆண்-பெண் என்ற இரு பாலார் இருப்பதனால் தான் இனப்பெருக்கம் நடக்கிறது. ஒருவர் மற்றவருடைய குறையை நிரப்பிக் கொள்கிறார்கள். ஆண்கள் மட்டும் அல்லது பெண்கள் மட்டும் உலகில் இருந்தால் ஒரு சில வருடங்களிலேயே மனித இனம் அழிந்து விடும். எனவே, இத்தகைய பல நோக்கங்களையும் உள்ளடக்கியதாக அல்லாஹ் ஆணையும் பெண்ணையும் படைத்திருப்பதனால், அவன் நிச்சயம் புகழுக்கும் வழிபாட்டுக்கும் உரியவனாகின்றான்.
நாம் விளக்க வந்த வசனம் ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் மீது சத்தியமாக என்று கூறுவதற்கு இதுவே காரணமாகும்.
”மனிதர்களே..! உங்களது முயற்சிகள் பல வகைப்பட்டனவாக இருக்கின்றன” என்பது ஸூரத்துல் லைலின் நான்காம் வசனமாகும்.
மக்கள் பல்வேறுபட்ட உழைப்புக்களிலும், செயற்பாடுகளிலும், முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளை நன்மையான முயற்சிகள், தீய முயற்சிகள் என்று இரு பெரும் பரிவாகப் பிரிக்க முடியும். நன்மையான செயல்களைப் பொறுத்தவரை அவை தூய்மையான நோக்கத்தோடு செய்யப்படுமானால் அவற்றைச் செய்பவருக்கு அவை பயன்படுவதோடு, அவற்றினால் உலக மக்களும் பயனடைகின்றார்கள். அவற்றைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அவற்றின் காரணமாக மனித வாழ்வைப் பாதிக்கும் பல அம்சங்கள் அழிந்து போகின்றன.
உலகில் மாத்திரமன்றி மறுமையிலும் கூட அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் மகத்தான் கூலியும் அந்த நற்கருமங்களுக்காகக் கிடைக்கின்றன. இத்தகைய கருமங்களையே அல்குர்ஆன் அஸ்-ஸாலிஹாத் எனப் பெயரிடுகின்றது.
இதற்கு நேர்எதிர்த்திசையில் தீய செயல்களை நாம் பார்க்கிறோம். இவற்றில் மனிதன் ஈடுபடுவதால் அவனுக்கே அழிவைத் தேடிக் கொள்கிறான். பிறரையும் தொந்தரவு செய்கின்றான். அவர்களைக் கஷ்டத்தில் வீழ்த்துகிறான். உலகிலும் மறுமையிலும் இறைவனது அதிருப்தியையும் கோபத்தையும் சம்மபாதித்து நரகம் நுழைகிறான். இந்த விரும்பத்தகாத அனைத்துக்கும் இந்த தீய கருமங்கள் தான் காரணமாகின்றன.
எனவே நற்கருமங்களும் தீய கருமங்களும் ஒருக்காலும் ஒன்றிணைய முடியாது. நன்மை செய்பவர்கள் தியவர்கள் பட்டியலில் உள்ளவர்களுடன் இணைக்கப்பட முடியாது. இந்தக் கருத்தை அல்லாஹ் அல்குர்அனில் வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றான். ”நகரவாசிகளும் சுவர்க்கவாசிகளும் சமனாக மாட்டார்கள். இவர்களின் சொர்க்கவாதிகள் தான் வெற்றி பெற்றவர்கள்” என்று இருசாராரையும் பிரித்து நோக்குகின்றான்.
எனவே, உலகில் நன்மை என்ற ஒன்றும் தீமை என்ற இன்னொன்றும் இருக்கவே செய்கின்றது. ஆனால் நாஸ்திகவாதிகள் இவ்வாறு செயல்களை இரு பிரிவாகப் பிரிப்பதில்லை. அவர்கள் எந்தச் செயல்களையும் உலகி; செய்து கொள்ளலாம். அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே என்று கருதுகிறார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”மக்கள் அதிகாலையிலேயே பல்வேறு முயற்சிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். சிலர் பாவமான செயல்களைச் செய்வதன் மூலம் தமது ஆத்மாக்கைள் அழித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதனால் தமது உள்ளத்தை ஷைத்தானிடமிருந்து விடுதலை செய்து கொள்கிறார்கள்” என்று கூறி மக்களில் இரு வேறு பிரிவினரின் முயற்சிகள் வௌ;வேறு விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை உணர்த்தினார்கள்.
அல்லாஹ் வேறு ஓர் இடத்தில்,
”யார் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவரும், பாவம் செய்யக் கூடியவனும் சமனாகுவார்களா?” என்று கேள்வி எழுப்புகின்றான்.
எனவே நன்மை வேறு, தீமை வேறு. இறைநிராகரிப்பாளர் வேறு, முஸ்லிம் வேறு. இருவரும் ஒருக்காலும் கூலி பெறுவதில் சமமானவர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். இந்தக் கருத்தை இதற்கு முன்னால் உள்ள இந்த ஸூராவின் வசனங்களும் உணர்த்துகின்றன. இங்கு இரவு-பகல், ஆண்-பெண் என்று இரு வேறு கூறுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே, இரவும் பகலும் ஒன்றல்ல என்பது போலவே ஆணும் பெண்ணும் வித்தியாசமான இயல்புகள் கொண்டு படைக்கப்பட்டவர்கள் போலவே நற்கருமங்களும் தீய காரியங்களும் வௌ;வேறானவை. அவற்றுக்காக வழங்கப்படும் கூலிகளும் அதற்கேற்ப வேறுபடும் என்று அல்லாஹ் உணர்;தத விரும்புகின்றான்.
எனவே, அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் மாத்திரமே தப்ப முடியும். அவர்கள் மாத்திரமே கரை சேருவார்கள். அவர்களைக் கெட்டவர்களது கூட்டத்தில் சேர்ப்பது மிகப் பெரும் அநியாயம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
”முஸ்லிம்களைக் குற்றவாளிகள் போல் நாம் நடாத்துவோமா? இல்லவே இல்லை” என்று கூறுகின்றான்.
எனவே, மக்களது செயல்பாடுகள் எப்படியானவையாக இருந்தாலும் அல்லாஹ் விரும்பும் செயல்கள் மட்டுமே பயனளிக்கும் என்று நாம் விளங்க வேண்டும்.
”யார் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து, இறைவனை அஞ்சிப் பயந்து வாழுகிறாரோ, மேலும் மறுமை நாளை உண்மைப்படுத்துகிறாரோ அவரை நாம் மிக இலகுவான வழியின்பால் வழிகாட்டி விடுவோம்”.
இதற்கு முன்னாலுள்ள வசனத்தில் அல்லாஹ் மக்கள் பலவகைப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும், அவற்றின் விளைவுகள் அச்செயல்களைப் பொறுத்து வித்தியாசப்படும் என்றும் கூறினான். தற்போது சிறந்த செயல்களில் ஈடுபடுவது என்றால் என்ன? என்பதற்கு உதாரணம் கூறுகிறான். இந்த வசனம் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பந்தமாக இறக்கப்பட்டதாகப் பெரும்பாலான குர்ஆன் விரிவுரையாளர்கள் கருதுகிறார்கள்.
அடிமையாக இருந்தநிலையில் இஸ்லாத்தைத் தழுவிய வயோதிகர்களையும், பெண்களையும் அவர்களது எஜமானர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விடுதலை செய்து வந்தார்கள். அப்போது அவரது தந்தை அபூகுஹாபா, ”மகனே! நல்ல உடற்கட்டுள்ள ஆண்களை நீ விடுதலை செய்தால் உன்னை அவர்கள் பாதுகாத்து உனக்கு பக்க துணையாக இருப்பார்கள் அல்லவா? என்று கேட்டார். அதற்கு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவாகள், ”தந்தையே! நான் இந்த நற்செயலுக்காக அல்லாஹ்வின் கூலியை எதிர்ப்பார்க்கின்றேனே தவிர உலக இலாபத்தையல்ல” என்று உருக்கமாகப் பதிலளித்தார்கள்.
ஆனால் இந்த வசனம் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு சம்பந்தமாக இறங்கினாலும் அது தரும் கருத்து யாவருக்கும் பொதுவானது. யார் ” அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறாரோ” என்பதன் பொருள் நன்மையான காரியங்கள் எந்த ஒன்றிலாவது செய்யப்படும் செலவைக் குறிக்கும். அடிமைகளை விடுதலை செய்வது, கைதிகளை விடுவிப்பது, ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவது, பொதுவாகச் சமூகத்திற்குப் பயனளிக்கும் திட்டங்களுக்கு உதவுவது, ஜிஹாதுக்காகச் செலவளிப்பது, இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராகப் போராடுவதற்காக முஸ்லிம்களைச் சகல வழிகளிலும் பலப்படுத்துவது போன்ற சகல நல்ல வழிகளையும் இது குறிக்கும்.
இவ்வாறு செலவு செய்பவருக்கு இருக்கும் அடுத்த பண்பு ”அவர் அல்லாஹ்வை பயப்படுபவராக இருப்பார். தீய காரியங்களிலிருந்து விலகியிருப்பார். மக்களுக்கு நோவினை செய்யாதிருப்பார். தனது ஆத்மாவை பாவச் செயல்களிலிருந்து தூரப்படுது;தி வைப்பார்” என்பதாகும்.
அவருக்குள்ள அடுது;த பண்பு அவர் தனது தோழருக்கு நல்ல கூலி கிடைக்கும் என நம்புவார். அவர் மறுமையை, சுவர்க்கத்தை நம்புவார் என்பதாகும்.
இவ்வாறு செலவு செய்து இறைவனை அஞ்சிப் பயந்து மறுமையையும் அங்கு அல்லாஹ் கொடுக்கக் காத்திருக்கும் நற்கூலிகளையும் நம்பும் ஒருவருக்கு அல்லாஹ் செய்யவுள்ள பிரதியுபகாரம் எவ்வாறு அமையும் என்பதை அடுத்த வசனம் விளக்குகிறது.
”மிகு இலகுவான வழியை அவருக்கு மிக இலகுபடுத்திக் கொடுப்போம்”. அதாவது, மறுமையிலும் உலகத்திலும் அவருக்கு மிகச் சிறந்ததொரு வாழ்க்கை தான் பரிசாக வழங்கப்படும். அவரது மனதில் கவலையுமிருக்காது. அவரது வாழ்க்கை மிக இலகுவானதாக இருக்கும். எந்தச் சிக்கலும் சஞ்சலமும் அவரை அணுகாது. அவருக்கு அல்லாஹ் வழங்கும் வாழ்க்கை ஏனைய மனிதர்களது வாழ்வுடன் இணைந்து போகும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் படைத்துள்ள எந்தச் சட்ட திட்டங்களுடனும் பௌதிக விதிகளுடனும் அவர் மோதிக் கொள்ள மாட்டார்.
அவர் இறைவனது சட்டத்தைப் புறக்கணித்து அதனை ஒதுக்கி வாழும் வழி தவறிய மக்களுடன் மாத்திரமே மோதிக் கொள்வார்.
அவனது உள்ளத்தில் ஈமானின் சுவை இருக்கும். அவரது பேச்சில், செயலில், சிந்தனையில் இலகுத்தன்மை இருக்கும். எந்த அம்சத்தையும் அவர் மிக இலகுவாகவே கையாள்வார். இதே பண்புகளைத் தான் நபிகளார் (ஸல்) அவர்களும் பெற்றிருந்தார்கள். எனவே தான் அல்லாஹ் அவர்களைப் பார்த்து,
”நபியே! உம்மை நாம் மிக இலகுவான பாதையின் பால் மிக இலகுவாகவே வழி நடாத்துவோம்”. என்று கூறுகின்றான். இது நல்ல மனிதனுக்கு அல்லாஹ் செய்யும் மிகப் பெரும் உபகாரமாகும். ஆனால், செலவு செய்யாமல், இறைவன் தேவையில்லை என்று நினைத்து மறுமையைப் பொய்ப்பிப்பவனுக்குரிய கூலி நேர் எதிராக அமையும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.
”யார் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் உலோபியாக இருக்கிறானோ, அதேவேளை தனக்கு இறைவன் தேவையில்லை என்று கருதி மறுமையைப் பொய்ப்பிக்கின்றானோ அவனை நாம் மிக மிகக் கடுமையான பாதையில் இலகுவாகச் செலுத்தி விடுவோம். அவன் நரகத்தில் விழும் போது அவனது பணம் அவனுக்குப் பயனளிக்காது”.
இதற்கு முன்னாலுள்ள வசனம், இறைவனது பாதையில் செலவு செய்து வாழ்ந்த மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய உயர்ந்த வெகுமதியைப் பற்றிக் கூறியது. ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் குற்றவாளியின் பிரதான பண்புகளைப் பற்றிக் கூறுகின்றான். அந்தக் குற்றவாளியின்
முதலாவது பண்பு கஞ்சத்தனமாகும். அந்த நிராகரிப்பாளர் தனது செல்வத்தை பொதுநலனுக்காக உபயோகப்படுத்த மாட்டான். மாறாக, தனது இச்சைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் சொந்தத் தேவைகளுக்காகவும் மாத்திரமே செலவு செய்வான். அவனது உள்ளத்தில் பிறர் மீது இரக்க உணர்வு அணுவளவும் இருக்காது. அவர்களது கஷ்ட துன்பங்களில் பங்கு கொண்டு அவர்களது தயர் துடைக்க வேண்டுமே என்று அவன் சிந்திக்க மாட்டான்.
தனக்கு வேறு எவரும் தேவையில்லை என்று அவன் நினைக்கிறான்.தான் மக்களில் ஒருவன் என்ற உணர்வு இல்லாதவனாக அவர்களை விட்டும் தூரமாகி விடுகிறான். அதேபோல் இறைவனது உதவியும், அருட்கடாட்சங்களும் தனக்குத் தேவையில்லை என்றும் அவன் நினைப்பான். தன்னிடம் குவிந்துள்ள செல்வங்கள் யாவும் தனது சொந்த முயற்சியால் கிடைத்ததாகவே அவன் கருதுவான். உலக மக்கள் தனக்குத் தேவையில்லை என்று அவன் நினைப்பதால் தான் அவர்களை அவன் கவனிப்பதில்லை. இறைவனது உதவி தனக்குத் தேவையில்லை என்றும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தனக்கு வந்த அருட்கொடைகளுக்கு அல்லாஹ் காரணமல்ல எனவும் அவன் நினைப்பதால் தான் அந்த அல்லாஹ்வுடைய பாதையில் அவன் செலவு செய்யாமலிருக்கின்றான். எனவே தான் பிறர் தனக்குத் தேவையில்லை என்று அவன் எண்ணுகிறான் என அல்லாஹ் பொதுவாகக் கூறுகிறான்.
இந்த நிரகாரிப்பாளருக்குள்ள அடுத்த பண்பு, அவன் மறுமையைப் பொய்ப்பித்தான் என்பதாகும். தான் செலவளிக்கும் பணத்துக்கான கூலி மறுமையில் வழங்கப்படும் என நம்புவதில்லை. செலவளித்தால் சுவர்க்கம் கிடைக்கும் என அவன் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, அவன் கஞ்சனாக இருப்பதற்கும் இறைவன் தனக்குத் தேவையில்லை என்று கருதுவதற்கும் அவனிடம் மறுமை நாள் பற்றிய நம்பிக்கை இல்லாதிருப்பதே காரணமாகும்.
இந்த வகையான மனிதனுக்கு வழங்கப்படும் கூலி மோசமானதாக அமைகிறது. எனவே, ”மிகக் கொடுமையான வழியில் அவனை இலகுவாகச் செல்ல விட்டு விடுவோம்” என்று அல்லாஹ் கூறுகிறான். இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்காதவனது வாழ்க்கை நெருக்கடிகளும், சஞ்சலங்களும் நிறைந்ததாக இருக்கும். மனித இயல்புடன் அவன் அடிக்கடி மோதிக் கொள்வான். பிரபஞ்சத்தில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டுள்ள பௌதிக விதிகளுடனும் அவன் அடிக்கடி மோதிக் கொள்வான். அவன் சீரான வழியிலிருந்து பிறழ்ந்து செல்வதால் அவனுக்கு எங்கும் பிரச்னைகளின் மயமாகவே இருக்கும்.
இதே கருத்தை அல்குர்ஆனில் அல்லாஹ் வேறு ஓர் இடத்தில்,
”யார் எனது வாழ்க்கைத் திட்டத்தைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு நெருக்கடியான வாழ்க்கை இருக்கிறது” என்று கூறுகிறான்.
அதுமட்டுமல்ல, இவ்வாறு செலவு செய்யாது, அல்லாஹ்வை மறந்து மறுமை நாளை மறந்து வாழ்பவன் நரகத்தில் வீழ்வது நிச்சயம். அப்போது அவனைக் காப்பாற்ற அவனது செல்வத்துக்கு சக்தியிருக்காது என்று அடுத்த வசனம் அமைகிறது.
அவன் நரகில் விழும்போது அவனுக்கு அவனது பணத்தால் எந்தப் பயனும் விளையாதே என்று இங்கு அல்லாஹ் கூறுகின்றான். தனக்கு இறைவன் தேவையில்லை என்றவனுக்குப் பணம் உதவிக்கு வரும் என்ற ஆணவம் இருந்தது. இப்போது எங்கே அந்தப் பணம் என்று அல்லாஹ் பரிகாசமாகக் கூறுவது போல் இவ்வசனம் அமைகின்றது. எனவே மனிதன் ஜெயம் பெற்ற இந்த வகையான இறுமாப்பை விட்டு விட்டு நேர்வழியில் நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
இதுவே அவன் தெரிவு செய்ய வேண்டிய பாதையாகும்.
– அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்
நன்றி : இஸ்லாமியச் சிந்தனை