Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தந்தையின் சிறப்பும் உயர்வும்

Posted on May 30, 2013 by admin

  நூ. அப்துல் ஹாதி பாகவி  

[ தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள்   தந்தையை புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே சொந்தம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா 2283)]

தந்தையின் சிறப்பு

தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள்.

ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை. 

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

“ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080)

மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.” (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

1. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை,

2. ஒரு பயணியின் பிரார்த்தனை,

3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) “சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ.

இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார்.

அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை.

அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள் பொருளாதார உதவி செய்வதில்லை.

ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா?

உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள்.

தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே சொந்தம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன் சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். “இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளை” என்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன.

1. தொடர்படியான தர்மம்,

2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி,

3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை -என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின் பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

“என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!” என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

-நூ. அப்துல் ஹாதி பாகவி

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

72 + = 81

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb