முனாஃபிக்குகள்
தற்காலத்தில் முஸ்லீமாக இருப்பவர்களில் அதிலும் குறிப்பாக அல்குர்ஆன் ஹதீதுகளை பற்றிய சிறிய ஞானம் இருப்பவர்களிடத்தில் பிறரை இழிவாக கருதும் போக்கு மிகைத்திருப்பதை நம்மால் பரவலாக காண முடிகிறது.
ஒரு முறை ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழகான ஆடைகளை, காலணிகளை அணிவது பெருமையாகுமா என்று கேட்டபோது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ் அழகானவன். அவன் அழகானதையே விரும்புகிறான்” என்று கூறி விட்டு “பெருமை என்றால் சத்தியத்தை மறைப்பதும் பிறரை இழிவாக கருதுவதும்” ஆகும் என்றார்கள்.
பிறரை இழிவாக கருத கூடிய குணமான பெருமை இன்று நம்மில் பலரிடம் கோலோச்சுவதை பார்க்கிறோம். இந்த பெருமை தான் ஷைத்தானை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்கியது. செல்வத்தின் காரணத்தால், கல்வியின் காரணத்தால் வந்த பெருமை இன்று அமல்களின் காரணத்தால் ஏன் தான் சார்ந்துள்ள அமைப்பின் காரணத்தாலும் வருவதை பார்க்கின்றோம்.
அதனால் தான் தன்னை போலவே ஏக அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தலைவராகவும் அல்குர்ஆனை தன் சட்ட யாப்பாகவும் ஏற்று கொண்ட முஸ்லீம் சகோதரன் தான் சாராத அமைப்பில் இருக்கிறான் என்பதற்காக பகிரங்கமாக தடம் புரண்டோர் பட்டியலில் இணைப்பதை இன்று கண்கூடாக பார்க்கின்றோம்.
பிறரை முனாஃபிக் ஆக்க அயராது பாடுபடும் நம்மில் எத்துணை நபர்கள் நம்மிடம் முனாஃபிக்கின் பண்புகள் இருக்கின்றனவா என்று சிந்தித்து பார்த்திருக்கின்றோம். கீழ்காணும் நான்கு பண்புகள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர்கள் முனாஃபிக் என்று அல்லாஹ்வின் இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்டியலிட்டார்கள்.
1. அமானித மோசடி
2. பொய் பேசுதல்
3. வாக்குறுதி மீறல்
4. சண்டையிட்டால் மோசமான முறையில் நடந்து கொள்ளல். (ஸஹீஹ் புகாரி)
கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நம்மில் பலரிடம் ஏதேனும் ஒரு பண்பு இருப்பதை நாம் தெளிவாக உணரலாம். ஆனாலும் பிடிவாதமாய் நம் வாழ்வில் யாரேனும் ஒரு நபரை முனாபிக் ஆக்க முயற்சிக்கும் கீழ்காணும் இரு சம்பவங்களையும் பார்ப்போமா!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைஃபா இப்னுல் யமானிடம் (ரலியல்லாஹ் அன்ஹு) மதீனாவிலிருந்த முனாஃபிக்குகளை அடையாளம் காண்பித்திருந்தார்கள். இறுதிவரை இதை ஹுதைஃபா பாதுகாத்து வந்தது இஸ்லாமிய வரலாற்றின் ‘மதீனத்து ரகசியம்’. என்ற சிறப்பான பட்டத்தை அவருக்கு ஈட்டித் தந்தது.
ஹுதைஃபா ரலியல்லாஹ் அன்ஹுபாதுகாத்துவந்த இந்த ரகசியத்தை யார் கேட்டாலும் அவர் சொல்வதே இல்லை. ஆனால் உமர் ரலியல்லாஹ் அன்ஹு இதை வேறுவிதத்தில் கிரகிக்க முனைந்தார். அவர் கலீஃபாவாக இருக்கும்பொழுது யாரேனும் முஸ்லிம் இறந்து அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடைபெறும்பொழுது ஹுதைஃபா ரலியல்லாஹ் அன்ஹு வந்திருக்கிறாரா என்று பார்ப்பார். அவர் அந்தத் தொழுகையில் கலந்துகொள்ளவில்லையெனில் உமர் அந்த ஜனாஸாத் தொழுகையைத் தவிர்த்து விடுவார்.
ஒருமுறை உமர் ரலியல்லாஹ் அன்ஹு, ஹுதைஃபா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களிடம், “என்னுடைய ஆளுநர்களில் எவரேனும் முனாஃபிக்குப் பட்டியலில் உள்ளவரா?”
“ஒருவர்” என்றார் ஹுதைஃபா. ‘யார் அவர்’ என்று கலீஃபா உமர் ரலியல்லாஹ் அன்ஹு கேட்டதற்கு அடையாளம் காண்பிக்க மறுத்துவிட்டார் ஹுதைஃபா ரலியல்லாஹ் அன்ஹு.
ஆனால் சிலகாலம் கழித்து வேறு ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக அந்தக் குறிப்பிட்ட ஆளுநரை உமர் பதவி நீக்கம் செய்துள்ளார். ‘ஏதோ அல்லாஹ்வே நேரடியாக உமரை வழிநடத்தியதுபோல் அது நிகழ்ந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார் ஹுதைஃபா.
இங்கு நமக்கான படிப்பினை – வெகு நிச்சயமாய் ‘முனாஃபிக்’ என்று நபியவர்கள் அடையாளம் காண்பித்த நபர்களையே ஹுதைஃபா காட்டிக் கொடுக்கவில்லை என்றிருக்கும்போது. இன்றைய காலகட்டத்தில் முனாஃபிக் பட்டம் நடிகர்களுக்கு அளிக்கும் டாக்டர் பட்டத்தைவிட மலிந்துள்ளது பாருங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக அறிவித்த முனாஃபிக்குகளையே வெளிக்காட்டாத ஸஹாபியை பார்த்தோம். இப்போது தன்னையே முனாபிக் ஆக கருதிய இன்னொரு ஸஹாபியின் சம்பவத்தை பார்ப்போம்.
ஒரு முறை ஹன்ளலா ரலியல்லாஹ் அன்ஹு “ஹன்ளலா முனாஃபிக் ஆகி விட்டான்” என்று கூறிய படியே வந்து கொண்டிருந்தார்கள். அவரை இடைமறித்த அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு என்ன நேர்ந்தது? ஏன் இவ்வாறு உரைக்கிறீர்? என்ற போது ஹன்ளலா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருக்கும் போது சுவனம், நரகத்தை கண்களால் காண்பது போல் உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அங்கிருந்து அகன்று விட்டால் மனைவி, மக்கள், வியாபாரம் என்று மனம் உழல்கிறது. இது நயவஞ்சகத்தை போல் தெரிகிறது என்று சொன்ன போது அபுபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு தனக்கும் இவ்வாறே ஏற்படுகிறது என்று கூறி இருவரும் இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகிறார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என் உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, எப்போதும் அதே சிந்தனையில் இருந்திருந்தால் மலக்குகள் உன்னோடு கை குலுக்குவார்கள். நிச்சயமாக உலக விஷயங்களுக்கும் நேரமிருக்கிறது. இபாதத்துக்கும் நேரமிருக்கிறது” என்று கூறி ஆறுதல் படுத்துகிறார்கள் (முஸ்லீம்)
அதே சமயத்தில் இன்னொரு ஹன்ளலா செய்த தியாகம் என்ன என்பதையும் பார்ப்போம்.
ஹன்ளலா ரலியல்லாஹ் அன்ஹு இஸ்லாத்தின் கொடிய எதிரியான முனாபிக் அப்துல்லா உபையின் மகளான ஜமீலாவை திருமனம் செய்கிறார்கள். திருமணம் நடந்த அன்றே உஹது போருக்கான அறிவிப்பு வெளியாகிறது. ஹன்ளலாவின் மாமனார் தான் மதீனாவிற்கு செல்லவிருந்த 1000 நபர்களில் 300 நபர்களை திருப்பி அனுப்பி குள்ள நரி வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடித்து முதலிரவு முடித்த உடன் போர்கள செய்தி கேட்டவுடன் ஜிஹாதுக்கு கிளம்புகிறார் புது மாப்பிள்ளை ஹன்ளலா ரலியல்லாஹ் அன்ஹு. அவர் களத்துக்கு கிளம்ப எத்தனிக்கையில் தன்னை பெருந்தொடக்கிலிருந்து சுத்தம் செய்ய தண்ணீர் கிடைக்காததால் அப்படியே போர்களம் செல்கிறார்.
களத்தில் தீரமாக போராடி அபூ சுஃப்யானின் குதிரையின் காலை வெட்டுகிறார். அபூ சுப்யானை துரத்துகையில் எங்கிருந்தோ வந்த ஈட்டி ஹன்ளலாரலியல்லாஹ் அன்ஹு அவர்களை பதம் பார்க்க அக்களத்திலேயே ஷஹீதாகிறார். ஜுனுபாத்(குளிப்பு கடமையான) நிலையிலும் தாமதிக்காமல் களத்துக்கு வந்த ஷஹீதான அவரது உடலை மலக்குகள் குளிப்பாட்டுவதாக நபிகளார் உரைத்தது அவரின் தியாகத்துக்கு அல்லாஹ் அளித்த சிறப்பை பறை சாற்றுகிறது.
தன்னை முனாஃபிக் என்று கருதிய ஒரு மனிதரால் இத்துணை தியாகம் செய்ய முடியும் எனில் நமது நிலை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். மார்க்கத்தை கூறுகளாக்கி அதை வணக்க வழிப்பாட்டோடு சுருக்கி நாம் செய்யும் அமலோடு திருப்தி பட்டு கொண்டு சுவனம் நமக்கு தான் என்று அல்லாஹ் நமக்கு வஹீ அறிவித்ததை போல் யார் யாரை முனாஃபிக் ஆக்கலாம் என்று இருக்கும் நாமும் இச்சமூகத்தை படிப்போம், அவ்வழி வாழ்வோம்.
அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹ் அன்ஹு அல்லாஹ் பொருந்தி கொண்டவர்கள்.
source: http://www.islamiyakolgai.blogspot.in/search?updated-max=2013-06-24T16:24:00%2B03:00&max-results=20