இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (1)
அபூ ஃபாத்திமா
அரபி மதரஸாக்கள் என்றவுடன் மக்களின் உள்ளங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் உன்னத அமைப்புகள், சமுதாயத்தின் ஜீவ நாடி, இந்த மதரஸாக்களிலிருந்து பெறப்படும் மார்க்கத் தீர்ப்புகள் தான்(ஃபத்வா) இறுதி முடிவு; அவற்றிற்கு அப்பீலே இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது. இது ஓர் மாயத்தோற்றமே!
மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் :
ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்தியாவில் காணப்படும் பெரும்பாலான மதரஸாக்கள் இல்யாஸ் சாஹிபின் தப்லீஃக் வருகைக்குப் பிறகு கடந்த 80 வருடத்திற்குள் உருவாக்கப்பட்டவையே. இந்தியாவில் ஆரம்ப மதரஸா என்று சொல்லப்படும் தேவ்பந்த் மதரஸாவே 1866-ல் உருவானது தான். அதற்குப் போட்டியாக ஷிர்க்கையும், பித் அத்துகளையும் கொள்கையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது பரேல்வியிலுள்ள மதரஸாவாகும்.
தமிழகத்தின் தாய் மதரஸா என்று அழைக்கப்படும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஆரம்பிக்கப்பட்டது 1885ல் ஆகும். இப்படி விரல் விட்டு எண்ணப்படும் சில மதரஸாக்களைத் தவிர எஞ்சிய அனைத்து மதரஸாக்களும் உருவானது கடந்த 80 ஆண்டுகளுக்குள்தான் என்று உறுதிப்பட சொல்ல முடியும்.
ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் :
அடுத்து இந்த மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை ஆராயும்போது, ஒருசில மதரஸாக்கள் ஒரு சிலரால் நல்லெண்ணத்துடனும் சமுதாய நலன் கருதியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், குர்ஆன், ஹதீஸை நிலைநாட்டும் தூய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையல்ல. எப்படி மாற்று மதங்களிலுள்ள சமுதாய நலன் கருதுவோர் நல்லெண்ணத்துடனும், குருட்டு பக்தியுடனும் தங்கள் வழிகாட்டிகள், குருமார்கள் போதித்துத் தந்த இறைவனுக்கு இணை வைக்கும் அவதார நம்பிக்கை, திரியேகத்துவ நம்பிக்கை இவற்றை அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றி வருகின்றனரோ, அதே போல் இவர்களும் இவர்களது வழிகாட்டிகள், உஸ்தாதுகள் (ஆசிரியர்கள்) போதித்துத் தந்த மனிதன் இறைவனுடன் இரண்டரக் கலக்க(அத்து வைதம்) முடியும் என்ற ஷிர்க்கான கொள்கையுடைய சூஃபிஸத்தை அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.
இவர்களுக்குச் சமுதாய நலனில் அக்கறை இருந்தாலும், மக்களை நேரான வழியில் இட்டுச் செல்லும் ஆர்வமும் நல்லெண்ணமும் இருந்தாலும், இவர்கள் தங்கள் முன்னோர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள் முதலானோர்கள் மீது கொண்டுள்ள அபாரமான குருட்டு நம்பிக்கை இவர்களை குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான கொள்கைகளை ஏற்றுச் செயல்படச் செய்கிறது. இந்த வகையில் மாற்று மதங்களின் அறிஞர்களுக்கும், இவர்களுக்கும் வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. மாற்று மத அறிஞர்களில் பலர் அவதாரக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவும், பலர் திரியேகத்துக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இவர்களை அப்படிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள் என்று நாம் சொல்லவில்லை.
ஆயினும் இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், ஷெய்குகள், உஸ்தாதுகள் முதலானோர்களின் பல கூற்றுகள் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக இருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், அந்த நாதாக்கள் எல்லாம் தவறு செய்திருக்க முடியுமா? என்ற குருட்டு நம்பிக்கையில், அவர்களின் அந்த தவறான செயல்களையும் மார்க்கமாக இவர்கள் நம்பிச் செயல்படுவதோடு மக்களுக்கும் முழுமையாக அவற்றை மார்க்கமாக இந்த மதரஸாக்களில் போதிக்கின்றனர்.
தவறு செய்யாத தனித்தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அதனை நபிமார்களுக்கோ, நபி தோழர்களுக்கோ, இமாம்களுக்கோ, வேறு எந்த மனிதருக்கோ சொந்தப்படுத்த முடியாது என்பதைப் புரியாமல் செயல்படுகிறார்கள். மனித வர்க்கம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வகையில் ஆரம்பத்திலிருந்து செய்துவரும் பெரும் தவறையே இவர்களும் செய்து வருகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தங்கள் பாதிரிகள், சந்நியாசிகள் கூறிய கூற்றுகளை மார்க்கமாக எடுத்துச் செயல்பட்டு அவர்களைத் தங்கள் இறைவனாக ஆக்கிக் கொண்டது போல், இவர்கள் தங்கள் இமாம்களையும் ஷைகுகளையும் இறைவனாக ஆக்கி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்ட அவர்களின் கூற்றுக்களையும் மார்க்கமாக்கிச் செயல்படுகின்றனர். (பார்க்க அல்குர்ஆன் 9:31), தக்லீதும், தஸவ்வுஃபும் இந்த அடிப்படையிலானவையே. ஆயினும் இந்த அறிஞர்கள் இவை இரண்டிலும் பிடிவாதமாகவே நடந்து வருகின்றனர்.
“அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? (அல்குர்ஆன் 42:21)
“அல்லாஹ்வுக்கல்லாது ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை’. (அல்குர்ஆன் 6:57,62, 12:40, 67)
இந்த அல்குர்ஆன் வசனங்களை அவர்கள் விளங்கிச் செயல்படுவதாகத் தெரியவில்லை. மாறாக மாற்று மத அறிஞர்களிடையே தங்கள் முன்னோர்கள் மீது காணப்படும் மூடப் பக்தியே இவர்களிடமும் காணப்படுகிறது என்றே சொல்லுகிறோம்.
தப்லீஃக் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சமுதாய நலன் கருதியே மதரஸாக்களைத் தொடங்கியவர்களும் இந்த தவறான போக்கிலிருந்து விடுபட்டவர்களாக இல்லை.
“எவர்கள் மெய்யாகவே விசுவாசங் கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் (யாதோர்) அக்கிரமத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு. அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 6:82)
அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு மாறாக தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு தங்கள் விசுவாசத்தில் அக்கிரமத்தைக் கலக்கின்றனர். தங்கள் முன்னோர்கள் மீதுள்ள குருட்டு பக்தியால் அல்லாஹ்வின் சொல்லைவிட தங்கள் முன்னோர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதே தவறையே கிறிஸ்தவர்கள் செய்தனர். அதனையே தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் அல்லாஹ்வாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்’ (பார்க்க : அல்குர்ஆன் 9:31)
ஆக மதரஸாக்கள் தொடங்கியவர்களில் சிலரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், கொள்கையில் கோளாறு இருக்கும் நிலையில் எஞ்சியவர்களின் நோக்கமும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. தமிழகத்தில் பல மதரஸாக்களின் தொடக்கத்தை உற்று நோக்கும்போது இது புலனாகின்றது.
ஒரு மதரஸாவில் பணி புரிந்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கும் நிர்வாகஸ்தர்களுக்குமோ அல்லது தலைமை ஆசிரியருக்குமோ கருத்து மோதல்கள் ஏற்பட்டு தகராறு முற்றி இறுதியில் வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டால், உடன் இவர்கள் ஏதாவதொரு ஊரில் 10 அல்லது 15 மாணவர்களை வைத்துக் கொண்டு புதியதொரு மதரஸாவை ஆரம்பித்து விடுவார்கள். ரசீது புத்தகங்களை அச்சடித்துக் கொண்டு ஊர் ஊராக வசூலுக்குக் கிளம்பி விடுவார்கள்.
முஸ்லிம் சமுதாய மக்களும் தாங்கள் மார்க்கத்திற்குப் பெரிதும் உதவுவதாகக் கருதிக் கொண்டு தாராளமாக இவர்களுக்குப் பொருள் உதவி செய்து வருகிறார்கள். அதாவது தங்கள் இவ்வுலக வாழ்க்கைத் தேவைகளுக்காக மதரஸாக்களைத் தொடங்குகின்றனர். இப்படி பல மதரஸாக்கள்.
மவ்லூது ஓதுவதற்கென்றே மதரஸாக்கள் :
மவ்லூது ஓதுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சொரியப்படும் புகழாகக் கருதிக் கொண்டு அதனை பக்தி சிரத்தையோடு ஓதுவதற்கு ஆட்கள் தேவை; மதரஸா தொடங்கி அங்கு பல மாணவர்கள் ஓதி வந்தால், மவ்லூது ஓதுவதற்கு ஆட்களைத் தேடி அலைய வேண்டியதில்லை என்ற நல்ல(?) நோக்கத்தோடு சில மாவட்டங்களில் பல மதரஸாக்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதாவது மவ்லூது ஓதுவதற்கென்றே மதரஸாக்கள். இதுபோல் மதரஸா ஒன்றை தொடங்கிய செல்வந்தர் ஒருவர், ராதிபு ஓதுவதற்கு மாணவர்கள் தேவை என்ற நோக்கத்திற்காகவே மதரஸா தொடங்கியதாகப் பெருமை பட ஒரு மவ்லவியிடமே கூறி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆக இப்படித்தான் தமிழகத்தின் பெரும் பாலான மதரஸாக்கள் தொடங்கப்பட்டுள்ளன. நோக்கமே இப்படி இருக்கும்போது, அவற்றிலிருந்து பெறப்படும் பலன் எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மதரஸா செல்லும் மாணவர்களின் நிலை :
படிப்பு அறவே ஏறாத மக்குப் பிள்ளைகள், முரட்டுப் பிள்ளைகள், வறுமையில் சிக்கி வாடும் ஏழைப் பிள்ளைகள் போன்றோரே இம்மதரஸாக்களில் படிக்கச் செல்கின்றனர். இதுவரை அரபி மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தையும், அவற்றில் ஓத முன் வருபவர்களின் ஆற்றலையும் விளங்கிக் கொண்டீர்கள். இனி அங்கு போதிக்கப்படும் கல்வியின் நிலையைப் பார்ப்போம்.
மதரஸாக்கள் தொடங்கப்பட்ட நோக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் ஓதப்போகும் மாணவர்களின் (சில வருடங்களுக்குப் பின் மவ்லவிகள்) நிலையைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். அவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கூடங்களில் பலமுறை ஃபெயிலாகி, இனி இவனுக்குப் படிப்பு ஏறவே ஏறாது. வேறு போக்கே இல்லை என்ற நிலை வரும்போது தான் இந்த அரபி மதரஸாக்களின் ஞாபகமே வரும். அப்படிப்பட்ட பிள்ளைகளையே இந்த மதரஸாக்களுக்கு அனுப்பி வைப்பர் பெற்றோர்கள்.
பொதுவாகக் கல்வி நிலையங்களில் காணப்படும் ஆற்றலுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பரீட்சை முறை எதுவும் இம்மதரஸாக்களில் இல்லை. காரணம் இம்மதரஸாக்கள் மக்கள் தரும் தருமத்தைக் கொண்டு (மார்க்க முரணான சாராயம், வட்டி, லாட்டரி போன்ற தொழில்களைக் கொண்டு பொருளீட்டுபவர்களிடமும் எவ்வித கூச்சமும் இல்லாமல் வசூல் செய்வது தனி விஷயம்) நடத்தப்படுவதால், அந்த மக்களிடம் காட்டும் அளவுக்குத் தலைகள் இருந்தால் போதும். திறமை சாலிகளைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அது சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம்.
மறுபக்கம் கல்லூரிகளில் போல படிப்புக்குப் ஃபீஸ் கட்டி, சாப்பாட்டுக்கும், தங்கவும் பணம் கட்டி படிக்கும் நிலை இல்லை. அப்படி ஒரு நிலை இருக்குமானால் யாரும் இந்த மதரஸாக்களை எட்டிப் பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தரமான(?) பாடத் திட்டத்தையே இம்மதரஸாக்கள் கொண்டுள்ளன. இதனை நாம் “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம். எனவே இந்த மதரஸாக்களில் எப்படிப்பட்ட மாணவர்கள் ஓத வருகிறார்கள் தெரியுமா? சுருக்கமாகச் சொல்லுவதாக இருந்தால் இலவச சாப்பாடும் உறைவிடமும் கிடைப்பதால் பயனில்லாத படிப்பைப் படிக்க வேறு போக்கில்லாத மாணவர்களே வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் டாக்டர், என்ஜினியர் மற்றும் பட்டப் படிப்புகளுக்குச் சென்று விடுகின்றனர். கல்லூரிப் படிப்புப் படிக்கும் ஆற்றல் சிறிது இருந்தாலும் அவர்கள் ஏழையாக இருந்தாலும் நாலு பேரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் படிக்கவே செல்கின்றனர்.
அப்படிப் படிக்க வசதி கிடைக்காவிட்டாலும், கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ சிறிய வயதிலேயே போய்ச் சேர்ந்து முன்னுக்கு வரவே முயற்சி எடுக்கின்றனர். மதரஸா போய் ஓதுவதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. மவ்லவிகளில் பலர் தங்கள் மக்களை மதரஸாக்களுக்கு அனுப்பாமல் கல்லூரிப் படிப்புக்கே அனுப்பி வைக்கின்றனர் என்பதே உண்மையாகும். இதிலிருந்து அந்த மவ்லவிகளும் தங்களின் மவ்லவி படிப்பின் தரத்தை அறிந்தே வைத்துள்ளனர் என்பது புலனாகும். மதரஸாக்களில் சில காலம் போக்கிவிட்டு மவ்லவிகளாக வெளி வருபவர்களுக்கு கத்தம் ஃபாத்திஹா ஓதுவதையும், பள்ளிகளில் இமாமாகப் பணி புரிவதையும் தவிர வேறு போக்கில்லை என்பதே உண்மையாகும்.
மிஞ்சிப் மிஞ்சிப் போனால் இந்த மதரஸாக்களில் ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்புக் கிடைக்கும். மற்றபடி அரபியில் பேசவோ, அரபி நூல்களைப் படித்துச் சொல்லவோ, அரபு நாடுகளிலிருந்து வரும் விஸாக்கள் பற்றிய விபரத்தைக் கூட படித்துச் சொல்லவோ இந்த மவ்லவிகளில் பெரும்பாலோருக்கு ஆற்றல் இல்லை என்பதே உண்மையாகும். ஆக அறிவுக்கும், அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், எத்துறையில் ஈடுபட்டும் முன்னுக்கு வர முடியாதவர்கள், வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காத முரட்டுப் பிள்ளைகள் இத்தரம் வாய்ந்தவர்களே வேறு போக்கின்றி இன்றைய மதரஸாக்க ளில் போய் தஞ்சம் புகுகின்றனர்.
தப்லீஃ பணியால் கவரப்பட்டுப் பக்தி பரவசத்தால் தங்கள் பிள்ளைகளை அரபி மதரஸாக்களுக்கு அனுப்புபவர்களும் உண்டு. இந்த மாணவர்களில் சிறிது அறிவுக் கூர்மையுடையவர்கள் தங்களது தந்தைமார் நிர்ப்பந்தித்தாலும், மதரஸாக்களின் நடைமுறைகளைச் சரி காணாமல் இடையில் வெளியேறி விடுகின்றனர். “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதைத் தலை மேல் கொண்டு தந்தை எதைச் சொன்னாலும் (அவை மார்க்க முரணான, ஷிர்க்கான காரியங்களாக இருந்தாலும்) அதை அப்படியே ஏற்றுச் செயல்படுகிறவர்கள் மட்டுமே மதரஸாவில் இருந்து காலத்தை ஒட்டி விட்டு மவ்லவி பட்டத்துடன் வெளி வருகின்றனர். தந்தை சொல்லை அப்படியே சிந்திக்காது ஏற்றவர்கள் இப்போது தங்கள் ஆசிரியரின் (உஸ்தாது) சொல்லை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர்.
இதே அடிப்படையில் தான் ஒரு மவ்லவி, ”இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபைப் பார்ப்பதை விட அது மிகப் பெரிய ஆதாரமாகும்” என்று கூறிக் கொண்டு 1ல் 1/2 + 1/3 போக எஞ்சியுள்ளது 1/9 என்று கண்மூடித்தனமாகச் சாதித்தது!
அதாவது 1/2+1/3+1/9 = 17/18 அல்ல. முழுமையாக 1 ஆகும் என்பதே அந்த மவ்லவியின் அறியாமை வாதமாகும். இது அவர் தனது உஸ்தாது மீது வைத்த குருட்டு பக்தியால் விளைந்த விளைவு! இந்த மவ்லவிதான் தமிழகத்திலுள்ள தலைசிறந்த விரல் விட்டு எண்ணப்படும் மவ்லவிகளில் ஒருவர் என்றால் மற்ற மவ்லவிகளின் தரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இன்ஷா அல்லாஹ் கட்டுரை தொடரும்