மாற்றம் வருவதில்லை… வரவழைக்கப்பட வேண்டும்!
முதலில் மாற்றம் பற்றிய பார்வைகள் பக்கம் ஒரு கண்ணோட்டம்.
ஒரு பார்வை:
அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் இஸ்லாமியப் படை “அம்வாஸ்” எனும் பிரதேசத்தை அடைந்தபோது அங்கு கொலரா நோய் பரவியிருந்தது. படையினர் மத்தியிலும் அந்த நோய் பரவ ஆரம்பித்தபோது கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படையை வேறு ஒரு பிரதேசத்திற்கு நகர்த்துமாறு தளபதிக்கு உத்தரவிட்டார்கள்.
அதற்குத் தளபதி அபூ உபைதா “அல்லாஹ்வின் கத்ரை விட்டு ஓடலாமா?” என ஆச்சரியத்தோடு வினா எழுப்பினார். “அல்லாஹ்வின் கத்ரிலிருந்து அல்லாஹ்வின் மற்றுமொரு கத்ரை நோக்கி நகருங்கள்” என உறுதியாகப் பதிலளித்தார்கள் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
மற்றுமொரு பார்வை:
அல்லாஹ்வின் ஏற்பாடு இதுதான் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அல்லாஹ் நாடாமல் அணுவும் அசையாது. பித்னாவுடைய காலம் வந்திருக்கிறது. காலத்தை மாற்ற யாரால் முடியும்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். காலத்தை ஏவி விட்டவன் அல்லாஹ். அவனாலே அதனை மாற்ற முடியும். துஆ செய்யுங்கள் அதுதான் எங்களது ஆயுதம். மாற்றத்தைக் கொண்டு வர அவனால் மட்டுமே முடியும்.
மாற்றம் வேண்டும் என்பதில் யாருக்கும் இரு கருத்திருக்க மாட்டாது. எனினும், மாற்றம் குறித்த பார்வை மேலே கூறப்பட்டது போல இரு துருவங்களாகவே இருக்கின்றன.
அமீருல் முஃமினீன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாற்றம் பற்றி என்ன கூறுகிறார்கள்?
“நீங்கள் மாற்றுங்கள் அல்லாஹ் மாற்றுவான்”
இன்றைய முஸ்லிம்கள் என்ன கூறுகிறார்கள்?
“நாங்கள் எதனையும் மாற்ற முடியாது. அல்லாஹ்வின் கையில்தான் அனைத்துமுள்ளது. அவன் நாடினால் எதையும் மாற்ற முடியும். எங்களால் செய்ய முடிந்த ஒரே கருமம் “யா அல்லாஹ்! அனைத்தையும் மாற்றிவிடு, என்று துஆ செய்வது மட்டுமே”
அல்லாஹ் என்ன கூறுகிறான்?
“ஒரு சமூகத்திலிருப்பதை அவர்கள் மாற்றும் வரை அல்லாஹ் அவர்களிடமிருப்பதை மாற்றப் போவதில்லை.” (அர்ரஃது: 11)
முஸ்லிமல்லாதவர்கள் என்ன கூறுகிறார்கள்?
“மாற்றத்தை நோக்கித் திட்டமிடுங்கள். தவறினால் தோல்வியை வரவழைப்பதற்கு திட்டமிடுகிறீர்கள்.”
உலகம் அசுர வேகத்தில் மாறிக் கொண்டு செல்கிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக் கின்றன. இந்த அனைத்து மாற்றங்களுக்கும் பின்னால் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அறிவும் திறனும் அயராத உழைப்பும் இருக்கின்றன.
மாற்றத்தைக் காண விரும்புபவர்கள் அனைவரும் ஒன்றை உறுதியாக நம்புகிறார்கள். கடுமையான உழைப்பு இன்றி எந்த மாற்றமும் வர முடியாது என்பதே அந்த நம்பிக்கை. முஸ்லிம்களோ உழைப்பின்றியே மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்குக் காரணம், அல்லாஹ் நாடினால் அனைத்தும் மாற முடியும் அவனின்றி அணுவும் அசையாது என்பன போன்ற நம்பிக்கைகளை அவர்கள் பிழையாக விளங்கியமையாகும்.
முஸ்லிம்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக உழைப்பில் தீவிரம் காட்டுகிறார்கள் அயராது உழைக்கிறார்கள். சமூக மாற்றம் என்று வருகின்ற போது மட்டும் அல்லாஹ் நாடினால் நடக்கும் என்று கதை கூறுகிறார்கள். தங்களது உலக நலன்கள் விடயத்தில் அயராது உழைக்கிறார் கள். மறுமை விடயத்தில் “அல்லாஹ் நாடியது தானே நடக்கும். உழைத்து என்ன பயன்?” என்று கேட்கிறார்கள்.
பின்வரும் நபிமொழிச் செய்தியை எம்மவர்கள் எவ்வாறு விளங்கியுள்ளார்கள் என்பதை சற்று அவதானியுங்கள்.
கருத்தரித்த 40வது நாள் (அல்லது நான்காவது மாதம்) ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படுகிறார். அவர் அந்த சிசுவில் ரூஹ் ஊதிவிட்டு கருவிலிருக்கும் குழந்தை பற்றிய நான்கு விடயங்களை எழுதுகிறார். அக்குழந்தை பாக்கியசாலியா, அபாக்கியசாலியா, உலகில் அது எவ்வளவு காலம் வாழும், அதற்கு அளக்கப்பட்டுள்ள வாழ்வாதாரம் எவ்வளவு?
இந்த நபிமொழிச் செய்தியை செவிமடுப்போர் உடனடியாக எழுப்பும் வினா “அல்லாஹ் ஒரு மனிதனை நரகவாதி என்று தீர்மானித்து விட்டால் அவர் எத்துணை நன்மை செய்தபோதிலும் சுவர்க்கம் போகலாமா?” இந்த வினாவில் தொக்கி நிற்கும் விடயம் எது? உழைப்பால் சுவர்க்கம் போகலாமா? என்பதுதானே.
இதே வினாவை, எழுதப்பட்டுள்ள மற்றொரு “கத்ர்” விடயத்தில் ஒருவரும் கேட்பதில்லை! உதாரணமாக, வறுமையிலிருக்கின்ற ஒரு மனிதன் “நான் ஏன் உழைக்க வேண்டும்? அல்லாஹ்வினால் எழுதப்பட்ட வாழ்வாதாரம்தானே எனக்குக் கிடைக்கும் வறுமையைப் போக்க நான் ஏன் வீண் சிரமங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்பதில்லை.
சுவர்க்கம் அல்லது நரகம் என்ற விடயத்தில் உழைப்பு பயனற்றது என்று கருதும் ஒருவர் வாழ்வாதாரம் தேடி அயராது உழைக்கிறார். கடல் கடந்து சென்று திரவியம் தேடுகிறார். அங்கும் எழுதப்பட்டவைதானே கிடைக்கும் உழைக்க வேண்டியதில்லையே என ஏன் அவர் நினைப்ப தில்லை?
எழுதப்பட்டுள்ள ஒரு விடயத்தை ஒரு விதமாகவும் இன்னொரு விடயத்தை இன்னுமொரு விதமாகவும் அணுகுவது எத்துணை பெரிய தவறு! வாழ்வாதாரத்துக்காக ஒருவர் உழைப்பதுதான் முறையென்றால் சுவர்க்கத்துக்காகவும் உழைப்பதுதானே முறை! சொந்த வாழ்க்கையை மேம்படுத்து வதற்காக உழைப்பது முறையென்றால் சமூக வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் உழைக்க வேண்டியதுதானே முறை!
முஸ்லிம் சமூகம் “மாற்றம்” குறித்த விடயத்தில் இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்ட சமூகமாக இருக்கக் கூடாது. “அல்லாஹ்வின் ஏற்பாடு| என்று கூறி ஒன்றை முற்றாக கைவிட்டு விடுகிறோம். மற்றொன்றை துரத்தித் துரத்தித் தேடுகிறோம். ஏற்பாடு (கத்ர்) எதுவாக இருந்தாலும் சரி. அதனை நாம் அலட்டிக் கொள்வதில்லை. இத்தகைய இரட்டை நிலைப்பாடு அல்லாஹ்வைக் கேலிக்குரியவனாக மாற்றும் ஒரு பாவச் செயலாகும்.
மாற்றம் குறித்து உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொண்ட நிலைப்பாட்டையே நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குர்ஆனியப் பாசறையில் வளர்க்கப்பட்ட அந்த உத்தமர் “மாற்றம்” பற்றி எத்துணை அற்புதமான ஒரு விளக்கத்தைக் கொண்டிருந்தார்! அல்லாஹ் அன்னாருக்கு அருள் புரிவானாக!
கொலரா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சூழலானது “அல்லாஹ்வின் ஏற்பாடு (கத்ர்)| என்பதை அவர் மறுக்கவில்லை. அதேவேளை, அதனை அங்கீகரிக்கும் மனோநிலையில் அவர் இருக்கவும் இல்லை. அதனை மாற்ற வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. நோய்ச் சூழலை கத்ர் என அங்கீகரித்து, அங்கேயே கிடந்து முஸ்லிம் சிப்பாய்கள் மரணித்துப் போவதை அவரது உள்ளம் முற்றாக மறுக்கிறது.
ஒன்றில் இடத்தை மாற்ற வேண்டும் அல்லது நோயை மாற்ற வேண்டும். இடத்தை மாற்று வதுதான் அப்போதைக்கு உசிதமானது. எனவே, இடத்தை மாற்றுமாறு அவர்கள் உத்தரவிடுகிறார் கள். அதனை அவர்கள் கூறிய விதம் அற்புதமானது. “கத்ரிலிருந்து இன்னுமொரு கத்ருக்குச் செல்லுங்கள்” என்று அதனை அவர் பிரஸ்தாபிக்கிறார்.
அதாவது, பாதிக்கப்பட்ட சூழல் ஒரு கத்ராக இருந்தால் பாதிக்கப்படாத சூழலும் ஒரு கத்ர்தான். அதனை ஒன்றில் உருவாக்க வேண்டும் அல்லது அவ்வாறான ஒரு சூழலை நோக்கி நகர வேண்டும். இன்றைய எமது சமூகச் சூழலை எடுத்துக் கொள்வோம். கொலராவை விடப் பயங்கரமான பாதிப்புக்கள் நிறைந்த ஒரு சூழலில் இன்று நாம் வாழ்கிறோம். இது அல்லாஹ்வின் ஏற்பாடா? என்று ஒருவர் கேட்டால் நாம் “இல்லை” என்று மறுக்க மாட்டோம். எனினும், அதனை எங்களால் அங்கீகரிக்க முடியாது.
இந்தப் பாதிப்புக்கள் எதுவும் இல்லாத ஒரு சூழலை உருவாக்குவதும் அந்த சூழலை நோக்கி சமூகத்தை நகர்த்துவதும்தான் அல்லாஹ்வும் அவனது அடியார்களும் விரும்புகின்ற சிறந்த “கத்ர்” ஆகும். அதற்கு மாறாக, இப்போதிருக்கின்ற சூழலை மாற்ற முடியாது. அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்று கூறுகின்றவர்கள் ஒரு வகையில் தீய சக்திகளுக்கு துணை போகிறார்கள் அல்லது தீமைகளை மறைமுகமாக அங்கீகரிக்கிறார்கள். தீமைகள் வாழ்வதற்கு மௌனமாக சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகிற்கு அனுப் பப்பட்டபோது உலகம் எத்துணை பயங்கரமாக இருந்தது! அரபுத் தேசம் எத்துணை அடர்ந்த அறி யாமை இருள்களுக்கு மத்தியில் மூழ்கியிருந்தது. எத்தனை கொள்கைகோட்பாடுகள் மூட நம்பிக் கைகள், மனித இயல்புக்கு ஒவ்வாத சம்பிரதாய சீர் கேடுகள், கோத்திரகுல வெறிகள், போராட்டங்கள், அடிமைத்தனங்கள், அநீதிகள், வர்க்க வேறுபாடுகள்!
அது மட்டுமல்ல, இத்தகைய சீர்கேடுகள் அனைத்தையும் அவிழ்க்க முடியாத பின்னல்களுக்குள் இறுக்கி வைத்துப் பாதுகாத்துப் பராமரித்து இலாபம் தேடி வந்த அரச பரம்பரைகள், அவர்க ளுக்கு சாமரம் வீசிய மதகுருமார்கள்… இவ்வாறு மாற்றங்கள் வேண்டி நின்ற சூழல்களும் அவற்றிலிருந்த பிரச்சினைகளும் பல்லாயிரம்!
இத்தனையும் மாற்ற முடியாத அல்லாஹ்வின் ஏற்பாடுகள் என்று நபிகளார் கருதியிருந்தால் வரலாறு எங்கே சென்றிருக்கும்? உலகமே அதிசயிக்கும் வகையிலான ஒரு புரட்சியை அவர்கள் எங்கனம் செய்திருக்க முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்கொண்ட அன்றைய சூழ்நிலைகள் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதில் சந்தேகமில்லை. எனினும், அந்த ஏற்பாடுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் மற்றுமோர் ஏற்பாட்டை நோக்கி நகர்த்தினார்கள். அப்போது வரலாறே அதிசயிக்கும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
இன்று மாற்றங்கள் வேண்டும் என்பதில் எல்லோரும் உடன்படுகிறார்கள். எனினும், அம்மாற்றங்களைச் செய்பவர்கள் யார் என்ற விடயத்தில் அனைவரும் பிரிந்து நிற்கிறார்கள். சிலர் அல்லாஹ்தான் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எங்களால் துஆ செய்வதைத் தவிர வேறு ஒன்றை யும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். அதனை வலியுறுத்தவும் செய்கிறார்கள். மார்க்கத்தின் ஒரு சில அம்சங்களைத் தாமும் செய்து பிறருக்கும் அவற்றைப் போதித்துக் கொண்டிருந்தால் போதுமானது. பெரும் சமூக மாற்றங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. சமூக மாற்றம் என்பது வெறும் கற்பனையே. தனிமனித முயற்சிகளுக்கப்பால் வீணாக நாம் எம்மை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்பது இவர்களின் பார்வையாகும்.
இஸ்லாத்தை விளங்குவதிலும் செயற்படுத்துவதிலும் பாரிய கருத்து வேறுபாடுகளைக் கொண்டவர்கள்கூட, சமூக மாற்றம் சாத்தியமில்லை என்ற விடயத்தில் தங்களை அறியாமலேயே அதிசயமாக ஒன்றுபடுகிறார்கள். இவர்களில் ஒவ்வொரு சாராரும் வெவ்வேறு பாஷைகளில் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
அதேநேரம், வேறு சிலர் மற்றுமொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். சமூக மாற்றம் தேவையானதுதான். ஆனால், அந்த மாற்றம் எத்தகையது, அதன் அடிப்படைகள், வழிமுறைகள், வளர்ச்சிப் படிகள் எவை? என்பன போன்ற விளக்கங்கள் சமூகத்தில் எவரிடமும் இல்லை. அது எங்களிடம் மாத்திரம்தான் இருக்கிறது. நாங்கள்தான் அதற்குரியவர்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் சமூக மாற்றத்தை செய்தார்களோ இல்லையோ சமூக மாற்றம் பற்றிய விளக்கமில்லாதவர்களை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. விளக்கமில்லாதவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள்.
மற்றுமொரு நிலைப்பாடு இவ்வாறிருக்கிறது: மாற்றம் என்பது ஓர் இறை நியதி. மாற்றம் ஒரு காலத்தில் சாத்திய மானதாகவும் மற்றொரு காலத்தில் சாத்தியமற்றதாகவும் இருக்க முடியாது. மாற்றத்திற்கான கூறுகளையும் காரணி களையும் அல்லாஹ் எல்லாக் காலத்திற்கும் பொதுவான தாகவே வைத்துள்ளான். காரணிகளைப் பயன்படுத்தி கூறுகளை இணைக்கின்றபோது மாற்றம் நிகழ்ந்தே தீரும். மாற்றத்திற்கான கூறுகள் சமூகத்திலிருக்கின்றன காரணிகள் இஸ்லாத்தில் இருக்கின்றன. பயன்படுத்தி இணைப்பவர்கள் யார் என்பதே சமூகத்தின் முன்னாலுள்ள வினா.
மாற்றத்திற்கான காரணிகளைப் பயன்படுத்தி கூறுகளை இணைப்பவர்கள், இணைக்க முடியுமான வர்கள் எமது சமூகத்தில் இல்லை என்று எவரும் கூற முடியாது. தாராளமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேறு வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது கடமைகளையும் பொறுப்புக்களையும் “மாற்றம்” வேண்டும் என்ற நோக்கில் விளங்கவில்லை. தங்களிடமிருக்கும் பாரம்பரியங்கள் மாறி விடக் கூடாது என்ற ரீதியிலேயே அவர்கள் சிந்திக்கிறார்கள். மாறுவதற்கு இடமளிக்காதிருப்பதே தமது கடமை என விளங்கியிருக்கிறார்கள். எனவே, மாற்றத்துக்கெதிராக சிந்திப்பவர்களாகவும் செயற்படுபவர்களாகவும் அவர்கள் மாறியிருக்கிறார்கள்.
மாற்றத்தை கொண்டுவர முடியுமானவர்கள் மாற்றத்தை விரும்பாத காரணத்தால் அவர்கள் எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றில் எமது சமகாலத்தில் வாழ்வதில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது எமது நாட்டில் எமது சமூகச் சூழலில் வாழ்வதில்லை. பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ சஊதி அரேபியாவிலோ எகிப்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் சிலர் புத்தகங்களிலும் தத்துவங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மாற்றம் எப்படி வரும்?
எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எமது நாட்டிற்கு வந்து எமது சமகால சூழலுக்குள் நுழைந்து கண் திறந்து கதவு திறக்கும் வரை, “மாற்றம்” கதவுக்கு வெளியே காத்திருக்கிறது.
மாற்றம் வரும். மாற்றம் வந்தே தீரும். அதனை வரவேற்கின்றவர்கள் வருகின்றபோது…!
நாம் மாற்றத்தை வரவேற்கத் தயாராகா விட்டால் அல்லாஹ் நம்மை ஒதுக்கிவிட்டு அதற்குரியவர்களைக் கொண்டு வருவான்.
“நீங்கள் (இப்பொறுப்பிலிருந்து விலகிப்) பின் வாங்கினால் உங்களது இடத்திற்கு அல்லாஹ் மற்றுமொரு சமூகத்தைக் கொண்டு வருவான். அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.” (47: 38)
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/