ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் (3)
81. அன்பால் ஆர்வமூட்டி அழகு அலங்காரக் கவர்ச்சியால் தூண்டி தம் திறத்தாலும் தந்திரத்தாலும் கணவனை தன் வசப்படுத்த இயலாதவள் பிற பெண்களின் முந்தானையைப் பின்பற்றி பின் தானையாக தானவனை விட்ட பெரும்பாவத்திற்கும் குற்றத்திற்கும் ஆளாவார்கள்.
82. கணவர்களின் ஏகபோக நன்செய் நிலங்களான மனைவியர்களிடம் பலபோகம் பயிர் செய்யலாம். அன்பு நீர் பாய்ச்சி ஆர்வ உரமிட்டு வெறுப்பு களை பிடுங்கி பிள்ளை விளைச்சலைப் பெருக்கும் பெரு விவசாயியே கணவர்.
83. வீட்டு மாது உளங்கனிந்தால் வாழ்வு முக்கனி சர்க்கரையாகத் தித்திக்கும். பூவை உளம் வாடினால் வாழ்வு இலுப்பைப்பூவாக அலுப்பு தரும்; எட்டிக்காயாக எட்டி நிற்கச் செய்யும்; இன்ப மயக்கம் போய் தயக்கம் ஏற்படும்.
84. பொய்யாக ஊடுவதும் மெய்யாகக் கூடுவதும் குடும்ப வாழ்வில் சகஜம். மெய்யாக ஊடுவதும் பொய்யாகக் கூடுவதும் குடும்ப வாழ்வை பலகஜதூரம் துரத்தி விடும்.
85. சமயலறையில் விதவிதமான உணவு வகைகளை வேகத்தில் வேகவைத்து கணவனுக்கும் மக்களுக்கும் சுகமாகப் பரிமாறி அறுசுவை படைக்கின்றவள், அவர்களின் மனதை வேதனையில் வேகவைத்து சுவை அறு சோகத்தை ஒரு போதும் சமைத்துவிடக்கூடாது.
86. கணவர்களாயினும் மனைவியர்களாயினும் தங்கள் உடல் வாசஸ்தலங்களை தூய்மையாகவும் வனப்பாகவும் வாசமுடனும் பேணவில்லையெனின் அருவருப்பாலும் பெரும் வெறுப்பாலும் சகவாசம் குறைய, தன்வசப்படுத்த முடியாமல் ஒருவரை விட்டு ஒருவர் ஒதுங்கவும் விலகவும் நேரிடும்.
87. மணப் பொருத்தத்திற்கு பணப் பொருத்தத்தை விட மிக மிகத்தேவை அறிவு, மனம், உடல் பொருத்தங்களாகும்.
88. உடல் கவர்ச்சி, பணக்கிளர்ச்சிகளால் கவரப்பட்டு நடக்கும் கல்யாணங்கள், நாளடைவில் கவர்ச்சி வீழ்ச்சியுற தளர்ச்சியடைய நேரிடும்.
89. அழகையும் கவர்ச்சியையும் வெளியே விளம்பரப்படுத்தும் சுவரொட்டிப் பலகைகள் அல்ல பெண்கள். கணவர்களின் செய்கைகளுக்கு இருக்கை இட்டு இதயத்தில் இடம் பிடிக்க வேண்டிய அழகுப் பெட்டகங்களே வீட்டுப் பெண்டிர் என்பது இல்லறம் விளம்பும் அறம்.
90. முற்றிய நெல்மணிகளைத் தாங்கிய வயல் காற்றிலும் வெள்ளத்திலும் பணிவுடன் குனிவதால் அடித்துச் செல்லப்படாமல் காப்பற்றப்படுகிறது. பணியாமல், தற்பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் முருங்கைமரம் தலைக்கனத்தால் காற்றில் கண்ட துண்டங்களாக நொறுங்கிப் போகிறது. இது நமக்கு நல்ல் ஓர் படிப்பினையாகும்.
91.பொய் பூசி மெய்களை இணைத்து திருமணத்தை நடத்துபவர்கள் பொய் மெய்யாய் வெடிக்கும்போது தூள் தூளாகி விடுவர்.
92. குளத்திலுள்ள திருமலர் நீரில் அளவிற்கேற்ப நிலை நிற்கும்; அது போல் வீட்டின் வருவாய்க்கேற்ப திருமதியும் நிலை நிற்க வேண்டும்.
93. வேலை பார்த்து உழைத்து குடும்பம் நடத்தும் ஒவ்வொரு ஆண் பெண்ணும் சமுதாயத்தில் தனித்தகுதியும் மதிப்பும் பெறுகின்றவராவர்.
94. பல சொல்லியும் அதட்டியும் தட்டியும் திருந்தாத துணையுடன் தொடரும் வாழ்வு தொடா வாழ்வாக, தொடரா வாழ்வாக மாறும். நகரா வாழ்வாக நரக வாழ்வாக நலிந்து விடும்.
95. எப்போதைக்கும் பெண்கள் போதையில் மயக்கமுற்றுக் கிடக்கும் ஆண்கள் தன் தன்மானத்தை விமானத்தில் பறக்க விட நேரிடும்.
96. கற்றோர் கற்றோரை காமுற்று கல்யாணம் செய்வதே நன்று. அற்றோர் அற்றோரை ஆர்வமுற்று மணம் செய்யலாம்.
97. இன்னவரின் மனைவி என பெண்ணை அறிமுகப்படுத்துவது போன்று இன்னவரின் கணவன் என அறிமுகப்படுத்துவதும் சமவுரிமையின் பாற்பட்டதாகும்.
98. அழகும் செல்வமும் அழிவது; நிலையற்றது; பெற்ற அறிவும் பேணும் ஒழுக்கமும் அழியாதது; நிலையானது.
99.அவள் அவளாக அழகாக இருந்தால் அவனும் அவனாக தேனாக இருந்து ஆவன செய்வான். அவன் அவனாக அளவாக அமைந்தால் அவளும் அவலாக ஆவலாக அமைவாள்.
100.கல்லடி படும் மாமரமும் சொல்லடி படும் மங்கையும் மானம் மாய்ந்து வாழ நேரிடும்.
101. இறந்ததை மறந்து இருப்பதை நினைத்து இல்லறத்தை சந்தடியின்றி சந்த வாழ்வாக சந்தன வாழ்வாக அமைத்தால் இந்த நாள் மட்டுமின்றி எந்த நாளும் வந்தநாளும் தங்க நாள்தான். இனிமை தங்கும் நாள் தான்.
102. தம் மக்களை ஒழுக்க நெறியோடு வளர்க்க இயலா பெற்றோர் வாழ்வில் வளம் அற்றோராவார். அம்மக்களாலேயே அவமானமும் அவதியும் உற நேரிடும்.
103. அன்ன நடை; மான் விழி; குயில் மொழி பெண்களுக்கு நன்று; ஏறுநடை; சிறுத்தை விழி; சிங்கமொழி ஆண்களுக்கு நன்று.
104. பெற்றோர்களாயினும் சகோதரர்களாயினும் குடும்பச் சொத்துப்பாகப் பிரிவினையில் அநீதியும் வஞ்சகமும் செய்வாராயின் வாழ்வில் சபிக்கப்பட்டு வேதனையுறுவர் என்பது இறைநியதியும் எழுதப்படாதச் சட்டமுமாகும்.
105. படித்தும் கேட்டும் பார்த்தும் செய்தும் அறிவைப்பெற ஆண் – பெண்கள் முயற்சி எடுத்தல் வேண்டும்.
106. அழகிருந்தும் அறிவில்லாதவர்கள் நிறமிருந்தும் மணமில்லாத மலரைப் போன்றவர்கள்.
107. அறிவு என்பது கல்விக்கூடங்களில் கற்றுத்தருவது மட்டுமல்ல. உலக வாழ்வு எனும் உன்னத கலாசாலையில் செய்முறைப் பயிற்சியால் பெறும் அனுபவ அறிவு சிறந்த அறிவின்பாற் பட்டதாகும்.
108. அழகு, அறிவு, செல்வம் பெருகியவர்கள் வாழ்வியல் அகந்தையை அகற்றி பணிந்து வாழ்வதே சிறந்த பண்பாடு ஆகும்.
109.கெஞ்சியும் கொஞ்சியும் வாழ்வது குடும்பவாழ்விற்கு சுவையும் பயனும் சேர்க்கும். மிஞ்சியும் அஞ்சியும் வாழ்வது சுவையும் பயனும் நீக்கும்.
110. தண்டவாளப் பாதை விரிசலின்றி இணையாக இருந்தால் தான் ரயில் தடம் புரளாமல் இலக்கை அடைய முடியும். வாழ்வு ரயிலில் பிரயாணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.
111.ஈகையும் விருந்தோம்பலும் இல்லாத இல்லம் உப்பு சப்பில்லாத உணவகம் போன்றதாகும். சுவை விட்டு அலுப்பு தட்டும்.
112. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வு வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருப்பதைப்போல் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் உறுதியாக ஒரு பெண் இருப்பாள். வாழ்வுத் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் இது பொருந்தும்.
தொகுப்பாசிரியர்:
பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை
முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர், முதனிலை ஆராய்ச்சியாளர், யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத் திட்டம், பல்கலைக் கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்
செல் : 94950 11317
source: http://mudukulathur.com/?p=16596