அவர்கள் மட்டும் எப்படிக் குடித்தார்கள்?
எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் சுவர்க்கம் செல்வார்கள்? எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் நரகம் செல்வார்கள்?
எழுத்தாளரும் கதை சொல்வதில் வல்லவருமான ஸப்ரினா A. அக்பர் அவர்கள் சொன்ன ஒரு கற்பனைக் கதையைக் கீழே தருகிறோம். நீங்களும் படித்துப் பாருங்கள்:
ஒரு ஊரில் ஒரு தாத்தாவும் பேரனும் இருந்தார்களாம். ஒரு நாள் பேரன் தாத்தாவிடம் கேட்டானாம். ஏன், தாத்தா, ஒரு சிலர் மட்டும் சுவர்க்கம் சென்று விடும்போது மற்ற சிலரால் ஏன் சுவர்க்கம் செல்ல முடியவில்லை?
தாத்தா தனது பேரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேரனின் புத்திக்கூர்மையை வியந்தவராக பேரனுக்குப் பொருத்தமான பதில் ஒன்றை சிந்திக்கத் தொடங்கினார்.
தாத்தா சொன்னார்: சுவர்க்கத்துக்கு வாசல்கள் உள்ளது போலவே நரகத்துக்கும் வாசல்கள் உண்டு; உனக்கு அது தெரியும் தானே! கொஞ்சம் கற்பனை செய்து பார்; நரகத்தின் கதவு ஒன்றை நாம் திறப்போம். அங்கே என்ன தெரிகிறது? ஒரு பெரிய கூடம் அது; நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை அது. ஆனால் அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் நோயாளிகளைப் போல ஒல்லியாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் பட்டினியால் பல நாட்கள் வாடியிருப்பது தெரிந்தது.
அவர்கள் கைகளில் ஆளுக்கொரு கரண்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதன் கைப்பிடிதான் மிக நீளமானதாக இருந்தது. எந்த அளவுக்கு எனில் அந்தக் கரண்டியினால் பாயாசத்தை எடுத்து தம் வாய்க்கு அருகே ஒருவராலும் கொண்டு செல்ல முடியவில்லை! ஏனெனில் அவர்களின் கைகளை விட அந்தக் கரண்டிகளின் கைப்பிடி மிக நீளமானதாக இருந்தது! அதனால் யாராலும் அந்தப் பாயாசத்தைக் குடிக்க முடியவில்லை!
இப்போது சுவர்க்கத்தின் கதவு ஒன்றை நாம் திறந்து பார்ப்போம். அங்கே என்ன தெரிகிறது? அதே போலவே இங்கேயும் ஒரு பெரிய கூடம்; நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே அதே போல ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் அதே வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை தான் இதுவும். அதே போல கரண்டியைத் தான் இங்கேயும் ஆளுக்கொன்று வைத்திருந்தார்கள். ஆனால் இங்கே அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் மிக நன்றாக கொழு கொழு என்று வாட்ட சாட்டமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அங்கே சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தார்கள்.
சிறுவன் கேட்டான்: எனக்கு இது புரியவில்லையே!
சிம்பிள்! இதற்கு ஒரே ஒரு திறமை மட்டும் தான் வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டியது தான் அந்த சின்ன டெக்னிக்!
மற்றவர்க்கு உதவும் மனப்பான்மை மிக்கவர்கள், எப்போதும் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சுவர்க்கத்தில் நீ பார்த்தது இவர்களைத் தான்!
ஆனால் பேராசை பிடித்தவர்களும், சுயநலம் பிடித்தவர்களும் தங்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மற்றவர் நலன் குறித்து இவர்களுக்கு அக்கரையே கிடையாது. நரகத்தில் நீ பார்த்தது இவர்களைத் தான்!
இது கணவன்-மனைவி உறவுக்கு மிகவும் பொருந்தும்!
குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வைத்திருப்பது பெரிய கைப்பிடி உள்ள கரண்டிகளைத் தான்!
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ஊட்டி விடுவதில் தான் இல்லற சுவர்க்கமே அடங்கியுள்ளது.
சுயநலம் பிடித்த கணவன் மனைவியர் இல்லற வாழ்வில் பட்டினி கிடந்து மெலிந்து போய் நரக வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருப்பர்.
படிப்பினை பெறுவார்களா இக்கதையிலிருந்து?
source: http://www.thegardenacademy.in/?p=2696