நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு முதல் நுபுவ்வத் வரை
கி.பி. 517: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் காலையிலே பிறக்கிறார்கள்.
வயது 4: ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சைப் பிளந்து இதயத்தைப் பரிசுத்தப்படுத்தினார்கள். அத்தோடு செவிலித்தாயான ஹலீமாவிடமிருந்து தாய் ஆமினாவிடம் கையளிக்கப்படுகிறார்கள்.
வயது 6: யத்ரிப்பில் உள்ள அப்துல்லாஹ்வின் மண்ணறையைத் தரிசித்து மக்கா திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டு “அப்வா” எனும் இடத்தில் ஆமினா வபாத்தாகிறார். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாட்டனார் அப்துல் முத்தலிப் இனால் பராமரிக்கப்படுகின்றார்.
வயது 8: மக்காவில் பாட்டனார் அப்துல் முத்தலிப் மரணித்ததும் சிறிய தந்தை அபூதாலிபிடம் வளர்கிறார்கள்.
வயது 12: அபூதாலிப் ஷாமுக்கு செல்லும் போது “பஹீரா” எனும் துறவி இவர் இறுதி நபி (முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என முன்னறிவிப்புச் செய்கிறார்.
வயது 20: குறைஷ், கைஸ் கோத்திரங்களுக்கிடையில் ‘ஹர்புல் பிஜார்’ எனும் யுத்தம் நடைபெற்றது. ‘ஹல்புல் புழூல்’ எனும் முக்கியமானதொரு பாதுகாப்பு ஒப்பந்தம் அப்துல்லாஹ் பின் ஜுத்ஆன் என்பவரது வீட்டில் குறைஷித் தலைவர்களுக்கிடையில் நடைபெறுகிறது. இதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
வயது 25: கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) நாயகியின் வியாபார நடவடிக்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பங்கு கொள்கிறார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் விரும்பியபடி அவரையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
வயது 35: குறைஷியர் கஃபாவை புனர்நிர்மாணம் செய்கிறார்கள். அவர்களுக்கிடையே ஹஜருல் அஸ்வத் கல்லை யார் வைப்பது என்பது சம்பந்தமாக ஏற்பட்ட பெரும் பிணக்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமூகமாகத் தீர்த்து வைக்கிறார்கள்.
வயது 37: ஹிறா குகைக்கு அடிக்கடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று தயானத்தில் ஈடுபடுகிறார்கள்.
நுபுவ்வத் முதல் ஹிஜ்ரத் வரை
வயது 40: புனித அல்-குர்ஆன் நபியவர்களுக்கு இறங்கத் துவங்குகிறது. நுபுவ்வத் பணி இதனோடு ஆரம்பமாகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரகசியப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
வயது 44: ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் ஸஹாபாக்கள் மீதும் மக்கா குறைஷியரது துன்புறுத்தல் அதிகரிக்கிறது.
வயது 45: இரு குழுக்களாக ஸஹாபாக்கள் நபியவர்களின் கட்டளைப்படி ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்கிறார்கள்.
வயது 46: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், உமர் பின் கத்தாப் ஆகியோர் இஸ்லாத்தில் நுழைகிறார்கள்.
வயது 47: ரஸூலுல்லாஹ்வுக்குப் புகழிடம் அளித்ததற்காக பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் கூட்டத்தினர் அபூதாலிப் பள்ளத்தாக்கில் முஷ்ரிக்களால் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
வயது 50: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் மிகவும் பக்கபலமாகவும் நேசத்துக்குரியவர்களாகவும் இருந்த சிறிய தந்தை அபூதாலிபும், பின்னர் மனைவி கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் வபாத்தாகின்றனர். இவ்வருடம் ‘சோக வருடம்’ என அழைக்கப்படுகிறது. நபியவர்கள், கணவனை இழந்த நிலையில் ஹபஷாவுக்குச் சென்றிருந்த ஸஹ்தா பின் ஸம்ஆ வைத் திருமணம் செய்கிறார்கள்.
வயது 51: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவுக்கு வெளியே தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள். தாஇபுக்குச் செல்லும் வேளையில் காபிர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். மக்காவுக்கு வெளியே இருந்து ஹஜ்ஜுக்காக வரும் மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை எத்திவைக்கிறார்கள். இதனால் புதிதாக இஸ்லாத்தில் பலர் நுழைகிறார்கள்.
வயது 52: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் தொழுகை கடமையாக்கப்படுகிறது. யத்ரிபில் (மதீனா) இஸ்லாத்தை ஏற்றோருடன் நபியவர்கள் முதலாவது பைஅதுல் அகபா உடன்படிக்கை செய்கிறார்கள்.
வயது 53: இரண்டாவது பைஅதுல் அகபா இடம் பெறுகிறது.
ஹிஜ்ரத் முதல் வபாத் வரை
வயது 53: முஸ்லிம்கள் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்கிறார்கள். இது இஸ்லாமிய வரலாற்றிலேயே முக்கியமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அத்தோடு மதீனா சாசனம் வரையப்படுகிறது. (ஹி-1)
வயது 54: 1000 பேர் அடங்கிய குறைஷிக் காபிர்களுக்கும் 313 பேர் உள்ளிட்ட முஸ்லிம்களுக்குமிடையில் பத்ர் யுத்தம் நிகழ்கிறது. முஸ்லிம்கள் இப்போரில் வெற்றி பெறுகின்றனர். (ஹி-2)
வயது 55: 3000 பேர் கொண்ட குறைஷிக் காபிர்களுக்கும் 700 பேர் கொண்ட முஸ்லிம்களுக்குமிடையில் உஹத் யுத்தம் நடைபெறுகிறது. இதில் முஸ்லிம்களுக்கு காபிர்களால் பேரிழப்பு ஏற்படுகிறது. (ஹி-3)
வயது 58: பனூ முர்ரா, கத்பான், கிஸ்றா கோத்திரங்களை அடக்கிய 10000 பேர் காபிர்களுக்கும் 3000 பேர் அடங்கிய முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற கந்தக் யுத்தத்தில் முஸ்லிம்கள் வெற்றி பெறுகின்றனர். (ஹி-6)
வயது 59: ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்கள் 1400 பேரோடு உம்ராவுக்காக மக்கா செல்கிறார்கள். இடையில் முஸ்லிம்களுக்கும் மக்கா காபிர்களுக்கும் இடையில் ஹ
{தைபிய்யா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது. (ஹி-7)வயது 60: யூதர்களுடனான ‘கைபர்’ போரில் முஸ்லிம்கள் வெற்றி பெறுகின்றார்கள். (ஹி-8)
வயது 61: யுத்தம் எதுவுமின்றி முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணான மக்காவை வெற்றி கொள்கிறார்கள். ஹவாஸன், ஸகீப் கோத்திரக் காபிர்களுடனான ‘ஹூனைன்’ யுத்தத்தில் முஸ்லிம்கள் பெருந்தொகையினரோடு போராடி ஈற்றில் அவர்களை வெற்றி கொள்கின்றார்கள். (ஹி-9)
வயது 62: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றியில் அச்சம் கொண்ட ரோமர்கள் 40000 பேருடன் போருக்காக ‘தபூக்’ நோக்கி வருகிறார்கள். இவர்கள் 30000 பேரடங்கிய முஸ்லிம்களை எதிர்கொள்ளத் தயங்கி விரண்டோடுகின்றார்கள். (ஹி-10)
வயது 63: ரபீஉல் அவ்வல் 12 திங்கட் கிழமை நபிகளால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தூதுத்துவப் பணியை நிறைவு செய்தவர்களாக இம்மண்ணுலகை விட்டும் பிரிகறார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். (ஹி-11)
-அர்-ரஹீக் அல்-மக்தூம்