சிலர் கடமையான தொழுகை(ஃபர்ளு) முடிந்ததும், உடனே அதே இடத்தில் எழுந்து நின்று சுன்னத் தொழ ஆரம்பித்து விடுவார்கள், இரு தொழுகைகளுக்கும் இடையில் வேறு செயல்கள் செய்யாமல் இது போல் தொடர்ச்சியாக தொழுவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது,
கடமையான தொழுகை முடிந்ததும் (அதையும் சுன்னத் தொழுகையும் பிரித்துக் காட்டும் செயல்களான) திக்ர், துஆ செய்தோ, அல்லது வேறு பேச்சுக்கள் மூலமோ அல்லது அவ்விடத்தை விட்டு நகன்று செல்வது போன்ற வேறு செயல்கள் செய்த பின் தான் சுன்னத் தொழ வேண்டும்.
மாறாக கடமையான தொழுகை தொழுத உடன் அதே இடத்தில் எழுந்து சுன்னத் தொழக் கூடாது.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ، بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَىْءٍ، رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَىَّ فَقَالَ لاَ تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاَةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَنَا بِذَلِكَ أَنْ لاَ تُوصَلَ صَلاَةٌ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ (ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1603
நாஃபிஉ பின் ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுப்பி “(ஒரு முறை) நீங்கள் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ன கூறினார்கள்?” என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.
(நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “ஆம்; நான் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம், ஸலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்.
(நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், ”இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக் கூடாது” என்று கூறினார்கள்” என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் அதாஉ பின் அபில்குவார் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: முஸ்லிம் 1603)
மேற்கண்ட ஹதீஸ் மூலம் நமக்கு விளங்கக்கூடிய இன்னொரு விஷயம்;
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைக்கட்டளைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது.
ஆம்! இரண்டுமே நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வுக்காக தொழும் தொழுகை தான்.
இருந்தபோதிலும் அல்லாஹ்வின் கட்டளையான கடமையான ஃபர்ளுக்கு இணையாக
தன்னுடைய நடைமுறைக்கு முக்கியத்துவம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்கள்
என்பது தெளிவாகிறது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்காக இவ்வாறு பணித்துள்ளார்கள்.
அதே சமயம் மார்க்கம் போதிக்கும் அறிஞர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் மாற்றமாக தங்களது புதுமையான ”பித்அத்”துகளை கொஞ்சமும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தி அதனை கடமையானதைவிட முக்கியத்துவம் கொடுத்து வருவது தகுமா என்பதை சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளார்கள். சிந்திப்பார்களா….?!