ஒரு பெண்ணின் கனவுகள்
நஜீப் கைலானி
என் மனைவியின் ஆசைகளுக்கோர் அளவில்லை. எதிர்காலம் பற்றிய அவளது கனவுகள் என்னை பெரிய சங்கடத்தில் மாட்டி விட்டிருக்கின்றன. நாம் வாங்கப்போகும் குளிரூட்டி, நான்கு தட்டுள்ள கேஸ் அடுப்பு, பெரியளவிலான தொலைக்காட்சிப் பெட்டிஸஎன அவள் பேசாத நாளே கிடையாது. வரவேற்பறையின் தளபாடங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற உணர்வு அதன் பக்கம் என் பார்வையைத் திருப்புகின்றது. படுக்கையறையைச் சொகுசு படுத்துவது பற்றிய அவளது நியாயமான கோபம் எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் அவள்தான் அதைத் தேர்ந்தெடுத்தாள் என்பதை மறந்து விட்டாள்.
ஆயிரம் ஜுனைஹை விட அதிக செலவை ஏற்படுத்தக் கூடிய அவளது திட்டங்களைக் கேட்கும்போது நான் எப்படி சங்கடப்படாமல் இருக்க முடியும்? எனது சம்பளமோ இருபது ஜுனைஹ்ஹைத் தாண்டவில்லை! எனக்கோ மூன்று பிள்ளைகள் வேறு!
என் மனைவி அவளது கனவுகளை நான் நிறைவேற்றச் சக்தி அற்றவன் என்பதை உணர்ந்து விட்டாள். எனது சம்பளமோ வருமானமோ அவள் விரும்புகின்ற எதிர்கால ஆடம்பர வாழ்கைக்கு ஈடுகொடுக்கப் போதாது. எனக்கு ஓய்வாகக் கிடைக்கும் நேரங்களையும் அவளது இந்த தொல்லையே வாட்டிக் கொண்டிருக்கிறது.
அவளது கோபவார்த்தைகள் என் செவிப்பறையை கடுமையான சாட்டையடியாய் வந்து தாக்குகின்றன. அல்லது என்னை இழிவு படுத்துகின்றன. நான் வீட்டுத்தலைவன் என்ற வகையில் அவள் என்னை நோக்கி வீசும் பாசாங்குகள் என் மதிப்பை உடைத்து சுக்குநூறாக்குகின்றன. அவை என் தன்னம்பிக்கையை எடுத்துச் செல்கின்றன. என் மனைவிக்கு முன்னால் நான் பலவீனன் என்பதை வெளிப்படுத்தவும் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது. உண்மையில், இந்த வீட்டினாலும் இந்த வீட்டில் இருப்பவர்களாலும் நான் மிகவும் நெருக்கப்படுகின்றேன். என் மனைவிக்கு முன்னால் நான் ஒரு கசப்பான, வெறுப்பான உணணர்வையே கொண்டிருக்கின்றேன்.
என் மனைவி தூரதிருஷ்டியற்றவள். குளிரூட்டி பற்றி கேஸ் அடுப்பு பற்றி, தொலைக்காட்சிப் பெட்டி பற்றி நாம் வசிக்கும் இந்த சிறிய அனக்ஸ் இன் தளபாடங்கள் பற்றி பேசும் அளவுக்கு அவள் எனது ஆறுதல் பற்றியோ எனது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியோ சிந்திப்பதில்லை. கல்வி அமைச்சில் எனது இழிகிதர் தொழில் மிகவும் கஷ்டமானது. எப்போதும் எனக்கு ஆறுதல் சொல்லக்கூடிய, வாழ்கையில் என் தொழிலில் சுமையைக் குறைக்கக் கூடியவர்களைச் சந்திக்க வேண்டுமென்றே நான் எப்போதும் உணர்கின்றேன்.
திருமண வாழ்வு ஒரு துரதிஷ்டம் பிடித்த ஒரு வாழ்வென்று நான் கருப்புக் கண்ணாடி போட்டுப் பார்க்கவாரம்பித்தாலும் நீ ஆச்சரியப்படக்கூடாது. எனவேதான் அவளை நான் சந்திக்கப்போகும் இன்றைய பொழுதையும் நான் சபித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரம் அவளைக் காணும்போது என் இதயம் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியம் வருகிறது. அவளைத் தரிசிப்பதற்கு என் மனம் ஏன் அவாக் கொள்கிறது? உறக்கத்திலும் விழிப்பிலும் நான் ஏன் அவளை இணைத்துக் கொண்டிருக்கின்றேன்?
வாழ்வின் துயரங்களுக்கு அப்பாலும் எப்பக்கமும் நிழல் பரப்பும் மரங்களைக் கொண்ட அடர்ந்த தோட்டமாக எம்மணவாழ்வு இருக்க வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். இதோ! என் மனைவிக்கு முன்னால் அந்த அடர்ந்த தோட்டம் கொடிய நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மூன்று பிள்ளைகளுமில்லாவிட்டால் துன்பமென்ற நோய்க்கிருமிகளுக்கு மத்தியிலிருந்து நான் விலகிப்போயிருப்பேன். அந்தோ! என் வேதனையை அல்லாஹ் மாத்திரம்தான் அறிவான். நான் எதிர்பார்க்கும் நன்றி, பாராட்டு வார்த்தைகள் அவளின் இரு உதடுகளுக்கு மத்தியிலிருந்து ஏளன வார்த்தைகளாகவோ அல்லது செவிப்பறையைத் தாக்கும் கொடிய சொற்களாகவோ தான் வெளிவருகின்றன.
ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவள் இப்படிச் சொன்னாள் :
“இவ்வருடம் கோடை விடுமுறையைக் கழிக்கச்செல்ல வேண்டும்”
நான் அமைதியாக அவளுக்குச் சொன்னேன்:
‘அப்படியென்றால் எமக்குபோதுமான பணத்தொகையை சம்பளத்திலிருந்து நான் சேமிக்கும் வரைக்கும் நீ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்”
அவள் அபயக்குரல் எழுப்பியதை நான் செவிமடுத்தேன். அவள் சொன்னாள்:
‘நீ கோழை! நீ இதைச் செய்ய மாட்டாய்”
நான் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன். நான் ஒரு பைத்தியகாரப் பெண்ணின் முன்னால் நிற்பதைப்போன்று எனக்கு தோன்றியது. அவள் இன்னும் சத்தம்போட்டுக் கத்தினாள்:
“இந்த இடத்தை விட எனக்கு சிறை மேலானது. நீ திருட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நீ நெகிழ்ந்து கொடுக்கக் கூடியஸ விவேகியாக இருக்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை. உன்னைப் போன்றவர்கள் காற்றிலிருந்து கிருஹ்காக சம்பாதிக்கிறார்கள். நீயோ சுறுசுறுப்பில்லாத சோம்பேறி”
இந்தமாதிரியான பேச்சுக்களில் அவளோடு வாதாடுவதற்கு என்னைத் தவிர வேறுயாரும் அங்கிருப்பதில்லை. நான் கவலையோடு சொல்லிக்கொண்டேன் இப்படி:
“துரதிஷ்டவசமாக என்னைப்போன்ற பொடுபோக்கான ஒரு கணவனுடன் வாழ நேர்ந்துவிட்டது”
அவள் தனது இரு உதடுகளையும் மடித்தாள். அவள் அன்று ஒரு புரட்சிக்காரியாக மாறினாள். அப்போது என் மனதில் ஒரு சிந்தனை பளிச்சிட்டது.
என் மனைவி சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது.? நான் ஓய்வாக, அமைதியாக இருக்கவே ஆசைப்படுகிறேன். சந்தேகமில்லை அவளும் என்னைப் போன்றே இருக்க விரும்புகிறாள். சில வேளை எம் உள்ளங்களுக்கு ஆறுதலாக இஸ்கந்திரியாவிலுள்ள கடற்கரையில் சில நாட்களை உல்லாசமாக கழிப்பதாக இருக்கலாம். அது வேதனைப்படும் எம் ஆன்மாக்களை அமைதிப்படுத்தவும் கூடும். அதே நேரம் இது பண ரீதியாக என்னை சிரமப்படுத்தக்கூடியது என்பதிலும் சந்தேகமில்லைஸ ஆனாலும் அதுவோர் அழகிய அனுபவம். அது நல்ல விளைவுகளையும் கூட கொண்டுவரலாம். யாருக்குத் தெரியும்? சூழ்நிலை சிறப்பாக அமையும் வரை எமது பிரச்சினையை சீர்படுத்துவதற்கும் என் மனைவிக்கு என் நிலையை விளக்குவதற்கும் பொறுமையோடும் புத்தியோடும் நடந்து கொள்வதற்கு உபதேசிப்பதற்கும் எனக்கொரு பொருத்தமான சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாதா?
நான் நேர்மையானவன் என்பதைக் காட்ட வேண்டுமெனில் கடற்கரையில் சில நாட்களையாவது கழிப்போம் என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் என் மனைவி தனது சிற்றப்பாவின் மகளைச் சந்திப்பதில் பிடிவாதமாயிருந்தாள். அவள் ஸ்கந்திரியாவிலுள்ள ஒரு மருத்துவரின் மனைவி. ஆனால் நானோ இந்த பயணத்தில் ஆர்வம் காட்டவில்லை. மருத்துவர் நல்ல பணக்காரன். என் மனைவிக்கு இப்பயணம் அவளது பயங்கரக் கனவுகளை ஞாபகப்படுத்துவதற்கு ஒரு வழியாக அமைந்து விடுமென்று நான் பயப்பட்டேன். ஆனாலும் அதனை என்னால் நிராகரிக்கத்தான் முடிந்ததா? அவளது பிடிவாதக் குணமும் வற்புறுத்தலும் நினைத்தால் சாதிக்க வேண்டுமென்ற அவளது முனைப்பும் என்னைத்தொடர்ந்தும் அவளுக்கு கட்டுப்படவும் அடிபணியவும் வைத்தது. மூன்று பிள்ளைகளுக்காகவும் குடும்பத்தின் நிம்மதி சந்தோஷத்துக்காகவும் நான் என் தன்மானத்தை விட்டுக் கொடுத்தேன்.
மருத்துவரின் வீட்டில் என் எண்ணம் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. தளபாடங்களின் கவர்ச்சி உள்ளத்தை ஈர்த்தது. என் மனைவி அங்குமிங்கும் தன் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் இரண்டும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியின் மீதும், பொன்னிறமான இறக்கைகள் மீதும் குவிந்திருந்தன. அவள் முகம் இருகிப்போயிருந்தது. பின்னர் சிற்றப்பாவின் மகளோடு வீட்டையும் அதன் தளபாடங்களையும் பார்வையிடுவதற்காக எழுந்து சென்றாள். என்னுள்ளம் பயத்தால் உறைந்து போனது. என் மனைவி கூறுவது என் காதுகளுக்குக் கேட்கின்றது.
‘உங்களுடைய குளிரூட்டி பராவாயில்லை. எமது குளிரூட்டியின் தரத்திலிருக்கிதுஸ ஆனால் டொக்டரின் அலுவலக அறை எனது கணவனின் அறையின் தரத்திலில்லை”
என் மூட்டுக்கள் நடு நடுங்கின. எம்மிடம் குளிரூட்டியுமில்லை, அலுவலக அறையுமில்லை பின்னர் பயணத்திலிருந்து மீண்டபோது என் காதில் முணுமுணுத்தாள்.
‘நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது குளிரூட்டியும் எனது அலுவலக அறையும், கேஸ் அடுப்பும், அலங்கார அறையும் இன்ன இன்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். நாமிங்கு கண்டதை விட உயர்வாக இருக்க வேண்டும்”.
நான் குழம்பிப்போனேன்.
‘நீ அதிதகம் பொய் சொல்கிறாய்”என்று அவளிடம் சொன்னபோது:
“வாயை மூடுஸநீ நாக்குத் தடுமாறி பேசிவிடாதே. என் சிற்றப்பாவின் மகளைவிட நான் தரத்தில் குறைந்தவள் என்று நீ வெளிப்படுத்த விரும்புகிறாயா? நான் துரதிஷ்டம் பிடித்தவள்”
இதற்கு முன் என் மனைவி அவளது அற்பக் கனவுகளால் என்னை தொந்தரவு படுத்திக் கொண்டிருந்தாள். இன்று அளவுக்கதிகமான பொய்களால் என்னைத் தொந்தரவுபடுத்திக் கொண்டிருக்கிறாள். நான் அதை கடுமையாக வெறுக்கிறேன். இன்று நான் அதற்கு கடுமையாக பயப்படுகிறேன். நான் எல்லாவற்றையும் மன்னிப்பேன். ஆனால் பொய்யைத் தவிர. அது முற்களும் கரடு முரடுகளும் நிறைந்த பாதை. முன்பை விட மிகச் சிறந்த முறைதான் நாம் இஸ்கந்திரியாவிலிருந்து திருமபி வந்தோம். இந்த அழகிய பயணத்தால் ஏற்பட்ட கடன் சுமையைத் தவிர வேறெந்தக் கவலையும் எனக்கிருக்கவில்லை. சிப்ராவின் மனப்பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு குடியிருப்புப் பகுதியிலே நாம் வசித்து வருகிறோம். டொக்டரும் அவரது மனைவியும் ஒரு நாள் மாலை நேரம் திடீரென்று எனது இல்லத்திற்கு விஜயம் செய்யப் போகிறார்கள் என்று எனக்கு கனவிலும் தோன்றவில்லை. நான் அவர்களை எனக்கு முன்னால் கண்ட போது வெட்கத்தால் கூனிக் குறுகிப் போனேன். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் வலிமையாக வரும் வரவேற்பு வார்த்தைகளைக் கூட என்னால் உச்சரிக்க முடியவில்லை. நான் என் மனைவியை திரும்பிப் பார்த்தேன். அதிர்ச்சிக்குள்ளான அவள் சிலைபோன்று ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். நான் உடனே சுய நினைவுக்கு வந்து இப்படிச் சொன்னேன்.
“வாருங்கள் எமது வீடு உங்களை வரவேற்பதற்கு லாயக்கற்றதுதான் என்றாலும்” என் பேச்சை என் மனைவி இடைமறித்து ‘இது எமது வீடு என்று உனக்கு யார் சொன்னது நாம் இந்த வீட்டில் குடியிருக்கின்றோம் ஆனால் லாயக்கற்றது. புதிய நகரத்தில் நாம் கட்டிக் கொண்டிருக்கும் புதிய அல்விலா வீட்டுக்கு குடிபெயர இருக்கின்றோம். உண்மையில் குளிரூட்டி, டெலிவிசன் போன்ற பல தளபாடங்களை இங்கிருந்து நகர்த்தி விட்டோம்ஸ
மண்டபத்தில் விரித்துக் கிடக்கும் விரிந்த கம்பலத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். நிறம் மங்கிய பலகை ராக்கையில் வைக்கப்பட்டிருக்கும் புராதன ரேடியோவின் மீது என் பார்வை விழுகிறது. சுத்தப்படுத்தி அவசரமாக வெள்ளை அடிக்க வேண்டிய அனெக்ஸின் சுவர்களைப் பார்க்கிறேன். நான் வார்த்தைகளை முனுமுனுத்தேன்.
“நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நான் உங்களைச் சிரமப்படுத்த விரும்பவில்லை உள்ளே வாருங்கள்”
அவ்விருவரும் அமைதியாக உட்கார்ந்தனர்.
கேஸ் விளக்கின் மணமும் அயலவர்களின் இறைச்சலும் வரவேற்பு வார்த்தைகளையும் விருந்தினரின் பதில்களையும் மிஞ்சிவிட்டன. என் மனைவி ஒரு பைத்தியக்காரியைப்போல வருவதும் போவதுமாக இருந்தாள். எமது மூன்று பிள்ளைகளும் இறைந்து கத்திக் கொண்டிருந்தார்கள். சிற்றப்பாவின் மகள் குரலை உயர்த்திப்பேசினாள்.
“புதிய நகரம் நீங்கள் வேலை செய்யுமிடத்திலிருந்து வெகுதூரமா?
அவள் எதையாவது பேச வேண்டும் என்று விரும்பினாள். எனது மனைவியின் பொய்கள் எமக்கேற்படுத்திய அவமானத்தையும் வெட்கத்தையும் அவள் நீக்க விரும்பினாள் என்று எனக்கு விளங்கியது. அவள் மிகவும் பண்பாடானவள். எமது தன் மானத்தை காயப்படுத்த அவள் விரும்பவில்லை. அவள் பிரியத்திற்கும் நற்குணத்திற்கும் முன்னால் நான் அற்பனாகிப்போனேன். ஆனாலும் என் மனைவி ஒவ்வொரு பேச்சின்போதும் விழிப்போடிருந்தாள். திடீரென்று அவளது குரல் உயர்ந்தது.
‘புதிய நகரம் அழகான இடம் அங்கே பஸ், மெட்ரோ வண்டி போக்குவரத்து மிகவும் இலேசானது. செகன்ஹேண்ட் வாகனமொன்றை வாங்கவும் நாம் முடிவுசெய்துள்ளோம்”
(யா அல்லாஹ்! இதென்ன சோதனையோ)
என் மனைவி பொய் சொல்வதில் பிடிவாதமாக இருந்தாள். அவளது பொய்கள் என் நரம்புகளை புண்படுத்தி என் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.
என் மனைவி நல்லதொரு பாடம் படிக்கவேண்டுமென மனதில் நினைத்துக் கொண்டேன்.
நான் என் காற்சட்டைப் பொக்கட்டில் கையை விட்டுக் கொண்டு பின்வருமாறு சொன்னேன்.
“என் மனைவி அதிகமா ஜோக்கடிப்பாள். இது நல்லதொரு அனெக்ஸ். குறைந்த பழைய கூலி. அவ்விலா என்பதற்கு அடிப்படையே கிடையாது. உண்மையில் என்மனைவி ஜோக்கடிக்க விரும்புகிறாள்”
என் மனைவி கண்டு பிடித்த அல்விலா என்ற பொய் ஸ்கந்திரியாவில் அவள் சொன்ன அனைத்துப் பொய்களையும் மறைப்பதற்கு எடுத்த ஒரே தீர்வாகும். இந்த பொய் வெளிப்பட்டதும் அவள் இன்னும் பொய்களை கண்டு பிடிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. எனவே சமயலறைப் பக்கம் விறைந்தாள். அவளது வாயில் நான் வாழ்நாளில் காணாத சிரிப்பொன்றைக் கண்டேன். அவள் என்னைப் பார்த்து அமைதியாகவும், உறுதியாகவும் இப்படிச் சொன்னாள்.
“அப்துல் சத்தார்! ஏன் இவ்வளவு பணிவாகப் பேசுகிறாய்? டொக்டரும் அவர் மனைவியும் நீ வாழ்கையில் சாதித்து விட்டாய் என்று மகிழ்வார்கள்’
நான் அவளைப் பார்த்துக் கத்தினேன்.
‘நீ கடுமையாகப் பொய் சொல்கிறாய்”
என்ன நடந்தது என்று எனக்கு மிகச் செரியாகத் தெரியாது. என் பார்வையை ஏதோ ஒரு திரை வந்து மூடுவது போல் இருந்தது. என் தலையில் ஏதோ ஒன்று இறைவது போல் இருந்தது. நான் மூச்சையற்று தலை சுற்றிக் கீழே விழுந்தேன். என் மனைவியின் கழுதை ஒப்பாரியைக் கேட்டு விழித்த போது அவள் வீட்டு வாயிலில் தென்பட்டாள். டொக்டரின் மனைவி அவளது தோளைப் பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். இதைச் சற்றும் எதிர்பாராத டொக்டருக்கு தர்ம சங்கடமாகப்போய் விட்டது.
என் உடலை வியர்வை மூழ்கடித்திருந்தது. நான் முணுமுணுத்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் வெளியேறப் பார்த்தது.
நானொரு ஏழைத் தொழிலாளி. ஏழ்மை ஒரு குறையல்ல. என்னை யாரும் ஏழை என்று கூற முடியாமல் நல்ல முறையில் நடந்து கொண்டால் எனது இருபது ஜுணைஹ் சம்பளமே எமக்கு தாராள்மாகப் போதும். என் நாளங்களில் இரண்டாம் முறையாக இரத்தம் கொதித்தது. நான் சுற்றி வளைத்துச் சொன்னேன்.
“என் குறை என்னவெனில நீ பொய் சொல்வது மட்டுமே”
என் மனைவி அவளது சிற்றப்பாவின் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். அவளை வெளியே அனுப்பி கதவைச் சாத்தினாள். வீட்டில் ஒரு சோக அமைதி நிழவியது. அனைவரும் கவலையுடன் தலையை குனிந்த வண்ணமிருந்தனர். நான் என் மனைவிக்கு பின்னால் சென்று அவளைத் தலாக் சொல்லிவிட்டதாக கூற முயற்சித்தேன் ஆனாலும் ஸ்தம்பித்து அப்படியே நின்று விட்டேன். மூன்று குழந்தைகளின் அழுகைச் சத்தம் என் காதுகளுக்குள் வந்து விழுகிறது. குற்றமற்ற அந்த பிஞ்சு முகங்களில் கண்ணீர் வழிகின்றது. நான் முணுமுணுப்போடு ஒரு செத்த புன்னகையை வரவழைத்துக் கொள்கிறேன்.
‘நீங்கள் கவனித்தற்கு மிகவும் நன்றி”
டொக்ரின் மனைவி அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.
“எல்லாம் நல்லபடி நடக்கட்டும். நீங்கள் இருவரும் சமாதானமாகும் வரை நாம் இங்கிருந்து அசைய மாட்டோம்”
என்னையும் மீறி வெளிப்பட்ட கண்ணீர்த் துளிகளை துடைத்துக் கொள்ள முயற்சித்தேன்.
source: http://idrees.lk/?p=290