அழகுகளின் அனுமதி (குர்ஆன் விளக்கம் 3:14)
(زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاء وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ (3:14)
”பெண்கள், ஆண் மக்கள், பொன்னிலும் வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், குதிரைகள், (ஆடு மாடு போன்ற) கால் நடைகள் சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது இவை(யெல்லம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப் பொருட்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.” (அல்குர்ஆன் 3:14)
மனிதன் இச்சை புத்தி உள்ளவனாகவே படைக்கப்பட்டுள்ளான். அவனது இச்சைக்கு கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது இஸ்லாம். இறைவனின் எதிரியான ஷெய்த்தானின் ஆதிக்கம் மனித மனங்களில் வேரூண்றும் போது இறைவன் வகுத்துள்ள கட்டுப்பாடுகளையும் வரம்பையும் மீறும் காரியத்தை மனிதன் செய்கிறான். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவனை ஊக்கப்படுத்துவதற்காக சிற்சில குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதில் ஒன்றுதான் 3:14வது வசனமாகும்.
பெண்கள் அழகாக்கப்பட்டுள்ளார்கள்.
ஆண்மக்கள் அழகாக்கப்பட்டுள்ளார்கள்.
தங்கம் மற்றும் வெள்ளிக் குவியல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
குதிரைகள், கால்நடைகள் அழகாகக்கப்பட்டுள்ளன.
இவை இவ்வுலக வாழ்வின் சுகப் பொருட்களாகும்.
இவை உலக வாழ்வின் சுகப் பொருட்களாகும் என்று இறைவன் கூறியுள்ளதால் இதில் கட்டுப்பாடுகள் என்பது அவசியமற்றதாகும். எதை இறைவன் சுகப் பொருட்களாகும் என்று கூறி விட்டானோ அவற்றிர்கான அனுமதியும் அந்த வசனத்திலிருந்து கிடைத்து விட்டன என்பது இவர்களின் வாதம்.
இது அறிவுள்ள வாதம் தானா…?
பெண்கள் அழகாக்கப்பட்டுள்ளார்கள் என்பதிலிருந்து தாம் விரும்பும் எந்த பெண்ணையும் மனைவியாக்கிக் கொள்ளலாம் என்ற பொருள் வருகிறது. இந்த முடிவை இந்த வசனத்திலிருந்து எடுத்து எந்தப் பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்ள அனுமதித்து விடலாமா…
யாரை மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது என்று என்று இறைவன் பிற வசனங்களில் கூறுகிறானோ அந்த வசனங்களையெல்லாம் விட்டு விடலாமா…
ஆண் குழந்தைகள் அழகாக்கப்பட்டுள்ளார்கள் என்பதிலிருந்து பெண் குழந்தைகள் எல்லாம் அழகற்றவர்கள் – தேவையற்றவர்கள் – வாழ தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்து விடலாமா…
தங்கம் – வெள்ளிக் குவியல்கள் அழகாக்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து அதன் மீதான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்று எந்த வகையிலும் அவற்றை அனுபவித்துக் கொள்ளலாமா…
குதிரைகள் கால்நடைகள் அழகாக்கப்பட்டுள்ளன என்பதை அப்படியே விளங்கி கால்நடைகள் மீதான தடைகளை தகர்த்து எதை வேண்டுமானாலும் அறுத்து உண்ணும் முடிவுக்கு வந்து விடலாமா..
‘மனிதர்களுக்கு இவை அழகாக்கப்பட்டுள்ளன’ ‘இவை உலக வாழ்வின் அனுமதிப் பொருட்களாகும்’ என்ற வாக்கியங்களை இதே அடிப்படையில் அமைந்த மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் விளங்கினால் இத்தகைய முடிவுக்குத் தான் வர முடியும்.
அழகாக்கப்பட்டுள்ள அனைத்தும் அனுமதிக்கப்பட்டுவிட்டன என்ற பொருளை குர்ஆன் ஒரு இடத்திலும் கொடுக்கவில்லை. அழகாக்கப்பட்டள்ளவைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவைகளும் உண்டு. தடை செய்யப்பட்டவைகளும் உண்டு.
பெண்கள் அழகாக்கப்பட்டுள்ளார்கள் என்பதில் எல்லாப் பெண்களும் அடங்குவர். இவர்களில் திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக்கப்படாதவர்களும் இருக்கிறார்கள். பலக் கடவுள் கொள்கையுள்ளப் பெண்கள், கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள நாத்திகப் பெண்கள், விபச்சாரம் செய்துக் கொண்டிருக்கக் கூடியப் பெண்கள் இவர்களெல்லாம் மற்றப் பெண்களைப் போல் அழகானவர்களாக இருந்தாலும் முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்ல.
கால் நடைகள் அழகாக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றில் உண்ணத் தக்கவையும் உண்டு, உண்ணத் தகாதவையும் உண்டு.
தங்கம் வெள்ளிகள் அழகாக்கப்பட்டிருந்தாலும் அவற்றைப் பயன் படுத்தும் விதத்தில் சிலவற்றிர்க்கு தடை வந்துள்ளது.
ஆண்மக்கள் – விளைச்சல்கள் போன்றவையும் இந்த அடிப்படையைக் கொண்டவைதான்.
மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன என்ற இந்த வசனம் மனிதர்களின் இயல்பான இச்சையையும் ஆசைகளையும் எடுத்துக் காட்டுகிறதே தவிர அவைகள் அனுமதிக்கப்பட்டு விட்டன என்றப் பொருளைத் தரவில்லை.
ஆணுடையப் பார்வைக்கு எந்தப் பெண்ணும் அழகானவள் தான் அவனது இயல்பு பெண்களை விரும்பக் கூடியதாகவே இருக்கிறது. ஆண் குழந்தைகளை விரும்புவது சராசரியாக எல்லோருடைய இயல்புமாகும். மதிப்பு மிக்க தங்கம் மற்றும் வெள்ளி இதர கால்நடைகள் விளைச்சல்கள் இவற்றை விரும்புவதும் இவற்றின் மீது பேராசைக் கொள்வதும் மனிதர்களின் இயல்பாகும். இந்த இயல்பை எடுத்துக் காட்டுவதுதான் அந்த வசனத்துடைய நோக்கமே தவிர இவை அனைத்திற்கும் பொது அனுமதி வழங்குவதல்ல.
திருக்குர்ஆனின் மற்ற வசனங்களிலிருந்து இதை இன்னும் தெளிவாக விளங்கலாம்.
‘ஓரிறை நம்பிக்கையற்றவர்களுக்கு அவர்களின் செயல் அழகாக்கப்பட்டுள்ளது’ (அல் குர்ஆன் 6:122)
அழகாக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் இங்கும் வந்துள்ளதால் ஓரிறை நிராகரிப்பாளர்களின் செயல்கள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்ற பொருளை எந்த சராசரியான முஸ்லிமும் கொடுக்க மாட்டான்.
‘அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன’ (அல் குர்ஆன் 9:37)
மனித மனங்களுக்கு தீய பாவமாக செயல்கள் கூட பல நேரங்களில் அழகாகிவிடும் என்பது தான் இந்த வசனத்தின் பொருள். அழகாக்கப்பட்டு விட்டன என்று வந்து விட்டதால் தீய செயல்கள் அனைத்திற்கும் அனுமதி விட்டது என்று முட்டாள்தனமாக யாரும் விளங்க மாட்டார்கள்.
‘பிர்அவ்னுக்கு அவனது தீய செயல்கள் அழகாக்கப்பட்டன’ (அல் குர்ஆன் 40:37)
‘மறுமையை நம்பாதவர்களுக்கு அவர்களின் செயல்களை அழகாக்கி விட்டோம்’ (அல் குர்ஆன் 27:4)
இப்படி குர்ஆனில் அழகாகக்கப்பட்ட விஷயங்கள் நிறைய வருகின்றன. இங்கெல்லாம் அழகு அனுமதிக்கப்பட்ட பொருளில் தான் வந்துள்ளது என்று நாம் விளங்கினால் அவை எத்தகய மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவையெல்லாம் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்களாகும் என்று அந்த வசனம் முடிகிறது. உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள் என்று இறைவன் கூறுவதால் அனுமதிக்கப்பட்ட அலங்காலப் பொருட்கள் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது.
உங்களுக்கு இவ்வுலகில் கொடுக்கப்பட்டிருப்பவையெல்லாம் இவ்வுலக வாழ்வின் சுகமும் அதனுடைய அலங்காரமும் தான் (அல் குர்ஆன் 28:50) என்று இங்கு இறைவன் கூறுகிறான். ஹராமாக்கப்பட்டவையும் – வீணானவையும் கூட அலங்காரமாக காட்சியளிப்பதையே இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பெண்கள் – பொற்குவியல்கள் – ஆண்மக்கள் – கால்நடைகள் – விளைச்சல்கள் இவைகளில் உலகத் தேவைகள் இருப்பதால் ‘சுகப் பொருட்கள்’ என்று இறைவன் கூறுகிறான்.
3:14 வசனத்தை தொடர்ந்து 15 வது வசனத்தில்,
(நபியே) ”அவற்றை விட மேலான செய்தியை நான் உங்களுக்கு சொல்லட்டுமா…” என்று கூறும். இறையச்சம் உடையவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக் கொண்டிருக்கும் அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்குவார்கள்… (அல் குர்ஆன் 3:15)
அழகாகப்பட்டவைகளில் உள்ள விலக்கப்பட்டவைகளை கண்டு அதிலிருந்து விலகிக் கொள்பவர்களுக்கே அதை விட மேலானது பற்றி இங்கு நற்செய்தி கூறப்படுவதை சிந்திக்கும் போது விளங்கலாம்.
ஆக, அழகாக்கப்பட்டவைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டவைகள் என்ற அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் அழகாக்கப்பட்டவைகளில் அனுமதிக்கப்பட்டவையும் உண்டு தடுக்கப்பட்டவையும் உண்டு. அழகாக இருப்பது மட்டும் அவைகளின் அனுமதிக்கான அங்கீகாரத்தை வழங்கி விடாது என்பதில் நாம் தெளிவான சிந்தனையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
– ஜி என்
– இஸ்லாமிய ஆய்வகம்