அரபி மதரஸாக்களில் போதிக்கப்படும் ஸில்ஸிலயே நிஜாமிய்யா கல்வித்திட்டம் – ஓர் ஆய்வு!
அபூ ஃபாத்திமா
இன்று பெரும்பாலான அரபி மதரஸாக்களில், குறிப்பாக குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் மார்க்கமாகப் போதிக்கும் அரபி மதரஸாக்களில் “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித் திட்டத்தின்படி பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
கண்மூடிப் பின்பற்றும் தக்லீது கொள்கையுடையவர்களால் இம் மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனவே, “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்றால் என்ன என்பதை அம்மதரஸாக்களில் பாடம் போதிக்கும் ஆசிரியர்களோ, கல்வி கற்கும் மாணவர்களோ அறிந்திருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதுபற்றிப் பட்டம் பெற்ற பல மவ்லவிகளிடம் நாம் கேட்டும் சரியான பதிலை இதுவரை யாருமே தரவில்லை.
சுமார் 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மவ்லவிகளில் திறமை மிக்க ஒரு ஹாபிழ் மவ்லவியிடம் இது பற்றி நாம் கேட்ட போது, ஹைதராபாத் நிஜாமின் ஞாபகர்த்தமாக அவ்வாறு சொல்லப்படுகிறது என்று விளக்கினார்.
ஓரளவு விளக்கம் தெரிந்தவர்கள் லட்சுமணபுரியில் வாழ்ந்த பெரியார் நிஜாமுத்தீன் என்பவர் இத்திட்டத்தை உருவாக்கியதால் “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்று கூறப்படுகிறது என்று கூறுகிறார்கள். திறமை மிக்க மவ்லவிகளின் நிலையே இதுவென்றால் மற்ற மவ்லவிகளின் நிலை பற்றி நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
நிஜாமிய்யாவின் தோற்றம் :
செல்ஜூக் சுல்தான்களின் பாரசீக அமைச்சராக இருந்த நிஜாமுல் முல்க் என்பவரால் “நிஜாமிய்யா” என்ற பெயரில் மதரஸாக்கள் நிறுவப்பட்டன. அவற்றில் தலையாயது ஹிஜ்ரி 457-459ல்(கி.பி.1065-1067) பாக்தாதில் நிறுவப்பட்ட நிஜாமிய்யாவாகும். அது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான தக்லீதுக்கு வித்திடப்பட்ட காலக்கட்டமாகும். எனவே அம்மதரஸாவில் ஷாஃபி மத்ஹபின் நூல்களும், அஷ்அரி கொள்கையை வலியுறுத்தும் நூல்களும், பழம்பெரும் பாடல்கள் பெருமளவிலும், பெயரளவில் குர்ஆனும் போதிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பாடம் பயின்று வந்தனர். அப்போது அவர்கள் வாயாலோ, எழுத்து மூலமோ ஆசிரியர்களைக் கேள்விகள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
தலைமை ஆசிரியர் இமாம் கஸ்ஸாலி :
இந்த மதரஸாவின் தலைமை ஆசிரியர் பொறுப்பை இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஹிஜ்ரி 484-488 (கி.பி. 1091-1095) வரை வகித்து வந்தார். அப்போது அந்த நிஜாமிய்யாவின் போதனா முறையிலேயே ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது. அந்த போதனை முறைகள் எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டன என்பதை அறிய அன்று மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த கல்வி முறைகள், தத்துவங்கள், கலைகள் இவற்றை நாம் அறிந்து கொள்வது அவசியம். அக்கால கட்டத்தில் தத்துவங்களும், தர்க்கவியலும் மிகைத்திருந்தன. கிரேக்கத் தத்துவங்கள் ஐரோப்பிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை இழந்து கொண்டிருந்த நிலையில் அரபு நாடுகளில் நுழைந்து அது மீண்டும் உயிர் பெற்றது.
ஜார்ஜ் ஸைதான் என்ற வரலாற்றாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்…
“”பழைய கிரேக்க தத்துவங்கள் அழியக்கூடிய நிலையில் இருந்தபோது முஸ்லிம்கள் அத் தத்துவ நூற்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அவற்றைத் தமதாக்கிக் கொண்டார்கள். அப்பாஸியர்கள் காலத்தில் தத்துவம், தர்க்கவியல் சம்பந்தமான கிரேக்க, லத்தீன் மொழியிலுள்ள புத்தகங்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. (உதாரணமாக கலீலாதிம்னா என்ற பஞ்ச தந்திரக் கதைகள்)” இதன் காரணமாக வெவ்வேறு நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் (ஐதீகங்கள்) முஸ்லிம்களிடம் நுழையத் தொடங்கின. தக்லீதும், தஸவ்வுஃபும் அவ்வகையைச் சார்ந்தவையே. அரபிகளல்லாத, இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக அறிந்திராத தர்க்கக் கலை வல்லுநர்கள் முஸ்லிம்கள் ஆனபோது, தாங்கள் முன்பு சார்ந்திருந்த மதப் பழக்க வழக்கங்களையும் கோட்பாடுகளில் சிலவற்றையும் இஸ்லாத்தில் நுழைத்துக் கொண்டனர். அவர்களிடம் அறிவாற்றல் இருந்ததேயல்லாமல் தூய்மையான இஸ்லாத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
முஸ்லிம்களும் குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்படும் உயரிய நிலையிலிருந்து தவறி, கண்மூடிப் பின்பற்றும் தக்லீத் கொள்கைக்கு ஆட்பட்டிருந்ததால் இத்தகையவர்களால் அறிமுகப்படுத் தப்பட்ட தத்துவங்களால் ஈர்க்கப்பட்டனர். இதன் காரணமாக உண்மையான இஸ்லாமிய கொள்கைகளை விட்டும் மேலும் மேலும் விலகிச் சென்றனர். அது மட்டுமல்ல; மாற்று மதங்களிலிருந்தும், தத்து வங்களிலிருந்தும் காப்பி அடித்த கொள்ளைகளே உண்மையான இஸ்லாம் என்ற தவறான நம்பிக்கையில் அவற்றை ஆர்வத்தோடு செயல்படுத்தினர்.
காலஞ்சென்ற அறிஞர் அபுல் கலாம் ஆஸாத் குறிப்பிடுகிறார்கள்
அல்லாஹ்வின் கலாமான திருகுர்ஆனுக்கு தஃப்ஸீர் -விரிவுரை என்ற பெயரால் அந்நியரிடமிருந்து காப்பியடித்த கருத்துக்களையும், தங்கள் சொந்த ஊகங்களையும், அந்நியரிடமிருந்து இரவல் வாங்கிய தர்க்கக் கலையையும் இஸ்லாத்தில் புகுத்தும் அளவிற்கு நிலைமை சீர்குலைந்தது. இப்படி அந்நிய தர்க்கக்கலையை தஃப்ஸீர்களில் புகுத்தியமையால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை காலஞ்சென்ற அறிஞர் அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் தன்னுடைய ”தர்ஜுமானுல் குர்ஆன்” முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
“”நபிதோழர்களின் இறுதிக் காலத்திலேயே ரோமானிய, பாரசீக கலாச்சாரங்கள் அரேபியாவில் பரவத் தொடங்கின. அதோடு, கிரேக்க தத்துவ நூல்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. அதனால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலைகள் மக்க ளிடையே பரவத் தொடங்கியதும், இயற்கையான அரபி மொழி நடையை உள்ளங்கள் வெறுக்கத் தொடங்கின. எனவே, குர்ஆனின் சொல் ஒரு தட்டிலும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலை மறு தட்டிலும் வைக்கப்பட்டு நிறுத்துப் பார்க்கப்பட்டன. ஆனால் குர்ஆனின் நடை வேறு; மற்றவைகளின் நடை வேறாகும். வேறுபட்டவைகள் இரண்டினை ஒன்று சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்டன. இதனால் குர்ஆனின் விளக்கங்கள் அவர்களால் உருவாக்கப்பட்ட நியதிகளுக்கு ஏற்றவாறு தரப்பட்டன. அந்நியர்களின் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு இஸ்லாமிய கலாச்சாரங்கள் திரிபடைந்தன.”
தத்துவங்களும், தர்க்கக் கலையும் இஸ்லாத்தில் நுழைந்தன :
அதோடு மட்டுமல்லாமல் தர்க்கக்கலை (Logic) முஸ்லிம்களின் மத்தியில் புகுந்து அவர்களை மார்க்க விஷயங்களில் குழப்பத்திலும், சந்தேகத்திலும் ஆழ்த்தியது. தர்க்கவியலும், தத்துவங்களும் (Philosophy) சரிவரக் கற்பிக்கப்பட்டால் இத்தகைய குழப்பமும், சந்தேகமும் நீங்கிவிடும் என்ற நோக்கத்துடன் அக்கலைகள் மேற்கூறப்பட்ட கலாசாரங்களில் போதிக்கப்படலாயின. அப்பாஸிய கலீஃபாக்களின் காலத்தில் தர்க்கக்கலை உச்சநிலையை அடைந்திருந்தது.
பொதுவாக முஸ்லிம் நாடுகளின் (அரபு நாடுகளின்) நிலை இவ்வாறிருக்க இமாம் கஸ்ஸாலி பிறந்த நாடான ஃபாரசீகத்தின் (ஈரான்) நிலை எவ்வாறிருந்தது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். பாரசீக மக்களிடம் ஏற்கனவே பாரசீகத் தத்துவங்கள் புரையோடிப் போயிருந்தது மட்டுமல்லாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில் தனி மனித ஆராதனைக்காக இஸ்லாத்தினின்றும் பிரிந்து சென்ற ஷீஆ பிரிவினரின் கற்பனைக் கட்டுக்கதைகளும் ஆழமாக வேரூன்றி இருந்தன. இந்த ஷீஆ பிரிவினர் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக இறங்கினவோ அவற்றை விட்டு மாற்றுப் பொருள்கள் கற்பித்து திரிக்கலானார்கள்.
நபி மொழிகளுக்கு பொருத்தமற்ற தமது வியாக்யானங்களைப் பரப்பினார்கள். அப்படியும் தங்கள் தவறான நோக்கம் நிறைவேறத் தடங்கள் ஏற்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் பல இலட்சக்கணக்கான பொய்யுரைகளை ஹதீஸ்களென இட்டுக் கட்டிப் பரப்பலானார்கள். இந்த ஷீஆ பிரிவினரின் தவறான போதனைகள் ஃபாரசீக (ஈரான்) மக்களை வெகுவாகக் கவர்ந்தன. அந்த நாடு ஷீஆ கொள்கையால் ஆட்கொள்ளப்பட்டது. அங்கு ஷீஆக்கள் பரப்பி விட்ட பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மிக வேகமாகப் பரவியிருந்தன. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் இமாம் கஸ்ஸாலி அங்கு ஹிஜரி 450ல் (கி.பி.1058) பிறந்தார்.
இமாம் கஸ்ஸாலி இயற்கையிலேயே அதிபுத்திசாலியாக இருந்தார் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் அவருக்கு சிறந்த மதி நுட்பத்தையும், பேச்சு வன்மையையும், வாதத் திறமையையும் கொடுத்திருந்தான். அன்றைய கால சூழ்நிலைகளுக்கேற்றவாறு இமாம் கஸ்ஸாலி தன்னைத் தயார் செய்து கொண்டார். சிறு வயதிலேயே ஃபாரசீக நாட்டில் பரவியிருந்த பல்வேறு கலைகளைக் கற்று அவற்றில் தலைசிறந்த மேதையானார். அவரது காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களும், ஃபாரசீக தத்துவங்களும், தர்க்கக் கலையும் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தன என்று பார்த்தோம். அந்நிய தத்துவங்களுக்கு ஒத்துப்போகும் விதத்தில் ஷீஆக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் பொய்யான ஹதீஸ்களைப் புனைந்து பரப்பி விட்டிருந்ததையும் பார்த்தோம்.
இவை அனைத்தையும் கற்று மாபெரும் அறிஞராக மதிக்கப்பட்டார் இமாம் கஸ்ஸாலி. கல்வித் துறையிலும், கலைத்துறையிலும் மக்களிடையே பிரபல்யமானவற்றை ஒருவர் கற்று, அவற்றில் தேர்ச்சியும், கீர்த்தியும் மிக்கவரானால் அவரை பேரறிஞராகக் கருதி மக்கள் மதிப்பதும், பாராட்டுவதும் மரபே. இன்றும் கூட கவைக்குதவா கலைகளைக் கற்று, அவற்றால் சிறப்புடன் திகழ்ந்தவர்களை “”பேரறிஞர்” என்று மக்கள் வாய் நிறைய அழைப்பதையும், வானளாவப் புகழ்வதையும் பார்க்கத்தானே செய்கிறோம்.
இந்த நிலையில் இமாம் கஸ்ஸாலி இஸ்லாத்தின் சிறப்பை மக்களுக்கு தெளிவுபடுத்துவதாக நம்பிக் கொண்டு தத்துவ அடிப்படையிலேயே இஸ்லாத்தை வளர்க்க முற்பட்டார். இதற்கு ஷீஆக்களால் புனையப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் அவருக்குப் பெரிதும் உதவின. இந்த பொய்யான ஹதீஸ்கள் அந்நியர்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டு அவற்றிற்கு நபிமொழிகள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட பொய்யான ஹதீஸ்களின் அடிப்படையில் தனது வாதங்களை இமாம் கஸ்ஸாலி எடுத்து வைத்தாலும், தனது மதி நுட்பத்தாலும், தர்க்க வாதத்திறமையாலும் எதிரிகளை முறியடித்து வெற்றி வாகை சூடினார். இது அவருக்கு இஸ்லாமிய உலகில் ஒரு தனிப் பெரும் புகழையும் ஸ்தானத்தையம் ஏற்படுத்திற்று. அவரது அறிவாற்றலாலும், பேச்சு வன்மையாலும் பெரிதும் கவரப்பட்ட அமைச்சர் நிஜாமுல் முல்க் இவரை இவரது 34ம் வயதில், தாம் நிறுவிய நிஜாமிய்யா கல்லூரியின் முதல்வராக நியமித்தார்.
இளம் வயதில் இவர் பெற்ற இந்த உயர் பதவியானது பலருக்கு இவர்மேல் பொறாமையை ஊட்டினாலும், அதற்கு மாறாக வேறு பலரிடம் அளவு கடந்த மதிப்பையும் பெற்றுத்தந்தது. நிஜாமிய்யா மதரஸாவின் பாடதிட்டங்களை நாம் முன்னர் குறிப்பிட்டது போல், இவர் பெற்றிருந்த தத்துவம், தர்க்கக் கலை (பல்ஸஃபா, மன்திக்) போன்ற கலைகளைக் கொண்டு நிரப்பினார். சுமார் ஐந்தாண்டுகள் நிஜாமிய்யா மதரஸாவின் தலைமைப் பொறுப்பில் மிகத் திறம்பட சேவையாற்றி பேரும் புகழும் பெற்றார். இவரது புகழ் இஸ்லாமிய உலகம் முழுவதும் பரவி இருந்தது. இஸ்லாமிய மார்க்க ஞானத்திலும், சட்டங்களிலும் அதிகாரப் பூர்வமான வல்லுநர் (Authority) என்று முஸ்லிம்கள் இவரை நம்பிச் செயல்படலாயினர்.
சூஃபிஸம் இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற மூலகர்த்தா யார்?
இந்த நிலையில், இவரது 38ம் வயதில் இறை ஞானமே உண்மையான அறிவு என்றும், அந்த இறை ஞானத்தை அடையும் வழி துறவறத்தை மேற்கொள்வதே என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. தனக்குக் கிட்டியுள்ள உயர்பதவி, கீர்த்தி, புகழ் இவற்றைத் துறந்து செல்வதா? என மனம் அங்கலாய்த்தாலும் துறவறத்தை மேற்கொண்டால் அன்றி “முக்தி’ பெற முடியாது என்றும் தூண்டியது.
அந்நிய மதவாதிகளின் கொள்கைகளையும், தத்துவங்களையும் கற்று அவற்றில் தன்னிகரில்லாத அறிஞர் என ஏற்றுக் கொள்ளப்பட்டவருக்கு இஸ்லாத்திற்கு முரணான குர்ஆனும், ஹதீஸும் மறுக்கின்ற துறவறம்தான் ஈடேற்றத்தற்குரிய வழி என்ற விகற்பமான எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தான். பொதுவாகத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றிலேயே ஊறிப்போனவர்களை அவர்கள் அறியாமலேயே அவை அடிமையாக்கி விடும் என்பது உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும்.
போதை வஸ்துகளை உபயோகிப்பவன் இறுதியில் அவற்றிற்கு எப்படி அடிமையாகி விடுகிறானோ, அதேபோல் இந்தத் தத்துவங்களும் மனிதனுடைய மதியை மயங்கச் செய்து, போதையை உண்டாக்கி அடிமையாக்கிக் கொள்ளுகின்றன. போதைப் பொருள்கள் மனிதனது சிறு மூளையைப் பாதித்து, மதியை மயக்கி, அவனை நிலை குலையச் செய்து, ஏதோ ஒரு உயர் ஞானத்தைப் பெற்றது போல்-மாயத் தோற்றத்தை உண்டாக்குவது போல், மாற்று மதங்களிலுள்ள சில பயிற்சி முறைகளும் மனிதனது மதியை மயக்கி, அவனை நிலைகுலையச் செய்து உயர்ந்ததொரு மெஞ்ஞானத்தில் இருப்பதாக அவனை நம்ப வைக்கின்றன.
இதனால்தான் மாற்று மதவாதிகள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தங்களது மதங்களில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டு செயல்படுகின்றனர். மாற்று மதவாதிகளின் சுலோகங்களை ஒட்டி அரபி சொற்றொடர்களால் ஆன சுலோகங்களைக் கூறும் பயிற்சி முறைகளைக் கையாண்டு, மதிமயங்கி தன்னிலை இழந்து, உயர்ந்த ஞானத்தில் (மஃறிஃபா) இருப்பதாக நம்பச் செய்வதுதான் தஸவ்வுஃபாகும் (சூஃபிஸம்). இத்தகைய பயிற்சி முறைகள் மூலம் இந்த நிலையை அடைய முடியாத ஷைகுகள் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை உபயோகிப்பதன் மூலம் மதிமயங்கி தன்னிலை இழந்து, உயர்ந்த ஞானத்தில் (மஃறிஃபா) மூழ்கி இருப்பதாக மனப்பால் குடிப்பது நமது இக் கூற்றுக்குத் தக்கச் சான்றாகும்.
இமாம் கஸ்ஸாலி போன்றோர் கஞ்சா, அபினை பயன்படுத்தினார்கள் என்று நாம் சொல்லவில்லை; அவ்வாறு யாரும் எண்ணி விட வேண்டாம். போதைப் பொருள் உட்கொண்டு அடையும் மயக்க நிலையைப் போன்ற ஒரு நிலையை அவைகளை உபயோகிக்காமல், சில பயிற்சிகள் மூலம் அடைந்தார்கள் என்றே சொல்லுகிறோம். இதனைப் பின்னால் விரிவாக விளக்குவோம். ஆக ஹிஜ்ரி 488ல் தனது 38வது வயதில் கம்பளிப் போர்வை அணிந்து, காலில் செருப்பில்லாமல், மாற்று மதவாதிகளைப் போல் துறவறம் பூண்டு வீடும் நாடும் துறந்து காடு சென்றார் இமாம் கஸ்ஸாலி.
மாற்று மத தத்துவங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து, அவற்றை மேற்கொண்டதன் விளைவாக அவற்றிற்கு அடிமையாகி இஸ்லாத்திற்கு முரணான துறவறத்தை இமாம் கஸ்ஸாலி மேற்கொண்டது இஸ்லாமிய உலகின் போக்கையே பயங்கரமாக மாற்றி விட்டது. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகு அவரையே வழிகாட்டியாக நம்பி இருந்தது.
இஸ்லாமிய மார்க்கத்தின் அதிகாரப் பூர்வமான இமாம் என முஸ்லிம்களால் கணிக்கப்பட்டார் என்ற விபரங்களை முன்பே பார்த்தோம். எனவே இமாம் கஸ்ஸாலிக்கு முன்பே மாற்று மத தத்துவங்களும், கலைகளும் முஸ்லிம்களிடையே ஊடுறுவ ஆரம்பத்ததிலிருந்தே தக்லீதும், சூஃபிஸ மும் (துறவறம்) இஸ்லாத்தில் நுழைந்திருந்தும் அவற்றிற்கு இஸ்லாமிய உலகின் ஆதரவோ, அங்கீகாரமோ சட்டப்பூர்வமாக கிடைக்கவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லாமலிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பையும், அங்கீகாரத்தையும் இமாம் கஸ்ஸாலி துறவறத்தை மேற்கொண்டதன் மூலம் அரங்கேற்றி சட்டப்பூர்வமான அனுஷ்டானம் ஆக்கிவிட்டார்.
அவருக்குப் பின் சூஃபி இப்னு அரபி இஸ்லாத்தின் கோட்பாடாகவே சூஃபிஸத்தை பகிரங்கமாக செயல்படுத்தி, இறைவனும் அடியானும் இரண்டறக் கலப்பது சாத்தியமே என்று இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான அத்துவைதத்தை இஸ்லாத்தில் நுழைத்து விட்டார். இப்னு அரபியின் இந்த தகாத செயல்களுக்கு இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் குறிப்பாக இஹ்யா உலூமித்தீன் பெரிதும் ஊக்கமளித்தன. ஆக, இமாம் கஸ்ஸாலியும், சூஃபி இப்னு அரபியும் சேர்ந்து தக்லீதும், தஸவ்வுஃபும் இல்லாது இஸ்லாம் இல்லை என்ற தவறான, விபரீதமான நம்பிக்கையை இஸ்லாமிய உலகில் ஊடுறுவச் செய்து நிலைக்கச் செய்து விட்டனர்.
அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட மாற்று மதங்களின் கோட்பாடுகளான தக்லீது-பெரியார்களில் நம்பிக்கை கொண்டு அவர்களைக் கண்மூடிப் பின்பற்றல், தஸவ்வுஃப்-துறவறம் ஆகிய இரண்டையும் இஸ்லாத்தில் நுழைவித்து இஸ்லாத்தையும் வெறும் மதம் என்ற நிலைக்குத் தள்ளி அதன் பரிசுத்த நிலைக்கு மாசும்-களங்கமும் ஏற்படுத்தி விட்டனர்.
சென்று போனவர்களைப் பற்றிய சர்ச்சை நமக்கு அவசியமில்லை என்பதை “அவர்கள் சென்று போனவர்கள், அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே, அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்’ (அல்குர்ஆன் 2:134,141) என்ற வசனங்களில் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்தி விட்டான்.
பிழைகளைப் பொறுத்து உயர் பதவிகளையும் நல்க வல்லவன் அல்லாஹ். நமது கவலையும், கவனமும் அதுவல்ல. ஆனால் இமாம் கஸ்ஸாலியின் கருத்துக்களில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான நடைமுறைகளையும், போதனைகளையும் நாம் ஏற்று செயல்படுவதன் மூலம் நமக்கு வெற்றி கிடைக்குமா? நமக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்குமா? என்பது தான் நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
குர்ஆன், ஹதீஸில் இல்லாதவை, அவற்றிற்கு முரணானவை அனைத்தும் வழிகேடுகள். அவை நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை அல்லாஹ்வின் இறுதித் தூதர் தெளிவாக நமக்கு எச்சரித்துச் சென்றுள்ளார்கள். எனவே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நமது கடமையாகும். குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் விட்டுவிடுவதே அறிவுடைமையும், அவசியமும் ஆகும்.
முகல்லிதுகள் செய்தது என்ன?
ஆனால், மார்க்கத்தை வெறும் மதமாக்கி அதைப் பிழைப்பாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். உலகம் அழியும் வரை இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தவற மாட்டார்கள் என்பதை சாதாரணமானவர்களும் அறிந்து கொள்ள முடியும். எனவே இமாம் கஸ்ஸாலியும், சூஃபி இப்னு அரபியும் சேர்ந்து உருவாக்கிவிட்ட வாய்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
மார்க்கத்திற்கு முரணானவையாயினும் தங்களுக்கு உலகில் கொழுத்த ஆதாயத்தைத் தேடித்தரும் தக்லீதையும், தஸவ்வுஃபையும் இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். அந்த திட்டத் திற்கு இமாம் கஸ்ஸாலியால் புகழ் பெற்ற நிஜாமிய்யா மதரஸாவின் பெயராலேயே “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்ற பெயரைச் சூட்டி தக்லீதையும், தஸவ்வுஃபையும் தீனாக நிலை நாட்டிவிட்டனர். அவற்றைக் காலங்காலமாக மக்களுக்குப் போதித்து மக்களை மடமையிலாழ்த்தி, சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று இந்த ஸில்ஸிலயே நிஜாமிய்யா கல்வித் திட்டம் பரம்பரை பரம்பரையாக -வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்று அதனைச் செயல்படுத்துகிறவர்களுக்கு ஒருக் கால் அதன் கெடுதிகள் தெரியாதிருக்கலாம். ஆனால் அதன் கெடுதிகள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்து விளக்கப்பட்டப் பின்பும், அவற்றைத் தெரிந்து கொண்டே வீண் பிடிவாதத்துடன், இது காலம் வரை வாழ்ந்த தலைவர்களெல்லாம், பெரியார்களெல்லாம் மடையர்களா? நரக வாதிகளா? என்ற முறையற்ற, தேவையற்ற வினாக்களை எழுப்பி அறிந்து கொண்டே அழிவைத் தேடுவதோடு, பொது மக்களையும் அழிவுறச் செய்வது தான் நமக்கு வேதனையைத் தருகிறது.
இவர்களின் இந்த வினாக்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்டவர்களின் வினாக்களாகும்.
அல்லாஹ்வின் கோபத்திற்காளாகி நரகை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டவர்களின் வினாக்கள் இவை என்பதை அல்குர்ஆனின் 2:170, 33:66,67,68 ஆகிய வசனங்கள் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.
“”அல்லாஹ் இறக்கி வைத்ததையே பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் 2:170)
“”நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “”ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக் கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” (என்று கதறுவார்கள்)”.
“”எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” (என்றும் அவர்கள் கதறுவார்கள்).
“”எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!” (எனக் கதறுவர்). (அல்குர்ஆன் : 33: 66,67,68)
இப்படிப்பட்ட வினாக்களை எழுப்பிய அபூலஹப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தகப்பனாராக இருந்தும் எவ்வளவு கடுமையாக அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான் என்பதற்கு குர்ஆனின் 111-ம் அத்தியாயம் தக்க சான்றாகும்.
“”அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும், அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு பயன்படவில்லை; விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்; விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறு தான் (அதனால் அவளும் அழிவாள்)”. (அல்குர்ஆன் 111: 1-5)
தவறுகளை உணர்ந்ததும் திருந்துபவர்களே மனிதர்கள் :
மனிதன் தவறுகள் செய்யலாம். ஆனால் அவை தவறுகள் என உரிய ஆதாரங்களுடன் நிலை நாட்டப்பட்டால், அதனை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்பவனே மனிதனாவான், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் திருந்தாதவன் மனித னாக இருக்க முடியாது. அவன் மிருகத்திற்குச் சமம். இல்லை, மிருகங்களை விட இழிவான நிலையிலுள்ளவனாவான்.
“”நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள், இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள், இல்லை! அவற்றை விடவும் கேடுகெட்டவர்கள்; இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 7:179)
சுமார் 1000 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் தக்லீது, தஸவ்வுஃப் அடிப்படையிலான இமாம் கஸ்ஸாலியின் போதனைகளில் பெரும் நம்பிக்கை கொண்டு, அவற்றை அப்படியே உருப்போட்டு, அவற்றில் திளைத்து அதன் காரணமாக வீட்டைத் துறந்து இமாம் கஸ்ஸாலியைப் போல் நாடோடியாகச் சென்று தனிமையில் புலன்களையடக்கி தியானங்களில் மூழ்கினார் ஒருவர். அதன் பலனாக அவருக்கு சில காட்சிகளும், தோற்றங்களும் ஏற்படத்தான் செய்தன. இறைவன் தன்னுடன் பேசுவது போன்ற பிரமிப்பில் ஆழ்ந்தார். சுமார் 21 வருடங்களாக இப்படிப்பட்ட நடை முறைகளில் நம்பிக்கை வைத்திருந்தவர், அவை குர் ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணானவை என்பதை அறிந்தவுடன் அவற்றை விட்டு விலகி விட்டார்.
முன்னோர்கள் சென்ற வழியாயிற்றே என்று அவர் தயக்கம் காட்டவில்லை. நீண்ட காலமாக ஒன்றைச் சரிகண்டு செய்து விட்டு இப்போது அது தவறான வழி என்று சொன்னால் மக்கள் தன்னைப் பார்த்து சிரிப்பார்களே! ஏளனம் பேசுவார்களே! என்ற வீண் வரட்டு கெளரவத்திற்கு ஆளாகி, மனம் ஒப்புக் கொண்ட உண்மைகளை மக்களுக்குச் சொல்லத் தயங்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை நாம் நன்கு அறிவோம். இது போன்ற மனோ நிலை முஸ்லிம்கள் அனைவருக்கும் ஏற்பட்டு விட்டால் அதுவே போதும். அதாவது தங்கள் மனம் உண்மை என்று ஒப்புக் கொண்டதை வரட்டு கெளரவம் பார்க்காமல் பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்தால் அதுவே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இப்படிப் பல சகோதரர்கள் உண்மையை உணர்ந்து தரீக்காக்களை விட்டு விலகி வருகின்றனர். அவர்கள் தரீக்கா பயிற்சிகள் மூலம் சில காட்சிகளையும், தோற்றங்களையும் தங்கள் அனுபவத்திலேயே கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் பெயரால் இருக்கும் நடைமுறைகள், நமக்கு போதிக்கப்பட்ட கல்வி முறை இவற்றைக் கொண்டு உண்மைக்குப் புறம்பானவற்றை நம்பிக் கொண்டிருந்தாலும், அவை தவறானவை, நஷ்டத்தைத் தருபவை என்பதற்கு முஸ்லிம்கள் அனைவருமே ஒப்புக்கொள்ளும் குர்ஆனிலிருந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆதாரப்பூர்வமான நடை முறைகளிலிருந்தும் ஆதாரங்கள் தரப்படும்போது, அவை தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில், வீண் வரட்டு கெளரவம் காரணமாக அவற்றை மறுப்பவன் உண்மையில் குர்ஆனையும், ஹதீஸையும் மறுக்கிறான். எனவே, அவற்றை மறுக்கிறவன் குர்ஆன் 2:39 வசனப்படி நரகம் புகுவான். அந்நரகத்தில் என்றென்றும் தங்கி விடுவான். அதிலிருந்து விடுதலையே இல்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிச் செயல்படக் கடமைப்பட்டுள்ளார்கள்.
தக்லீதும், தஸவ்வுஃபும் குர்ஆன், ஹதீஸுக்கு நேர் முரணானவை என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் பார்த்துப் படிப்பினை பெற்றுக்கொள்வார்கள். தக்லீதையும், தஸவ் வுஃபையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித் திட்டத்தைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.
மெய்ஞானம் என்று இவர்கள் கூறுவது ஒரு போதையே :
ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃறிஃபத் என்று சூஃபிகள் மக்களை ஏமாற்றி வருவது ஒரு போதை நிலையே அன்றி உண்மையான இறைஞானமோ, மெய்யறிவோ இல்லை என்பதை விரிவாக விவரிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். இந்த முறையில் மெய்யறிவைப் பெற்ற பல நாதாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்களின் பெயரால் பல ஆச்சரியமான கதைகளைச் சொல்வார்கள். பல அதிசயங்களைச் செய்து காட்டியதாகவும், மறைவான விஷயங்களை அறிந்து சொன்னதாகவும், பிறருடைய உள்ளங்களில் ஏற்படும் எண்ணங்களை அறிந்து சொன்னதாகவும், இன்னும் இவை போல் பல நம்பமுடியாத சம்பவங்களைச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏடுகளில் எழுதி, பக்கங்களை நிரப்பி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் முன்னால் நடந்ததாகச் சொல்லுவார்களேயல்லாமல், இப்போது இந்தப் பயிற்சிகள் மூலம் இப்படிப்பட்ட ஆச்சரியகரமான செயல்களைச் செய்து காட்டுபவர்களை நேரடியாகக் காட்ட முடியாது. அப்படியே சிறிய சிறிய சம்பவங்களைச் செய்து காட்டினாலும் அவை கண்கட்டி வித்தை போன்ற கலைகளைச் சார்ந்தவையாக இருக்குமேயல்லாமல் மெய்ஞான நிலையில் ஏற்படும் கராமத்தாக இருக்காது. (காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடியொற்றிப் பின்பற்றி நடப்பவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.)
ஆயினும், அன்று போல் இன்றும் இந்த தரீக்கா முறைகளைச் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியானால் சென்ற நூற்றாண்டில் செய்து காட்டிய அதிசயங்களை இந்த நூற்றாண்டில் ஏன் செய்ய முடியவில்லை என்பதே கேள்வியாகும். இதில் அதிசயம் என்ன தெரியுமா? இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட அதிசயங்களை நேரடியாகச் செய்து காட்டத் தவறியவர்கள் அடுத்த நூற்றாண்டில், இந்த நூற்றாண்டில் வாழ்ந்த சிலரைப் பற்றி இப்படி கதைகளைக் கட்டிச் சொல்லத் தவற மாட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர்கள் கூறும் இறைஞானம்(மஃறிஃபத்), மெய்நிலை கண்டநிலை இவை அனைத்தும் இவர்களின் வாயிலும், இவர்களால் எழுதப்பட்ட ஏடுகளிலும் இருக்கின்றனவே அல்லாமல் உண்மையானவை இல்லை.
இவர்கள் மாபெரும் இறைநேசச் செல்வர்களாகவும், இறை ஞானம் மிக்கவர்களாகவும், மெய்நிலை கண்ட ஞானிகளாகவும், எதார்த்த நிலைகளை மிகச் சரியாக உணர்ந்தவர்களாகவும் நம்பியிருக்கும் இரண்டு பெரியார்கள், இந்த தக்லீதையும், தஸவ்வுஃபையும் இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைத்து, சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இமாம் கஸ்ஸாலி, சூஃபி இப்னு அரபி. இவர்கள் இருவரும் பெற்றிருந்தது உண்மையான இறைஞானமோ, மெய்நிலைகளோ இல்லை என்பதே உண்மையாகும் என்பதை ஆதாரங்களுடன் தருகிறோம்.
இமாம் கஸ்ஸாலி தனது 38ம் வயதில் துறவியாக நாட்டைவிட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டும், கடும் தவம் செய்து கொண்டும் இருந்ததற்குப் பிறகு- அவர்களது பாஷையில் சொல்வதானால் ஷரீஅத்-தரீக்கத்-ஹகீகத்-மஃறிஃபத் என்ற நான்கு படித்தரங்களிலும் முறையாக பயிற்சி பெற்று நடைமுறைப்படுத்தி, அவை மூலம் மெய்யறிவை பெற்று ஒவ்வொரு பொருளின் ஹகீகத்தை -எதார்த்த நிலையை அறிந்த நிலையிலேயே தனது பெயர் பெற்ற “இஹ்யா உலூமித்தீன்’ என்ற நூலை அரபி மொழியில் எழுதினார். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் சுருக்கத்தை “கீமியா ஸஆதத்’ என்ற பெயரில் தனது தாய் பாஷையான ஃபார்சியில் எழுதினார்.
அப்படிப்பட்ட மெய்ஞான நிலையில் எழுதப்பட்ட அந்த நூல்கள் எப்படி இருக்க வேண்டும்? உண்மைக்குப் புறம்பான, எதார்த்தத்திற்கு முரணான ஒரு சம்பவமாவது இடம் பெற்றிருக்க முடியுமா? அவர்தான் ஒவ்வொன்றுடையவும் ஹகீகத்தை-எதார்த்த நிலையை அறிந்தவராயிற்றே. ஆனால் அந்த நூல்களில் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, பலவீனமான ஹதீஸ்களும், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும், அடிப்படையேயில்லாத ஹதீஸ்களும் தாராளமாக இடம் பெற்றுள்ளன.
இது ஒரு சாதாரண விஷயமல்ல; “”நான் சொல்லாததை, நான் சொன்னதாக எவன் பொய் சொல்லுகின்றானோ அவன் ஒதுங்குமிடம் நரகமாகும்” என்ற கருத்தில் பல நபிதோழர்களால் அறிவிக்கப்பட்டு பெரும்பாலும் எல்லா ஹதீஸ் நூல்களிலும் காணப்படும் மிகமிக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்படி எவ்வளவு கடினமான ஒரு காரியம், மெய்நிலை கண்ட நிலையில் ஒருவர் இப்படிப்பட்ட பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை எல்லாம் தனது நூலில் எடுத்து எழுதி இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். அதுவும் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நேர்வழியை விட்டு விலகிச் சென்ற பிரிவினைவாதிகளான ஷீஆக்கள் இட்டுக்கட்டியவற்றை எல்லாம் தனது நூலில் எடுத்து எழுதி இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
இமாம் கஸ்ஸாலியின் இஹ்யா உலுமித்தீனில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் ஒத்த பல உன்னத கருத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். அதே சமயம் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் நேர் முரணான பல கருத்துக்களும் இருக்கின்றன. பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும், அடிப்படையற்ற ஹதீஸ்களும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. உதாரணமாக சில பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்.
“இஹ்யாவில்” அடிப்படையேயில்லாத ஹதீஸ்கள் :
“”ஒருமுறை இல்முடைய மஜ்லிஸுக்கு ஆஜராவது 1000 ரகஅத்து தொழுவதைப் பார்க்கினும் மேலானதாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
“”உலமாக்கள் அல்லாஹ்வின் அடியார்களுக்கு ரசூல்மார்களின் (அமீனாக்கள்) நம்பிக்கையாளர்களாவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்விரு அறிவிப்புகளும் இஹ்யாவில் இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ள மவ்ழூஃவான-இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
“”உலகத்தைத் துறந்து, மெளன நிலையை அடைந்துள்ள ஒருவரை நீங்கள் கண்ணுற்றால் அவரை நீங்கள் அணுகுங்கள். அவர் “ஹிக்மத்’ ஞானத்தை போதிப்பார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு கல்லாத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜ்ஜா)
ஒரு கூட்டத்தாரிடையே ஒரு ஷைகானவர் ஒரு சமூகத்தாரிடையே உள்ள நபியைப் போன்றவராவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்விரு அறிவிப்புகளும் லயீஃபானவை-பலகீனமானவை. இவையும் அதே இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சூரியன் சாய்ந்து விட்டதா? என்று கேட்டதற்கு அவர்கள் “இல்லை, ஆம்’ என்றார்கள். அதற்கு என்ன “இல்லை, ஆம்’ என்று கூறுகிறீர்களே? என்றார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “நான் இல்லை என்று கூறிய நேரத்திலிருந்து “ஆம்’ என்று கூறுவதற்குள் சூரியன் 500 வருடங்களின் தொலை தூரம் நகர்ந்து விட்டது’ என்று கூறினார்கள். இவ்வறிவிப்பு இஹ்யாவில் இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ளது. இது அடிப்படையே இல்லாததொன்றாகும்.
ஹிஜ்ரீ 725க்கும் 806க்கும் இடையே வாழ்ந்து வந்த ஹாபிழ் இராக்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இஹ்யா உலூமித்தீன் எனும் இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதியுள்ள நூலுக்கு தாம் எழுதியுள்ள அடிக்குறிப்பில் மேற்காணும் “மவ்ழூஃ, வயீஃப், அடிப்படை அற்றவை’ எனும் விபரங்களைத் தந்துள்ளார்கள். மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்கள் மாதிரிக் காகக் கொடுக்கப்பட்ட சில ஹதீஸ்களாகும். உண்மை என்னவென்றால் “இஹ்யாவின்’ பக்கங்களைப் புரட்டுகிறவர்கள் அதில் பக்கத்திற்குப் பக்கம் இப்படிப்பட்ட ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளதைப் பார்வையிட முடியும்.
“உலகிலுள்ள இஸ்லாமிய நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த “இஹ்யா உலூமித்தீன்’ மட்டும் பாதுகாக்கப்பட்டு விட்டால், மீண்டும் இஸ்லாத்தை உயிர்ப்பித்து விடலாம்’ என்று முகல்லிது மவ்லவிகளால் ஏற்றிப் போற்றப்படும் இஹ்யா உலூமித்தீன், தீனுடைய இல்முகளை உயிர்ப்பிக்கும் நூல் என்ற நூலின் உண்மை நிலை இதுதான். பக்கத்திற்குப் பக்கம் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட, அடிப்படையே இல்லாத ஹதீஸ்கள் தாராளமாக இடம் பெற்றாலும், குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் ஒத்த உன்னத கருத்துக்களும் அந் நூலில் இடம் பெற்றுள்ளன என்பதையும் அறிஞர்கள் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். இவற்றையும் இன்றைய அறிஞர்கள் சுட்டிக் காட்டவே செய்கிறார்கள்.
இஹ்யாவில் காணப்படும் சில உயர்ந்த கருத்துக்கள் காரணமாக அந்த நூலை பார்வையிட்டு அதிலுள்ள பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை, அடிப்படையற்ற ஹதீஸ்களை அடிக்குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் இவற்றைப் பரிசீலனை செய்கிறவர்கள் எப்படி இன்றைய மவ்லவிகள் தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் ஹதீஸ்கள் என்று சொல்லி வருகிறார்களோ அதேபோல் இமாம் கஸ்ஸாலியும் தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஹதீஸ்கள் என்று எழுதியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக தனது நூலில் ஹதீஸில் வந்திருக்கிறது என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறாரே அல்லாமல் அறிவிப்பாளர், அது காணப்படும் ஆதாரப்பூர்வமான நூல் எதனையும் அவர் குறிப்பிடவில்லை.
நான்கு இமாம்களின் காலத்தில் ஹதீஸ்கள் அனைத்தும் முறையாக பரிசீலனைச் செய்யப்பட்டு, ராவிகளின் வரிசை அவர்களின் தராதரம் இவை அலசப்பட்டு தரம் பிரிக்கப் பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் சில பலவீனமான ஹதீஸ்களை கையாண்டதில் யாரும் குறை சொல்ல முடியாது. அதுவும் முஸ்லிம்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அத்தியாவசிய காரியங்களின் நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளனர். ஆயினும் இப்படிப்பட்ட நிர்பந்த நிலையிலும் அவர்களில் யாரும் அறிந்து கொண்டே ஷீஆ பிரிவினரின் ஹதீஸ்களை எடுத்துக் கொண்டதே இல்லை. ஷீஆக்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் என்றால் தூக்கி எறிந்து விடுவார்கள்.
நான்கு இமாம்கள் மத்ஹபுகள் தோன்றுவதற்குக் காரணமாகவும் இல்லை; தங்களை தக்லீது செய்வதை திண்ணமாக மறுத்துள்ளார்கள் என்பதற்கு தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. பின்னால் வந்தவர்கள் தவறாக அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மத்ஹபுகள் அமைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். எனவே நான்கு இமாம்களையும் மத்ஹபுடைய விஷயத்தில் யாரும் குற்றப்படுத்த முடியாது. ஆனால் ஐந்தாவது சிறந்த இமாமாகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலியின் நிலை அப்படி அல்ல. அவரது காலமான ஹிஜ்ரி 450-505ல் பெரும்பாலான ஹதீஸ்கள் அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் தராதரம் யாவுமே பரிசீலனைச் செய்யப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டு விட்டன. முயற்சிப்பவர்களால் ஹதீஸ்களின் தராதரங்களை அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் இமாம் கஸ்ஸாலி இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாத அந்நிய தத்துவங்களையும், கலைகளையும் கற்பதில் ஆர்வம் காட்டிய அளவிற்கு ஹதீஸ்களின் உண்மை நிலைகளை அறியும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. நான்கு இமாம்களால் நிராகரிக்கப்பட்ட ஷீஆக்களின் கற்பனை ஹதீஸ்களை இவர் எடுத்துத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் எனில் அவரது நிலை எப்படி இருந்திருக்கும்? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அவர் இஹ்யாவில் எடுத்து எழுதிய ஷீஆக்களின் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தான் “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ கல்வித் திட்டப்படிக் கற்று ஸனது பெற்று வரும் மவ்லவிகள், இன்று மேடைக்கு மேடை குத்பா பிரசங்கங்கள் உட்பட தாராளமாக சர்வசாதாரணமாக எடுத்துக் கையாண்டு மக்களை வழிகெடுக்கிறார்கள்.
முயற்சி செய்தால் ஹதீஸ்ளை அறிந்து கொள்ள முடியும் :
நடுத்தர அறிவுள்ள ஒரு முஸ்லிம் சுமார் 5 ஆண்டுகள் முறையாக ஹதீஸ் நூல்களை ஆராய்வரானால் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். அவரிடம் அடிப்படையே இல்லாத ஒன்றை ஹதீஸ் என்று கூறி யாரும் ஏமாற்ற முடியாது.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் கூறும் தஸவ்வுஃப் முறையில் ஷரீஅத்-தரீக்கத்-ஹகீகத்-மஃறிஃபத் என்று பயிற்சி பெற்று மெஞ்ஞானத்தை – எதார்த்த நிலைகளைக் கண்டு கொண்ட இமாம் கஸ்ஸாலிக்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட, அடிப்படையே இல்லாத ஹதீஸ்களின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன? அந்தப் பயிற்சிகளின் மூலம் அவர் பெற்றது ஒரு போதை நிலையேயன்றி உண்மையான மெய்ஞானம் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிகிறதல்லவா?
அதேபோல் சூஃபி இப்னு அரபி இமாம் கஸ்ஸாலியின் நூல்களிலுள்ள இந்த குறைபாடுகளை அறியாமல் அவற்றை அப்படியே வேதவாக்காக எடுத்துச் செயல்படுத்தியுள்ளார். அவற்றை அடிப்படையாக வைத்து குர்ஆனுக்கும், ஹதீஸுக் கும் முரணான கருத்துக்களில் அவரும் நூல்கள் எழுதியுள்ளார் என்றால் அதன் பொருள் என்ன? அவரும் எதார்த்த நிலையை அறியாமல் போதை நிலயில் இருந்துள்ளார் என்பது புரிகிறதல்லவா?
அதே போல் அன்றிலிருந்து இன்று வரை இந்த இருவரின் இக்கொள்கைகளை ஏற்று, தஸவ்வுஃப் அடிப்படையில் ஷரீஅத்-தரீக்கத்-ஹகீகத்-மஃறிஃபத் என்று பயிற்சிகள் செய்து மெஞ்ஞானத்தில் உச்சத்தில் இருப்பதாக நம்புகிறவர்களில் யாராவது இமாம் கஸ்ஸாலியின் நூல்களில் பொய்யுரைகள் எல்லாம் ஹதீஸ்களாகப் பதியப்பட்டுள்ளன என்ற எதார்த்த நிலையை தங்கள் மெய்ஞானம் கொண்டு அறிந்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதிலையே பெற முடியும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர்கள் இப்பயிற்சிகள் மூலம் மெய்ஞானத்தை அடையவில்லை. ஒரு போதை நிலையை அடைந்து தடுமாறுகின்றனர் என்பதே உண்மையாகும். இவர்கள் கூறும் இப்பயிற்சிகளில் ஈடுபடாமல் முறையாக ஹதீஸ்களை ஆராய்கிறவர்கள் மட்டுமே “இஹ்யாவில்’ பொய்யுரைகளெல்லாம் ஹதீஸ்கள் என்று இடம் பெற்றிக்கும் எதார்த்த நிலையை அறிந்து தெளிவுபடுத்துகிறார்கள். இவ்வளவு தெளிவாக விளக்கியும் புரியாதவர்கள் புரிந்து கொள்ள ஒரு பயிற்சியைத் தருகிறோம்.
சந்தேக நிவர்த்திக்காக பரீட்சித்துப் பாருங்கள் :
இறைவனைப் பற்றியோ, மார்க்கத்தைப் பற்றியோ, மறுமையை பற்றியோ சிறிதும் எண்ணம் இல்லாமல் தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு கல்லை நினைத்துக் கொண்டு தங்கள் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி கல் கல் கல் என்றோ அல்லது அரபியில் ஹஜர் ஹஜர் ஹஜர் என்றோ இலட்சக் கணக்கில் ஜபித்துக் கொண்டிருந்து பார்க்கட்டும். அவர்கள் மார்க்கத்தின் பெயரால் பயிற்சி செய்து அடையும் இன்பத்தையும், மயக்கத்தையும் இவர்களும் அடைய முடியும். யார் வேண்டுமானாலும் இதனைப் பரீட்சித்துப் பார்க்கலாம். அதன் பின்பாவது இவர்கள் கூறுவது இறைஞானத்தைப் பெறும் உயர்ந்த முறை அல்ல. மனிதன் மதி மயங்கி நிலைகுலைந்து ஒரு போதை நிலையை அடையும் பயிற்சி முறையே என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
இமாம் கஸ்ஸாலியின் நூல்களே சான்று :
ஆரம்ப காலத்தில் ஹதீஸ்களை முறையாக இமாம் கஸ்ஸாலி பயிலவில்லை. அவரது இறுதி காலத்தில் தான் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்குள் மரணத்தைத் தழுவ நேரிட்டு விட்டது என்று அவரது சரித்திரக் குறிப்புகளில் காணப்படுகிறது. உண்மை நிலையை அல்லாஹ் அறிவான். ஆனால் அவரது நூல்களில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான பல சம்பவங்களும், பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும், அடிப்படையற்ற ஹதீஸ்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் நம்பிக்கை கொண்டு செயல்படுகிறவர்கள் நேர்வழி தவறிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். மிகத் தெளிவாகச் சொல்லுவதாக இருந்தால் அசலே இல்லாதவற்றை எல்லாம் இமாம் கஸ்ஸாலி ஹதீஸ் என்று எடுத்து எழுதியுள்ளார்.
இருட்டில் காட்டில் விறகு பொறுக்கியவர் கதை தான். விஷப் பாம்பையும் விறகு என்று கையால் பிடிக்க நேரிடும். அதே நிலை தான் இமாம் கஸ்ஸாலிக்கு ஏற்பட்டுள்ளது என்று உறுதிபடச் சொல்ல முடியும். இமிட்டேஷன் வைரத்தை ஒரிஜினல் வைரம் என நம்பி ஏமாறுகிறவர்களைத் தேர்ந்த அறிவுடையவர்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த நிலையில் கூழாங்கல்லை (அடிப்படையே இல்லாத ஹதீஸ்களை) ஒரிஜினல் வைரம் என்று நம்பிச் செயல்பட்டவரை மெய் நிலை கண்ட ஞானி-எதார்த்த நிலைகளை அறிந்து கொண்டவர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
நமது கூற்றுக்கு அவரது நூல்களே போதிய சான்றுகளாக இருக்கின்றன. அன்று நேர்வழியில் இருந்த அறிஞர்களால் இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகின. சில இடங்களில் அவை நெருப்புக்கிரையாக்கப்பட்டன. ஆயினும், நேர் வழி பிறழ்ந்து செல்பவர்களுக்கே மக்களின் ஆதரவு எளிதாகவும், அதிகமாகவும் கிடைக்கும். அந்த அடிப்படையில் இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் இஸ்லாமிய உலகில் உறுதியானதொரு இடத்தைப் பெற்றுக்கொண்டன.
இமாம் கஸ்ஸாலியை அளவு கடந்து நேசித்தோம் :
இவ்வாறு நாம் எழுதியுள்ளதைப் பார்க்கும் இமாம் கஸ்ஸாலியின் அபிமானிகள் நம்மீது அளவு கடந்து ஆத்திரப்படுவார்கள். ஒரு காலத்தில் அவர்களை விட அதிகமாக இமாம் கஸ்ஸாலி மீது பற்றும், பாசமும் வைத்திருந்தோம் என்பதைச் சொல்லிக் கொள்கிறோம். அவரது நூல்கள் தமிழில் வெளி வந்தவை அனைத்தையும் பெரும் விருப்பமுடன் படித்தோம். அவற்றில் நம்பிக்கையும் வைத்திருந்தோம்.
1981-ல் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது, ஹஜ்ஜின் செயல்முறைகள் எடுத்து எழுதப்பட்ட ”கீமியா ஸஆதத்” பாகத்தைக் கூடவே எடுத்துச் சென்றோம். ஜித்தா ஏர்போர்ட்டில் அது என்ன நூல் என்று கேட்டார்கள். ”கீமியா ஸஆதத்” என்று பெருமையுடன் சொன்னோம். உடனே அந்த அதிகாரி அந்த நூலை தூக்கி எறிந்தார். அது ஒரு மூலையில் போய் விழுந்தது. அப்போது எமது மனம் பதபதைத்து வேதனைப்பட்டது; பின்னரே உண்மை நமக்குப் புலப்பட்டது.
குர்ஆன், ஹதீஸைப் பார்க்கும்போது, அவரது நூல்களில் அவற்றிற்கு நேர்முரணானவை நிறைந்து காணப்படும்போது நாம் என்ன செய்வது? அல்லாஹ்வின் மீதுள்ள முஹப்பத்தை விட, அல்லாஹ்வின் ரசூலின் மீதுள்ள முஹப்பத்தை விட, இமாம் கஸ்ஸாலி மீது அதிக முஹப்பத்து வைக்கச் சொல்லுகிறார்களா? அப்படிச் செய்தால் அவனை அல்லாஹ் எங்கே அனுப்புவான்? நேராக நரகம் புக நேரிடும் என்று அறிந்து கொண்ட பின்பும் அப்படி முரட்டு முஹப்பத்து வைக்க முடியுமா? விஷத்தை விஷம் என்று நன்கு தெரிந்து கொண்டே குடிப்பவர்கள் நம்மில் இருக்கிறார்களா? அப்படிப்பட்ட அறிவீனமான செயலே குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான இமாம் கஸ்ஸாலியின் போதனைகளைப் பின்பற்றுவதாகும். இந்த விளக்கமே எம்மை அதை விட்டும் விலகச் செய்தது.
அரபி மதரஸாக்களில் பாடும் கவி :
இமாம் கஸ்ஸாலியின் போதனைப்படியே தக்லீதையும், தஸவ்வுஃபையும் ஆதரித்து இன்றைய நம் நாட்டு அரபி மதரஸாக்கள் “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ கல்வித் திட்டத்தின்படி நடந்து வருகின்றன. சில மதரஸாக்களில் தினசரி ஓதப்படும்.
”நவ்விர் இலாஹஸ்ஸமா கல்பல் கரீபிகமா, நவ்வர்த்த கல்ப இமாமின்னாஸி கஸ்ஸாலி.” என்று ஆரம்பிக்கும் கவிகள் நமக்கு இதை ஊர்ஜிதம் செய்கின்றன. அதாவது இமாம் கஸ்ஸாலிக்குக் கொடுத்த கல்வி அறிவையும், விளக்கத்தையும் தங்களுக்கும் கொடுக்கும்படி துஆ செய்து தினசரி கவி பாடுகிறார்கள்.
அல்லாஹ்வோ “ரப்பி ஸித்னீ இல்மா’ -இறைவா எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக! என்று கேட்கும்படி அழகாகக் கற்றுத் தருகிறான்.
துஆ கேட்கும் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரை கீழ்வருமாறு அமைந் துள்ளது.
ஒருமுறை அப்துல்லாஹ்பின் முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தமது மகன் “யா அல்லாஹ்! நான் சுவர்க்கத்தில் நுழைந்தால், உன்னிடம் சுவர்க்கத்தின் வலப் புறத்தில் வெள்ளை மாளிகை ஒன்றை வேண்டுகிறேன்’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பதைக் கேட்டார்கள். உடனே “எனது மகனே! நீ அல்லாஹ்விடம் பொதுவாக சுவர்க்கத்தைத் தரும்படி கேட்பதோடு, நரகத்தை விட்டும் பாதுகாப்புச் செய்யும் படியும் பிரார்த்தனை செய்வீராக! ஏனெனில் துஆ கேட்பதிலும், ஒளு செய்வதிலும் அத்து மீறி நடக்கும் ஒரு கூட்டம் வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ நுஆமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: இப்னு மாஜ்ஜா, அபூதாவூத்)
இந்த குர்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் அறிபவர்கள் இப்படி துஆ கேட்பது எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், இமாம் கஸ்ஸாலி பெற்ற அறிவு அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற்றதா? என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் இவ்வாறு ஏன் துஆ கேட்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆக, அடிப்படையே இல்லாத ஒரு கல்வித் திட்டத்தை அமைத்துக் கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறதல்லவா?
முடிவுரை :
“ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ குர்ஆன், ஹதீஸுக்கு நேர்முரணான ஒரு கல்வித் திட்டமாகும்.
அதை விட்டு விடுபடுவதே அறிவுடைமையாகும்.
அல்லாஹ் அருள்புரிவானாக!
source: http://annajaath.com/?p=6308#more-6308