அடிமை (உலக) அழகிகள்!
(முதலாளித்துவத்தின் அகோர பசிக்கு இரையாக ஆண்டுதோரும் எஜமானிய விசுவாசமிக்க நாடுகளில் ஒன்று கூடும் உலக அழகிகள் பற்றி – அதன் நோக்கம் பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை)
உலக வர்த்தக சந்தையில் தட்டுப்பாடற்ற பொருளாகவும், நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் கவர்ச்சிப் பொருளாகவும் பெண் மாற்றப்பட்டு வருகிறாள். நல்ல வருமான உத்தியின் குறியீடாக ஆரம்பக் காலம் தொட்டே கருதப்பட்டு வருபவள் பெண்.
நில பிரபுகள் – பண்ணையார்கள் காலம் தொட்டு இன்றைய உலக மயமாக்கள் சிந்தனை வரை மாறா வருமான நியதியுடன் பல்லிளித்து நிற்பவள் பெண் தான். காலகட்டங்கள் – யுகங்கள் மாறினாலும் முதலாளித்துவ சிந்தனைவாதிகளின் மனநிலை மட்டும் மாறுவதேயில்லை.
அந்தபுரத்தை அலங்கரித்தல், வித – விதமான உடை, முடி அலங்காரங்களுடன் விருந்தினருக்கு மத்தியில் ஆடி அசர வைத்தல் என்று நில பிரபுகளின் காலத்தில் துவங்கிய அழகிப் போட்டி தன் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் விரிவாக்கிக் கொண்டுள்ளது.
உலகமயமாக்களில் அழகிப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. உலகமயமாக்களின் தத்துவம் என்ன? மிக சொற்பமான மக்களிடம் முடங்கிக் கிடக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களை எடுத்து அல்லது சொத்துக்களுக்குறிய வரியை கண்டிப்புடன் பிடுங்கி உலகிற்கு பகிர்ந்தளித்து வறுமையை விரட்டுவதாஸ நிச்சயமாக இல்லை.
தாம் தயாரிக்கும் செயற்கை சாதனங்களை (கார் போன்ற பெரிய பொருளிலிருந்து ஐப்ரோ, ஊக்கு போன்ற அற்ப பொருள்கள் வரை) உலக அளவில் விற்பனை செய்து மேலும் மேலும் பணம் குவிப்பதே உலகமயமாக்களாகும். இந்த விற்பனை உலக அளவில் கலைகட்ட உலக அழகி? தன் உடலால் உதவுகிறாள்.
உலக அழகிப் போட்டி பல கோடி முதலீட்டில் ஏழை பணக்கார நாடு என்ற வித்தியாசமில்லாமல் நடத்தப்படுவதற்கு பெண்களின் புறத்தோற்றமே காரணமாக அமைகிறது.
பெண் பற்றிய பணவாதிகளின் பார்வை கண்ணியத்தை புறக்கணித்து கலைவடிவம் என்ற நிலையில் மட்டுமே நிற்கிறது. உடையின் கண்ணியத்தால் மனிதன் நாகரீகம் பெறும் போது குறிப்பாக பெண்கள் அதை பேண கடமைப்பட்ட நிலையில் அவளை நிர்வாணப்படுத்துவதே கலை வடிவம் என்ற சிந்தனையோட்டம் தான் உலக அழகிப் போட்டி என்ற பெயரில் ஆண்டு தோரும் விழாக்கோலம் பூணுகிறது.
இதனால் பெண்ணுக்கு (அழகிக்கு) கிடைக்கும் லாபம் என்ன? எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்ற வெறியில் (அவர்கள் மொழியில் லட்சியம்) தம் உடலை வருத்தி, உணவை கட்டுப்படுத்தி, முகப் பூச்சுக்களில் மூழ்கி நவீன? எடுப்பான துண்டு துணிகளை உடுத்திக் கொண்டு (அவளை முழுமையாக ரசிக்கும் விதத்தில் ஆண்கள் தான் இந்த துண்டு துணிகளை ஆடை என்ற பெயரில் வடிவமைக்கிறார்கள்) மேடையேறுகிறாள். தோற்றுப்போனால் அடுத்த சுற்றுக்கான வெறி (லட்சியம்) இன்னும் அதிகமாகிறது. ஜெயித்து விட்டால் இப்போட்டியை நடத்திய கம்பெனியிடம் அவள் அடிமையாக்கப்படுகிறாள்.
போட்டியில் ஜெயிப்பவர்கள் அதை நடத்தும் கம்பெணிக்கு ஓராண்டு மாடலிங்காக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இந்த ஓராண்டிற்கு அந்த உடல் அழகி அந்த கம்பெணிக்கு அடிமையாக இருப்பாள். அந்த தருணங்களில் அவள் உடல் எடைக் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எடை கூடினால் அழகி பட்டமும், ஒப்பந்தமும் ரத்தாகும். இந்த கம்பெனி எதற்கெல்லாம் விளம்பர போஸ் கொடுக்க சொல்கிறதோ அதற்கு அப்படியே கட்டுப்பட வேண்டும். மறுப்புப் பேசக் கூடாது.
தனது அனுபவத்தை பிலிப்பைன் அழகி நெலியா சாங்கோ இப்படி கூறுகிறார் ” நான் போட்டியில் ஜெயித்தப் பிறகு பல ஊர்;கள் சென்றுள்ளேன். என்னோடு பேச ஆளில்லை. பார்த்து சிரிப்பார்கள் அவ்வளவுதான். என்னை மூளையுள்ள மனுஷியாக யாரும் எங்கும் மதிக்கவே இல்லை. அறையை அலங்கரிக்கும் பொம்மையாகவே நான் விருந்துகளில் பயன்படுத்தப்பட்டேன். ஏதாவது ஒரு பண்டத்தை கையில் பிடித்துக் கொண்டு போஸ் கொடுப்பது தான் என்வேலை” (இவர் தற்போது ஆசிய பெண்களின் மனித உரிமைக்கு அமைப்பாளராக இருக்கிறார்)
அழகிப் போட்டியில் பெண்ணுக்கு கிடைப்பது இதுதான். போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் நிலை இதுவென்றால் இந்த கந்தல் கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்காமல் செயற்கை கோல் வழியாக கண்டு அனுபவித்து மகிழ்பவர்களின் (பரவலாக இளம் பெண்களின்) மனநிலை வேறு விதமாக திருப்பப்படுகிறது. சிவப்பு அழகுக்காக புதிய புதிய கிரிம்களை நாடி அலைந்து சருமத்தை கெடுத்துக் கொள்ளும் நிலையும், ஒள்ளியாக வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்து தன்னை அழித்துக் கொள்ளும் நிலையும் இவர்களிடம் பரவி வருகிறது.
சிறிய இடுப்பு, பெரிய மார்பகங்கள், கூரான மூக்கு, குழி விழும் கண்ணங்கள் என்று தேவையில்லா அறுவை சிகிட்சைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் போக்கும் தொடர்கிறது. புதிய புதிய கிளீனிக்குகளும், பியூட்டி பார்களும் இதையே மூலதனமாக வைத்து பணத்தை உருஞ்சுகின்றன.
அழகிப் போட்டி என்ற இந்த தொற்று நோயின் வேகம் மாநிலம் மாவட்டம் கல்லூரிகள் என்று படுவேகமாக பரவி இப்போது ஆரம்ப பள்ளிகளின் பிஞ்சு உள்ளங்களைக் கூட ஆக்ரமித்து நிற்கிறது. மேலை நாடுகளில் சிறுமிகளுக்கான அழகிப் போட்டிகள் களம் காண துவங்கி விட்டன. பிஞ்சுகளின் உள்ளத்தில் இப்போதே பணம் – புகழ் என்ற போதை ஊட்டப்படுகின்றன எதிர்கால சமுதாய மாற்றங்களில் இவர்களின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை கணிக்க (சாயம் பூசப்பட்ட குழந்தைகள்) என்ற குறும்படம் உதவுகிறது.
தம் வயிற்றில் பிறந்த பிஞ்சுக் குமரிகளின் உடலை பண முதலைகளின் பார்வைக்கு விற்க பெற்றவர்களே அவளை அழகியாக தயார் படுத்துகிறார்கள். அந்த குழந்தைகளில் ஒருத்தியின் பெயர் ஆசியா. பெற்றோர்கள் கிம் மான்சூர் – ஃபூ மான்சூர்.
பேட்டியாளர் குழந்தையை அணுகி ‘ நீ எதற்காக போட்டியில் கலந்துக் கொள்கிறாய்? எதிர்கால திட்டம் என்ன? என்கிறார். அந்த குழந்தை சற்றும் சளைக்காமல் ‘பெரிய பங்களா வேணும், கார் வேணும், பணம் வேணும் அவ்வளவுதான்’ என்று பதில் கூறுகிறது.
குழந்தைகளுக்கு இதுதானே தெரியும்! இதை எப்படி குறை என்று சொல்லமுடியும் என்று நியாயப் படுத்த முடியாது. இதே வெறியில் அவள் வளர்க்கப்படுவாள். பின்னாளில் தன் அழகை விற்பனை செய்து பணம் குவிப்பாள். இன்றைய அடிமை அழகிகளைப் போல் மேல் தட்டுக்காரர்களால் சிறைப் பிடிக்கப்படுவாள். இதை தவிர இவர்களால் உலக மாற்றத்திற்கு வேறு எந்த பங்களிப்பையும் செய்து விட முடியாது.
இந்திய பிஞ்சுக் குழந்தைகளின் அழகை வடிவமைக்க அவதார தேவதைகளாகிறார்கள் சுஸ்மிதா சென்களும் – ஐஸ்வர்யா ராய்களும் – பிரியங்காகளும் – யுக்தா முகிகளும்.
பெண்ணியம் பற்றியும், பெண் விடுதலைப் பற்றியும் ஓங்கி குரல் ஒலிக்கும் அதே வேளையில் அவளது ஆத்மா, அறிவு, படிப்பு, ஆற்றல் என்று எதையும் முன்னிலைப்படுத்தாமல் அவளது அழகையும் – வடிவத்தையும் உலக சந்தையில் விற்பனை செய்து பணம் குவிக்கும் கேடுகெட்ட தன்மை எவருக்கும் அஞ்சாமல் தன் வக்கிரத்தை மறுபுரம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
அழகுள்ள பெண்களுக்கே மதிப்பு என்ற மனநிலை உருவாக்கப்படும் போது வடிவத்தால் அழகு குறைந்தவர்கள் அல்லது தம் அழகை மெருகூட்ட பொருளாதார வசதி இல்லாதவர்கள் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள். வரதட்சணை போன்ற கொடிய குற்றங்கள் பெருகுவதற்கு இது கூட காரணமாக அமைந்து விடுகின்றன.
இந்த நோய் தாம் சார்ந்த பெண் இனத்திற்கு பெரும் கேட்டை விளைவிப்பதை அறியாமல் அல்லது அறிந்து நடப்புகால வருமானத்தை கருதி சில பெண்கள் இதற்கு பலியாகிறார்கள். மாடலிங் என்ற பெயரில் சீரழிவு நாகரீகத்தை பரப்ப தன்னை மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.
பெண்கள் பற்றிய இப் பார்வை மாற வேண்டும். பெண் அழகாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்த அழகை மட்டுமே அளவு கோலாக வைத்து அவளை மதிப்பீடு செய்யும் போக்கு தான் மிக்க தவறானது. பெண்ணிய மதிப்பீடுகளுக்கு அழகை மட்டுமே காரணியாக்குவது மீண்டும் அவளை கற்காலத்திற்கு எடுத்துச் செல்லும் பிற்போக்குத் தனமான முயற்சியாகும். பெண்கள் பற்றிய மேற்கத்திய நாடுகளின் பார்வை எப்பொழுதுமே கீழ்தரமானதாகத்தான் இருந்து வந்துள்ளது. அதை பாதுகாத்துக் கொள்ளவே அவர்கள் அழகிப் போட்டி என்ற முகமூடி அணிந்துக் கொள்கிறார்கள்.
எது அழகு – யார் தீர்மாணிப்பது என்பதை நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கோடான கோடி பெண்கள் வாழும் இப்பூவுலகில் ஒரு ஐம்பது, அறுபது பெண்கள் போட்டியில் பங்கேற்க எவரோ பத்துப் பேரால் தேர்வு செய்யப்பட்ட பெண்தான் உலக அழகி என்றால் மற்றப் பெண்களெல்லாம் அழகற்ற குரூபிகளா…?!
அழகி என்ற பெயரில் அடிமையாக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு கிரீடம் சூட்டி – கேமராக்கள் கிளிக் செய்து பத்திரிக்கைகளில் விதவிதமாக புகைப்படங்கள் வந்தவுடன் மற்ற கோடான கோடி பெண்களெல்லாம் இவளை – இவளை மட்டும் – உலக அழகி என்று ஒப்புக் கொள்ள வேண்டுமாஸ? இந்த கேலி கூத்துக்குத்தான் வக்காலத்து வாங்குகிறது சில வியாபார நிறுவனங்கள். உலக அழகிப் போட்டியை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.
பாசத்தோடு தலையை வருடும் தாயும், கொஞ்சி நெஞ்சில் சாயும் மனைவியும், கலங்கமற்று சிரிக்கும் பொக்கை வாய் கிழவிகளும் அழகற்றவர்களாஸ பாசம் ததும்பி பணிவிடை செய்த அன்னை தெரஸாவின் அழகிற்கு என்ன குறைச்சல்?
பெண்களின் உண்மையான அழகு என்பது தூர நோக்கோடு பெண்கள் மேற்கொள்ளும் குடும்ப, சமூக வளர்ச்சியிலும் அது சார்ந்த கொள்கையிலும் தான் இருக்கிறது. இந்த சிந்தனை மேலோங்கினால் பியூட்டி பார்களுக்கு பதிலாக சமூக சேவை இல்லங்களும் குடும்ப அமைப்புகளும் பெருகும்..
‘எங்கள் அழகை எதாவது ஒரு நிறுவனத்திடம் அடிமைப்படுத்திக் கொள்வோம் அது எங்கள் உரிமை’ என்று வரட்டு சித்தாந்தம் பேசும் பெண்ணின சிவப்பு வடுக்களை ஒதுக்கி விட்டு அந்த கந்தல் கலாச்சாரத்திற்கு தயாராகும் – ஆதரவளிக்கும் இதர பெண்கள் மீது அக்கறை செலுத்துவது காலத்தின் அவசியமாகும்.
உலக மயமாக்கள் என்ற மேல் தட்டு பணவாதிகளின் கன்னியில் தள்ளுவதற்கு இன்றே தம் பிஞ்சு குழந்தைகளை தயார் படுத்தும் பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
மேல் தட்டு எஜமானர்களும் அதே சிந்தனையைப் பயின்ற பிற நாட்டு எஜமானர்களும் அழகை ஆராதிக்கத்தான் செய்வார்கள். இந்த ஆராதனை அழகை அடிமைப்படுத்திக் கொள்ளத் தான் தூண்டும். இதற்கு வடிகால் அமைத்துக் கொடுப்பதுதான் இந்த உலக அழகிப் போட்டி. ஒட்டுமொத்தப் பெண்களும் இதை புறக்கணிக்காதவரை அழகு சுதந்திரமாக பிறந்த அடிமையாக இறந்துக் கொண்டதான் இருக்கும்.
-ஜி என்
source: http://tamilmuslimway.blogspot.in/2011/04/blog-post_7167.html