இயக்கமயமாதல் Vs. மக்கள் மயமாதல்
ஏ.பி.எம் இத்ரீஸ்
இயக்கத்தில் இணைந்திருப்பதற்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதற்குமிடையில் இஸ்லாமிய எழுச்சியை எவ்வாறு கொண்டு செல்வது என்பதே இதன் தொனிப் பொருளாகும். குறைகளை வெளிப்படையாக பேசுவது யாருக்கும் பிடிப்பதில்லை. இது தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல. சமூக சீர்திருத்தத்தை தாமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக நம்பும் தஃவா அமைப்புக்களுக்கும் பொருந்துகின்றது.
தங்களுடைய அமைப்புப் புனிதமானது என்றும் அமைப்புக்குள் இருப்பவர்கள் அனைவரும் புனிதர்கள் என்றும் மார்தட்டிக் கொள்கின்றனர். குறைகளை யாரேனும் பேசினால் அவர்களை துரோகிகளாக முத்திரைகுத்தி விடுவார்கள். குறைகளை உண்மையாகவே களைய விரும்பினால் அமைப்புக்குள் இருந்து போராட வேண்டும் தவிர வெளியே போய் பேசக்கூடாது என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்.
ஏதேனும் குறையைச் சுட்டிப் பேசினால் உடனே அதற்கு மாற்று என்ன சொல்லுங்கள் என்று கேட்கின்றனர். மாற்று ஒன்று வைத்துக் கொள்ளாமல் பிரச்சினைகளைப் பேசுவத கூடாது எனும் அர்த்தத்திற்கு அமைப்பு விசுவாசம் என்பது போறாகும். இவற்றை எல்லாம் மீறி விமர்சனப் போக்கை மேற்கொள்பவர்களை அமைப்பின் பரிவாரங்கள் தாக்கும் அரச பயங்கரவாதத்தை விடவும் ஊடாகப் பயங்கரவாதத்தை விடவும் இந்த அமைப்பு பயங்கரவாதம் மிகவும் கொடியது.
சமூக அக்கறையோடு அமைப்புக்குள் வந்த பலர் மனநோயாளிகளாக வெளியே வருவதன் காரணம் இதுதான். அமைப்பில் இருந்து வெளியேறுவது பாரிய குற்றம் அதை இறைவனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை ரத்துச் செய்வதற்கு சமன் என்றெல்லாம் பிதற்றி மனநோயாளிகள் உள்ளே இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகும். போராட்டப் பாதையை விட்டு ஓடுவது பெரும்பாவங்களில் ஒன்று என்ற கருத்தியலும் கட்டமைக்கப்படுகிறது.
போர்க்காலத்தில் யுத்தகளத்தில் கூறப்பட்ட அமீருக்கு (தலைவருக்கு) கட்டுப்பட வேண்டுமென்ற ஹதீஸ்களை எல்லாம் அமைப்பின் தலைவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று பணிக்கப்படுகிறது. இதற்கு எல்லா இயக்க வாதிகளும் ஆதாரம் காட்டுவது உகது யுத்தத்தின் முதற்கட்டத் தோல்வியைத்தான் மலைக்குன்றில் நியமிக்கப்பட்ட நபித்தோழர்கள் தலைவரின் முடிவை மீறி இறங்கியது இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தச் சம்பவத்திற்கும் நவீன இஸ்லாமிய சீர்திருத்த அமைப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உஹதில் சூறா செய்யப்பட்டுத்தான் போராட்டக்களத்திற்கு வந்தார்கள் யுத்தகளத்தில் வைத்து எடுத்த முடிவை மாற்றுவது தற்கொலைக்குச் சமனாகும். அது சரியான கருத்தாகும்.
போராடுவது என்று முடிவெடுத்து களமிரங்கிய பின் முடிவை மாற்றுவது சரியானதல்ல. முன்னைய சூராவின் முடிவு பிழையானது என்பதை அடுத்த சூறாவில்தான் பேசவேண்டும். யுத்தகளத்தில் இருக்கின்ற அமீர் சொல்வதை முஜாகிதுகள் நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் சமூக மாற்றம், சீர்திருத்தம் பற்றி முடிவுகளை எடுக்கின்ற இயக்க சூறாவில் கட்டாயம் முரண்பட்டே ஆகவேண்டும்.
மஸூறா சபை என்பது ஜனநாயகத் தன்மையுடையது. அது யுத்தகளமல்ல. அங்கிருக்கும் தலைவர் போர்த்தளபதியல்ல. அங்கு பாராளுமன்ற ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும். தலைமைத்துவம் அங்கு ஒருமையல்ல தலைமைத்துவத்தின் முடிவுதான் முடிவு என்று கூற ஒருவர் தலைமைத்துவம் என்பது ஒமையா பன்மையா எனறு கேட்டால் தலைமைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. தலைதெறிச்சவன், அதபுகெட்டவன், என்றெல்லாம் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாக் கருத்தாடல்களையும் நிறுத்திவிட வேண்டும் என்றவாறு தலைமை பலமணிநேரம் உரையாற்றிவிட்டு சபையின் சூறாவை புறந்தள்ளிவிடுகிறார்.
கட்சி இயக்கம் அமைப்பு என்பதெல்லாம் ஒரு நிறுவனம்தான். தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முயற்சிகளைக் கொண்டதாக அதிகார பலத்தைப் பெற்றதாக உறுவாவதே நிறுவனத்தின் இயல்பு ஆகும். மார்க்சிய அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு, இஸ்லாமிய அமைப்பு எனும் பேதம் இதில் இல்லை. கொள்கைகளில் எந்த வேறுபாடும் இல்லை அங்கத்தவர்களை அடிபணிய வைப்பதற்காக இறைவனை முன்நிறுத்தி தர்பியா கொடுக்கப்படுகின்றது. நிறுவனம் தன்னைக் காத்துக் கொள்வதற்காகக என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரத்தில் புலப்படும் தன்மையும் புலப்படாத் தன்மையும் இருப்பதால் இந்த மறைமுகப் பொறி அமைப்பு பலருக்கு விளங்குவதில்லை.
ஒரு சிலருக்கு அதிகார ஒளிவட்டத்தைப் பொருத்துகிறது. அவர்களின் பிதற்றல்களைக்கூட ஆணைகளாக உலவவிடுகிறது. எதிர்ப்பவர்களை வேவுபார்க்க ஆட்களை அனுப்புகிறது. ஆயத்தமான பதில்களை தயாரித்து. வைத்துக் கொள்கிறது ஒழுங்குபடுத்தல் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை என்ற கோட்பாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் கடிவாளங்களை விநியோகிக்கின்றது. சிந்தனைகளை முடக்குகின்றது. எல்லோருக்கும் ஒரே மூலையை பொருத்திவிட நினைக்கிறது. அல்லது பல்வேறு ஆற்றல் கொண்ட மூளைகள் ஒரு மூளையாக மாற்றப்படுகின்றது. விசுவாசிகளை உற்பத்தி செய்கின்றது. தொய்வு ஏற்படும் போதெல்லாம் முகத்தை இருக்கிக் கொண்டு வீர முழக்கம் இடுகின்றது. அசரிரீகளை உருவாக்குகின்றது. சுவர்களுக்கு காதுகளைப் பொருத்துகின்றது. அமைப்பு சகோதரன் அடுத்த சகோதரனின் மதகுருவாகவும் பொலிஸ்காரனாகவும் ஆக்கப்படுகின்றான்.
எல்லோருக்கும் எல்லாம் தெரியவேண்டியதில்லை என்று கூறி ரகசியங்கள் எனச் சிலவற்றைப் பாதுகாக்குகின்றது. கோட்பாட்டுப் பதுங்கு குழிகள் பலவற்றைப் ஏற்படுத்துகின்றது. தவறுகளைச் சிலரின் தலைமீது பாவமூட்டையாய்ச் சுமத்துகிறது. சறுக்கல்களைச் சதியாக்குகிறது. எப்போதும் தனக்கான எதிரி வெளியில் இருப்பதாக பிரகடனம் செய்கிறது. அரசியல் அமைப்போடு ராணுவ பலமும் பெற்ற அமைப்பு இன்னும் கொடுமையானதாக இயங்குகின்றது. மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் உள்ள இடைவெளியைப் போல இவை இரண்டுக்கும் இடையே பெருத்த இடைவெளி நிலவுகிறது. இரண்டையும் இணைக்கும் வேலை அத்தனை இலேசானதல்ல.அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்தால் மக்களுக்கு வாழமுடியும். ஆயதம் தாங்கியவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு வந்தால் அழிவைத்தவிர வேறுவழியில்லை.
அதே நேரம் அரசியல் களத்திற்கு வராத சமூக மதச்சீரதிருத்த அமைப்புக்களின் நிலை அது சமூக அரங்கிற்கு கொண்டுவரப்படாமல் விசாரிக்கப்படாமல் போவதுதான் அதன் அந்தரங்க உண்மையாகும். சமூகமாற்றத்தைச் செய்ய வேண்டுமென்ற அக்கறையோடு உள்ளே வருபவன் இதையெல்லாம் பார்த்து என்னவாக மாறுவான். கிடைக்கிற ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு கௌரவமான ஸ்தானத்தை அடையும் சந்தர்ப்பவாதியாகலாம். இல்லையேல் விரக்தியடைந்து தன் கனவுகளின் உடைசல்கள் மீதேறி எதற்கும் லாயக்கற்றவானாக மாறிப்போவான்.
ஆக, உண்மையான புரட்சியாளனை உருவாக்கச் சாத்தியமான அமைப்பு முறையாது? அமைப்பு முறைகளில் எத்தகைய மாற்றங்களை கொண்டுவர வேண்டும்? அமைப்பே இல்லாமல் புரட்சி சாத்தியமா? சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்குறியது என்று தொண்டை கிழியக் கத்துமம் அமைப்புக்கள் சர்வதிகாரமாக மாறிச் சிதைந்து போவது எதனால்? தனிமனித துதிகளைப் போற்றுவது ஏன்? தாங்கள் எதிரிகளாகக் கருதுபவர்களைவிட அமைப்பைவிட்டு வெளியேறுபவர்களை அமைப்பை விமர்சிப்பவர்களை கேள்வி கேட்பவர்களை எதிரிகளாக கணிப்பது எப்படி? எண்ணற்ற இளைஞர்களின் தியாக உணர்வைத்தின்று செரித்து அவர்களைச் சக்கையாக்கித் துப்பிவிடும் அவலம் நேர்வதற்குக் காரணம் என்ன?
இயக்கத்தை விமர்சிப்பவன் குறிப்பாக அதன் அங்கத்தவனாக இருந்தால் அவன் துரோகியல்ல. இயக்க ஒழுங்கிற்கு எதிராகச் செயற்படுபவனல்ல. தலைவரின் கட்டளைக்கு வெளியே நிற்பவன் அல்ல. அவனும் அவ்வியக்கத்தின் அங்கத்தவன் சீர்திருத்தத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் அனுக்குக் கிடையாது’ என்று கூறுகிறார் கலாநிதி ஜாஸிம் பின் முகல்கல் என்ற அறிஞர். இயக்கத்திற்கு இஸ்லாமிய எழுச்சிக்கு வெளியே இருப்பவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தன்னையும் தன்னோடு இருப்பவர்களையும் அவன் விமர்சிக்கின்றான். இந்த விமர்சனம் ஆழ்ந்த அவதானத்தின் வழியாக வரலாம். இதன் மூலம் இஸ்லாமிய செயற்திட்ட செயலாளிகள் புனரமைப்புப் பணி காலமாற்றத்திற்கேற்ப மக்களின் வாழ்வியல் சூழல்களுக்கேற்ப மாறவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கடந்த காலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட மனிதனை மாத்திரம் கொண்டு சீர்திருத்தத்தை ஏற்படுத்திவிட முடியாது.
மற்றொரு நாபருடன் சேர்ந்தோ அல்லது தன்னுடனோ சொற்ப காலத்தின் பின் சீர்திருத்தி விடவும் முடியாது. குறித்த சூழலில் சமூக மாற்றப் பணியை முன்னேடுக்கும் குறித்த நபர்களுக்கும் மத்தியில் வேறுபட்ட ஆய்வு மையங்கள் உலக நாடுகளில் தொழிற்பட்டு வருகின்றன. ஆலோசகர்கள் இதன் மூலம் பயன்பெறுகிறார்கள். அரசை நிருவகிக்கக்கூடிய அல்லது குறித்த நிறுவனத்தை முன்னேற்றக்கூடிய அல்லது குறித்த இயக்கத்தை அதன் இலக்குகள், நிகழ்ச்சித் திட்டங்களை திருத்தியமைக்கக்கூடிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே ஓர் இயக்க அங்கத்தவன் தனக்குத் தென்படும் குறைபாடுகளை விமர்சிப்பது தவறாகாது. தற்போது அது இயக்கத்திற்குப் பாதிப்பில்லையாயினும் எதிர் காலத்தில் இயக்கத்தை முடங்கச் செய்துவிடும். இத்தகைய குறைபாடுகளில் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கூறுகின்றேன்.
1. இயக்கம் தனிநபர்களை பயிற்றுவிக்கும் போது ஏற்றுக் கொள்ளல் அடிப்படையில் பயிற்றுவிக்கின்றதேயொழிய சிந்தித்தல், கேள்வி கேட்டல் என்ற அடிப்படையிலல்ல. இயக்க பரிபாசையில் அஸ்ஸம்ஊ வத்தாஆ என்றால் சம்பூர்ணமாகக் கட்டுப்பட்டு ஒழுகுதல் என்ற கருத்தாகும். மிகச் சிறந்த கருத்துக்களைத் தெரிவு செய்வதற்கான சூறா முறை இஸ்லாத்தின் சிறந்த கோட்பாடதாக இருந்தாலும் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. அல்லாஹ்வின் தூதரும் குலாபஉராசிதீன்களும் கடைப்பிடித்த சூறா முறையில்லை. உமர் ரளியல்லாஹு அன்ஹு இளைஞர்களிடம் ஆலோசனை பெற்றுள்ளார்கள். குழந்தைகள், பெண்களிடம் ஆலோசனைகள் பெற்றுள்ளார்கள்.
ஒரு விடயத்தின் எல்லாப் பரிமாணங்களையும் பட்டறிந்த பின்பே செயற்பாட்டுக்கு வந்தார்கள். மக்களின் கருத்து என்னவென்பதை அறிவதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆனால் துரதிஸ்ட வசமாக தஃவா களத்திலிருப்பவர்களுக்கு மாற்றுச் சிந்தனை, மாற்று குறல்களைக் கேட்டால் மூக்கின் மேல் கோபம் வந்துவிடும். தமது கருத்தோடு யாரும் முரண்படக் கூடாது என்பதுதான் அவர்களின் உள்மன நாட்டமாக இருக்கும்.
குறிப்பிட்ட தாஈ வேலை செய்யும் இடத்தில் வாழும் மக்கள் அவர் ஆணை பிறப்பித்தால் பழைய அரச நாடகங்களில் வருவதைப் போல உத்தரவு மன்னவா! அப்படியே ஆகட்டும்’ என்று கூறுவதைத்தான் எதிர்பார்க்கின்றார். மக்கள் அவரது கருத்துக்கு முரண்பட்டால் அவரது கருத்தை விவாதப் பொருளாக்கினால் அவரது முகம் இருண்டுவிடும். மக்களிடம் காது தாழ்த்திக்கேட்க தாஈக்கு நேரமில்லை. தேவையுமில்லை. தஃவாவிற்கு எப்போதும் மசூறாத் தேவை. செயல் படுத்தும் கட்டத்திற்கு வரும் போது கோளாறுகள் வெளிப்படும், தலைவலிவரும். முரண்படுபவர்கள் மௌனம் சாதிக்கும் வரை தலைவலி ஓயாது.
2. இஸ்லாமிய இயக்கத்திற்கு தமது அங்கத்தவர்களை மிகச் சிறந்த முறையில் பயிற்றுவிக்க முடியும். ஆனால் அது அனைத்து அங்கத்தவர்களையும் கூட்டுப்பணிக்காகவே பயிற்றுவிக்கின்றது. பொதுவான ஒரே தன்மையான நிகழ்ச்சி நிரலின்கீழேயே அனைவரும் கொண்டுவரப்படுகின்றார்கள். தர்பியத்தின் போது தனியால் வேறுபாடு கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இதனால் அங்கத்தவர்கள் மத்தியில் பிரச்சினை வருகிறது. இயக்கம் சிலபோது குறித்த அங்கத்தவர்களை பல ஆண்டுகளாக பல தசாப்தங்களாக வைத்துக் கொண்டிருக்கிறது. புதியவர்களுக்கு அங்கு இடமில்லை. தலைவர் போனால் அடுத்த தலைவர் இல்லை. எல்லாமே ஆயுள் தலைமை. தலைவருக்கு ஏதாவது நடந்தால் எல்லாமே இஸ்தம்பிதம் அடைந்து விட்டதாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் வரலாறு நூறு மீட்டர் அல்ல. அது அஞ்சலோட்டம் என்று யாரோ கூறியது என் நினைவிற்கு வருகிறது.
ஒற்றைத் தலைமை உருவாக்கம் மிகப் பெரும் அபாயமாகும். கூட்டுத்தலைமைகளை அடுக்கடுக்காக உருவாக்குவது அவசியமாகும் என்று சிலர் கூறத்தொடங்கியுள்ளனர். அத்தலைமைகள் குழு உணர்வுடன் செயற்பட வேண்டும். ஒர் அணியின் தலைமை மறைகின்ற போது மற்றொரு அணி தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஐரோப்பாவை விட ஜப்பான் முன்னேரியதற்குக் காரணமும் இதுதான். குழுவாகச் செயற்பட்டமை, நவீன தொழில்நுட்பத்திற்குத் தடையில்லாத மரபுவழிப் பண்பாடுகளை இறுகப்பற்றிக் கொண்டமையே ஜப்பான் முன்னேறியதற்குக் காரணமாகும். குழு மனப்பாங்குடன் கூட்டுப் பணி புரிவது செலூக்கம் உள்ள நிறுவனங்கள் நல்ல திட்டமிடலோடு உருவாக வழிவகுக்கும் எதிர்பார்க்கும் பலனையும் அடையலாம்.
3. “இஸ்லாமிய இயக்கமும் சமூகமாற்றப் பிரச்சினையும்” என்ற நூலில் ராஸித் அல் கன்னுஸி பின்வருமாறு சொல்கின்றார். இஸ்லாமியவாதிகள் புறத்தே இயங்கும் சமூக சக்திகளின் தாக்கங்களிலிருந்து ஒதுங்கித்தான் வாழ்கின்றார்கள். இதனால் அச்சக்திகள் சமூகமாற்றத்தில் ஏற்படுத்தப் போகும் பாதிப்புக்களை பற்றி அறியாதுள்ளர். குறிப்பாக பெண்களை அணிதிரட்டுவது இவர்கள் கொள்கையளவில் மட்டுமல். செயற்பாட்டிலும் சம்பிரதாயங்களை மீறமுடியாதுள்ளவர்களாக உள்ளனர்.
பெண்ணீயப் பிரச்சினையை ஒரு மேலைத்தேய கோட்பாடாக மட்டும் பார்ப்பதோடு ஒதுங்கிவிடுகின்றனர். ஆதை மானுடப் பிரச்சினையாக அணுகுவதில்லை. ஆனால் இறைவன் இருவரையும் தான் பிரதிநிதியாக படைத்துள்ளான். ஆண் மட்டும் பிரதிநிதியல்ல. பிரதிநிதித்துவ பொறுப்பை இருவரும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறே இருவரையும் சோடியாக படைத்துள்ளான். சோடியை பிரிக்க முடியாது. ஆதில் ஏற்றத்தாழ்வும் கிடையாது. எனவே பெண்ணியப் பிரச்சினையை புறந்தள்ளுவதானது சமூகமாற்றத்தில் அரைவாசியை புறந்தள்ளுவது போன்றதாகும்.
4. இஸ்லாமிய இயக்கம் அதன் அங்கத்தவர்களை உயர்வெண்ணத்தின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கின்றது. இயக்கித்திற்கு வெளியிலிருந்தும் மக்களை விட உள்ளே இருக்கும் அங்கத்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் ஊட்டப்படுகின்றது. இவ்வாறான உயர்வெண்ணம் சமூகமாற்றப்பணியில் பிரச்சினைகளையும் மந்தப்போக்கையுமே ஏற்படுத்தும். உயர்வெண்ணம் கொண்ட அவர்கள் மக்களோடு இணைவதில் மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதில் ஒதுங்கிய மனப்பாங்கிலேயே காணப்படுவர். இயக்க மனப்பாங்கு மேலோங்கி மக்கள் பிரச்சினை இரண்டாந்தரப் பிரச்சினையாக அணுகப்படும். அல்லது அணுகப்படாமலேயே இயக்கத்தின் செயற்திட்டத்தினுள் மாத்திரம் நின்று சுழல்பவர்களாக இருப்பர். ஆனால் அல்குர்ஆன் உயர்வெண்ணத்திற்கு வேட்டு வைக்கின்றது.
“நபியே மனிதர்கள் மீது பணிவு என்னும் இறக்கையை தாழ்த்துவீராக!” என்று கூறுகின்றது. அதாவது ஒரு தாஈ அல்லது ஒரு முறப்பி பயிற்றுவிக்கப்படுபவர்களை விட தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் மக்கள் அவன் கொள்கையை ஏற்கமாட்டார்கள். எப்போது அவன் மக்களின் தரத்திற்கு இறங்கி வந்து மக்களோடு மக்களாக மாறி அழைப்பு விடுக்கின்றானோ அப்போது அவனுக்குப்பின்னால் மக்கள் அணிதிரள்வர். நீரின்றி மீனுக்கு எவ்வாறு வாழமுடியாதே அவ்வாறே மக்கள் ஆதரவுவில்லாத தாஈயும் வாழமுடியாது. வெற்றியாளர்களின் பின்னால் தான் மக்கள் இருக்கின்றார்கள்.
நம்நாட்டில் சமூகமாற்ற, விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்தியவர்கள் மத்திய தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள். மேட்டுக்குடிகளும் பங்கேற்கவில்லை. அன்றாட கூலிகளும் கலந்து கொள்ளவில்லை. மேட்டுக்குடிகளுக்கு விடுதலைக்கான தேவை கிடையாது. அன்றாட கூலிகளுக்கு தான் வேலைசெய்யும் பெரிவருக்கு பயந்து வரமாட்டார். நம்நாட்டில் தொழிற்சங்கப் போராட்டம் பாரியளவில் வெற்றியத்தராமல் போனதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் சமூகமாற்றத்தில் பங்கேட்கும் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு மத்தியிலும் இரண்டுவகை மாதிரிகள் உள்ளன.
ஒருசாரார் குறிப்பிட்ட அமைப்பின் தலைமைக்கு விசுவாசமாக அணைத்து சட்டதிட்டங்களையும் நியாயம் கற்பித்திது இயங்கிச் செல்பவர்கள். இன்னெரு சாரார் அமைப்பின் எல்லாவற்றையும் எல்லாக் காலங்களையும் நியாயம் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். உள்ளிருந்து மாற்றங்களை நிகழ்த முடியவில்லையானால் அமைப்பை விட்டு வெளியேரவே முயற்சிப்பார்கள். மாற்றங்களை நிகழ்த்துவதே அவர்களின் நோக்கம் மக்களுக்காக போராடுவதே அவர்களின் குறிக்கோள். அமைப்பு என்பதை அப்பணியைச் செய்யும் சாதணங்களில் ஒன்று என்பதே அவர்களின் கருத்து.
இயக்கங்கள் கராறான முன் கூட்டிய முடிவுகளை வைத்திருக்கின்றன. முறைவான செயற்திட்டம் மூலம் சன்னிதானங்களையும் அதிகார பீடங்களையும் கட்டியேழுப்ப முட்படுகின்றன. ஒரு சமூக மாற்றப் பணியாளன். ஆல்லது ஒரு சிந்தனையாளன் ஒரு உண்மையை சுமந்திருக்கின்றான். ஆந்த உண்மையினூடாக பயணமும் (Travelling Theory என்று எட்வட் செய்த் குறிப்பிடுவது போல்) செய்கின்றான். இது அவனது அகத்திற்கு நிகழ்கின்றது. இந்த தொடர் பயணத்தில் அவனது அடுத்த சிந்தனை அல்லது படைப்பு தோன்றலாம். அந்த அடுத்த சிந்தனை அல்லது அடுத்த படைப்பு உள்ளுரைந்திருக்கும் உண்மையை மறுதலிப்பதாக இருக்கலாம்.
சுதந்திரமாக சிந்திப்பதற்கு அல்லது சதந்திரமான படைப்பாளிக்கு இது பிரச்சினை இல்லை. இமாம் சாபி அவர்கள் கௌலுன் ஜதீத் – புதிய சிந்தனை, கௌலுன் கதீம் – பழைய சிந்தனை என தனது சட்ட மரபில் உறுவாக்கி இருக்கிறார்கள். ஆனால் இயக்கத்திடம் சரணாகதி அடைந்தவர்கள் அல்லது இயக்கத்திற்கு தங்களை விற்றுக் கொண்டவர்களின் நிலையோ இதற்கு மாறானது.அணைத்து இயக்கங்களையும் ஒன்றாக்க நினைப்பது ஒரு அழகிய கனவு என கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுகிறார்கள். அக்கருத்து உண்மையானதே. ஒன்றாக்குவதாக இருந்தால் எல்லோரையும் ஒரே அச்சில் வார்க்க வேண்டும். ஒன்றாக்க முடியாவிட்டாலும் ஒருமுகப்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம். ஒன்றாக்கலுக்கும் ஒருமுகப்படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கின்றது. மக்களின் தேவைகள் பலதரப்பட்டிருப்பதால் இடத்திற்கிடம் சமூகங்களுக்கு சமூகம் வேறுபடுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் இருப்பதில்லை என்று அவர்கூறுகின்றார்
source: http://idrees.lk/?p=50