இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (2)
அறிவீனர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே விதி முறைகள்:
எப்படிப்பட்ட தரத்தை உடையவர்கள் இந்த அரபி மதரஸாக்களுக்கு ஓதப் போகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். இன்னும் கேளுங்கள் வேடிக்கையை. அரபி மதரஸாக்கள் அல்லாத மற்ற கல்வி ஸ்தாபனங்கள் திறமையிலும் திறமை மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைக் கையாள்வார்கள்.
ஆனால் இந்த அரபி மதரஸாக்களோ அறிவீனத்திலும் அறிவீனமான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவார்கள் போலும். ஏற்கனவே எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டு எதற்கும் லாயக்கற்றவர்களே அரபி மதரஸாவைப் போய் அடைகின்றனர்.
அவர்களிலும் தப்பித் தவறி அறிவுடையவர்கள் இருந்து விடக் கூடாது. அவர்களையும் கழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மதரஸாவின் விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதரஸாவில் நுழைந்தவுடன் முதல் நிபந்தனை மொட்டை அடித்துத் தொப்பி போட வேண்டும். ஜுப்பா போடவேண்டும். இந்த விதிகளை எங்கிருந்து பெற்றனர் என்பதை நாம் அறியோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் வாழ் நாளிலேயே ஹஜ்ஜில் வைத்துத்தான் மொட்டை அடித்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. அபா என்ற ஜுப்பா போடுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆதத்தில் இருந்திருக்கிறதேயல்லாமல் ஏவப்பட்ட சுன்னத்து அல்ல. இந்த நிலையில் அவற்றைக் கடமையாக்கப்பட்ட காரியங்கள் போல் ஏன் கடைபிடிக்கப்படுகிறது?
வேறு வழியில்லாது மதரஸாக்களில் ஓத வருபவர்களில் சிலர் இந்த நிபந்தபனைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஓடிப் போய் விடுவதும் உண்டு. வெளியேறினால் தங்கள் சாப்பாட்டிற்கு வேறு வழியில்லை என்ற நிலையிலுள்ள மாணவர்களே இறுதியில் எஞ்சுகின்றனர். அவர்கள் விடு முறையில் வெளியில் செல்லும்போது ஜுப்பா அல்லாத சட்டைகளில் அவர்கள் காட்டும் ஆர்வம். தலைமுடி சிறிது வளர்ந்தவுடன் அவற்றைச் சீவி அழகு பார்க்கும் அவர்களின் ஏக்கம் இவை அவர்கள் எப்படிப்பட்ட நிர்ப்பந்த நிலைகளில் மதரஸாக்களில் ஓதி வருகின்றனர் என்பதைப் புரிய வைக்கும். ஆக ஆரம்ப நிலையிலேயே அவர்களின் சுய சிந்தனை, சுயவிருப்பம் மழுங்கடிக்கப்பட்டு உஸ்தாதுகள் சொல்வதை வேதவாக்காகக் கொண்டு செயல்படும் நிலை உருவாக்கப்படுகின்றது.
திறமையற்றவர்களாக ஆக்குவதற்கென்றே பாட போதனை:
திறமையற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இது இரண்டாவது கட்டம். இந்த இரண்டு தேர்வுகளையும் மீறி சுயசிந்தனை உடையவர்கள் தப்பித் தவறி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் இவர்களுக்கு இன்னும் எஞ்சி இருக்கும் போலும். எனவே அவர்களது சுய சிந்தனையை மேலும் மழுங்கச் செய்யும் முறையில் விஷேசமான ஒரு பாடத் திட்டமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்கென்றே ஒரு நூல் உண்டு. அதன் பெயர் “தஃலீமுல் முதஅல்லிம்” அதன் பொருள்: “”மாணவர்களுக்கான போதனை”. இந்த நூலில் மாணவர்கள் தங்கள் உஸ்தாதுகளின் மீது அளவு கடந்து பக்தி செலுத்தும் வகையில் கற்பனையாகப் பல கதைகள் புனையப்பட்டுள்ளன. அதில் ஒன்று வருமாறு.
ஒரு உஸ்தாது தனது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் உட்காருவதும், எழும்புவதுமாக டிரில் செய்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் ஆச்சரியப்பட்டு அதற்குரிய காரணத்தைக் கேட்டார்களாம். அதற்கு அந்த உஸ்தாது கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அதாவது “எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உஸ்தாதின் மகன் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இந்தப் பக்கம் வரும்போது எனது பார்வையில் படுகிறார்.
எனது உஸ்தாது மீதுள்ள பக்தியால் அவரது மகனைப் பார்த்த உடன் மரியாதைக்காக எழும்புகிறேன். எனது உஸ்தாதின் மகனுக்கு மரியாதை செய்வது எனது உஸ்தாதுக்கு மரியாதை செய்வது போலாகும்” என்று விளக்கம் தந்துள்ளாராம். சிரிப்பு வருகிறதா? நன்றாகச் சிரியுங்கள்.
இந்தக் கற்பனைக் கதை யையும் கேட்டுவிட்டு அந்த மாணவர்கள் அந்த உஸ்தாதைப் போல் தங்கள் உஸ்தாதுக்கு மரியாதை செய்ய முற்படுகின்றனர் என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள். உஸ்தாதுகளுக்கெல்லாம் பெரிய உஸ்தாது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களேயாகும். அவர்கள் வரும் போது கூட நபிதோழர்கள் எழுந்து மரியாதை செய்தது இல்லை. காரணம் அப்படி எழுந்து மரியாதை செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் விரும்ப வில்லை. மாறாகத் தடுத்துள்ளார்கள்.
“”(சஹாபாக்களாகிய ) அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அதிக விருப்பமுள்ள மனிதர் எவரும் இருந்ததில்லை. இந்நிலையில் சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து விட்டால் எழுந்து நிர்ப்பவர்களாக இருந்து கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு அவர்கள் எழுந்து நிற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.’ (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி)
இந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைக்கும், நடைமுறைக்கும் மாறாகக் குருட்டுத்தனமான குருபக்தியை வளர்க்கும் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்படி நடக்கிறார்களா? அல்லது மாற்று மத அறிஞர்களைப் போல் மனிதனை தெய்வமாக்கும். இணைவைக்கும் கொள்கையை வளர்க்கத் துணை போகிறார்கள்? என்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
இப்படி முறை தவறிய குருபக்தியை வளர்க்கும் பல கற்பனைக் கட்டுக் கதைகள் அந்த ஒழுக்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு போதிக்கப்படும் “தஃலீமுல் முதஅல்லிம்’ என்ற நூலில் காணப்படுகின்றன. அவை பற்றிய மேலதிக விளக்கத்திற்கு பார்க்க அல்ஜன்னத் மார்ச் 90, பக்கம். 3. இந்த நூலிலுள்ள போதனைகளை அப்படியே கண்ணை முடிக் கொண்டு ஏற்றுக் கொண்டதன் விளைவே பிரபலமான மவ்லவி “எனது உஸ்தாது சொல்லுவது நூறு கிதாபைப் பார்ப்பதைவிட மிகப் பெரிய ஆதார மாகும்’ என்று கூறி வருவதாகும்.
இன்னொரு சம்பவம். மதரஸாவின் ஒரு வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. உஸ்தாது ஒரு கிதாபை வைத்துப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவர் ஒரு நூலின் சில பாராக்களுக்கிடையே காணப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கைப் பற்றிய தவறைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டிருக்கிறார். விளக்கம் கொடுக்கக் கடமைப்பட்ட உஸ்தாதுக்கு வந்ததே கோபம். அத்தப் பெரிய மேதை எழுதிய நூலாகும். அதில் நீ குறை காண்பதா? என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு கையில் வைத்திருந்த கிதாபை அந்த மாணவரின் முகத்தை நோக்கி வீசினாரே பார்க்கலாம். வெள்ளை வெளேர் என்று தெள்ளத் தெளிவாக எண்ணிக்கையில் காணப்பட்ட தவறைச் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்ட மாணவருக்குக் கிடைத்த பரிசைப் பார்த்தீர்களா?
4+3=7 என்பதற்கு பதிலாக அந்த நூலில் 8 என்று எழுதப்பட்டிருந்தாலும் அந்த நூலை எழுதிய மேதையின் மீது அப்படியே குருட்டு நம்பிக்கை வைத்து அதனை 8 என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழு தானே என சந்தேகமோ, மறுப்போ கிளப்பக் கூடாது. இப் படிப்பட்ட குருட்டு குரு பக்தியை ஏற்றுக் கொண்டவர்களே இந்த மதரஸாக்களில் தொடர்ந்து ஓத முடியும். இல்லை என்றால் வெளியேறிச் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான். அல்லது மஸ்ஜிதுகளில் சென்று சுயமரியாதையை விட்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். ஆக இந்த மூன்றாவது வடிகட்டலின் மூலம் முற்றிலும் சுய சிந்தனையற்றவர்களைத் தேர்ந்தெடுத்துக் காலத்தை மதரஸாவில் கழிக்கச் செய்து அவர்களுக்கு மவ்லவி ஆலிம்(?) பட்டம் கொடுத்து வெளியே அனுப்புகிறார்கள். அவர்களிடம் நீங்கள் எப்படி சுய சிந்தனையை எதிர்பார்க்க முடியும்? குதிரைக் கொம்புதான்.
மதரஸா கல்வித் திட்டம்:
அரபி மதரஸாக்களின் கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ என்ற தலைப்பில் விளக்கி இருந்தோம். மீண்டும் ஒருமுறை அதனை நிதானமாகப் படித்துப் பார்க்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
“ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ கல்வித் திட்டப்படி குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட வாதக்கலைக்கும், பிக்ஹின் பெயரால் முன்னோர்களின் கூற்றுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் வலியுறுத்தப்படுகிறது. ஹனஃபி ஃபிக்ஹு நூல்களில் ஒரு விஷயத்தில் இமாமின் கூற்று குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரணாகத் தெரிந்தாலும் இமாமின் கூற்றையே எடுத்து நடக்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பொருள் என்ன?
உண்மையில் அந்த விஷயத்தை இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறி இருக்க மாட்டார்கள். முன்னூறு வருடங்களுக்கு முன் இருந்த ஹனஃபி மத்ஹபின் இமாம் ஒருவர் அவ்வாறு கூறி இருப்பார். அது இப்போது சுமார் 1300 வருடங்க ளுக்கு முன்னால் வாழ்ந்த இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.
இந்த மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் இன்னொரு வேடிக்கையையும் பார்க்கலாம். அதாவது எந்த விஷயங்களில் மனித அபிப்பிராயங்கள் செல்லாதோ-குர்ஆன், ஹதீஸை மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டுமோ -1434 வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாது எடுத்து நடக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட மார்க்க விஷயங்களில் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இமாமின் கூற்றை இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் அரங்கேற்றம் செய்வார்கள். அதே சமயம் மாற்றங்களுக்குரிய உலக விவகாரங்களில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகக் கண்டு பிடிக்கப்படும் எதார்த்த நிலைகளை இன்றுள்ள விஞ்ஞானிகள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளாமல் சுமார் 600 அல்லது 700 வருடங்களுக்கு முன், சில இமாம்களின் யூகத்தால் எழுதி வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் முழு நம்பிக்கை வைத்து அதனையே இன்றும் போதிக்கிறார்கள்.
உதாரணமாக வானம், பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களை விளக்கும் ஒரு நூல் (தஷ்ரீக்குல் அஃப்லாக்) அரபி மதரஸாக்களில் போதிக்கப்படுகிறது. அதில் பூமி தட்டையானது. சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது போன்ற அபத்தங்கள் (சுமார் 600 அல்லது 700 வருடங்களுக்கு முன் மக்களிடையே இருந்த தவறான நம்பிக்கை) எழுதப்பட்டுள்ளன. அதனையே இந்த மதரஸாக்களில் இன்றும் போதிக்கின்றனர். எனவே இன்றைய மவ்லவிகளில் பலரும் இன்றும் பூமி தட்டை என்றே சொல்லி வருகின்றனர். பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முதல் பிறையை தீர்மானிப்பதும் இதே மூட நம்பிக்கையால்தான்.
இப்படிச் சாதாரண உண்மைகளைக் கூட ஏற்றுக் கொள்ள அவர்கள் தங்கள் முன்னோர்கள்மீது கொண்டுள்ள குருட்டு நம்பிக்கை இடம் கொடுப்பதில்லை. முன் சென்ற நாதாக்கள் எல்லாம் சாமான்யப்பட்டவர்களா? அவர்களைப் போல் நாம் ஆக முடியுமா? அவர்கள் வானத்தை வில்லாக வளைத்தார்கள். மணலைக் கயிறாகத் திரித்தார்கள் என்றெல்லாம் சரடு விடுவார்கள். இந்தப் புளுகு மூட்டைகளை எல்லாம் அப்படியே நம்பிச் செயல் படுகிறவர்கள் மட்டுமே அரபி மதரஸாக்களில் காலத்தை ஓட்ட முடியும். இது மட்டுமல்ல அரபி மதரஸாக்களில் ஓதுபவர்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதற்கும் அவர்களுடைய பிக்ஹு நூல்களில் சட்டம் வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த அசிங்கங்களை எல்லாம் 1986 நவம்பர் அந்நஜாத் இதழில் விளக்கியுள்ளோம்.
“”ஒருவன் தனது ஆண் குறியைத் தனது பின் துவாரத்தில் நுழைத்தால் குளிப்பு கடமையாகாது’ போன்ற உலகத்திலேயே நடக்க முடியாத காரியங் களுக்கெல்லாம் தீர்ப்புகளை (ஃபத்வா) இவர்களது பிக்ஹு நூல்களில் பார்க்கலாம்.
“”ஒருவன் விந்து வரும்போது தனது குறியை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு ஆசை அடங்கியதும் விந்தை வெளிப்படுத்தினால் அவன் மீது குளிப்பு கடமை இல்லை”.
இதுவும் அரபி மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படும் பிக்ஹு நூல்களில் உள்ளது தான். இப்படிப் பட்ட விஷயங்களை 15 வயதிற்கும் 20 வயதிற்கும் உட்பட்ட வாலிபர்களிடையே போதிக்கும் போது என்ன விளைவு ஏற்படும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் அவற்றைச் செயல்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இரவில் செயல்படுத்திவிட்டு, குளிக்காமலேயே பஜர் தொழுவதற்கு சட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் முகல்லிதுகள் தங்கள் பிக்ஹு நூல்களில். இதுமுற்றி ஓரினப் புணர்ச்சிக்கு இந்த வாலிபர்கள் ஆளாகிறார்கள். கல்லூரிகளில் காணப்படுவதைவிட அரபி மதரஸாக்க ளில் இந்த கூடா ஒழுக்கம் அதிகமாக இருக்கிறது.
நம்மில் ஏற்பட்ட பெரும் மாற்றத்திற்குக் காரணம்:
நம்மைத் திடுக்கிட வைத்து, இந்த அளவு சிந்திக்க வைத்து குர்ஆன், ஹதீஸின் உண்மை நிலைகளை கண்டறிய வைத்ததே மதரஸாக்களில் காணப்படும் இந்த கூடா ஒழுக்கம்தான். 1963 முதல் 1969 வரை இந்த மவ்லவிகளுக்கு அபாரமான மரியாதை செலுத்தி வந்தோம். பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட இந்த மவ்லவிகளை மதித்து நடந்தோம். மவ்லவிகளின் கூற்றுக்கள் அனைத்தையும் வேதவாக்காக எடுத்து நடந்தோம். இவர்களது வாக்கை நம்பி சூஃபிஸ வாழ்க்கையை மேற்கொண்டோம். 21 வயதில் காடா துணியால் கைலி, ஜுப்பா அணிந்தோம். மொட்டை அடித்தோம். முக்தி பெறுவதற்கு வீட்டைத் துறக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையில் காலில் கட்டையை மாட்டிக் கொண்டு வீட்டைத் துறந்து வெளியேறினோம்.
அப்படிப்பட்ட நிலையில் 1969-ல் மக்கள் வலியுல்லாஹ்க்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த சில மவ்லவிகளிடமும் இந்த கூடா ஒழுக்கம் இருக்கிறது என்பது தெரிய வந்ததும் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் இதனை நம்மால் நம்பவே முடியவில்லை. இச்செய்தியைக் கொண்டு வந்தவரை ஏசி விரட்டி விட்டோம். பின்னர் ஆதாரப்பூர்வமாக உரிய சாட்சிகளுடன் இன்னொரு மவ்லவி மூலமாகவே நம்மிடம் இச்செய்தி கொண்டு வரப்பட்டு உண்மைப் படுத்தப்பட்டவுடன் நம்மால் மறுக்க முடியவில்லை.
தனிப்பட்ட ஒருவரைப் பற்றிக் கிடைத்த செய்தியை வைத்து நாம் முடிவு செய்யவில்லை. பல செய்திகள் தெரிய வந்து பொதுவாக இன்றைய பெரும் பாலான மதரஸாக்களின் நிலையே இதுதான் என்று தெரிய வந்தபின் தான் நமது மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. இதற்குப் பரிகாரம் என்ன என்று ஆராய்ந்தோம். இது விஷயமாகப் பல மவ்லவிகளைக் கலந்தோம். இன்று நம்மைக் கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கும் மவ்லவிகளில் நாம் கலந்து பேசிய மவ்லவிகளும் மதரஸா நிர்வாகத்தில் இருக்கிறார்கள். (அவசியப்பட்டால் அவர்கள் பெயரை வெளியிடவும் அல்லாஹ் மீது ஆணையிட்டுக் கூறவும் தயாராக இருக்கிறோம்) அன்று அவர்களை அணுகிப் பேசும்போது அதனை ஒரு பாரா தூரமான விஷயமாகவே அவர்கள் நினைக்க வில்லை. ஒரு ஈ மேனியில் அமர்ந்தது, பின்னர் பறந்து போய்விட்டது என்பது போல் அவர்களின் பேச்சு இருந்தது. அவர்களின் பேச்சு நமக்குக் கீழ்வரும் ஹதீஸை நினைவுபடுத்தியது.
“”நிச்சயமாக ஒரு மூமினானவர், மலையின் கீழ் ஒருவர் அமர்ந்து கொண்டு அது தம்மீது விழுந்து விடும் என்பதை பயந்து கொண்டிருப்பவரைப் போன்று தமது பாவங்களைப் பற்றிக் கருதிக் கொண்டிருப்பார். ஆனால், ஒரு பாவியானவன் தனது பாவங்களைப் பற்றி அவன் மூக்கின் அருகில் பறந்து செல்லும் ஓர் ஈயைப் போன்றது என நினைத்து அதைத் தன்னை விட்டும் தனது கையால் ஓட்டி விடலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறான்.’ (இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ)
இந்த மவ்லவிகளின்மீது நமக்கிருந்த நம்பிக்கை வீணான பின்பே நாம் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித் தோம். 12 வருடங்களுக்குப் பிறகே நேரடியாக குர்ஆன் ஹதீஸை புரட்ட ஆரம்பித்தோம். உண்மை நிலையைக் கண்ட றிந்தோம்.
இந்த மதரஸாக்களில் இவர்கள் கடைபிடித்து வரும் பாடத் திட்டமே இவர்களை இப்படித் தவறான வழியில் இட்டுச் செல்கிறது என்பதை அறிந்து அதனையும் தெளிவாக அவர்களிடம் எழுத்து மூலமாக எடுத்து வைத்தோம். நமது முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது. அதன் பின்னரே பொது மக்களை அணுகி உண்மை மார்க்கத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தோம்.
இதுவரை மெளனம் சாதித்த மவ்லவி வர்க்கம் ஆர்த்தெழுந்தது. பொதுமக்களிடம் கலப்படமே இல்லாத பொய்களைக் கூறி மக்களை நமக்கெதிராகத் தூண்டும் முயற்சியில் இறங்கினர். நம்மைக் குழப்பவாதி என்றும், இமாம்களை அவமதிப்பதாகவும் பொய் கூறி பொதுமக்களின் கோபத்தை நமக்கு எதிராகக் கிளப்பி விட்ட னர்; சத்தியத்தை மறைக்க இந்த அளவு துணிந்த பின்னரும் இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் நாம் எப்படி மெளனம் சாதிக்க முடியும்?
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.