போதை ஒழிப்பு குறிப்பிட்ட ஒரு நாளைக்கு மாத்திரமா ?
ஃபாத்திமா ஷஹானா கொழும்பு
ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் என்று உலகில் உள்ள பல நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றார்கள். குறிப்பிட்ட இந்த தினம் போதை ஒழிப்பு தினம் என்று 1987 டிசெம்பர் 7ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இன்று போதைப் பொருள் பாவனை என்பது உலக நாடுகளைப் பொறுத்தமட்டில் பெரிய அளவிலான சமூகப் பிரச்சினையாக உள்ளது.
போதை பொருட்களின் பாவனை இளைஞர்களிடம் வெகு விரைவாக பரவி வரும் ஒரு மேலைத்தேய கலாச்சாரமாக இன்றைய நாட்களில் மாறியுள்ளது. இதன் வகைகளும், பாவனை முறைகளும் வௌ;வேறு விதங்களில் நாளுக்கு நாள் வித்தியாசமான வடிவங்களில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
போதை என்பது மனிதன் அவனது தன்னிலையை மறந்த ஒரு நிலையாகும். இஸ்லாத்தில் மனிதனது சுய நினைவை இழக்க வைக்கக்கூடிய எந்த ஒரு பொருளானாலும் அதனை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை(முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர்.தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்.இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகின்றார் தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கின்றார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவற்றை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். (அல்குர்ஆன் 7:157)
இன்றைய காலத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு மத்தியில் கொகைன், ஹெராயின் ஆகிய போதைப் பொருள்கள் மிக பிரபல்யம் வாய்ந்த போதை வஸ்துக்களாக இருக்கின்றன.
அது போன்றுதான் சிகரெட், மதுபானம் ஆகியனவும் இளைஞர்களுக்கு மத்தியில் பிரபலமான போதைப் பொருட்களாக உள்ளது.
அதே போன்று methylenedioxymethamphetamine அல்லது Ecstasy (club drug)போன்றவைகளும் மிகவும் பிரபலமான போதைப் பொருட்களாகும். இவைகள் விலையிலும் மிக மிக உயர்ந்தவையாகும். இதன் பாவனையாளர்கள் இது பற்றி குறிப்பிடுகையில் இதனைப் பயன்படுத்தும் போது அளவில்லாத ஒரு இன்ப(?) உணர்வு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்ப(?) நிலை கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு நீடிக்கும்.அதன்; பின்னால் இந்த போதைப் பொருட்களை பயன் படுத்தியவர்கள் எளிதில் கோபமடைதல், மனஅழுத்தம், நினைவாற்றலில் குறைபாடு ஏற்படல் போன்ற குணங்களைக் கொண்டவர்களாக காட்சி தருவர்.
ஆறு மணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்க்கையையே இழக்கின்றனர். எல்லா போதைவஸ்துக்களும் மனிதனின் உடல் நலத்திற்கு கேட்டைத்தான் விளைவிக்கும்.
போதைவஸ்துப் பாவனையாளர்களின் உடலின் வெளிப்புற அறிகுறிகளாக மூக்கிலிருந்து சலம் வடிதல், பசியின்மை, உடல் நிறை குறைதல், தூக்கம், உடலுறவிற்கான நாட்டம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இவர்களுக்கு நோய் கிருமிகளின் தொற்றுக்கள், வாந்தி, மூச்சிடுவதற்கு கடினமான நிலை என்பனவும் போதைப் பொருள் பாவனையின் தாக்கங்களாகக் காணப்படும். இவர்களது வாழ்வு அவசர மரணத்தை நோக்கியதாகவே அமைந்திருக்கும்.
உலகிலுள்ள அனைத்து மதங்களையும், வழி முறைகளையும் நாம் எடுத்துப் பார்த்தாலும் இஸ்லாம் மாத்திரம் தான் மனிதனின் வாழ்க்கைக்கான சிறந்த வழிமுறைகளைக் கற்றுத் தந்துள்ளது. இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டத்தில் எந்தவொரு கோணலையும் யாராலும் சுட்டிக் காட்டவும் முடியாது.
….எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்ப்பந்தத்துக்கு உன்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:3)
அநேகமான பெற்றோர்கள் இஸ்லாமிய மார்க்க ரீதியான வழிகாட்டலைப்; பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காததால் பிள்ளைகள் ஒர் உண்மை முஸ்லிமாக வளரும் சூழ்நிலை இல்லாமல் போகின்றது. சில பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அன்பாகப் பேசிப் பழகாத காரணத்தினால் அந்ந அன்பு, பாசத்தைத் தேடி பிள்ளைகள் தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். பெற்றோர்களின் அன்பிற்காக ஏங்கும் சில மாணவர்கள் தவறான நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளிடம் இஸ்லாமிய சூழலை உண்டாக்காத பெற்றோரே காரணமாகின்றனர்.
இன்று அநேக சர்வதேசப் பாடசாலைகளில் இந்த நிலைமை நீடிக்கின்றது. போதைவஸ்துப் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் பாலியல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். பெற்றோரின் சிறந்த அரவணைப்பும்,மார்க்கத்தின் தெளிவும் இல்லாத காரணத்தினால் பிள்ளைகள் இந்த நிலைக்க ஆளாவது மிகவும் பரிதாபத்திற்குரியதாகும்.பிள்ளைகள் பற்றி நாளை மறுமையில் அல்லாஹ் பெற்றோர்களிடம் கேள்வி கேட்பான். பேற்றோர்களே அதற்கப் பயந்து கொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும் (உலைக் களத்தில்) உலை ஊது கின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
இதை அபூமூசா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், (புகாரி : 5534)
ஒரு உண்மையான முஸ்லிம் எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த விஷயம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாக இருந்தால் அதில் எவ்வளவு அக்கறை இருந்தாலும் அல்லாஹ்விற்காக அதனை விட்டும் ஒதுங்கி விட வேண்டும். ஏனெனில், அல்லாஹ் கெடுதியை ஒருபோதும் நமக்கு நாட மாட்டான். அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப வாழும் வாழ்க்கைக்கான கூலியை அல்லாஹ் நிச்சயமாக நமக்கு வழங்குவான்.
அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்கு அவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.; (அல்குர்ஆன் 2:112)
போதைப் பொருள் பாவனையாளர்கள் அதனை வாங்குவதற்காக கொள்ளையடித்தல் போன்ற பாவங்களிலும் ஈடுபடுகின்றனர். ஏன், கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்கள் இவ்வுலகத்தில் எதையும் அனுபபிப்பதும் இல்லை. மறுமையிலும் இவர்களின் நிலை படு மோசமாகவே இருக்கும். அல்லாஹ் யாவரையும் காப்பானாக!
இன்று போதைவஸ்து வியாபாரத்தில் பின்னணியில் முஸ்லீம்கள் உள்ளனர். இவர்கள் பணத்திற்காக தாமும் நரகத்திற்கு சென்று பிறரையும் நரகத்திற்கு செல்ல வழிகாட்டுகின்றனர். இவர்கள் வழிகெடுத்த அத்தனை பேர்களினதும் பாவங்களையும் இவர்களும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை அவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது(அல்குர்ஆன் 16:25)
ஏன், சிகரெட், மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையான பல குடும்பத் தலைவர்கள் அவர்களின் வாழ்க்கையை அழித்துக் கொள்வதோடு தமது குடும்ப அங்கத்தவர்களினது வாழ்க்கையையும் சீர் கெடுக்கின்றனர்.
உங்களையே நீங்கள் கொன்றுவிடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பெரும் கேடும் சில பயண்களும் உள்ளன.அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:219)
சிகரெட், மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையானவர்கள் புற்றுநோயை விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த விஷயத்தில் அரசாங்கங்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற வேலையைத் தான் பார்கின்றன.
புகைத்தல், மதுபானம் அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கம் என விளம்பரப்படுத்திக்கொண்டே அதனை விற்பனை செய்வதற்கு அனுமதியும் கொடுக்கின்றனர்.இலங்கை உற்பட அநேக நாடுகளில் அரசாங்கமே விற்பனையும் செய்கிறது.
நமது நாட்டைப் பொருத்தமட்டில் அரசாங்கத்திற்கு முதலாவது அதிகூடிய வருமானம் தரும் விற்பனைப் பொருட்களாக சிகரெட், மதுபானம் உள்ளது. சிகரெட் புகைப்பவர்கள் தங்கள் பணத்தையே புகைத்து தமது உடம்பிற்குள் நஞ்சையே உள்வாங்குகின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு போதைப் பொருள்களை வாங்குவதற்கு தம் பிள்ளைகளையே அனுப்புகின்றனர். நிறைய பிள்ளைகள் இதனாலேயே புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள். இவர்கள் தம் கைகளாலேயே தமக்கும், தம் குடும்பத்திற்கும் அழிவைத் தேடுகின்றனர்.
உங்கள் கைகளால் நாசத்தை தேடிக்கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள் நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 2:195)
இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் சில நாடுகளில் அரச அனுமதியுடன் சிகரெட் மற்றும் பி.டி தயாரிப்புகளில் முஸ்லீம்(பெயர் தாங்கி)களே ஈடுபடுகிறார்கள்.
உதாரணத்திற்கு இலங்கையில் அல்லி கம்பணி பி.டி தயாரிப்பில் ஈடு படுகிறது.அது போல் தமிழ்நாட்டில் செய்யது பி.டி கம்பணி பொன்றவைகள் இந்த கேடு கெட்ட தொழிலில் பகிரங்கமாகவே ஈடுபடுகின்றன.
போதை பொருள் பாவனையாளர்கள் வீண் விரயம் செய்கின்ற பாவத்திற்கும் ஆளாகின்றனர்.
முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் எழுத்தர் (வர்ராத் ளரஹ்ன அவர்கள்) கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள் என முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஃகீரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு முஃகீரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது) பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார்கள். (புகாரி : 1477)
போதை பெருள் தொடர்பாக அரசாங்கள் கடுமையான குற்றவியல் சட்டங்களை இயற்றினாலும் போதை பொருள் பாவனைகளும், அதன் விற்பனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமாகவே உள்ளன.இதற்காண காரணம் என்னவெனில் ஒரு பக்கம் சட்டத்தை இயற்றும் அரசாங்கம் மற்றொரு பக்கம் போதை பொருள் விற்பனைக்கு தளம் அமைத்துக் கொடுப்பதுதான்.
படைத்த இறைவனின் அவனது ஏவல்களையும், விலக்கல்களையும் நமது நன்மைக்கே ஏற்படுத்தியுள்ளான். நடுநிலைமையில் சிந்திக்கின்ற எந்தவொரு மனிதனுக்கும் இதன் யதார்த்தம் புரியும். இறைவனின் கட்டளைக்கேற்றவாறு வாழ்ந்தால் சுவர்க்கத்தைத் தருவதாக இறைவன் வாக்களிக்கின்றான்.
தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறக் கூடியவைகளும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.
இதுவே நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட சுவர்க்கம். (அல்குர்ஆன் 43:71,72)
ஆனால், அவசரக்காரனான மனிதன் இத்தனை இன்பங்களையும் அல்லாஹ் காட்டித் தந்த வாழ்வை வாழ்ந்து மறு உலகில் அனுபவிப்பதை விடுத்து இறைவன் தடுத்த முறையில் வாழ்ந்து இவ்வுலக அற்ப இன்பங்களை அனுபவிக்க நாடி ஷைத்தானின் வழியைப் பின்பற்றி நரகத்திற்கு பாதை அமைத்துக்கொள்கின்றான்.
நம்பிக்கைக் கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன் 2:208)
உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளைப் போதை ஒழிப்பு தினம் என பிரகடனம் செய்து இதன்மூலம் இவர்கள் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்போவதாக தம்பட்டம் அடித்து முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கின்றனர்.
போதையை ஒழிப்பு தினம்,சிறுவர்கள் தினம்,பெற்றோர்கள் தினம்,மகளிர்கள் தினம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினத்தை அறிவித்து அந்த தினத்தில் மாத்திரம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் எதையாவது ஒரு அனாச்சாரத்தை செய்து விட்டு இருந்து விடுவது சரியான ஒன்றல்ல மாறாக போதை ஒழிப்பு என்பதும்,சிறுவர்களை பராமரிப்பதும்,பெற்றோர்களை கண்ணியப் படுத்துவதும்,ஒரு நாளைக்கு மட்டும் உரியது அல்ல ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய விஷயமாகும் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இஸ்லாம் மார்க்கம் மனிதனுக்கான வாழ்க்கை முறையையும் தந்து, இதனையொட்டி வாழாவிட்டால் ஏற்படும் தீங்குகளை விளக்கி,நம் சீரான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது. குற்றம் இழைத்தவர்கள் தம் குற்றத்தை உணர்ந்து திருந்தினால் அல்லாஹ் நம்மை மன்னிப்பதாகவும் நமக்கு உறுதியளிக்கின்றான்.
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர, அவர்களை நான் மன்னிப்பேன். நூன் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:160)
source: http://rasminmisc.com