முழுதையும் படித்துப் பாருங்களேன்…!
தோழனோடும் ஏழைமை பேசேல்!
எப்படியிருக்கீங்க..-? நண்பர், உறவினர், அறிமுகமானவர் தொடுக்கும் இவ்வினாவிற்கு பலரது பதில்,
”இறைவன் போதுமானவன்”. ‘
‘என் தேவைகளை அவன் நிறைவு செய்கிறான்.”
”அல்ஹம்லில்லாஹ்” மொழிதலாக இருக்காது.
என்னத்த சொல்றது…! நெலமை ரொம்ப மோசமாகவிருக்கிறது. வருமானமில்லை. பிள்ளைகள் சரியில்லை. பெண்டாட்டி சரியில்லை. தொழில் சரியில்லை. வரவேண்டிய பணம் வரவில்லை. தொடர் புலம்பலிருக்கும். நலன் விசாரித்தவர் நெருக்குதலுக்குள்ளாகி நெளியும் நிலைக்குத் தள்ளி தம்முடைய நிறைவு காணாத குறைகளை எதிராளி செவிக்குள் திணித்துக் கொண்டேயிருப்பர்.
உயிருக்குயிராய் பழகிய நண்பனாக இருந்தாலும் உனது வறுமை, கஷ்டத்தை அவரிடம் கூறாதே. பயனற்ற சொற்களைப் பேசி அவர் நேரத்தை வீணடிக்காதே. ஒன்றுக்கும் உதவாதவைகளைப் பேசி அறிவு பலவீனத்தை காட்டி நண்பர் மனத்தில் உன்னைப் பற்றிய உயர்வுகளை, நீயே கட்டுடைக்காதே ”தோழனோடும் ஏழைமை பேசேல்” என்று ஒளவை ஒரிவரியில் உரைக்கிறார்.
எந்நாட்டவருக்கும், எம் மொழியினருக்கும், எவ்வினத்தவருக்கும் பொருந்தக்கூடிய ஏற்கக் கூடிய கருத்திது ”கொன்றை வேந்தன்” முன் வைத்திருக்கிறது.
தொன்மை மறவேல்
முன் சென்றவர்களின் நேரான வழியைக் காட்டு இறையிடம் வேண்டுதல் புரிகிறோம். அந்த முன்னோர்கள் செய்த நன்மை, நல்லவைகள் குறித்த பதிவுகள், பழமைகளை முன்காட்டிச் சென்றவைகளை மறக்காதே, மறுக்காதே குறிப்பிடுகிறார் ஒளவை.
தமிழகம் 70,000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, எளிய வாழ்வு, இயல்பாக, இயற்கையுடன் ஒன்றி வாழ்தல். ஒரிறைக் கொள்கை. உடைக்கட்டுப்பாடு. ஒழுக்கம், கலாச்சாரம்.
விருந்தினரை உபசரிக்கும் பாங்கு.
திண்ணை கட்டி வழிப்போக்கர் இளைப்பாற உதவுதல்.
சத்திரம் கட்டி இரவு துயில் கொள்ள இலவசமாக அளித்தல்.
தவித்த வாய்க்கு நீர்.
அண்ணன், அக்கா, மாமா, மாமி, மைத்துனர், உள்ளம் உவகை கொள்ள அன்னியரையும் உறவு கொண்டு அழைத்து உறவாடி மகிழ்தல்.
அடுத்தடுத்த இல்லங்களில் செய்த உணவுகளைப் பகிர்ந்துண்டு வாழ்தல்.
பருப்பாணத்தையும், புளியாணத்தையும் மாற்றிக் கொள்தல். இருவீடுகளுக்கு இடையிலும் மூன்றடி இடைவெளி விட்டு கட்டடம் ஏற்படுத்தி காற்றைத் தடுக்காதிருத்தல்.
இயற்கையாகக் கிடைக்கும் சுண்ணாம்பு, களிமண் கொண்டு கருப்பட்டி, கடுக்காய் ஊறவைத்து சுற்றுச் சுவர் ஏற்படுத்துதல்.
எப்பருவ நிலைக்கும் ஏற்றதாக அமைப்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே அறிந்திருத்தல்.
மனித வாழ்வைப் பண்படுத்தும் தமிழகத்தின் பழமைக் கூறுகள்.
இந்த தொன்மை, பழமைக் கடைப்பிடித்தலை தமிழ்ச் சமூகம் மறந்து போனது.
அதன் விளைவு…
இரும்புக் கம்பிகள், கற்கள் குவியலால் காடாக மாறிப் போன விளை நிலங்கள்.
கலாச்சாரச் சீரழிவு.
உடைமாற்றம், தங்க, உறங்க இடமில்லை.
பூமித் தண்ணீருக்கு காசு.
அடுத்தடுத்த இல்லக் கதவுகளை அறைந்து சாத்தும் போக்கு.
அறிமுகமில்லாமை. ஒருவரையருவர் வெறுப்புடன் நோக்குதல்.
வாசலில் அமரும் யாசகரை விரட்டியடித்தல்.
வீடுகளுக்கு இடையில் சந்துவிடாது எழுப்பி மற்றவரின் வீட்டை இருளாக்குதல்.
காற்றை தடுத்தல், வழக்கு தொடுத்தல்.
இயற்கை உணவுகளை விட்டும் செயற்கை உணவு நாடுதல்.
முன்னோரின் இயல்பான இயற்கையான கைக்கருகில் கிடைக்கக்கூடிய தமது மூதாதையரின் தொன்மை மருத்துவத்தை புறந்தள்ளுதல். கேவலமாகப் பார்த்தல்.
அன்னிய மருத்துவத்தை அரவணைத்து செயற்கை மருந்துகளை உட்கொண்டு உடலைக் கேடாக்கிக் கொள்தல்.
இரத்த உறவுகளையுப் புறந்தள்ளி வாழ்தல்.
தமிழினம் தமது தொன்மைப் பழமைகளை மறந்ததால் ஏற்பட்ட பின்னடைவு. அழிவு நிலை. பழமையை நேசிக்கும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். தொன்மையை மீண்டும் தமிழினம் கையிலெடுக்க வேண்டும்.
-சோதுகுடியான், முஸ்லிம் முரசு ஏப்ரல் 2013
source: http://jahangeer.in/?paged=5