Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!

Posted on June 28, 2013 by admin

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!

சில தினங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு, எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.

அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசு சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று! அதாவது 35. மகள் சொன்னாள் அவருக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அவர் வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.

புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு விருப்பம் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.

கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன் டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் “அண்ணி உங்களுக்கு என்ன வயது?” என்று! எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.

அதற்கவர் “நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41” என்றார்.

மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு இளமை அந்த பெண்மணியிடம்!

இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விடை இல்லை.

தனது வயது,

சொத்து,

வீட்டில் நடந்த சண்டை,

அந்தரங்கம்,

கோபத்தில் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள்,

கணவன் மனைவியின் பிரியம்,

தானம்,

தனக்கேற்பட்ட புகழ்,

அவமானம்

இந்த ஒன்பது விடயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது”

உண்மையில் மிக முக்கியமான வரிகள்.

என்னை எல்லோரும் எப்படி இளைமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.

வீட்டில் நல்ல மனைவி, சண்டை சச்சரவு இல்லை. நல்ல இரண்டு பிள்ளைகள் தொந்தரவு இல்லை.

எனக்குப் பிடித்த வேலை, பச்சைத் தண்ணீர் குடிக்கிறேன். தினமும் கீரையை உணவில் மனைவி சமைத்துத் தருகிறது. நிறைய வாசிக்கிறேன். இவைகள் சில நேரம் காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

அத்தோடு எதனையும் போட்டு அலட்டிக் கொள்ளாத மனம் இருக்கிறது. இரத்த அழுத்தம் ஏறுவதற்கு விடமாட்டேன். இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். மனம் வயதுக்கு முக்கிய காரணம்.

அடுத்தது உணவு, என்ன கிடைத்தாலும் வயிற்றினுள் தள்ளப்படாது. முஹமது நபிகளாரின் மொழி ஒன்று இருக்கிறது. “வயிற்றை மூன்றாக பிரியுங்கள் ஒரு பகுதி உணவுக்கு, அடுத்த பகுதி நீருக்கு, மற்ற பகுதியை வெறுமையாக வைத்திருங்கள்”. அப்பொழுது தான் உணவு செமிபாடு அடையும். இன்னொன்று பசிக்கும் போது உணவுத் தட்டில் உட்கார்ந்து பசியுடனேயே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விட வேண்டும். அர்த்தம் வயிற்றை நிரப்பாதீர்கள் என்பதுதான். அப்பொழுதுதான் சாகும் வரை உடல் இலகுவாக அழகாக இருக்கும். தண்ணீர் நிறையவே குடிக்க வேண்டும்.

சரி அந்த வரிகள் சொல்லும் விடயம் வயதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது.

அந்த வீட்டுக்கு வந்த அன்று தனது வயதை சொல்லாமல் இருந்தால் அவவின் அழகான இளைமைத் தோற்றம் உண்மையில் ஆச்சரியப்படுத்திக் கொண்டு தான் இருந்திருக்கும்.

நடிகை ஒருவரிடம் ஒரு நிருபர் கேட்டார் “இவ்வளவு அழகுக்கு என்ன செய்கிறீர்கள்” என்று! அவ சொன்னா தண்ணீர் குடிக்கிறேன்.

வீட்டில் நடந்த சண்டையை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்பது உண்மைதான்.

கணவன் மனைவி அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான சண்டையை வேறு யாருடனும் பகிர்ந்து கொண்டால் பெரும் சிக்கலில் முடிந்து விடும்.

இங்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த விடயம்தான் குடும்பங்கள் பிள்ளைகள் சீரழிய காரணமாகின்றன.

தமிழகத்தில் இருந்த ஒரு கணவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்களிடையே அரசல் புரசலான சண்டை இருந்து கொண்டிருந்தது. அதனை அவர்களால் தீர்த்து ஒற்றுமையாக முடியாமல் இருந்தது. அவர்களின் இந்த சண்டை தொடர்பாக லண்டனில் இருந்து தமிழகம் போன கணவனின் ஒரு நண்பரிடம் அந்த மனைவி சண்டையை சொல்லி அழுது கண்ணீர் விட்டிருக்கிறா.

அந்த பெண்மணியின் கண்ணீர் லண்டனில் இருந்து போனவருக்கு இரக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது கணவனுக்கு தெரியாமல் லண்டன் நண்பரை அடிக்கடி ஹோட்டல்களில் சந்திக்க அவர்களுக்கிடையான அன்னியோன்யம் அதிகமாகி விட்டது.

லண்டன்காரருக்கு இங்கு இரண்டு பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். அந்த அன்னியோன்யம் காதலாகி லண்டனுக்கு அவவை கூப்பிடுகின்ற அளவுக்கு விஸ்தாரமாகி விட்டது.

இங்கு மனைவிக்கு தெரிந்து அவவும் சன்னதம் ஆட குடும்பம் பிரிந்து விட்டது. இப்பொழுது இரண்டு குடும்பமும் பிரிந்து விட்டது. அவர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவரின் பிள்ளைகள் அவரை வெறுத்து விட்டன. அவரின் சொந்தக்காரர்கள் வெறுத்து விட்டார்கள். அவரின் அம்மா, அப்பா முகம் பார்ப்பதில்லை. பெரும் மன உளைச்சலோடு திரிகிறார். எனக்குத் தெரிந்தவர் அவர். சுலோகம் சொல்வது சரிதான்.

கணவன் மனைவியின் அன்பு, பாசம், பிரியம் என்பவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது.

எனக்குத் தெரிய நடந்தது. இரண்டு தோழிகள் சின்ன வயதில் இருந்து அவர்களை கண்டிருக்கிறேன் ஏதோ இரட்டையர்கள் போல இருப்பார்கள். கையில் பிடித்துக் கொண்டு தான் றோட்டில் போவார்கள். பேசிக் கொண்டார்கள் தாங்கள் கலியாணம் செய்தால் ஒரு ஆம்பிளையைத் தான் கலியாணம் செய்வோம் என்று. அவ்வளவு ஒட்டுதல்.

தோழிகளில் ஒருத்தி ஒருவரை காதலித்து திருமணம் செய்து விட்டாள். மற்றவள் நாள் போக இரண்டு தோழிகளும் மீண்டும் ஒட்டுதல் கூடி விட்டது. வீட்டுக்காரர்களுக்கும் ஒருவகையில் சந்தோசம். கலியாண நேரத்தில் ஒரு சின்ன மனத்தாங்கல் வந்து பிறகு ஒட்டி விட்டார்கள். ஆனால் ஆறு மாதங்கள் கடந்திருக்கும், தனது நண்பியின் கணவரை கொத்திக் கொண்டு மற்றவள் வெளிநாட்டுக்கு போய் விட்டாள். என்ன நடந்தது என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டது இதுதான்.

கணவன் தன்னோடு செய்யும் எல்லாவற்றையும் தனது தோழிக்கு ஒன்று விடாமல் சொல்லி வந்திருக்கிறாள் தோழி. மிக நல்ல ஆண் மகன் செக்ஸில் பெரும் திருப்தி செய்யக் கூடியவர் அவர் என்று கணவனைப்பற்றி தோழியிடம் சொல்ல சொல்ல அவளுக்கு நண்பியின் கணவன் மீது ஈர்ப்பு வந்துவிட்டது மேலெண்ணம் வர தோழியின் கணவரை தன் வசப்படுத்தி விட்டாள் நண்பி. சுலோகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதானே.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கே லண்டனில் இப்பொழுது பெரும் அல்லாட்டத்தில் கிடக்கிறது. லண்டனுக்கு வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. வேக் பேமிட்டில் இருக்கிறார்கள். எப்பொழுதும் வேக் பேமிட்டில் இருந்தால் கொம்பனிக்காரர்களுக்கு ஒருவித அடிமை சாசனம் போலத்தான் அது. கொம்பனி என்ன சொல்லிகிறதோ அதுக்கு தலையாட்ட வேண்டும். இல்லாவிடில் கொம்பனிக்கு உரிமை இருக்கிறது வேக் பேமிட்டை கான்சல் பண்ண. வேலையும் போய்விடும் விசாவும் அதோகதி.

அதுவும் தமிழ் முதலாளிமார் பாடு பெரும் பாடு. வேக் பேமிட்டில் இங்கு லண்டனுக்கு எடுத்து விட்டால் தங்களுக்கு கீழ் படிய வேண்டும் என்று நடப்புக் காட்டுவார்கள்; காட்டுகிறார்கள்.

நான் சொன்ன குடும்பத்துக்கு பிரான்ஸ், கனடா என்று அண்ணன் தம்பிமார் இருக்கினம். அவர்கள் தங்களது சகோதரத்துக்கு ஒரு வீடு வாங்க கொஞ்சக் காசு கொடுத்தார்கள். லண்டனில் வீடு வாக்குவது என்பது சாதாரணமான விடயம் இல்லை. டிப்போசிட் கட்ட வேண்டும். மாதா மாதம் மோர்கேஜ் கட்ட வேண்டும் என்று அது ஒரு பெரிய விடயம்.

சொந்தக்காரர்கள் முப்பதினாயிரம் பவுண்டுகள் கொடுத்து வீடு வாங்க உற்சாகப்படுத்த இந்த விடயத்தை அந்தப் பெண்மணி வேலை செய்யும் இடத்தில் சொல்லி விட்டாள். அதுவே அவளுக்கு வினையாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

பொறாமை, சூது, வஞ்சகம், குழி பறித்தல் எமது மண்ணின் குணமோ தெரியாது, தமிழரிடம் அதிகமாக இருக்கிறது.

இங்கு லண்டன் வந்தும் அந்தக் குணம் போகிறது இல்லை. தம்மை விட கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று பக்கத்து வீட்டார், நண்பர்கள் என்று யாரையும் பார்த்து போறாமைப்படும் ஆட்களைத் தான் தினமும் கண்டு கொண்டிருக்கிறேன் லண்டனில்.

அந்தப் பெண்மணி வேலை செய்யும் அலுவலகத்தில் போய் வீடு வாங்கப் போகிறோம் என்று சொல்ல ஆரம்பமானது பொறாமை வியூகம்.

அவள் வேலையிடத்தில் ஒரு பெண்மணி உயர் பதவியில் இருக்கிறா. அவ இவர்களை எப்படியாவது வீடு வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்களின் வேலை நேரத்தைக் குறைத்து ஓவர் டைம்மை குறைத்து இப்பொழுது வேக் பேமிட்டுக்கே உலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது விடயம். அவர்கள் முன்னேறி வந்து விடுவார்களே என்ற பொறாமை வியூகம் சுற்றிச் சூழ்ந்து நிற்கிறது.

கணவனும் மனைவியும் அந்தக் கவலையால் நொந்து நூலாகிப் போய் விட்டார்கள். உண்மையில் இந்தப் பொறாமை கொள்ளும் விடயம் என்பது எங்கள் தமிழர் சமூகத்தில் எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்; எரிச்சலாக இருக்கிறது.

அவரின் உழைப்பு, அவரின் பணம், அவரின் ஊதியம் அவர் முன்னேற சும்மா உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை இந்த சமூகத்தை.

சொத்தைப்பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சுலோகம் சொல்வது சரிதானே. எவ்வளவு சிக்கலில் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்ன ஒன்பது விடயங்களையும் பெரீசா போட்டோ காப்பி எடுத்து எனது டயறியில் ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்களும் அவ்விதமே செய்யுங்கள். சொன்னால் சிக்கல் படுவீர்கள்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

34 − = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb