“அல்லாஹ் எங்களுக்குரியவன்” – இந்த மனப்பான்மை சரியானதா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது முஸ்லிம் சகோதரர்கள் சிலருக்கு மத்தியில் நடந்த கலந்துரையாடல் இது.
“இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க உலகில் ஒருவரும் இல்லையா, என்ன உலகம் இது?” ஒருவர் அங்கலாய்த்தார்.
அங்கிருந்த பலரும் பல கருத்துக்களை தமது பங்கிற்கு முன்வைத்தனர்.
அக்கருத்தாடலின்போது அமெரிக்காவை அவர்கள் சாடி, சாபமிடத் தவறவில்லை. அவர்களிடையே ஒருவர் இப்படிக் கூறினார்:
“தட்டிக்கேட்க ஒருவருமில்லைதான். ஆனால் அல்லாஹ் இருக்கிறான். முஸ்லிம்கள் மீது கைவைத்தால் அவன் சும்மா இருப்பானா பாருங்கள்!”
அங்கிருந்த எவரும் இக்கருத்தை ஆட்சேபிக்கவில்லை. கதை தொடர்ந்தது.
“முஸ்லிம்கள் மீது கைவைத்தால் அல்லாஹ் சும்மா இருக்க மாட்டான்” என்ற அபிப்பிராயத்தை ஒருவர் பட்டவர்த்தனமாகக் கூறுகிறார். மற்றவர்கள் அவ்வாறு கூறவில்லையே தவிர இந்தக் கருத்தோடு முரண்பட்டுக் கொள்ளவில்லை. காரணம், முஸ்லிம்களின் அடிமனதில் “அல்லாஹ் எங்களுக்குரியவன்” என்ற மனப்பான்மை குடிகொண்டிருக்கிறது. இந்த மனப்பான்மை சரியானதா? இந்த மனப்பான்மை காரணமாக ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது போன்ற விடயங்களை இங்கு நாம் விளங்க முயற்சிப்போம்.
அல்லாஹ் தனது நியதிகளையும் வழிமுறைகளையும் முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ளதாக அமைக்கவில்லை.
அவன் முஸ்லிம்களுக்குரிய இரட்சகனாக மட்டும் தன்னைப் பிரகடனம் செய்யவுமில்லை.
அவன் மனித சமுதாயத்திற்குரிய இரட்சகன் என்றே தன்னைப் பிரகடனம் செய்திருக்கிறான்.
மனிதர்களைப் படைத்துப் பரிபாலித்து, பாதுகாத்து, மரணிக்கச் செய்து, உயிர் கொடுக்கும் இரட்சகன் – (114:1)
மனிதர்களின் அரசன் – (114:2)
மனிதர்கள் வணங்கி வழிபட வேண்டிய நாயன் – (114:3)
அல்லாஹ்வின் தூதரும் மனித சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர் என்று குர்ஆன் கூறுகிறது:
மனிதர்கள் அனைவருக்குமான (இறைதூதர்) – (34:28)
அல்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வந்த வேதம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மனிதர்களுக்கான வழிகாட்டி – (2:185)
முஸ்லிம் சமுதாயம் மனித சமுதாயத் துக்காக தோற்றுவிக்கப்பட்ட சமூகம் என அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.
மனித சமுதாயத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட (சமூகம்). – (3:110)
எனவே இங்கு முஸ்லிம்களுக்கென்று பிரத்தியேகப்படுத்தப்பட்ட எதனையும் நாம் காணவில்லை. அனைத்தும் மனிதர்களுக்காக, மனித சமுதாயத்துக்காக என்ற அமைப்பிலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் முஸ்லிம்கள் அனைத்தையும் தமக்குரியதாகவும், தமது உடைமைகளாகவும் கருதுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், அவனது தீனுக்கும் முஸ்லிம்கள் வழங்குகின்ற நன்மாராயமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை. மாறாக அதனை ஒரு துரோகம் என்றே கருத வேண்டும்.
முஸ்லிம்களிடம் இத்தகையதொரு மனப்பான்மையை உருவாக்கிய காரணிகளுள் ஒன்று, இஸ்லாம் அவர்களுக்குத் தவறாகப் போதிக்கப்பட்டமையே. பல சந்தர்ப்பங்களில், குத்பாக்கள், பயான்கள், மேடைப் பேச்சுக்கள் பலவற்றின் பாங்கும், தோரணையும், இஸ்லாம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது, அல்லாஹ் எங்களுக்குச் சொந்தமானவன் என்ற உணர்வை வளர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அறிவூட்டப் படும் முஸ்லிம்கள், “அல்லாஹ் எங்களுக்காக எதையும் செய்வான், சும்மா இருக்க மாட் டான்” என்று கருதுவதில் ஆச்சரியமில்லை. முஸ்லிம்கள் இதன் மூலம் அல்லாஹ்வை ஒரு கட்சிக்காரனாக ஆக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை.
அல்லாஹ் தனது நியதிகளையும், வழிமுறைகளையும் முஸ்லிம்களுக்காக வகுக்கவில்லை. மனிதர்களுக்காகவே உருவாக்கினான் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். உலகம் அந்த நியதிகளுக்கு அமைய இயக்கப்படுகிறதே தவிர, முஸ்லிம்களுக்காக உலகம் இயக்கப்படுவதில்லை என்ற உண்மையையும் முஸ்லிம்கள் உணர்ந்திருத்தல் வேண்டும். சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் படைப்புக்கள். அவை முஸ்லிம்களுக்காக மட்டும் உதித்து மறைவதில்லை. அவ்வாறே இரவும் பகலும், காற்றும் மழையும் முஸ்லிம்களுக்காக மட்டும் இயங்குவதில்லை. முஸ்லிம்கள் எப்போது அல்லாஹ்வின் நியதிகளுக்கு அடிபணிகிறார்களோ அப்போது உலகம் அவர்களுக்காக இயங்கும் நிலை உருவாகும்.
அல்லாஹ்வின் நியதிகளுள் ஒன்றை உதாரணமாக எடுத்து நோக்குவோம். ஒரு பொருளின் இயக்கத்திற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது. சக்தியின்றி எப்பொருளும் தானாக இயங்குவதில்லை.
இது ஒரு நியதி. இந்த நியதி முஸ்லிம்களுக்குரியதல்ல. இது பொதுப்படையான ஒரு நியதியாகும். இந்த நியதியை அறிந்தவர்கள் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது இயங்குகிற வல்லமை அவர்களுக்குக் கிடைக்கப்பெறும்.
மனித சமுதாயத்தை இயக்குகின்ற வல்லமை, சக்தி என்பவற்றை அல்லாஹ் வகைப்படுத்தியிருக்கிறான். மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்திற்கு இந்த சக்திகளின் கூட்டான ஒத்துழைப்பு இன்றியமையாதது. அந்த சக்திகளை அறிந்து அவற்றைக் கையாள்வதன் மூலமே ஒரு சமூகம் இயங்கும் திறமையையும், ஆற்றலையும் பெறலாம். அத்தகைய சக்திகளுள் முக்கியமானது, ஆத்ம சக்தி: இந்த சக்தியை பல வழிகளில் மனித சமூகம் பெற்றுக் கொள்ளலாம்.
1. இறைவழிகாட்டல் எனும் வெளிச்சம் (சன்மார்க்க அறிவு)
2. அல்லாஹ்வின் அன்பும், சுவனத்தின் மீதுள்ள ஆசையும் (ஈமான்)
3. சகோதரத்துவமும், ஐக்கியமும் (அன்பு)
4. நற்குணங்கள் (பண்பு)
5. நீதிக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு சூழல்
6. நற்சந்ததிகளின் உருவாக்கத்திற்கு உத்தரவாதமளிக்கும் குடும்பக் கட்டமைப்பு
7. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு அதனைத் திட்டமிடும் ஆற்றல்.
8. தூரநோக்கும் வினைத்திறனும் கொண்ட தலைமைத்துவம்.
இவற்றோடு சமுதாயத்தின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாத மற்றுமொரு சக்தி இயற்கை வளங்கள் ஆகும்.
காடு, மலை, தரை, கடல், ஆகாயம் முதல் அணு வரை இந்த வளங்களை அல்லாஹ் இயற்கையின் மடியில் கொட்டி வைத்திருக்கிறான். இந்த வளங்களைப் பயன்படுத்தும் சக்தியை குர்ஆன் தனது மொழியில் இப்படிக் கூறுகிறது:
“நாம் உங்களுக்கு (அனைத்தையும்) வசப்படுத்தித் தந்தோம்”
வசப்படுத்தும் சக்தி அல்லது ஆற்றல் மனிதனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. மனிதன் தனது அறிவின் துணை கொண்டு இவற்றை வயப்படுத்த வேண்டும். இது ஆத்மசக்திக்குப் பிறகு மனித சமூகம் பயன்படுத்த வேண்டிய அடுத்த சக்தியாகும். விஞ்ஞானம் இந்த சக்தியை மனிதனுக்கு வழங்குகிறது.
வசப்படுத்தும் இந்த ஆற்றல் அல்லது சக்தி காரணமாக உலகில் மற்றுமொரு சக்தி கிடைக்கப் பெறுகிறது.
ஆட்சி, அதிகாரம், செல்வம், ஆயுதம், தொழில்நுட்பம் முதலியவற்றை அத்தகைய சக்திகளாகக் குறிப்பிடலாம்.
இந்த சக்திகளனைத்தும் ஒன்றிணைந்து மனித சமூகத்தை இயங்கச் செய்யுமாயின் ஒரு சீரான இயக்கத்தை மனித வாழ்வு நிச்சயம் பெற்றுவிடும். ஆனால் முஸ்லிம்களின் சிந்தனையில் இந்த சக்திகள் குறித்து அலட்டிக் கொள்ளாத ஒரு போக்கே தென்படுகிறது. அவர்களுக்கு இத்தகைய சக்திகள் அவசியமில்லை என்ற மனோபாவமும் இவற்றையெல்லாம் மிஞ்சிய சக்தி அல்லாஹ்விடம் இருக்கிறது. அவன் எங்களோடு இருக்கிறான் என்ற நினைப்புத்தான் இருக்கிறது.
அல்லாஹ் எங்களோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அவனோடு இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. அல்லாஹ் எங்களோடு இருக்கிறான், அவன் எங்களது பிடரி நரம்பை விட எமக்குச் சமீபமாக இருக்கிறான், நாம் செய்பவைகளைப் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறான் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. அவன் எங்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிமான, முஸ்லிமல்லாத அவனது அடியார்கள் அனைவருக்கும் அவன் சமீபமாகவே இருக்கிறான். அவனது பார்வைக்குப்படாமல் ஓர் இலை கூட விழுவதில்லை.
இது அல்லாஹ்வின் வல்லமையும், ஆற்றலுமாகும். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்த வல்லமையைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வல்லமையை அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் பயனளிக்கும் விதமாக மட்டுமே பயன்படுத்துவதாகப் பலர் நினைப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ் தனது வல்லமையையும், ஆற்றலையும் முஸ்லிம்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த மாட்டான் என்பது இதன் பொருளல்ல. ஆனால் அதற்குரிய நிபந்தனைகளை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.
நிபந்தனைகளுள் ஒன்று, முஸ்லிம்கள் தமக்குத் தேவையான பலங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டுவதாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோல் ஆத்ம பலம், அறிவுப் பலம், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் வல்லமை, ஒரணியாக நின்று ஓர் இலக்கை நோக்கி நகரும் ஒற்றுமைப் பலம் போன்ற பல்வேறு பலங்களை அல்லாஹ் தந்திருக்கிறான். இவற்றைப் பெற முயற்சிக்காமல் இனாமாக அல்லாஹ்வின் உதவியைப் பெற முயற்சிப்பது மடமை.
“அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களது எதிரிகளையும் அச்சம் கொள்ளச் செய்யுமளவு பலத்தைத் தயார்செய்யுங்கள்” (8:60) என குர்ஆன் கூறுகிறது.
நிபந்தனைகளுள் மற்றுமொன்று, உலகில் தீமைகளையும், அநீதிகளையும் அகற்றி நன்மைகளையும் நீதியையும் வாழ வைப்பதாகும்.
“உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக் கப்படுவதற்கு முன்பாக நன்மைகளை ஏவித் தீமைகளைத் தடுக்கும் பணியில் ஈடுபடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படாது போனால் அல்லாஹ்வின் உதவியைக் கோரும் எங்களது பிரார்த்தனைகள் என்னவாகும்?
மற்றுமொரு நிபந்தனை, ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் சமூகம் கட்டுக்கோப்பாகவும், அமைப்புரீதியாகவும் செயற்பட வேண்டும் என்பதாகும். “அல்லாஹ்வின் கரம் கூட்டமைப்புடனேயே இருக்கிறது” எனும் நபிமொழி, சிதறிய சக்திகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டும் வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது.
“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிசெய்வீர்களானால், அவன் உங்களுக்கு உதவிசெய்து உங்களது பாதங்களையும் ஸ்திரப்படுத்தி வைப்பான்” (47:7) எனும் அல்குர்ஆன் வசனம் இன்னுமொரு நிபந்தனையை விளக்குகிறது.
இந்த வசனம் கூறும் உதவிக்கான நிபந்தனை என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பலர் நினைப்பது போல முஸ்லிம்கள் தங்களது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளும் முயற்சிகள் அல்லாஹ்வுக்கு செய்யும் உதவி அல்ல. தொழுது, நோன்பு நோற்று, அல்குர்ஆனையும் ஓதி தனது ஈமானைப் பாதுகாப்பதற்காக ஒரு முஸ்லிம் மேற்கொள்ளும் முயற்சிகளை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
குர்ஆனில் ஒரு சாராரைக் குறிப்பிட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
“(நபியே!) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக் காட்டுகிறார்கள். அவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தை தழுவியதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக் காட்டாதீர்கள். மாறாக, ஈமானுக்கான வழி காட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ் தான் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கிறான்.” (49:17)
தனிப்பட்ட ரீதியில் தமது மறுமை வாழ்வுக்காகச் செய்துகொண்டிருக்கும் நற்கருமங்கள் சிலவற்றை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும் அல்லாஹ்வுடைய தீனுக்கும் செய்யும் உதவியாகக் கருதுவோருக்கு இந்த அல்குர்ஆன் வசனம் மறுப்புரை வழங்குகிறது. தனது மறுமை நலனுக்காக மட்டு மல்ல, பிறிதொருவரின் மறுமை நலனுக்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்வதும் கூட அல்லாஹ்வுடைய தீனுக்குச் செய்யும் உதவியாகக் கருதப்பட முடியாது.
எனவே, அல்லாஹ்வுடைய தீனுக்கு அல்லது அல்லாஹ்வுக்கு செய்யும் உதவி எது? என்ற வினா இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வினாவுக்கு விடைகாண நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை. நபிகளாரின் வாழ்க்கையில் விடையிருக்கிறது.
மக்காவிலும், தாயிபிலும் 13 வருடங்களாக நபிகளார் அல்லாஹ்வின் தீனுக்குத் தேவையான உதவிகளைத் தேடினார்கள். கிடைக்கவில்லை. நபிகளார் எதிர்பார்த்த உதவி 13 வருடங்களின் பின் மதீனாவிலேயே கிடைத்தது. அதனால்தான் மதீனா வாசிகள் “அன்ஸார்கள் (உதவியாளர்கள்) எனும் பெயரைப் பெற்றார்கள். அவர்கள் செய்த உதவி, இஸ்லாமிய வாழ்க்கை முறையை அமைப்பு ரீதியாக (தனிப்பட்ட ரீதியில் மட்டுமல்ல) கட்டியெழுப்பி அதனை உலகத்திற்குரிய வாழ்க்கைநெறியாக மாற்றுவதற்கு தங்களை முற்றாக அர்ப்பணித்தமையே.
இத்தகைய உதவியை அல்லாஹ்வுக்கு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வான் என்பதே 47:7ம் வசனத்தின் பொருளாகும்.
இத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றினால் அல்லாஹ் முஸ்லிம்களோடு இருப்பான் என்பதில் சந்தேகமில்லை. இவற்றுள் ஒன்றையேனும் அலட்டிக் கொள்ளாமல், உண்பதும் உறங்குவதும், பொருள் தேடுவதும், இனத்தைப் பெருக்குவதும்தான் வாழ்க்கை என்றிருப்பவர்களோடு அல்லாஹ் எங்கனம் இருப்பான்? அவ்வாறாயின் அவன் இனவாதியாக இருக்க வேண்டும். மஆதல்லாஹ், அல்லாஹ் தூய்மையானவன். முஸ்லிம் சமூகம் இனவாதியாக அன்றி இலட்சியவாதியாக மாற வேண்டும். எமது சமூகத்தில் மேற்கொள்ளப்படும் தஃவாப் பணிகள் இத்தகைய மாற்றங்களை அடைவதற்கு வழிகாட்ட வேண்டும். தஃவாவில் ஈடுபடுவோர் சிந்திப்பார்களாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/