அம்மா பசிக்குது! உங்க பட்டுக்குட்டியின் அழுகைக்குக் காரணம் என்ன?
பிறந்த குழந்தை அழுகிறதா என்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள். அதுதான் இயல்பான நிலையில் குழந்தை இருக்கிறது என்று அர்த்தம். பிறந்ததும் குழந்தை அழுதால்தான் தாயின் முகத்தில் புன்னகை பூக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு குழந்தையின் அழுகையில் அர்த்தம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் அழுகையின் மூலம் தன் உணர்வுகளை தாய்க்கு புரியவைக்கிறது குழந்தை.
o குழந்தையின் அழுகையும் அதற்கு பிரதிபலிக்கும் விதமுமே உங்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் முதலாவது மொழியாகும். எனவே அழும் குழந்தையை சமாதானப்படுத்த தாய் என்னென்னவோ செய்வார். அப்படியும் சமாதானமாகவிட்டால் தவித்துப்போவார் தாய். எந்த சூழ்நிலையில் குழந்தை அழும் என்றும் அதற்கு பெற்றோர் செய்யவேண்டிய நடவடிக்கைகளையும் குழந்தை நல நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படியுங்களேன்.
o சந்தோசம் தரும் முதல் அழுகை தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் ‘குட் சைன்’ என்போம். அதுவரை தொப்புள் கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத் துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்… குழந்தையின் அழுகை. அதனால்தான் எல்லோரும் குழந்தை அழுததா? என்று கேட்பார்கள். இது நார்மலான அழுகை.
o அம்மா பசிக்குது பசி உணர்வு வந்தால் அதை அழுகையின் மூலம்தான் குழந்தை புரியவைக்கும். தாயால் இதை உணர்ந்துகொள்ள முடியும். அழும் குழந்தையை எடுத்து மார்போது அணைத்து பால் புகட்டினால், வயிறு நிறைந்தவுடன் அழுகை அடங்கி குழந்தை தூங்கிவிடும்.
o வயிறு வலிக்குமோஸ. சில குழந்தைகள் பால் குடித்த பின்னும் அழுவார்கள். இதற்குக் காரணம் பால் குடிக்கும் வேகத்தில் குழந்தைகள் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்திருப்பார்கள். இதனால் வயிற்றில் சேரும் காற்றுதான், குழந்தையின் அழுகைக்குக் காரணம். எனவே ஒவ்வொரு முறை குழந்தை பால் குடித்த பின்னும், அதை மெதுவாக தோளில் சாய்த்து, அதன் முதுகில் இதமாக தடவிக் கொடுத்தால், உள்ளே சென்ற காற்று, ஏப்பமாக வெளி வந்து விடும்.
o அம்மா உச்சா போயிட்டேனேஸ சில குழந்தைகள் சிறுநீர் கழித்துவிட்டு உடைகள் ஈரமான உடன் அழத் தொடங்கும். ஆனால் சில குழந்தைகள் புத்திசாலித்தனமாக சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலே அழுது அம்மாவிற்கு புரியவைக்கும். அதேபோல் நம்பர் 2 போகவேண்டும் என்றாலும் குழந்தைகள் அழுது புரியவைப்பார்கள். இதற்கு பயப்படத்தேவையில்லை. நான் யூரின்/ மோஷன் போகவேண்டும். அல்லது போய்விட்டேன்… என்னை கவனியுங்கள், துணியை மாற்றுங்கள்!’ என்பதைத்தான் தன் அழுகையின் மூலம் உணர்த்துகின்றன குழந்தைகள்.
o டிரஸ் இறுக்கமா இருக்கே! குழந்தையின் உடை இறுக்கமாக இருந்தால் அழும். தூக்கத்தில் இருந்து எழும்போது, தன் அருகில் யாரும் இல்லை என்றால், கவனத்தை ஈர்க்க, அழும்.
o பூச்சி கடிச்சிருக்குமோ! குளிக்க வைக்கும்போது காதில் தண்ணீர் போய்விட்டால் அழும். எறும்பு, பூச்சி ஏதும் கடித்தால் அழும். குழந்தையை வண்டியில் வைத்து வெளியில் அழைத்துச் செல்லும்போது, காதில் குளிர்காற்று நுழைந்தால் அழும். எனவே, குழந்தையின் ஒவ்வொரும் அழுகைக்கும் ஒரு காரணம் உண்டு. எனவே அழுகைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, குழந்தையை சமாதானப்படுத்துவது முக்கியம். அதை விடுத்து அதை மேலும் அழவிடுவது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
o மூச்சுவிடாமல் அழும் “இயல்பான அழுகைகள்… நாமே சமாளிக்கக் கூடியவை. ஆனால், அதற்கு மீறிய அழுகைகளும் குழந்தைகளிடம் உண்டு. ‘பிரெத் ஹோல்டிங் க்ரை’ எனப்படும் மூச்சுவிடாமல் குழந்தை அழுவது ஆபத்தானது. சில குழந்தைகள் கேவிக் கேவி அழும்போது சில நொடிகள் மூச்சு நின்று, பின் வரும். அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.
o வலிப்பு நோய் இருக்கலாம் சில குழந்தைகள் பிறந்த 15 – 20 நாட்களில் குழந்தை எப்போதும் மெலிதாக அழுதுகொண்டே இருப்பதை இப்படி அழைப்பார்கள். ஏதேனும் தொற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. சில குழந்தைகள் வீல் வீல் என்று உச்சஸ்தாயில் 10 நிமிடங்கள் வரை அழும் இதனை ‘ஷ்ரில் க்ரை’என்பார்கள். இப்படி அடிக்கடி அழுதால், அதற்கு வலிப்பு நோய் அல்லது மூளை சம்பந்தமான ஏதோ பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம் எடுத்துச் செல்வது முக்கியம். கனத்த குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் குழந்தை அழுவது. இதற்கு, தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது காரணமாக இருக்கலாம். பிறந்த மூன்று மாதங்களுக்குள் இந்த அழுகைகளை இனம் கண்டு சிகிச்சை அளிப்பது முக்கியம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
o பிடிவாத குணம் வளரும் ஏதோ ஒரு காரணத்தினால்தான் குழந்தை அழுகிறது என்று, அழ ஆரம்பித்தவுடன் சென்று சமாதானப் படுத்தும் வீடுகளில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். ‘அழுதா அழு’ என்று விடும்போது, தொடர் அழுகையின் மூலம் அந்தக் குழந்தையின் பிடிவாத குணம் இறுகும். விளைவு, அது அடமன்ட் குழந்தை யாக வளரும் என்கின்றன ஆய்வுகள். எனவே குழந்தை அழத்தொடங்கினால் எந்த வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு அதை முதலில் சமாதானப்படுத்துங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
source: thatstamil.com