அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா?
பெரும்பாலான மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள சில பிரச்சனைகளே காரணமாகும்.
சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதிலும் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம்.
இருப்பினும், இத்தகைய நிலைமை ஒருவருக்குகொருவர் மாறுபடும். உதாரணமாக, அதிகமாக தண்ணீர் குடித்தால், அடிக்கடி சிறுநீர் வருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் தண்ணீரே பருகாமல், அடிக்கடி சிறுநீர் வந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல், எதற்காக என்று நிச்சயம் ஆராய வேண்டும்.
ஏனெனில் இவ்வாறு அடிக்கடி சிறுநீர் வெளியேறினால், சிலசமயங்களில் உடலில் ஒருசில நோய்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதுப் போன்று வேறு சில நோய்கள் உடலில் இருந்தாலும், அடிக்கடி சிறுநீரானது வெளியேறும்.
இப்போது எதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
நீரிழிவு
நீரிழிவு நோய் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஏனெனில் உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகமாகி, ஒரு நாளைக்கு 20 முறை சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தம் மற்றும் பயம், சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். பெரும்பாலும் பரீட்சை எழுதும் போது இந்த மாதிரியான உணர்வு ஏற்படும். ஏனென்றால், மனமானது ஒருவித அழுத்தத்துடன் இருக்கும் போது, அதனால் மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
தைராய்டு
உடலில் தைராய்டு இருந்தால், அப்போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால், அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று
சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் வரும். ஆனால் இந்த பிரச்சனை இருந்தால், சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுவதுமாக நிரம்பியிருக்காது, இருப்பினும் ஒருசில துளிகள் மட்டும் எரிச்சலுடன் வெளியேறும்.
சிறுநீரகப் பிரச்சனை
சிறுநீரகத்தில் தான் இரத்தமானது சுத்திகரிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள கெட்ட நீரான சிறுநீரை பிரித்தெடுக்கும். சில நேரங்களில், சிறுநீரகத்தில் நோய்த்தொற்று இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும்.
அதிகமான கால்சியம்
அதிகமான கால்சியம் உடலில் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஏனெனில் உடலில் இருக்கும் அதிகப்படியான கால்சியமானது சிறுநீரகத்தில் தங்குவதால், சிறுநீரகத்தில் தங்கும் சிறுநீரின் அளவு குறைந்து, அடிக்கடி சிறுநீரை வெளியேற்ற நேரிடும்.
நரம்பு பக்கவாதம்
சில நேரங்களில் நரம்பு பக்கவாதத்தினாலும், எல்லையின்றி அடிக்கடி சிறுநீரானது வெளியேறும். ஏனெனில் சிறுநீரகத்துடன் நரம்பு தொடர்புடையதால், பக்கவாதம் ஏற்படும் போது அதிர்வானது அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளிவரும். மேலும் சில சமயங்களில் சிறுநீரப்பையே பாதிப்படையும்.
அதிகப்படியான ஆல்கஹால்
அதிகப்படியாக ஆல்கஹால் பருகினால், அதுவும் பீரை பருகினால் சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஏனெனில் ஆல்கஹால் DNH என்னும் அமிலம் வெளியீட்டின் போது இடையூறை ஏற்படுத்தி, அதனால் அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இறுதி மாதவிடாய் அறிகுறிகள்
இறுதி மாதவிடாயின் போது தான், பெண்களின் உடலிலேயே மிகப் பெரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இதனால் மனநிலை மாறுவதோடு, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும்.
கர்ப்பம்
கருப்பையில் குழந்தையானது வளர்வதால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளியேறுகிறது.