ஆட்டோவும் மீட்டரும்… அப்பாடா..!
ஆட்டோவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய நியாயமான 25 ரூபாய் கட்டணத்தைக் கொடுத்ததுண்டா? ஆட்டோவில் ஏறியவுடன் போக வேண்டிய இடத்தை மட்டும் கேட்டு, மீட்டரை ஆன் செய்யும் ஆட்டோ டிரைவரைப் பார்த்த அனுபவம் உண்டா? நம்மில் யாரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டாலும், இதெல்லாம் நடக்கிற வேலையா என்றுதான் கடுப்புடன் பார்ப்போம். அரிதாக சிலருக்கு மட்டும் சென்னையில் இந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. வெகுவிரைவில் அனைவருக்கும் சாத்தியமாகப் போகிறது.
வாடகை டாக்ஸி, கார் போன்று, ‘நம்ம ஆட்டோ’ என்ற பெயரில் புதிய கம்பெனி ஒன்று சென்ற மாதம் 17-ஆம் தேதி சென்னையில் துவக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், எலெக்ட்ரானிக் மீட்டர், இறங்கும்போது எவ்வளவு தூரம் பயணம் செய்தீர்கள், அதற்கான கட்டணம் போன்ற விவரங்களைச் சொல்லும் அச்சிடப்பட்ட பில் என்று இந்த ஆட்டோக்களில் கிடைக்கும். கேட்கும்போதே அப்பாடா என்றிருக்கிறதா?
முதல் கட்டமாக 17 ஆட்டோக்கள்தான் சென்னையில் ஓடுகின்றன. வரும் ஜூன் மாததிற்குள் சென்னை முழுவதும் 350 நம்ம ஆட்டோ ஓட்டத் திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி, பொது மக்கள் ஆட்டோவைப் பயன்படுத்துவதில் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்” என்கிறார் கம்பெனியின் நிர்வாக மேலாளர் அப்துல்லாஹ்.
நம்ம ஆட்டோ என்ற பெயரில் ஆட்டோவைப் பார்த்தவுடன் இவர்களை கடுமையாக எதிர்த்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், மக்களிடம் நம்ம ஆட்டோவிற்கு இருக்கும் வரவேற்பையும் நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு கம்பெனி தரும் சம்பளத்தையும் பார்த்து, நாமும் நம்ம ஆட்டோ கம்பெனியில் சேர்ந்து விடலாமா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். நம்ம ஆட்டோ டிரைவர்களைப் பார்த்தவுடன், எப்படி இவர்கள் செயல்படுகிறார்கள் என்ற விவரத்தை ஆர்வமாகக் கேட்டு எல்லோரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாக இருக்கிறதே என்கிறார்கள், சக ஆட்டோ டிரைவர்கள்.
எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நம்ம ஆட்டோவில் முதல் 2 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாய்.அதன்பின் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் 10 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்தக் கட்டணத்தில் 2 மணி நேரத்திலேயே 650 ரூபாய் சம்பாதிக்க முடிவதாக நம்ம ஆட்டோ டிரைவர்கள் கூறுகிறார்கள். நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே கணிசமான லாபத்தைப் பெற முடிகிறது. இதுபோன்ற மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில், மேல்புறத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம்ம ஆட்டோ என்று எழுதப்பட்டு இருக்கும். பார்த்து ஏறுங்க!
தொடர்புக்கு : 044 65554040 /65552020 infonammaauto.com