ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா?
[ செய்திகளை உள்வாங்கி உருவாக்கும் பொறுப்புக்களில் பெண்களின் பங்கு குறைவாகவும், செய்திகளை நளினத்தோடு வாசிப்பவளாகப் பெண்கள் ஊடகங்களில் தென்படும் மோசமான நிலையும் இருக்கின்றது.
ஊடகங்களில் வெற்றியாளராகவும், சாதனையாளராகவும், தலைமைத்துவம் சார்ந்த பெண்கள், தனித்துப் பயணிக்கக் கூடிய, பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய, பாலியல் பகுத்தறிவு மிக்கப் பெண்கள் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதே இல்லை.
இங்கு உலகமயமாதலையும், ஊடகங்களின் நிலைப்பாட்டையும் எதிர்க்க வருவோரின் உள்ளக் கிடைக்கை பெண்கள் மீது கரிசனம் கொண்டுள்ளதா எனப் பார்த்தால் அதுவுமில்லை.
ஊடக வியாபாரிகள் பெண்களை வைத்துப் பணம் செய்ய யத்தனித்தால், இவர்கள் பெண்களைத் தாமே சுகிக்கவும், தமக்குக் கீழ் கொண்டு வரவும் பார்க்கின்றனர். இது பாலியல் சமத்துவமின்மையை பெருக்கிக் கொண்டே இருக்கின்றது. ஒன்று பெண்கள் முற்றும் முழுவதுமாக வீடுகளுக்குள் முடக்கப்படுகின்றனர், அல்லது அவளை ஒரு பாலியல் பண்டமாக்கப்பட்டு வீதிகளில் உலாவ விடுகின்றனர்.
அமெரிக்காவில் சராசரியாகப் பதின்ம வயதினர் நாள் தோறும் 10 மணி நேரம் 45 நிமிடங்கள் ஊடகத் தாக்கத்துக்கு உள்ளாகுகின்றனர். தொலைக்காட்சி, பாடல்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், இணையத் தளங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய ஊடகங்களில் தோன்றும் பெண்கள் தலைமைத்துவக் குணம் படைத்த, பொறுப்பான, அறிவில் சிறந்த பெண்ணாகக் காட்டப்படுவதில்லை, மாறாகப் பாலியல் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பண்டமாகவே காட்டப்படுகின்றனர். இது பெண்கள் குறித்தான பார்வையை இளம் சமூகத்தில் தவறாக விதைத்து வருகின்றது.]
ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா?
இன்றைய உலகச் சந்தையில் விற்கப்படும் பல பொருட்களில் பெண்ணின் தேகங்களும் ஒன்றாகி விட்டது என்பதில் ஐயமே இல்லை. என்றும் இல்லாத அளவுக்கு உலகம் இன்று ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் செய்தி தாள்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், விளம்பர பதாகைகள் எனக் காட்சி ஊடகங்களே தினந்தோறும் நமது வாழ்வினை பெருமளவில் பாதிக்கின்றன.
மனித இனத்தின் இருப்பை ஊடகங்கள் தரும் தகவல் பறிமாற்றங்கள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் நாம் இன்று பெறுகின்ற தகவல்கள் அனைத்தின் நன்மை, -தீமைகளை, உண்மை – பொய்களைத் தீர்மானிக்கும் மிகப் பெரும் பொறுப்பும் நம் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான்.
அவற்றிலும் பெண்கள் இந்த உலக மயமாதல், ஊடகங்களால் எத்தகைய நன்மை – தீமைகளைச் சந்திக்கின்றார்கள் என்பதை நாம் பல சமயங்களில் சிந்திப்பதே இல்லை. ஆணாதிக்கச் சமூகம் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதலே பெண்கள் பாலியல் அடையாளத்தோடு தான் நோக்கப்பட்டும் வந்துள்ளனர்.
இன்றைய ஊடகங்களின் சக்திகளை ஆணாதிக்கச் சமூகத்தின் கைகளில் கொடுப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மீதான ஊடக பூதக் கண்ணாடி அவர்களை ஒரு பாலியல் நுகர்வுப் பொருளாகவே காட்டி வருகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கின்றன.
ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா?
தினசரி நாம் வாசிக்கும் செய்திதாளாக இருக்கட்டும், பார்க்கும் தொலைக்காட்சியாக இருக்கட்டும், மேயும் இணையத் தளங்களாக இருக்கட்டும் பாலியல் அடையாளப் படுத்தப்பட்ட பெண்களை நம் கண் முன்னே நிறுத்தப்படுகின்றனர். பெண்களைப் பாலியல் சார்ந்த விடயமாகவும் இச்சைகள் தீர்க்கும், இனவிருத்தி செய்யப்படும் யந்திரமாகவும் நினைக்கும் பழம் சமூகத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியே இன்றைய ஊடகங்களின் இந்த நிலைப்பாடுகளுக்கு முக்கியக் காரணமாகும். ஊடகங்களை உருவாக்குவோரும், நுகர்வோரும் யாராக இருக்கின்றனர்? ஊடகங்கள் சமூகத்தில் எந்தப் பிரிவினரை மகிழ்ச்சிப்படுத்திப் பணம் பண்ணப் பார்க்கின்றனர் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இது வருங்காலச் சமூகங்களில் எத்தகைய மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?!
பெரும் நிறுவனங்கள் கொள்ளை லாபங்களைப் பெற சமூகத்தின் சரி பாதிப் பெண்ணினத்தைக் கொச்சைப்படுத்தும் நிலைப்பாட்டைப் பற்றிச் சிந்திக்கவோ, மாற்றங்களைக் கொண்டு வரவோ பெரும்பாலான நமக்கு நேரமே இருப்பதில்லை.
இவ்வாறன நிலையில் அமெரிக்காவின் MissRepresentation.org என்ற அமைப்பு ஊடகங்களில் பெண்களை இழிவாக்கும் போக்கினைக் கண்டித்துப் போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் அண்மையில் ஒரு விவரணப் படத்தையும் வெளியிட்டு இருந்தனர். அதன் முன்னோட்டம் இதோ உங்களுக்காக …
இவ் அமைப்பு பெண்ணின் அழகியல், பாலியல், இளமை சார்ந்த விழுமியங்களை, இலக்கணங்களை ஊடகங்களே தீர்மானித்து, அவற்றை இளம் சமூகத்தின் மீது திணிக்கும் கோர வியாபார உத்திகளைத் தகர்த்தெறிந்து வருகின்றது.
சினிமாவாக இருக்கட்டும், விளம்பரங்களாக இருக்கட்டும் அதன் முதன்மை கதாப்பாத்திரமாக இருப்பவன் ஆணாகவும், அவனது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பாலியல் பொம்மையாகவுமே பெண் சித்தரிக்கப்படுக்கின்றாள். இன்று நேற்றல்ல, மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டே இதே நிலைப்பாட்டைத் தான் உலகின் பல சமூகங்களும் பின்பற்றி வருகின்றன.
அமெரிக்காவில் சராசரியாகப் பதின்ம வயதினர் நாள் தோறும் 10 மணி நேரம் 45 நிமிடங்கள் ஊடகத் தாக்கத்துக்கு உள்ளாகுகின்றனர். தொலைக்காட்சி, பாடல்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், இணையத் தளங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய ஊடகங்களில் தோன்றும் பெண்கள் தலைமைத்துவக் குணம் படைத்த, பொறுப்பான, அறிவில் சிறந்த பெண்ணாகக் காட்டப்படுவதில்லை, மாறாகப் பாலியல் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பண்டமாகவே காட்டப்படுகின்றனர். இது பெண்கள் குறித்தான பார்வையை இளம் சமூகத்தில் தவறாக விதைத்து வருகின்றது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிர்பயா கூட்டு வன்புணர்வு கொலை சம்பவத்திற்குப் பின்னர் தகவல் – ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஊடகங்களில் பெண்களை எதிர்மறையாக, பொதுப்புத்தியில், இழிவாகச் சித்தரிப்பதன் பின்விளைவுகள் குறித்துக் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
“இன்றைய ஊடகங்கள் கலாச்சாரம் சார்ந்த ஒரு துறையாகப் பரிணமித்துள்ளது, உண்மையில் அதுவே ஆண், பெண் தோற்றத்தை உருவாக்கி, விற்பனை செய்தும் வருகின்றது. ஆனால் பெண்களின் தோற்றத்தை தொலைக்காட்சித் தொடர்களும், இசை நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் வேறு விதமாகச் சித்தரிக்கின்றனர், அது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை.” எனப் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்வி, மேம்பாட்டுத் துறையின் பேராசிரியர் ராஜேஸ் கில் கூறுகின்றார்.
இந்தியாவின் யதார்த்தமான பெண்களையும், குணங்களையும், அழகியலையும் இந்திய ஊடகங்கள் வெளிக்காட்டுவதில்லை. அது குறித்தான கவலையும் ஊடகப் படைப்பாளிகளிடம் இருப்பதில்லை. பெரும் சஞ்சிகைகள் கூட அட்டைப்படத்தில் பாலியல் மயமாக்கப்பட்ட பெண்ணின் படங்களைப் பிரசுரிக்கின்றனர். ஊடகங்களைப் படைப்பவர்கள் ஆண்கள். ஏனெனில் ஊடகங்களைக் கொள்முதல் செய்வோர் ஆண்கள். சமூகத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருப்போர் ஆண்கள்.
மேற்கு நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் பெண்களின் தொகை மூன்றில் ஒரு பங்கு உயர்வடைந்துள்ளது. இருந்த போதும் இது போதுமான அளவிற்கு இல்லையே எனலாம். ஊடகம், பாலினக் கண்காணிப்பகத்தின் தகவலின் படி, உலகம் முழுவதும் 24 % செய்திகள் மட்டுமே பெண்கள் குறித்தானவையா இருக்கின்றது. இவற்றில் எத்தனை சதவீதம் தலைமைத்துவம், சாதனைகள் போன்றவற்றைக் கூறுவார்கள் என்பதும், எத்தனை சதவீதம் சினிமா, இசை சார்ந்த பாலியல் மயமாக்கப்பட்ட பெண்களின் செய்திகள் என்பதையும் நாமே சிந்தித்துப் பார்க்கலாம்.
செய்திகளை உள்வாங்கி உருவாக்கும் பொறுப்புக்களில் பெண்களின் பங்கு குறைவாகவும், செய்திகளை நளினத்தோடு வாசிப்பவளாகப் பெண்கள் ஊடகங்களில் தென்படும் மோசமான நிலையும் இருக்கின்றது.
இந்திய ஊடகங்களில் வருகின்ற பெண் குறித்தான செய்திகள் ஒன்று பாலியல் காட்சிப் பொருளாக வருவார், அல்லது பாலியல் விடயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வலிமை இழந்த பெண்ணாகக் காண்பிக்கப்படுவார். இந்திய செய்தித் தாள்களில் 63 % செய்திகள் பெண்கள் பாதிக்கப்பட்ட குற்றச் செய்திகளாகவே இருக்கின்றது. இதனையே மக்கள் விரும்பிப் படிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஒரு சில செய்திகளில் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடும் பெண்களின் வீரதீரங்களை வெளியிட்டு இருந்த போதும், அதனையும் பெண்கள் சட்டங்களைத் தவறாக வளைப்பதாக விமர்சனத் தொனியில் பலரும் எழுதி இருந்தமை மோசமான ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது.
பல இந்திய ஊடகங்களில் காண்பிக்கப்படும் பெண்கள் குற்றம் செய்யும் கொடூரக் குணமுடையவளாகவும், சுயநலம் மிக்கவளாகவும், அரசியல் ஞானமற்றவளாகவும், சமூக – கலாச்சாரங்களில் அதி நவீனத்துவத்தைக் கேள்விகள் இன்றி ஏற்பவளாகவும் காட்டப்படுகின்றாள். அது மட்டுமில்லாமல் அடக்கம் ஒடுக்கமாக, ஆண்களின் பேச்சை மதித்து, அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்து, தமக்கான கனவுகள், லட்சியங்களை இழந்து குடும்பம், உறவுகளுக்காக இருப்பவளே நல்லதொரு பெண்ணாகவும் அடையாளப்படுத்தப்படுவது பழமைவாத சிந்தனையின் பெரும் தாக்காக இருக்கின்றது. இரு நிலைப்பாடுகளும் பெண்கள் தம்மைத் தாம் எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் தவறான ஒரு வழிக்காட்டலை சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் தென்படும் பெண் கதாப்பாத்திரங்கள் யாவும் மணம் மீறிய உறவு வைத்திருப்பவளாகவும், பகட்டான ஆடை, நகைகள் அணிந்து கொள்பவளாகவும், மதப் பழமைத்துவங்களை, மூட நம்பிக்கைகளைத் தாங்கிப் பிடிப்பவளாகவும், குடும்பச் சண்டைகளை மூட்டுபவளாகவும், காதல் தோல்வியுடையவளாகவும், பெரும் வீடு, வாகனம், செல்பேசிகள், ஒப்பனைகள் செய்பவளாகவும், பழி வாங்கும் குணமுடையவளாகவும் காட்டப்படுகின்றாள். யதார்த்தத்தில் நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவ்வாறாகவா இருக்கின்றனர் சொல்லுங்கள்.
ஊடகங்களில் வெற்றியாளராகவும், சாதனையாளராகவும், தலைமைத்துவம் சார்ந்த பெண்கள், தனித்துப் பயணிக்கக் கூடிய, பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய, பாலியல் பகுத்தறிவு மிக்கப் பெண்கள் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதே இல்லை.
பெண்கள் சதா ஆண் துணையோடு தான் போக வேண்டும் எனவும், பாலியல் விடயங்களில் தம்மைத் தாமே காக்கும் அறிவற்றவளாகவும் காண்பிக்கப்படுகின்றாள். அத்தோடு விளம்பர மகளிராக வருவோர் வீட்டுப் பொருட்களை விற்கவும், அழகியல் சாதனங்கள், ஒப்பனைப் பொருட்கள், உடைகள் விற்பவராகவுமே இருக்கின்றாள். ஆண்களோ வாகனங்கள் செலுத்துபவனாகவும், பெரும் முதலாளியாகவும், பெரும் பொருட்களை விற்பவனாகவும் காண்பிக்கப்படுகின்றனர். இது ஏற்றத்தாழ்வான விடயமில்லையா ?!
விளம்பரங்கள் உட்பட ஊடகங்களில் வரும் பெண்கள் மெல்லிடையும், வெளிர் நிறமும், பெருத்த அங்கங்களையும் கொண்டவளாக வருவதும். அவள் ஆண்களைப் பார்த்து நெளித்து, சிலிர்த்து மோகிக்கும் கதாப்பாத்திரங்களாகக் காட்டப்படுவதும் பெண்கள் குறித்தான தவறான எண்ணத்தை இளைய சமூகத்தில் விதைக்காதா ? ஒரு வேளை நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டுமோ எனப் பெண்களும், பெண் என்றாலே அவ்வாறானவர்கள் என ஆண்களும் நினைக்கச் செய்யாதா ?
திரைப்படங்களைப் படைக்கும் பெண்களின் பங்கு என்பதும் சொல்லும்படியாக இல்லை. அமெரிக்காவில் வெளியாகும் திரைப்படங்களில் மூன்றில் ஒரு கதாப்பாத்திரங்களே பெண்களாக இருக்கின்றனர். அதிலும் கூட அவர்கள் பாலியல் ஆடைகளை அணிந்து கொண்டும், அரை நிர்வாணமாகவும், ஆண் கதாப்பாத்திரங்களைக் கவரும் கதாப்பாத்திரங்களாகவுமே காட்டப்படுகின்றனர். அவற்றில் கூட 13- 20 வயது பெண்களே பெரும்பாலான கவர்ச்சியுடையவர்களாகக் காட்டப்படுகின்றனர் என்பது மிகவும் மோசமான ஒரு நிலைப்பாடாகவே இருக்கின்றது.
இந்திய சினிமாக்கள் ஒன்றும் சளைத்ததல்ல, இங்கும் கூட 60 வயது கதாநாயகனின் காமுகியாகத் தோன்றுபவர்கள் எல்லாம் இருபது வயதுக்கும் குறைந்த பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் இந்தியாவில் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது, அதிலும் அவர்களை நல்ல ரீதியில் காட்டும் நிலை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. மலையாளத்தின் சியாமா பிரசாத் போன்ற ஒரு சில இயக்குநர்களைத் தவிர்த்து ஏனைய இந்திய இயக்குநர்களின் திரைப்படக் கதாப்பாத்திரங்கள் ஆணைச் சுற்றியே எப்போதும் நிகழ்வதாக இருக்கின்றது.
இங்கு உலகமயமாதலையும், ஊடகங்களின் நிலைப்பாட்டையும் எதிர்க்க வருவோரின் உள்ளக் கிடைக்கை பெண்கள் மீது கரிசனம் கொண்டுள்ளதா எனப் பார்த்தால் அதுவுமில்லை. அவர்களது நிலைப்பாடு சமூகக் குற்றங்கள், சமூகத் தோல்விகளுக்குக் காரணம் மேற்கத்திய சிந்தனைகள், வாழ்க்கை முறை எனப் பழிப் போட்டுவிட்டு, பெண்களை மீண்டும் வீடுகளுக்குள் முடக்கும் ஆணாதிக்கத்தின் மற்றுமொரு தொலைவெளியே ஆகும்.
பெண்களைக் கேவலமாகப் பொதுவில் வியாபாரம் செய்வோருக்கும், பெண்களை முடக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களது வாழ்வை முற்றும் முழுதாகத் தீர்மானிக்க நினைக்கும் பழமைவாதிகளின் நிலைப்பாட்டுக்கும் பெரும் வேறுபாடுகள் இல்லை. ஊடக வியாபாரிகள் பெண்களை வைத்துப் பணம் செய்ய யத்தனித்தால், இவர்கள் பெண்களைத் தாமே சுகிக்கவும், தமக்குக் கீழ் கொண்டு வரவும் பார்க்கின்றனர். இது பாலியல் சமத்துவமின்மையை பெருக்கிக் கொண்டே இருக்கின்றது. ஒன்று பெண்கள் முற்றும் முழுவதுமாக வீடுகளுக்குள் முடக்கப்படுகின்றனர், அல்லது அவளை ஒரு பாலியல் பண்டமாக்கப்பட்டு வீதிகளில் உலாவ விடுகின்றனர். இரு நிலைப்பாடுகளால் தமது வாழ்வை, உரிமையை, உணர்வை இழக்கும் அபாயமான சூழலிலேயே பெண்கள் இருக்கின்றனர்.
உண்மையில் புதிய பொருளாதாரக் கொள்கையும், உலக மயமாக்கலும், புதிய வாழ்க்கை முறையும் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்புக்களைப் பெருக்கியுள்ளது. விளிம்பு நிலை சமூகப் பெண்களுக்குக் கூட வாழ்வின் நற்கனிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை தந்துள்ளது. பொருளாதாரச் சுதந்திரம் என்பது பெண்ணை மட்டுமின்றி அக் குடும்பத்தின் முன்னேற்றத்தையும் உறுதி செய்துள்ளது. வீடுகளுக்கு முடங்கும் நிலை களையப்பட்டு, தொழில்துறைகள், கல்வித் துறைகள் என அனைத்துத் துறைகளில் தலைமைத்துவத்தை அடையும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது. நடுத்தரக் குடும்பத்து பெண்களின் சுதந்திரமும், சமத்துவ உரிமைகளையும் இது நிச்சயம் உறுதி செய்து கொடுத்துள்ளது. சுயமான முடிவுகளை எடுக்கவும், குடும்பத்திலும், சமூகத்தில் சரி நிகரான பங்களிப்பு செய்யும் சூழலும் கிடைத்துள்ளது.
அடக்குமுறைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் கொடுமைகள், உளவியல், உடலியல் துன்புறுத்தல்கள் என அனைத்தையும் ஏறி மிதித்துக் கொண்டு போகும் அற்புதமான சூழலாக இன்றுள்ளது. அதே சமயம் இத்தகைய நடுத்தர, கல்விக் கற்ற, பணிகளில், தொழில்களில் முன்னேற்றம் கண்டு, தலைமைத்துவத்தை அடைந்துள்ள பெண்களை ஊடகங்கள் நிகராக, நேராக, முறையாக, நல்ல முறையில் சித்தரிக்காமல் போனது நிச்சயம் முறையற்ற ஒன்றே ஆகும். ஊடகத் துறையில் பெண்கள் அதிகளவு பிரவேசிக்க வேண்டும், ஊடகங்களில் படைப்பாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் முன்னேற்றம் காண வேண்டும். பெண்கள் குறித்தான நல்ல முறையிலான சித்தரிப்புக்களை இச் சமூகங்களில் ஏற்படுத்த வேண்டிய ஒரு மாபெரும் பணி பெண்களிடம் மட்டுமில்லை, பெண்ணிய உரிமைகளை விரும்பும் அனைத்து ஆண்களிடமும் கூட இருக்கின்றது.
நன்றி: கோடங்கி .காம்