நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது?
(சீறாவின் இயங்கியல் நூலுக்கு விடியல்வெள்ளி சஞ்சிகையில் வெளிவந்த விமர்சனம்)
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றோடு இன்றைய இயக்கங்களை ஒப்பிடும் நோக்கில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூலாகும் இது.)
ஓர் இயக்கம் நடத்தும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான பேரணியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இன்னொரு இயக்கம் நடத்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
‘இஸ்லாம்தான் அரசாளும் கொள்கையாக வரவேண்டும்’எனவிரும்பும் ஒரு முஸ்லிம் இளைஞன் இந்தக்காட்சிகளைப் பார்க்கின்றான். அந்த இளைஞனின் உள்ளத்தில் இந்த இரண்டு இயக்கங்களில் எது முழுமையான இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் மட்டும் அது இஸ்லாமிய இயக்கம் என்ற வட்டத்திற்குள் வந்துவிடுமா என்று சிந்திக்கின்றான்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. எது இஸ்லாமிய இயக்கமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலாக வெளிவந்திருக்கும் நூலாக ‘சீறாவின் இயங்கியல்’ எனும் இந்த நூலைக் கருதலாம்.
நூலின் தலைப்பு ஒருவித கருத்து மயக்கத்தைக் கொடுத்து நேரடியாக அதன் பொருளைப் புரிந்து கொள்ளமுடியாமலாக்கினாலும் நூலின் ஆசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களின் சுருக்கமான முன்னுரை நூலின் உள்ளடக்கத்தை சாதாரண வாசகரும் புரிந்துகொள்ளும் விதமாக எளிமையாகச் சொல்லிவிடுகிறது.
பதினேழு அத்தியாயங்களாக விரியும் இந்தச் சிறிய நூலின் முதல் அத்தியாயம் வரலாற்றின் இயங்கியல் குறித்து சுருக்கமாகப் பேசிச்செல்கிறது.
இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் முன்மாதிரித் தலைவர்களை முன்னிலைப்படுத்தியே இயங்கி வருகின்றன. ஆனால் முன்மாதிரிகளுக்கெல்லாம் முன்மாதிரியான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாறு ஒன்றே அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்ற முன்மாதிரி. எனவே இஸ்லாமிய இயக்கங்கள் முன்னோக்க வேண்டியதும் படிப்பினைகள் பெறவேண்டியதும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலிருந்துதான் என்ற பீடிகையோடு நூலின் மையக்கருத்துக்குள் ஆசிரியர் நம்மை அழைத்துச் செல்கிறார்.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடங்கி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை எல்லா நபிமார்களதும் குறிக்கோளையும்; அவற்றை அடைய அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் இஸ்லாமிய வரலாற்றினூடாக விளக்கிச் செல்கின்றார் ஆசிரியர்.
இதைப் படிக்கும் வாசகர்களுக்கும் நாம் வாழும் காலத்தில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகளின் விளைவு எவ்வளவு தூரம் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
நபிமார்கள் தங்கள் தூதுத்துவத்தின் இலக்கினை அடையும் போராட்டத்தில் எதிர்ப்படும் பல சிறிய பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு பிரதான இலக்கினை அடைந்தனர் இந்த வழியில் இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் பொதுக் குறிக்கோள் ஒன்றையும் கிளை இலட்சியங்களையும் நிர்ணயம் செய்து பயணிக்க வேண்டும் என்கிறார் நூலின் ஆசிரியர்.
கிளை இலட்சியங்களையே இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய இயக்கவாதிகளுக்கு இந்த நூல் தங்களை மீளாய்வு செய்துகொள்ள ஒரு வாய்ப்பளிக்கிறது.
இலங்கையை மையமாகக் கொண்டு தற்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கிளை இலட்சியங்களை ஆசிரியர் பட்டியலிடுகிறார். நபி(ஸல்) அவர்களின் கிளைப் போராட்டங்களை விரிவாக விளக்காமல் ஓரிரண்டு வரிகளில் சுருக்கிக் கொண்டது வாசகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.
இந்த விவாதத்தின் இறுதியாக ஏழாவது அத்தியாயத்தில் கிளை இலட்சியங்களுக்கான ‘போராட்ட முறைகளையும்’ ஆசிரியர் தொட்டுச்செல்கிறார்.
அடுத்ததாக 8,9,10 வது அத்தியாயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொதுக் குறிக்கோளையும் கிளை இலட்சியங்களையும் மக்கா மதீனா காலகட்ட வரலாற்றின் வெளிச்சத்தில் தெளிவு படுத்துகிறது இந் நூல்.
‘சீறாவும் வன்முறையும்’ என்ற அத்தியாயத்தில் ஜிஹாதுக்கும் வன்முறைக்குமுள்ள வேறுபாட்டை எளிமையாக விளக்கிவிட்டு சர்வதேச அளவில் நடந்த புரட்சிகள் அதன் தாக்கங்கள் சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை விவரிக்கிறது.
தொடர்ந்து தற்கொலைத் தாக்குதல் பற்றிய அலசலும் உள்ளது. அதில் பலஸ்தீனில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதலைக் குறைத்து மதிப்பிட்டதைப் போன்று ஒரு கருத்து ஆசிரியரின் மொழிநடையில் தொனிக்கிறது. உலகின் மிகப் பலமுள்ள எதிரியான யூதர்களை எதிர்த்துப் போராடும் சூழ்நிலையில் தற்கொலைத் தாக்குதலையும் ஒரு போராட்ட வழிமுறையாகவே நாம் காணவேண்டும். யூஸுப் அல்கர்ளாவி போன்ற அறிஞர்களும் இதனைச் சரிகண்டுள்ளனர்
வேறொரு தலைப்பின் கீழ் செல்லும் இந்த நீண்ட விவாதத்தில் பலஸ்தீனைப் பற்றிய சுருக்கமான விமர்சனம், பலஸ்தீனப் போராட்டத்தை முழுமையாக அறியாத வாசகர்களுக்கு தற்போது அங்கு நடைபெறும் போராட்டம் பற்றி தவறான கண்ணோட்டம் ஏற்பட வழிவகுத்துவிடும்.
அடுத்ததாக, எதிரியை முறியடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், எதிரியின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்றவாறு, தற்காப்புப் போர் அல்லது தாக்குதல் நிலையோ மேற்கொள்ளுதல் போன்ற போராட்ட வழிமுறைகளை சீறாவின் வழிநின்று ஆசிரியர் விளக்குகிறார்.
இறுதி மூன்று அத்தியாயங்கள் எப்படி இயக்கம் மக்கள் மயப்பட வேண்டும் என்பதையும், அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட யுக்திகள், அவற்றினடியாகப் பெற்றுக் கொண்ட வெற்றிகள் ஆகியவற்றை விவரித்து தற்கால இஸ்லாமிய இயக்கங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றோடு இன்றைய இயக்கங்களை ஒப்பிடும் நோக்கில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூலாகும் இது.
அந்த வகையில் மிகவும் சுருக்கமாகத்தான் நூலாசிரியா; எழுதியிருக்கிறார். ஆனால் நூலின் ஆசிரியருக்கு சீறாவில் உள்ள புலமையைக் கருத்தில் கொண்டால் அவரால் விரிவான நூல் ஒன்றை வடிக்கமுடியும் என்பது புலனாகிறது.
உயர்ந்ததொரு கருத்தை முன்வைக்கும் போது எளிய தமிழில் சொன்னால்தான், மிகுந்த பயனை அளித்து மக்கள் திரள் இஸ்லாமியப் பாதையில் வழிநடக்க உதவும். மேலும் இலங்கைத் தமிழ் இங்குள்ள தமிழர்களுக்கு முற்றுமுழுதாக புரியும் என்று எதிர்பார்க்க முடியாது. இனிவரும் பதிப்புக்களில் தமிழை எளிமைப்படுத்தினால் ஆசிரியரின் ஆழமான கருத்துக்கள் இன்னும் அதிகம்பேரைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியரின் அருமையான இந்த முயற்சிக்கு அல்லாஹ்வின் நற்கூலிகள் அதிகம் உண்டு.
– இயக்கன்
(விடியல் வெள்ளி, 08,12, டிசெம்பர் 2007)
source: http://idrees.lk/?p=507