முஸ்லீம் அரசியலால்
விலை பேசப்படும்
இஸ்லாமிய அரசியல்!
ஒவ்வொரு புரட்சிகளும், போராட்டங்களும் ஒரு மாற்றத்தை வேண்டியே நடத்தப் படுகின்றன. அந்த மாற்றம் நிகழ்கால வாழ்வியல், அதன் அடிப்படை இலக்கு, அதை அடைவதற்கான வழிமுறைகளுக்கு பாதகம் இல்லாத அல்லது அதில் சிற்சில மேலோட்டமான பகுதி மாற்றங்களை செய்வது எனும் போராட்டமாக அமைந்து விட்டால் அதை ஒரு சித்தாந்த மாற்றமாக கருத முடியாது; மாறாக அது வெறும் உரிமைப் போராட்டமாகவே கருதப்பட முடியும்.
இப்போது எமக்குள்ள தேடல் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சி அதன் பின் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தொடர்பில் எமது பார்வையும், ஏகாதிபத்திய முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் சதித் தனமான நடத்தை தொடர்பாகவும் ஒரு தெளிவை வரையறை செய்யும் நிலையில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது எனும் அளவுக்கு முரணான அல்லது ஜீரணிக்க முடியாத தகவல்கள் கிடைக்கின்றது! அது ஏன்? என்பதுதான்.
சித்தாந்த மாற்றம் என்பது ஒரு தலைகீழ் மாற்றமாகும் அது நடைமுறையில் இருக்கும் சமூக நடத்தை, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற காரணிகளை மட்டும் மையப்படுத்தாது இத்தகு நடத்தைகளின் அடிப்படையாக இருக்கும் சித்தாந்தத்தையே முற்றாக புறக்கணித்து இன்னொரு சித்தாந்தம் சொல்லும் முறையில் சமூக நடத்தை, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற காரணிகளை முற்றாக அமுல் நடத்தலாகும்.
இந்த வகையில் இஸ்லாம் உலகில் எதிர்பார்ப்பது ஒரு சித்தாந்த மாற்றத்தையா? அல்லது நடப்பு நிலவரங்களில் சில பகுதி மாற்றங்களை வேண்டிய உரிமைப் போராட்டத்தையா? இதிலிருந்து தான் முஸ்லீம்களின் நிகழ்கால போராட்ட வரலாறு ஆராயப் பட வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமும் நிதானமாக உணரவேண்டிய விடயமாகும்.
முஸ்லீம்களின் இயல்பான தேடல் பற்றி இங்கு நான் குறைகூற வரவில்லை. இஸ்லாத்தின் கீழ் சுதந்திரமாக அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றி வாழ்வது தொடர்பில் முஸ்லீம்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை .ஆனால் அதற்கான பாதை தொடர்பில் தான் முரண்பாடுகளும், சர்ச்சையும் தொடங்குகின்றது.
இஸ்லாத்தின் கட்டளைகள் பிறப்பு முதல் மரணம் வரை ஒரு முஸ்லிமை அவன் விரும்பியோ, விரும்பாமலோ அதற்கு அடிபணிய வேண்டுவது. அந்த வகையில் இஸ்லாம் அற்ற நிலையை ‘ஜாஹிலீயா’ அதாவது அறியாமை என்றே குறித்துக் காட்டுகின்றது . இந்த வகையில் இஸ்லாம் முற்றாக அமுல் நடத்தப் பட முடியாத நிலையில் இடைக்கால வாழ்வியல் ஒன்று இல்லவே இல்லை. ‘வஹியின்’ வருகை பூரணப் படுத்தப் பட்டபின் சூழ்நிலை சட்டங்கள் எனும் பெயரில் படிமுறை மாற்றம் பற்றி இப்போது பேச முடியாது.
இங்கு நான் நிர்ப்பந்தம் தொடர்பான இஸ்லாத்தின் தளர்வுகள் பற்றி பேச வரவில்லை அவையும் விதிக்கப் பட்டது ,தற்காலிகமானது ஆனால் இப்போது ஒருவர் மது தொடர்பான படிமுறை சட்டத்தை கூறி அதை அமுல் நடத்த முயற்சிக்க முடியாது. இப்போது நம்பப்படுவது, இத்தகு சூழ்நிலை வாதம் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல.
ஒருபுறம் ‘கிலாஃபா’ அரசு அற்ற நிலையில் ஜனநாயகம் ஒரு சூழ்நிலைவாத அரசியலாக அல்லது கிலாஃபாவை அடையும் பாதையில் இடைக்கால தீர்வாக பேசப்படுவதில், நடைமுறைப் படுத்தப் படுவதில் முஸ்லீம் சமூகம் திசை திருப்பப் பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட பொறி! இதில் சிக்கியவர்கள் ஜனநாயக மரபுக்குள் புதைந்து ஒரு ஆன்மீக மதமாக இஸ்லாத்தின் முன்னுரிமை பற்றி போராட முடியும். ஆனால் இஸ்லாத்தில் இருந்து வாழ்வியலை தீர்மானிக்கும் தரத்தை நோக்கி நகர முடியாது. இந்த வித்தியாசம் சரியாக உணரப்பட வேண்டும்.
இன்றைய முதலாளித்துவ ‘அகீதா’ இஸ்லாமிய எழுச்சி தொடர்பில் சாதிக்க நினைப்பது ஜனநாயக அரசியலில் அதி கூடிய பட்சம் ஆன்மீக இஸ்லாத்திற்கான முன்னுரிமை கொண்ட ஒரு வாழ்வியலை முஸ்லீம் பேணுவதோடு, (பாரிய முரண்பாடுகள் அற்ற) சர்வதேச அரசியலை பேணக்கூடிய தேசிய அரசுகளின் உருவாக்கத்தை தான் ஆகும்.
சிரியாவில் ஹிஸ்புல்லாகளுக்கு ஆயுதம் கொடுத்து இஸ்லாமிய போராளிகளை தாக்கவைக்கும் C.I.A அரசியலுக்கும், அதை சாட்டாக வைத்து ‘சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ‘மொசாத்’ அரசியலுக்கும், ரஷ்யா கனரக ஏவுகணைகளை வழங்கும் வரை காத்திருந்து இன்று அதற்கு மாற்றீடாக போராளிகளுக்கும் ஆயுதம் கொடு?! என போர்ச் சமநிலையை பேணி ‘ஆப்கான்’ பாணியில் மூக்கை நுழைக்க மேற்கு தடுமாறுவதும் சில அடிப்படை சுய நலன்களை வேண்டியது.
I.M.F. வேர்ல்ட் பாங் லோன் போல இந்த ‘வெபன் சப்ளை டிப்லோமடிக்கும்’ ஒரு சரணடைவு அரசியலை நோக்கிய கௌரவ அழைப்பே. இந்த இலக்கை இப்படியும் சொல்லலாம்’ இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் மேற்கின் ‘அகீதா’ பாதுகாக்கப் பட வேண்டும். அதிலும் குறிப்பாக இஸ்ரேலின் இறைமை பேணப்பட வேண்டும் என்பதே.
source: http://aburukshan.blogspot.in/2013/06/blog-post_7.html