மாணவர்களும், தொழுகையும்
ஹுசைனம்மா
தொழுகை, ஒவ்வொரு முஸ்லிமின் முதல் கடமை. மறுமையில் முதல் விசாரணை தொழுகை குறித்தே கேட்கப்படுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடமை.
தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மட்டுமே குர்ஆனில் 31 இடங்களில் வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை இறைவனருளால் நம்மில் பலர் கைக்கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நம் பிள்ளைகளிடம் இதை முறையாக நிலைநிறுத்துகிறோமா?
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாகிய நம் பிள்ளைகள் தொழுகையின்மீது சற்று அசிரத்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்குப் பல காரணங்களைக் கூறிக்கொள்கிறோம்: பள்ளிகளில் இடவசதியில்லை; நேரம் கிடைப்பதில்லை; அனுமதிப்பதில்லை; என்று பல சமாதானங்களைக் கூறிக்கொள்கிறோம்.
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு. நூல்: அஹ்மத், அபூதாவூத்)
மேலேயுள்ள ஹதீஸில், பத்து வயதாகிவிட்டால் அடித்தேனும் தொழவையுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, சிறார்களுக்கும் தொழுகை எத்துணை அவசியமானது என்று புரிந்துகொள்ளலாம்.
”என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக. உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்”. (அல்குர்ஆன் 31 : 17)
நபி லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரை இது!! சிறுவயது முதலே தொழுகையைத் தவறாது கடைபிடிக்கச் செய்வதன்மூலம், தன் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல், பொறுப்புடன் நிறைவேற்றத் தயங்காத, தடைகளைக் கண்டு தளராத, மனத் திண்மை படைத்த,ஒரு நல்ல மூமினான பிரஜையை நாட்டிற்குத் தரும் கடமையை நிறைவேற்றுகிறோம். ஆகவே, சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டிராமல், மாணவர்களுக்கும் தொழுகையைப் பேணுவதை அறிவுறுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தொழுவதில் சிரமங்கள் இருப்பது உண்மையே. இதனை நிவர்த்தி செய்யும் வழிகளில் பெற்றோர்கள் ஈடுபட்டு, எப்படியேனும் மாணவர்களைத் தொழச் செய்யவேண்டும். பள்ளி நிர்வாகத்தினரோடு தன்மையாகப் பேசி, வேண்டுகோள் விடுக்கலாம். தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் தொழுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். லுஹர் தொழுகை நேரம், பள்ளியின் மதிய இடைவேளையின்போது வருவதால், பலரும் இதற்கு ஆட்சேபிப்பதில்லை.
இன்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில், 9, 10, 11, 12ம் வகுப்புகள் காலை 6.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தப்படுகின்றன. எனும்போது, லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய மூன்று வேளைகளும் பள்ளி நேரத்திலேயே வருவதால் மாணவ, மாணவியர் மூன்று தொழுகைகளையும் கல்விக்கூடத்தில் தொழ வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.
பள்ளிகளில் சேர்க்கையின்போதே, பெற்றோர் இதனை உறுதிசெய்யவேண்டும். தற்போது படித்து வரும் பள்ளிகளிலும், முஸ்லிம் பெற்றோர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுக்க வேண்டும். நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில், மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தயாராக இருக்க வேண்டும். சேர்க்கை கொத்தாகப் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில், பள்ளி நிர்வாகம் மறுக்கவியலாது.
ஜும்ஆ தொழுகை:
அன்றாடத் தொழுகைகளான லுஹர், அஸரைத் தொழுவதில் மாணவர்களுக்கோ, அதை அனுமதிப்பதில் பள்ளி நிர்வாகங்களுக்கோ சிரமமிருக்காது. ஆனால், வெள்ளிக்கிழமைக் கடமையான ஜும் ஆ தொழுகையை – கல்விக்கூட வளாகத்தை விட்டு வெளியே சென்று தொழவேண்டிய இதை – நிறைவேற்றுவதில்தான் அதிகச் சிரமம் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இருக்கிறது. ஏனெனில், இத்தொழுகை பள்ளிவாசலுக்குச் சென்று ஜமா அத்தாகத் தொழ ஒவ்வொரு ஆணின் கட்டாயக்கடமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.
ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களைக் கொழுத்தி விட எண்ணி விட்டேன்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
ஜும்ஆத் தொழுகையைத் தவிர்ப்பதால், மார்க்கக் கடமையிலிருந்து தவறுவதோடு, சமூகச் சிந்தனைகளை – சமுதாய அக்கறையை இளவயதிலேயே பசுமரத்தாணியாகப் பதிக்கும் குத்பா உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் தவறிப்போகிறது.
கல்விக்கூடங்கள் இதை அனுமதிக்காததன் காரணம், பெரும்பாலும் மாணவர்கள் தனியே வெளியே சென்றுவர விரும்பாதது மற்றும் மதிய இடைவேளையைத் தாண்டி தொழுகை நேரம் நீட்டப்படும் சாத்தியம் இருப்பதாலுமே. இவற்றை பெற்றோர்கள் சரியாக கையாண்டு, அதற்கானத் தீர்வுகளுடன் நிர்வாகத்தை அணுகினால், நிச்சயம் ஒத்துழைப்பு நல்குவார்கள்.
கும்பகோணம் அருகில், அம்மாச்சத்திரத்தில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில், மாணவர்களை ஜும் ஆத் தொழுகைக்காக, தம் பள்ளி வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற ஏற்பாடுகளை நிர்வாகத்துடன் கலந்துபேசிச் செய்யலாம். தகுந்த முறையில் நம் கடமைகளை எடுத்துக்கூறி முயன்றால், நிச்சயமாக ஆதரவு கிடைக்கும்.
அலுவலகங்களில் பெரும்பாலும் இச்சிரமங்கள் இருப்பதில்லை. கல்விக்கூடங்களில்தான் இந்நிலைமை உள்ளது.
அரசிடம் கோரிக்கை:
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின், 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான CBSE பள்ளித் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெற்றன. இந்தியாவில் தேர்வு நேரம், காலை 10.30 – 1.30 என்பதால், மாணவர்களால் ஜூம் ஆ செல்ல முடியவில்லை. ஒன்றிரண்டு தேர்வுகள் எனில் தவிர்க்க இயலாத நிலை என்று பொறுத்துக் கொள்ளலாம். மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 17-ம் தேதி முடியும் 12-ம் வகுப்பு தேர்வுகளில், ஐந்து தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்றன. இதுபோலவே, பல அரசுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், அரசு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை ஜும் ஆ நேரத்தில் இடம்பெறுகின்றன.
நாம் மத்திய-மாநில அரசுகளிடம் முக்கியத் தேர்வுகளை ஜும் ஆ நேரத்தை அனுசரித்து வைக்கும்படி கோரிக்கை வைக்க வேண்டும். கவனிக்க, நாட்களை மாற்றச் சொல்லவில்லை. நேரத்தை மட்டுமே மாற்றக் கோருகிறோம்.
அரசிடமே நேரடி கோரிக்கை வைத்து உரிமை பெறுவதன்மூலம், மற்ற தனியார் நிர்வாகங்களும் முஸ்லிம்களின் தொழுகையின் முக்கியத்துவத்தை உணருவார்கள். நாமும் ஒவ்வொரு பள்ளி-கல்லூரி-நிர்வாகத்திடம், தனித்தனியாக வேண்டுகோள் வைப்பதைத் தவிர்க்கலாம். புரிந்துணர்வு இல்லாத நிர்வாகத்தினரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவும் தேவை இல்லாமல், நமது உரிமையாகக் கேட்டு வாங்கலாம்.
அண்டை மாநிலமான கேரளாவில், பல்வேறு மதத்தினர்களும் அடங்கிய “சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு”, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. இயக்குனரகத்திற்கு தேர்வு நேரங்களை மாற்றியமைக்கும்படி இவ்வருடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. வேண்டுகோள் ஏற்கப்படவில்லையெனினும், முயற்சியாவது செய்தார்கள் என்பது பாராட்டிற்குரியது. பல்வேறு இயக்கங்களைக் கொண்ட நம் தமிழகத்தில் ஒரு சிறுமுயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லையென்பது வருந்தத்தக்கதே.
இதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமியக் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. ஆகவே, நம்மால் பள்ளி கூட்டமைப்புகளில் நம் குரலைப் பதிவு செய்ய முடியவில்லை. அதிக அளவில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நிறுவுவதன் இன்னொரு அவசியமும் புலப்படுகிறது.
இவ்வளவு கஷ்டப்பட்டாவது தொழ வேண்டுமா என்று கேட்பவர்களுக்குப் பதில் இதுதான்:
”இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.” (அல்குர்ஆன் 107 : 4,5)
”…. இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.” (அல்குர்ஆன் 29 : 45)
நம் சந்ததிகள் தொழுகையைப் புறக்கணிப்பதன் மூலம் வரும் கேடுகளால் அழிந்துபோகாமல் காப்பது, பெற்றோர்களாகிய நம் கடமை. இன்று உலகத்தில் பல்வேறு அழிமானங்கள், தீயவைகள் மாணவர்களை – எதிர்காலத் தூண்களைக் குறிவைத்து நடைபெற்று வருகின்றன. அவற்றிலிருந்தெல்லாம் நம் பிள்ளைச் செல்வங்களை, இளைய சமுதாயத்தை, நாளைய நம்பிக்கைகளைக் காக்கக்கூடியது தொழுகை ஒன்றுதான்!!
source: சமரசம் .