Q. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது சட்டமா…?
A. ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக,
”எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர் (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)
இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை. ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா… கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா… அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன.
உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..? மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன? இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும். மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது. மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும், அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும். உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.
وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا
(நபியே!) நீர் கூறுவீராக “இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது” ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அல் குர்ஆன் 18:29)
இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..
ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா – மன்னிப்புக்கோரல் – ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். (அல் குர்ஆன் 3:90)
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில், இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 3:91)
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான். ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் “நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ..” என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.
இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற “ஆழமான ஆய்வற்ற கருத்தால்” இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள். சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில், “இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்” போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.
மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும். அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும். விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள். மாறாக “மதம் மாறியதற்காக” அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை. நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள்.
إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً
எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)
இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்……… இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும்.
நம்பிக்கைக் கொள்கிறார்
பிறகு மறுக்கிறார்
மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
அதையும் மறுத்து வெளியேறுகிறார்
பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. ‘கொல்லப்பட வேண்டும்” என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.
كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். (அல் குர்ஆன் 3:86)
இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம். ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது. ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான். அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால் நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.
இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள “கொல்லப்பட வேண்டும்” என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்.
இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்து விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.
அடுத்த வசனம்.
لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)
மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.
வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.
இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை “நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்” என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து, கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும்.
உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை. நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.
மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் – நயவஞ்சகர்கள் – என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது. இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “கொன்றார்கள்” என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அப்படியானால்,
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..?
மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..?
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது “இது ஒரு முரட்டு மார்க்கம்” என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.
உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை “கொல்லப்பட வேண்டும்” என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் – கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் – ஹதீஸ்களின் பக்கம் திரும்பி “ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது” என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.
ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவிப்பு “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்” என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது.
அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..?
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல. இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது – விதிக்கக் கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.
ابن عباس فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله صلى الله عليه وسلم لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله صلى الله عليه وسلم من
بدل دينه فاقتلوه
ஆன்லைனில் இந்த ஹதீஸை பார்க்க
”எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் – புகாரி)
قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
”அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.
3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (அப்தல்லாஹ் – முஸ்லிம்)
أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان محصن يرجم أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ينفى من الأرض
”மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, நஸயி)
இந்த ஹதீஸின் அரபு மூலம்
மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.
புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.
//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//.
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும். இதை தெளிவாக்கும் விதமாகவே “அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.
நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி.
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.
மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி இருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான்.
நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். “நாடுகடத்தப்பட வேண்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது.
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை – பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளார்கள்.
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلو
قال رسول الله صلى الله عليه وسلم إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும் இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.
குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.
குழப்பம் கொலையைவிட கொடியது.
குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம். குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும், அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.
அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.
– ஜி என்
source: http://tamilmuslimway.blogspot.in/2011/05/blog-post_26.html