Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அரபுமொழிப் பற்று தவறா?

Posted on June 10, 2013 by admin

அரபுமொழிப் பற்று தவறா?

அல்லாஹ் குர்ஆனில் சிந்தித்து உணரும்படி வலியுறுத்துகிறான். அவ்வகையில், குர்ஆன் அருளப்பட்டது அரபி மொழியில், அதன் வசனங்களை நமது ஐவேளை தொழுகைகளில் அன்றாடம் அதே அரபி மொழியில்தான் ஓதி வருகிறோம்.

ஆனால் உலகில் உள்ள முஸ்லிம்களில் 70 சதவிகிதம் பேர் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. இவர்கள் குர்ஆனுடைய விளக்கங்களை தங்களது மொழிபெயர்ப்புகளிலிருந்துதான் விளங்கிக் கொள்கின்றனர்.

அப்படி இருக்க பொருள் உணர்ந்து அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டிய தருணமான தொழுகையில் அரபியில்தான் ஓத வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது ஏதோ அரபு மொழிப்பற்றை வளர்ப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியமாகவே தெரிகிறது. இது சரியானதுதானா என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

இது போன்றே பலரும் சிந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதில் சில முக்கியமான விஷயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் அரபியில் ஓதுவதற்கான காரணங்கள் :

1 – எது இறை வணக்கம் என்று இறைத்தூதரால் காட்டிக் கொடுக்கப்பட்டதோ அதை மொழிமாற்றம் செய்யவோ அல்லது அதே மொழியில் வேறு சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளவோ இறைத்தூதர் அனுமதிக்கவில்லை என்பது முதலாவது காரணம்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தோழருக்கு இரவில் பிரார்த்திப்பதற்காக ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் ‘வநபிய்யிக அல்லதி அர்ஸல்த’ (உன்னால் அனுப்பப்பட்ட நபியையும் (நம்புகிறேன்) என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அந்த நபித்தோழர் அந்தப் பிரார்த்தனையை மனனம் செய்துக் கொண்டு வந்து இறைத் தூதரிடம் ஒப்புவித்து சரிபார்க்கிறார். அப்போது ‘வநபிய்யிக அல்லதி அர்ஸல்த’ என்று இறைத்தூதர் கற்றுக் கொடுத்த அந்த வார்த்தையை மாற்றி ‘வரஸூலிக அல்லதி அர்ஸல்த’ என்று மனனம் செய்து வந்தார்.

‘நபிய்யிக’ ‘ரஸூலிக்க’ ஒரேயொரு பதம் மாறுகிறது. ஆனால் இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான். ‘நபிய்யிக’ ‘உனது நபியை’ – ‘ரஸூலிக்க’ ‘உனது தூதரை’. நபியாகவும் – ரஸூலாகவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருக்கும் போதும் ‘நபிய்யிக’ என்றுக் கற்றுக் கொடுத்ததை ‘ரஸூலிக்க’ என்று மாற்றிக் கொண்டு வந்ததை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ‘நான் கற்றுக் கொடுத்தது போன்று ‘நபிய்யிக’ என்றே சொல்’ என்று திருத்தம் செய்கிறார்கள். (இந்த சம்பவம் புகாரியின் ஆரம்பத்திலேயே இடம் பெறுகிறது)

நபி – ரஸூல் இரண்டும் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும், ஒரே மொழியில் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும் கூட முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது என்று அவர்கள் விளக்கியுள்ளதால் ‘அவர்கள் எதையெல்லாம் வணக்கமாக – பிரார்த்தனைகளாக சொல்லிக் கொடுத்தார்களோ அவற்றில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது.

தொழுகை என்பது இறை வணக்கமாகும். அதில் இறைத்தூதர் அரபியில் தான் ஓதியுள்ளார்கள். அரபியில் தான் ஓத வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள் என்பதால் அரபியில் ஓதுவது தான் சரியாகும். இதை அரபி மொழிப் பற்று என்பதை விட இறைத்தூதர் மீதான விசுவாசமும் அவர்களை முழுவதுமாகப் பின்பற்றுவதற்கான அடையாளமுமாகும் என்பதே சரியாகும்.

ஒருவேளை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபியல்லாத வேற்று மொழியில் வந்திருந்தால் அப்போது யாரும் அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அவர்கள் எந்த மொழியில் வந்தார்களோ அந்த மொழியில் தான் வணக்கங்கள் நடக்கும். இதிலிருந்து மொழியை விட இறைத்தூதருக்கு தான் முக்கியத்துவம் என்பதை விளங்குவீர்கள்.

அரபி மொழிப் பற்று தவறா..?

அரபு மொழியின் மீதான விசுவாசமே அவ்வாறு செய்ய சொல்கிறது அல்லது செய்யும் படி தூண்டப்படுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் அதுவும் அவசியம் தான் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மொழி எந்த அளவிற்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நீண்ட ஆயுளைப் பெறும். தமிழ் என்ற மொழி பேச்சு வழக்கிலாவது இருப்பதால் தான் அதனால் இரண்டாயிரம் வருடங்களாக தாக்குபிடிக்க முடிகிறது. ஆனால் சமஸ்கிரத மொழியின் நிலை என்ன? வேதங்கள் அந்த மொழியில் இருந்தும் அது நடைமுறைப் படுத்தப்படாமலாகி விட்டதால் மக்களிடமிருந்து அந்த மொழி விடைப் பெற்றுக் கொண்டதோடு வேதங்களின் கருத்துக்களும் முடக்கப்பட்டு விட்டன.

குர்ஆன் என்பது இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வேதமாகும். இதற்கு முன் வெளிபட்ட தவ்ராத் – இன்ஜில் போன்ற (இன்றைக்கு கிறிஸ்த்துவர்கள் வைத்திருக்கும் பழைய – புதிய ஏற்பாடுகளுக்கும் நபிமார்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் – இன்ஜில் ஆகியவற்றிற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை) வேதங்கள் காலாவதியாகி மக்களிடமிருந்து மறைந்துப் போனதற்கு அந்த வேதங்கள் இறங்கிய மொழிகளும் காரணமாகும். படிப்படியாக அந்த மொழிகள் வழக்கொழிந்துப் போனதால் அவற்றோடு வேதங்களும் சென்று விட்டன.

குர்ஆன் என்பது இறுதி நாள் வரை நீடிக்க வேண்டிய ஒரு வழிகாட்டி என்பதால் அது இறங்கிய மொழியான அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும். அதை பாதுகாக்கும் வழிகளில் ஒன்று தான் தொழுகையில் அது இறங்கிய அதே வடிவில் அதே மொழியில் ஓதுவதாகும். அந்த வகையில் அரபு மொழிப் பற்று அவசியமாகின்றது.

இன்னும் கூடுதல் பற்று வேண்டும்.

ஆங்கிலம் மிக சமீபத்திய மொழியாகும். அது இன்றைய உலகை ஆளுமைப் புரிவதற்கு காரணங்கள் இரண்டு.
அந்த மொழியைப் பரப்புவதற்காக அந்த மொழிப் பேசக் கூடிய நாட்டவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி. அதற்கான அயராத உழைப்பு. அந்த முயற்சியும் உழைப்பும் தான் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாயுது காதினிலே’ என்று மொழிப் பெருமைப் பேசும் நம் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் ‘அம்மா அப்பா’ என்று கற்றுக் கொள்வதற்கு முன் ‘மாம் – டாட்’ என்பதை சொல்லி சந்தோஷப்படுகிறது.

மொழி நாகரீகம் என்பதே ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரியாதவன் நாகரீகக் குறைவு உடையவன்தான் என்ற மனநிலை உலகெங்கும் வியாபித்துப் போய்விட்டது. எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விரிந்துப் போயுள்ள மனித அறிவின் எல்லைகள் அனைத்தும் ஆங்கில மொழியின் உள்ளே தான் புதைந்துக் கிடக்கின்றன.

எந்த நாட்டு எழுத்தாளராக இருந்தாலும் அவரது ஆக்கம் உலக அளவில் போக வேண்டும் என்றால் அது ஆங்கிலத்தில் இருந்தாக வேண்டும். புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் தனது படைப்புகளை இந்திய மொழிகளில் கொடுத்திருந்தால் இத்துனை சீக்கிரம் அவருக்கு ‘புக்கர்’ விருது கிடைத்திருக்குமா..?

ஒருவன் ஆங்கிலம் பேசும் போது ‘இவனுக்கு ஆங்கிலப் பற்று, ஆங்கில வெறி’ என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு அந்த மொழி உலகின் இயல்பான வாழ்க்கைத் தரத்தைப் பெற்று விட்டது.

ஆங்கிலம் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கு எத்தகையக் காரியத்தையும் செய்யத் தயங்குவதேக் கிடையாது. அதாவது பிற மொழி வார்த்தைகளை தன்னோடு இணைத்துக் கொண்டு தன் பெயரை அதற்கு சூட்டிவிடுவதற்கு ஆங்கிலம் என்றைக்கும் வெட்கப்படுவதேக் கிடையாது. இன்றைக்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கும் அனேக ஆங்கில வார்த்தைகள் உண்மையில் அந்த மொழியின் வார்த்தைகளல்ல. பிற மொழிகளிலுள்ளவற்றை ஐக்கியப் படுத்திக் கொண்டதுதான்.

எந்த அளவிற்கு ஆங்கிலம் உலகை ஆதிக்கம் புரிகிறதோ அதை விட அதிகமாக இன்னும் முன்னேயே அரபி மொழி உலகை ஆதிக்கம் புரிந்திருக்க வேண்டும். காரணம் ஆங்கிலம் வெறும் மொழியாக மட்டுமே இருப்பது போன்று அரபு வெறும் மொழி மட்டுமல்ல அந்த மொழியில் மிகத் தெளிவான அர்த்தமுள்ள வாழ்க்கையொன்று புதைந்துக் கிடக்கின்றது.

குர்ஆன் வெளிப்பட்ட நாள் முதல் அதற்கு நிகராக உலகில் ஒரு வேதம் இல்லை. வருவதற்கும் வாய்ப்பில்லை என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் முஸ்லிம்களில் போதிய அளவு செல்வமும் நிறைந்த வாழ்க்கைத் தரமும் அதிகப்படியான நிலப்பரப்புகளையும் கொண்டவர்கள் அரபிகள். இருந்தும் அவர்களால் அரபியை ஓர் உலக மொழியாக ஆக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கும் நிலவரம் இதுதான்.

ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பாவது இம் முயற்சியில் அவர்கள் இறங்கி இருந்தால் இன்றைக்கு நீங்களும் நாமும் அரபி மொழியை முழுமையாக கற்றுக் கொண்டிருப்போம். அந்த மொழி நம்மிடையே பேச்சு வழக்கு மொழியாகி – தாய் மொழியின் இயல்பைப் பெற்றிருக்கும். அரபு மொழி ஆரம்பப் பள்ளியிலிருந்து மேற்படிப்பு வரை பாட திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தால் இந்தியா போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கும்.
அரபு, மத மொழியாக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மொழிக்கும் மத சாயம் பூசுவது முட்டாள்தனமானது என்பதை அறிவாளிகள் உலகில் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த மதத்திற்கும் எந்த மொழியும் சொந்தமில்லாத நிலையிலும் அரபு மொழிக்கும் – உருது மொழிக்கும் மத சாயம் பூசும் நிலை உருவாகி விட்டது. (உருது பற்றி நாம் இங்கு விவாதிக்க வேண்டாம்).

அரபி, பள்ளிப் பாடத்திட்டங்களில் இல்லாததால் அந்த மொழியை போதிப்பதற்கும் அந்த மொழியில் உள்ள இஸ்லாமிய கருத்துக்களை போதிப்பதற்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்கள் துவங்கப்பட்டன.

தேசிய ஒருங்கிணைப்பு – நல்லக் கல்வித்திட்டம் – எதிர்கால வளர்ச்சி – போதிக்கும் முறைகளில் சீர்திருத்தம் என்று எது ஒன்றுமே அரபு மதரஸாக்களில் இல்லாததால் அவை மக்களிடம் எடுபடாமல் போய் விட்டன. (பாட திட்டங்களிலும் போதிக்கும் முறைகளிலும் மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கல்வியாளர்கள் உரத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் பழமை வாதிகளில் காதுகளில் அவை விழுவதேயில்லை).

அரபு ஒரு மதத்தின் மொழி என்ற நிலையைப் பெற்று விட்டதால் தான் அதில் உள்ள வார்த்தையைக் கூட மற்றவர்கள் தங்கள் வாய்களால் உச்சரிக்க மறுக்கிறார்கள். தமிழில் உள்ள ‘வணக்கம்’ என்ற வார்த்தையையும், சமஸ்கிரதத்திலுள்ள ‘நமஸ்காரம்’ என்ற வார்த்தையையும், ஆங்கிலத்திலுள்ள ‘குட்மார்னிங்’ என்ற வார்த்தையும் மரியாதைக்குரிய – வாழ்த்துக்குரிய வார்த்தைகளாக பார்ப்பவர்கள், அங்கீகரிப்பவர்கள் அரபு மொழியிலுள்ள ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்ற வாழ்த்து வார்த்தையை மட்டும் வாழ்த்தாக பார்க்காமல் ஒரு மத வார்த்தைப் போன்று, மத திணிப்புப் போன்று பார்க்கிறார்கள்.

அரபு நாடுகளில் வந்து பணம் சம்பாதித்து நல்ல நிலையிலிருக்கும் அன்னிய நாட்டு பிற மதத்தவர்களில் சிலர் திட்டமிட்டே அஸ்ஸலாமு அலைக்கும் போன்ற பொதுவான வார்த்தைகளை புறக்கணிப்பதை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

அரட்டை அரங்கத்தில் ஒரு முஸ்லிம் சலாத்தின் வழியாக ‘விசு’விற்கு வாழ்த்து சொல்லும் போது விசுக்கென்று அவர் அதை மறுத்த விதத்தை நாம் மறக்க முடியாது. காரணம் அதை ஒரு மத வாழ்த்தாக அவர் நினைத்துக் கொண்டிருப்பதுதான்.
இந் நிலைக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

அதை ஒரு மொழியாக மட்டுமே உலகம் பார்க்க வேண்டுமானால் தொழுகைப் போன்ற வணக்கங்களில் மட்டுமின்றி பொதுவாழ்க்கையிலும் அரபு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இது நம்மைப் பொருத்தவரை மிகக் கடினமான பணிதான் என்றாலும் அந்த சிந்தனையையாவது மக்களிடம் கொண்டு செல்வோம்.

நம் தேவைகளை இறைவனிடம் முறையிடும் போது நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் பிரார்த்தித்துக் கொள்ளலாம் அதற்கு தடையொன்றும் இல்லை.

source: http://tamilmuslimway.blogspot.in/2011/03/blog-post_6132.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb