தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
‘அஸ்மா” என்பதற்கு ‘பெயர்கள்’ என்று பொருள். ‘ஸிஃபாத்’ என்பதற்கு ‘பண்புகள்’ என்று பொருள். எனவே தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் இருப்பதாகும்.
அல்லாஹ்வின் பண்புகளில், ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ, அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது. இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.
உதாரணமாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய ‘அஸ் ஸமீவு’, அதாவது ‘எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன்’. ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ அல்லது சமாதியில் அடக்க மாகியிருப்பவருக்கோ, அல்லது ஒரு சிலைக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு உரிய இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பங்களித்தன் மூலம் ‘ஷிர்க்’ என்ற மாபெரும் பாவமாகிய இணை வைத்தலைச் செய்தவராகிறார். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)
மற்றொரு உதாரணமாக, யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய ‘அல் பஷீர்’ அல்லது ‘எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்’ என்ற இந்தப் பெயரை, பண்பை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ, அல்லது இறை நேசருக்கோ, அல்லது கப்ரில் அடக்கமாகி இருக்கும் நல்லடியாருக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் அல்லது நம்பிக்கை கொண்டால் அவரும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் இந்த ஆற்றலாகிய அல்லாஹ் ஒருவனே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என்ற பெயரை, பண்பை, ஆற்றலை இணை வைத்தவராகிறாகிறார். இதன் மூலம் அவர் அல்லாஹ்வுக்கு ‘ஷிர்க்’ என்ற மாபெரும் இணைவைத்த குற்றவாளியாகிறார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)
இவைகள் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கும் பொதுவான உதாரணங்களாகும்.
ஒருவர் தம் வாயால் வெளிப்படையாக கூறியோ அல்லது வெளிப்படையாக கூறாமல் தமது செயல்களின் மூலமாக அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதி செயல்பட்டாலும் அவரும் இணைவைத்தவராகவே கருதப்படுவார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம்மில் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு அல்லாஹ் அல்லாதவர்களான இறந்தவர்களிடம் அவர்களுடைய கப்ருகளுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ அழைத்து அவர்களிடம் உதவி தேடுகின்றனர். மேலும் இவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி தங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் எனவும் கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ‘எங்கிருந்தாலும் கேட்கும் தன்மையும், எங்கிருந்துக் கொண்டும் எல்லாவற்றையும் பார்க்கும் தன்மையும் இருப்பதாக தவறுதலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள நாகூரில் அடக்கமாகி இருக்கும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களிடம் தமது தேவையைக் கூறி கேட்பதாக வைத்துக் கொள்வோம். இங்கே அவர்
‘எங்கிருந்து அழைத்தாலும் கேட்கக் கூடியவன்’,
‘மனதில் உள்ள இரகசியங்களை அறியக் கூடியவன்’,
‘ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்’
என்பன போன்ற இறைவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய இந்த பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ்வுக்கும் உண்டு என்று நம்புகிறார். இதுவும் ‘தவ்ஹீதுல் உலுஹிய்யாவுக்கு’ எதிரன ‘ஷிர்க்’ என்னும் இணை வைத்தலாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திப்போம்.
அல்குர்ஆன் அத்தியாயம் 10, ஸூரத்து யூனுஸ், வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்:
10:17 அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் – இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ‘இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ‘வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும்.
அல்லாஹ் நம் அனைவரையும் அவனை மட்டுமே வணங்கக் கூடிவர்களாக ஆக்கி நம் பாவங்களை மன்னித்து சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.
sorce: http://suvanathendral.com/portal/?p=15