மனிதன் என்பவன் மனிதனாக மட்டுமே ஆகலாம்!
”அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.’ (அல்குர்ஆன் 4:28)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ”தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸர்த் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மது இப்னு ஸிரீன் கூறுகிறார்.)
பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன்மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள்.
அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறி மக்கள், ‘தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதோ’ எனப் பேசினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் ‘நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா?’ எனக் கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை” என்றவுடன் ‘இல்லை நிச்சயமாக நீங்கள் மறந்து விட்டீர்கள்’ என அவர் கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள்.
பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியாவாறே தக்பீர் கூறினார்கள். (Bukhari – Volume: 2, Book: 22, Hadhees No: 1229)
என்ன… இறைவனால் மனிதர்களுக்கெல்லாம் தூதராக அனுப்பப்பட்டவரே தமது தொழுகையில் கவனக்குறைபாட்டுடன் இருந்திருக்கிறாரா… அவரையும் பின்பற்ற இத்தனை கோடி மக்களா… எனக் கேட்பவர்களும் இருக்கலாம்!
இறைவனாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று…” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனிதர் தான்”… மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மறதி, கோபம் போன்ற தவிர்க்கப்பட வேண்டிய எண்ணங்களிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடியவர்களாகவே இறுதிவரை வாழ்ந்தார்கள்.
தம்மைத் தூதராக இறைவன் தேர்ந்தெடுத்த காரணத்தினால் தமக்கு சொர்க்கம் நிச்சயம் எனும் சிறு எண்ணமும் தமக்கு இல்லாததை இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியவர்களாக இருந்து காண்பித்து நம்மை நேர்வழிக்கு அழைத்தார்கள்.
சக மனிதர்கள் தம்மைக் கிஞ்சித்தும் புகழ் பாடுவதைச் அறவே விரும்பாதவர்களாக வாழ்ந்து நமக்கு முன்னுதாரணமானார்கள். இறைவனுடைய கேள்வி கணக்கிற்கு நாம் எல்லாம் அஞ்சுவதை விட அதிகமாகத் தம்மை விடவும் தமது சமுதாயத்தினைரையே இறுதி நாளிலும் கூட எண்ணி வருந்தியவர்களாகவே தம் இன்னுயிர் நீத்தார்கள்.
மனிதனைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
”அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.” (அல்குர்ஆன் 4:28)
மனிதனின் குணநலன்கள் பலவற்றைப் பற்றிக் விவரித்துள்ள இறைவன் அம்மனிதனை பலஹீனமானவனாகத் தான் படைத்துள்ளதையும் கூறுகிறான். உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் மனிதன் பலஹீனமானவன் தான். ஒரு விஷயத்தில் மனிதன் முழு ஈடுபாட்டுடன், உலகை மறந்து தனை மறந்து ஆழ்ந்திருப்பது மிக மிக அபூர்வமாகும். இத்தகைய காரணங்களினால் தான் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளைத் திறம்பட எந்தக் குறைவுமின்றி செய்து முடிப்பவர்கள் மிகவும் திற்மைவாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இத்தகைய பலஹீனமான மனிதர்கள் தமது வணக்கங்களின் போது ஷைத்தானின் திசைதிருப்புதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லும் பல ஹதீஸ்கள் இடம்பெற்றிருக்கின்றன.
”தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி ‘இதை இதையெல்லாம் நினைத்துப்பார்’ எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்” இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (Bukhari – Volume: 2, Book: 22, Hadhees No: 1231)
ஷைத்தானின் திசைதிருப்புதல் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலேயே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று… அது நடந்தே தீரும்.. அதில் எந்த மறுப்புமில்லை. ஆனால் இந்த ஹதீஸ் தரும் அறிவுரை என்ன? தொழுகையின்போது ஷைத்தானின் தீண்டுதல் இருக்கும்… அந்தத் தீண்டுதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுஙள். தொழுகையின் போது இந்த ஹதீஸை நினைவில் நிறுத்திக்கொண்டால் ஷைத்தானின் தீங்குகளை இறைவனின் உதவியோடு வெற்றிக்கொள்ளலாம் என்பதாகும்.
”மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 50:160)
பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனும் மனிதர்கள் வெளிப்படுத்துபவற்றையும் உள்ளத்தில் மறைத்துவைத்தவற்றையும் அறிந்தவனுமாகிய இறைவனுக்குத் தெரியாதா…. ஒரு மனிதர் இறைவனுக்காகத் தொழுகின்றாரா அல்லது பிறருக்குக் காண்பிக்க தொழுகிறாரா என்பது…. தொழுகைக்காக உடல் சுத்தம் மேற்கொண்டு உலகின் அத்தனை கவனச்சிதறல்களிலிருந்தும் தவிர்ந்து தன் கவனத்தைத் தொழுகையின்பால் கொண்டுவந்து இறையச்சத்துடன் நிற்கும் தன் அடியானை இறைவன் நன்கு அறிவான். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடும் அடியானைப் பாதுகாக்க இறைவனே போதுமானவன்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “யா ரசூலே! நான் என் ஒட்டகத்தைக் கட்டிவைத்துவிட்டு இறைவன் மீது நம்பிக்கையை வைக்கவா அல்லது அதனைக் கட்டாமல் விட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கலாமா” எனக் கேட்டார். அதற்குத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உன் ஒட்டகத்தைக் கட்டிவைத்து விட்டு இறைவனிடம் ஒப்படைத்துவிடு” என்றார்கள். (திர்மிதி 2517, 1981).
தொழுகைக்கும் இந்த அறிவுரை பொருந்தும் சூழலில்: இறைவனால் மனிதர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கும் தொழுகையைத் தானே நிறைவேற்றுகிறோம்… அதனால் (வெளிப்பரப்பில் தொழும்போது) தமது ஒட்டகத்தைக் கூட கட்டாமல் இறைவன் அதனைப் பார்த்துக்கொள்வான் என நினைத்துப் பலர் தொழுகையில் ஈடுபட நினைத்தாலும் அதனைக் கட்டி வைத்த பின்னரே இறைவனின் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும். ஏனெனில், கட்டிவைக்கப்படாத ஒட்டகம் எங்கும் செல்லாமல் நிறுத்திய இடத்திலேயே நின்றாலும் நிற்கும்; ஆனால் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் அதன் உரிமையாளர் அது தன் இடத்தை விட்டு சென்றுவிடுமோ அல்லது எவரேனும் திருடிச் சென்றுவிடுவார்களோ என ஷைத்தான் அவரது மனதினை அலைபாயச் செய்வான். நாம் தொழுகையில் ஈடுபடும்போது எவ்வளவுக்கெவ்வளவு நம் மனதினை முழுமையாக ஈடுபட வைக்க முடியுமோ அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து கொள்ளவே மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவுறுத்துகின்றன.
“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் – ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் – அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 41:6)
மனித சமுதாயத்தினருக்கே தூதராக அனுப்பப்பட்டவராக இருந்தாலும் அவர்களிடமும் மனிதப் பண்புகளையே இறைவன் அமையச் செய்தான். அப்படி இருந்ததால்தானே ஒவ்வொரு மனிதனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் நடக்க முயற்சி செய்ய முடியும். இதனாலேயே இறைவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதராகவே படைத்து மனிதக்குணங்களிலேயே வாழச் செய்து மனிதன் எந்தெந்த சமயங்களில் தவறிழைக்கும் சாத்தியங்கள் ஏற்படுமோ அச்சூழ்நிலைகளில் தூதர் அவர்களுக்கும் ஏற்படுத்தித்தந்து அவர்களின் பக்குவமான நடத்தைகளை/பேச்சுக்களை உலக மனிதர்கள் அனைவருக்கும் படிப்பினையாக வெளிப்படச் செய்தான்.
இறைக்குணம் என்பது இறைவனிடம் மட்டுமே இருக்கிறது; இருக்கும்; அவற்றில் ஒன்றிரண்டு அங்குமிங்கும் ஓரிருவரிடம் அமையப்பெற்றிருக்கலாம். ஆனால் அவர்களால் இறைவனாக முடியவே முடியாது. இந்த உண்மையை மக்கள் உறுதியாக நம்பும் காலம் வந்தால்மட்டுமே இன்றைய காலங்களில் பெருகிவரும் போலிஜோசியர்கள், போலிச்சாமியார்கள் அடியோடு ஒழிந்து போவார்கள். இவ்வுண்மையினை உணர்ந்ததினால் தான் அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்களாயினும், முஸ்லிம்கள் போலிச்சாமியார்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் பிற மக்களிடம் இதனைத் தெளிவாக எடுத்துச் சொல்லவும் வழியில்லை. பாமர மக்களாயினும் மெத்தப்படித்த மேதாவிகளாயினும் இத்தகைய சாமியார்களின் தத்துபித்துவங்களுக்கு இரையாகிப்போகிறார்கள். இவ்விஷயத்தில் இஸ்லாத்தைப் போன்று எந்தவொரு உறுதியான கொள்கை இல்லாத காரணத்தினால் இந்திய அரசினாலும் இத்தகைய போலிச்சாமியார்கள் விஷயத்தில் கடுமையான சட்டங்கள் இயற்ற இயலாமலும் அதன் மூலம் பிற மக்களைக் காப்பாற்ற முடியாமலும் போய்விடுகிறது.
அரபு நாடுகளில் பல முறை
BLACK MAGIC எனப்படும் சூனியம், தாயத்து, தகடு போன்றவற்றை ரகசியமாக உபயோகிப்பவர்கள் காவல் துறையினால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் விளைவுகளைப் பற்றி விபரமில்லாமல் அச்சூனியக்காரர்களை நாடிச் செல்லும் பலரின் வாழ்க்கையும் செல்வமும் நிம்மதியும் பாதுகாக்கப்பட்டுள்ளன. நரபலி, வாழைப்பழச் சாமியார் போன்ற எண்ணற்ற கதைகள் தொடர்கதைகளாகி வருவதை எப்போது, எப்படி தடுக்கும் நம் அரசாங்கம்?? முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனால் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கும் கோபம் வந்திருக்கிறது; சில போர்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்; மறதி ஏற்பட்டிருக்கிறது; உடல் நோவினை வந்து அவதியுற்றிருக்கிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு இறைவேதத்தில் பல இடங்களில் இறைவனால் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது; தோல்விகளை எங்ஙனம் எதிர்கொள்வது; மறதியின் விளைவுகளை எப்படி சரிசெய்வது; உடல்நோய் ஏற்பட்டால் எவ்வாறு பொறுமையோடு ஏற்றுக்கொள்வது போன்ற படிப்பினைகள் பெற்று நம் வாழ்வில் தொடர்புபடுத்தி வெற்றி கொள்ள ஒரு பாதையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிசயக்கத்தக்க, நம்மைக் கவர்ந்த, சமூக ஆர்வங்கொண்ட குணங்களோ செயல்களோ ஒருவரிடம் காணப்பெற்றால் அவரது அத்தகைய பண்புகளை நமக்கு வழிகாட்டியாக / முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, அவரையே தெய்வமாகக் கொண்டால் அவரைப் படைத்து அவருக்கு அத்தகைய உயர்வைக் கொடுத்த இறைவனை நிராகரிப்பதற்குச் சமம்.
மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு நற்குணங்களை வழங்கிய இறைவனால் அந்த மனிதர்கள் செய்யும் காரியங்களை சமூகத்திற்குச் செய்ய இயலாதா அல்லது தன் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள்ள தேவைப்படுபவனா இறைவன் அல்லது உலகினைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனை விட்டுவிட்டு முழுக்க முழுக்க அவன் விருப்பப்படியே செயலாற்றும் மனிதர்கள் எனும் அம்பைக் கொண்டாடும் அளவிற்கு நாம் முட்டாள்களா?? இல்லை… ஆட்டுவிபப்வன் அங்கு இருக்க, அவனுக்குச் சேர வேண்டிய பெருமைகளைத் தனக்கே தேடிக்கொள்ளும் பேராசைகொண்டவர்களை நாம் வணங்கினால் அது நமக்கல்லவா அவமானம்!!!
ஆகையினால் தான் உலக மனிதர்கள் அனைவருக்கும் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘என்னை வணங்குங்கள்…. இவர் கூறியவற்றைப் பின்பற்றுங்கள்’ என்று இறைவனால் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தாலும் அவரது அறிவுரைகளினால் எந்த ஒரு முஸ்லிமுக்கும் எப்பேர்பட்ட வெற்றி கிடைத்தாலும் அதற்கு முழு முதற்காரணமாகிய இறைவனுக்கே அனைத்துப் புகழையும் பெருமையையும் பறைசாற்றுகின்றனர் முஸ்லிம்கள். எப்பேர்பட்ட ஆற்றல் இறைவனால் அளிக்கப்பட்டிருந்தாலும் இறைவனின் கொடையாகிய இறுதித்தூதர் மக்களுக்கான ஒரு அழகிய முன்மாதிரி –
”அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.” (அல்குர்ஆன் 33:21)
ஆக, மனிதன் என்பவன் மனிதனாக மட்டுமே ஆகலாம்.
source: http://enrenrum16.blogspot.in/2013/05/blog-post.html