இணையவலைப் பின்னலில் நாம் சிலந்தியா… பலியாகும் பூச்சியா?
ஷமீலா யூசூஃப் அலீ
இணையத்தின் வருகை ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்தின் அதிர்வுகளால் உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒரு கனவாய் கண்டு மகிழ்ந்த காட்சிகள் இன்று நனவின் வெளியில் நின்றுலாவுகின்றன.
எனினும் மாற்றங்களின் தூண்டல்களுக்கு போதுமான துலங்கலைக்காட்டுவதில் முஸ்லிம் சமூகம் முன்னிற்கவில்லை என்ற கவலை போதுமானளவு இருக்கிறது. சில்லரைச் சர்ச்சைகள், சிடுக்கெடுக்க முடியாத பிரச்சினை முடிச்சுக்கள், சம்பிரதாயச்சேறுகள், சின்னத்திரை நாடகங்கள் இவற்றுக்கு மேலால் சிந்திக்கவும் சுயமாய்ச் செயற்படவும் முடியாமல் இருக்கும் நம் பெரும்பான்மை பெண் சமூகம் இணையத்தின் வாசத்தை இன்னும் நுகரவில்லை.
இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஆணிவேர்கள் பழகிப் புளித்துப் போன பழைய முறைகளில் தான் இன்னும் தங்கிக் கிடப்பதான ஒரு பிரமையில் திருப்தியடைகிறோம். இஸ்லாமியப் புரட்சியொன்று இனி ஏற்படுமானால் அது அறிவின் அடியாழத்தில் எழும் சிந்தனாரீதியான மறுமலர்ச்சியினால் மட்டுமே சாத்தியம்.
அறிவியலும் ஆராய்ச்சிகளும் ஆழ்கடல் தொட்டு விண்மீன்கள் கண் சிமிட்டும் வான் வெளி வரை வியாபித்திருக்கும் ஒரு யுகத்திலே வாழ்கிறோம். தொழில் நுட்பத்தின் சிக்கலானதும் தவிர்க்க முடியாததுமான வலைப் பின்னலில் விரும்பியோ வெறுத்தோ நாம் அனைவருமே சிலந்திகளாகி விட்டிருக்கிறோம்.
இன்றைய இளைய சமுதாயம் சென்ற நூற்றாண்டுகளில் பூமி சுமந்த தங்களது மூத்த தலைமுறைகளிலிருந்து மிகப் பாரிய இடைவெளியை உணர்கிறது. அறிவியல் தொழி நுட்ப ரீதியான முன்னடைவு மட்டுமல்லாது பண்பாட்டு கலாசார ரீதியான பின்னடைவும் இந்த இடைவெளிக்குப் பங்களிப்புச் செய்கின்றன. எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் துடிப்பூக்கம் மிகுந்து காணப்படும் இளைய தலைமுறை கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் ஆகிய காலத்தின் தொழி நுட்ப மாற்றங்களுக்கு விரைவில் இயைபடைகின்றது.
எனினும், துரதிஷ்டவசமாக மிக அதிகமான இளைஞர்கள் சிகரட்டுக்கும் போதை மருந்துகளுக்கும் அல்ல, இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.’ கனியிருப்ப காய் கவர்தற் போல்’இன்ட நெட் எனும் இணைய வலைப்பின்னலின் கோடானு கோடி நன்மைகளை மறுதலித்து அதன் அத்துமீறும் தீமைகளை அணைத்து கொண்டிருக்கின்றனர்.
காளான் குடை போல் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் ‘இன்டெர் நெட் கஃபே’களில் மணிக்கணக்காய் கணனித்திரையை முறைத்துக் கொண்டிருக்கும் கண்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நமது நாளைகள் பற்றிய நம்பிக்கையை சிதறடிக்கும் பார்வைகள் அவை.
எமது தாய்மார்கள் தமது நம்பிக்கை நட்சத்திரங்கள் கணனியில் கல்வி கற்பதான கற்பனையில் இன்னும் பெருமை பேசிக்கொண்டிருக்கின்றனர். இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாகத் தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு என்பது கண்டு நம்மில் சிலர் புருவம் உயர்த்தலாம். நிதர்சனத்தில் வரையறை மீறி கட்டறுந்தோடும் இளமையின் வசந்தம் வெறும் காட்டிலெறித்த நிலவாய்ப் போகும் சோகம் விழி தொடுகிறது.
இணையம் ஒரு திறந்த ஊடகம், தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது என்பதை அறியாததால் அப்பாவி அன்னையர் சமூகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனக்காக வேண்டாம், தான் சுமந்த உயிரின் மிச்சம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை அறியவாவது இணையம் பற்றிய புரிதல் பெண்களுக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.
இணையத்தின் மறுபக்கத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு அறிவுச்சுரங்கம். கேட்டதைக் கொடுக்கும் அலாவுதீன் பூதம்.அள்ள அள்ள நீர் சுரக்கும் ஊற்றுக்கண். இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பது பலருக்கு இனிப்பான செய்தி.
நம் உள்ளம் கவர்ந்த உரைகளை, கருத்தாழம் மிக்க பாடல்களை, ஆச்சரியமூட்டும் அசையும் காட்சிகளை, மனம் கிளறும் ஒளிப்படங்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
தமிழ் பத்திரிகைகளின் சுடச்சுட செய்திகளின் மொருமொருப்பு….
வித்தியாசமான ஆர்வப்பகிர்வுகளுக்கான ஏராளமான குழுமங்கள்….
எழுத்துதிறனை பட்டை தீட்டி ஒளிரச்செய்யும் வாசிப்பார்வத்துக்கு நீரூற்றி வளர்க்கும் ஏராளமான படைப்பாளிகளின் கவிதை, கட்டுரை, சிறு கதை, நேர்காணல்கள் தாங்கி வரும் இணைய இதழ்கள்…
யாரிடமும் கேட்க முடியாத சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ,மார்க்க விளக்கங்களை எம்மை அறிமுகப் படுத்தாமலே கேட்டறிக்கூடிய வசதி வாய்ப்புகள்…
தொடராமல் போன மேற்படிப்பைத் தொடரவும், புதுப்புது பாட நெறிகளில் இணைந்து புத்துணர்வு கொள்ளவுமான சூழலை அறைக்குள்ளே ஏற்படுத்தித் தரும் இணையப் பல்கலைக்கழகங்கள்….
துறை ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் இணையப்பக்கங்கள்…
நோய்கள், அவற்றுக்கான பல்வேறுவிதமான மருத்துவ வழிகாட்டல்கள், உளவியல், உளவளத்துணை சம்பந்தமான தெளிவூட்டல்கள் இணையத்தில் தாராளமாய் காணக்கிடைக்கின்றன.
இலட்சக்கணக்கான சமையல், அழகுக்குறிப்புக்கள்…. உலகின் எந்தப்பாகத்திலிருந்தும் உறவு வளர்க்கும் உபயோகமான இணைய நட்புக்கள் என வலை விரிகிறது….
எமது முஸ்லிம் சமூகம், அதிலும் குறிப்பாக பெண்கள் சமூகம் இணையம் குறித்த போதுமான விழிப்பைக்கூட வைத்திருக்கவில்லை என்பது கவலை தரும் செய்தி.
அறிவு ஜீவிகளாக அடையாளம் காணப்படும் ஆசிரியைகள், வைத்தியர்கள், துறை சார் பெண்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.
இந்த நூற்றாண்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமென்றால் தொழி நுட்ப வளர்ச்சி பற்றிய புரிதலின்றி அது வெறும் ஒரு கனவு மாத்திரமே. வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைகளில் தவிக்கும் பெண்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம்.
கற்கவும்,.கற்பிக்கவும், கற்றதை செயற் படுத்தவும் வீட்டிலிருந்தே தொழில் புரியவும் தேவையான ஒரு களத்தை நாம் ஏன் மறுதலித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் சிலந்தியா? சிக்கியிருக்கும் பூச்சியா? சிந்திப்போமா!
நன்றி: அல்ஹஸனாத் செப் 2007
source: https://www.facebook.com/annisa.tamil