Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள் அவர்களை அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான்”

Posted on May 24, 2013 by admin

அல்லாஹ் தம் மறையில்,

“அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள் அவர்களை அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான்” (அத்-தௌபா: 100)

 அல்லாஹ் அவனது அடிமையாக ஒருவரை ஏற்றுக்கொள்வதே பிறவிப் பலன் அடையக்கூடிய விஷயம். ஆனால் அந்த மக்களை திருப்தியுடன் தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் கூறுவது எவ்வளவு பெரிய விஷயம்…

வாருங்கள் அந்த உத்தமர்கள் யார் என்பதை காண்போம்.

 இவர்கள் தான் சஹாபாக்கள்..!

“பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிலர் வரலாறுகளே மக்களுக்கு பாடமாய் அமைகின்றன.”

தனிமனித உரிமைகளும், சுதந்திரங்களும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அநியாயங்கள் நூறு சதவீகித ஆஃபரில் விற்றுக்கொண்டிருந்த பரப்பரப்பான சூழல். கூடவே இலவச இணைப்பாக அடக்கு முறைகளும். நடக்கும் அவலங்களின் மீது கொண்ட வெறுப்பாலோ என்னவோ சூரியனுக்கே தாகம் எடுக்கும் அளவிற்கு உஷ்ணத்தை அந்த பாலை பெருவெளி வேகமாய் உமிழ்ந்துக்கொண்டிருந்தது

அந்த குரைஷிக்கூட்டத்தாரின் ஆவேச கூச்சலுக்கு மத்தியில் ஒருவர் இழுத்து வரப்படுகிறார். கொல்லப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக. மக்காவின் எல்லைக்கு வெளியே கொண்டு வரப்பட்டு தண்டனை தர தயாரான போது “நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா…?” இறுதியாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டு ரக்அத்துகள் தொழுதுக்கொள்ள மட்டும் என்னை விடுங்கள். பதில் பொருத்தமற்றும, பொறுமையாகவும் வந்தது. அவர் செய்வதை அறிய அனுமதியும் அளிக்கப்பட்டது.

அவர் நிதானமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதார். பிறகு, தன்னை கொல்ல குழுமி இருக்கும் மக்களின் பக்கம் திரும்பி ‘நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் தொழுகையை இன்னும் அதிகமாக்கியிருப்பேன்” என்று உரக்க கூறினார். பின்னர் அநியாயத்திற்கும் அதிகமாய் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார். கொலை செய்வதற்கு அந்த குரைஷிக்கூட்டாதாருக்கு “அவர் ஏற்ற இஸ்லாமே” பிரதான காரணமாக இருந்தது

நபித்தோழர் குபைப் இப்னு அதீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி நிமிடங்கள் தான் மேல விவரித்தவை. உதிரத்தால் எழுதப்பட்ட அவரது வாழ்வின் இறுதிப்பக்கங்கள் இப்படி தான் முடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அதன் பின் நடந்தவைகள் தான் படிப்பினை வாய்ந்தவைகள்

அந்த கூட்டத்தில் இச்சம்பவத்தை உற்று நோக்கிய ஒரு குரைஷி இளைஞரின் இதயத்தில் இஸ்லாம் எனும் விதை மெல்ல வளர தொடங்கியது. கொண்ட கொள்கையில் பிடிப்பு, நிதானம், வீரம், இறைவனுக்காக எதையும் துச்சமாக மதித்தல், என்னிலையிலும் உறுதி இப்படி தம் மரணத்தருவாயில் கூட அனைத்தையும் மிக சரியாக தன் கண் முன்னால் ஒருவர் செயல்படுத்திய விதம் நடு நிலைக்கொண்ட எவர் உள்ளத்தையும் சற்று உரசிப்பார்க்க தானே முற்படும்.

ஆம்! ஒரு சிறந்த மனிதரின் மரணத்தின் படிப்பினை அடுத்து ஒரு சிறந்த மனிதரை உருவாக்க வேண்டும் என்பார்கள். இதோ! குபைப் ரலியல்லாஹ்வின் மரணமும் மிக சிறந்த இன்னொரு மனிதரை உருவாக்கி சென்றது… வாருங்கள் அவரது வரலாற்றையும் சற்று அசைப்போடுவோம்…

சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. ஆட்சி தலைவர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு பட்டியலை தந்தது. அது ஹிம்ஸ் பகுதியில் வாழும் வறியவர்களின் பட்டியல். தலை நகரில் இருக்கும் ஜகாத் பொருட்களை வாங்கி செல்வதற்காக வந்த குழு அவர்கள். வந்த அனைவரும் கலிஃபாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு குழப்பம் அதில் ஒரு பெயர் விளங்கவில்லை. பளிச்சென கேட்டார் கலிஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு.

“யார் இந்த ஸயீத்?”

“எங்கள் அமீர்” என்றனர். வந்த அனைவரும் அமீருல் மூமினிடம்

“என்னது, உங்கள் கவர்னர், அமீர் ஏழையா?” என்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கேள்வி பல ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.

“ஆம்!. அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுப்புகள் நெருப்பின் வாசத்தை கூட நுகர்ந்ததில்லை” என்று கலிஃபாவின் ஆச்சரியத்திற்கு மேலும் பல ஆச்சரியக்குறிகளை ஏற்படுத்தினர் வந்தவர்கள்.

மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? யோசித்த மறுகணமே அவர்களையும் அறியாமல் அழ தொடங்கினார்கள் கலிஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு! ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, “என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்”.

அப்பணத்தை கூட அவர் வாங்கவில்லை என்பது வரலாற்றின் இன்னொரு பக்கங்கள் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு பகுதியின் ஆளுனரின் நிலை கண்டு உமர் ரலி மனம் மட்டுமல்ல நம் மனமும் ஏனோ நிலைகுலைந்து தான் போகின்றன..

இவரின் அத்தகைய எளிய வாழ்க்கைக்கு என்ன காரணம்…? இஸ்லாம் தரவிருக்கும் இமாலய சொர்க்கத்திற்கு இவ்வுலக வாழ்க்கையின் ஆடம்பரங்களையும், அத்தியவாசிய தேவை தாண்டிய அனைத்தையும் பகரமாக்கி விட்டார்கள்.

ஹூம்ஸூக்கு கவர்னராக தேர்ந்தெடுக்க உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆவல் கொண்ட போது, அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை: உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டவாளியாக்கி விடாதீர்கள்”. என்ன மனிதர் இவர்?! பதவி தன்னை தேடிவரும் போது கூட பக்கத்தில் கூட நிற்க அனுமதி வழங்கவில்லை.

“என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்”. என்று உமர் ரலியின் நெருப்பு வார்த்தைகளை கேட்ட பிறகே பொறுப்பில் அமர ஒப்புக்கொண்டவர். அவர் தான் ஸயீத் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

குபைப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணம் வாயிலாக இஸ்லாத்தை அறியும் நோக்கில் புறப்பட்ட இவரது பயணம் ஒரு நேர்மையான, எளிமையான ஆட்சியாளராக இன்று உலகத்திற்கு காட்டியது. உதாரணத்திற்கு தான் இந்த இரு நபித்தோழர்களின் சம்பவங்களும்… இன்னும் ஆயிரமாயிரம் சம்பவங்கள் வரலாற்று பக்கங்களில் வாய்மையுடன் காண கிடைக்கிறது.

“பிறந்த குழந்தைகளை உயிருடன் புதைப்பதிலிருந்து, பெண்களை மோகத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அடிமை மனிதர்களை அஃறிணை உயிர்களாக மட்டுமே எண்ணிக்கொண்டு, கொடுத்தல் வாங்களில் அநீதம் இழைத்துக்கொண்டு, தம்மில் எளியோர்களை தாக்கிக்கொண்டு தனக்கென நிலையான வாழ்வியல் முறைகளற்று இருந்த ஒரு நாடோடி சமூகம் பொன்னெழுத்துக்களில் பதியவேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக மாறி போனது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!”

குலங்களாலும், கோத்திரங்களாலும் இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து வேறுப்பட்டு கூறுப்பட்டு நின்ற ஒரு சமூகத்தை பின்னாளில் பொருளீட்டலில் நேர்மையாளர்களாகவும், உறவு முறை பேணுதலில் சகிப்பு தன்மை உள்ளவர்களாவும், அளவைகளில் -நீதிகளில் நீதம் பேணக்கூடியவர்களாகவும், தன்னைப்போலவே பிறரையும் எண்ணக்கூடியவர்களாகவும் மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் அழகிய வாழ்வியலிற்கும் உண்டு.

அல்லாஹ்வும் ,அவனது தூதர் சொல்லும் எந்த ஒரு சொல்லுக்கும் கட்டுப்படுவதோடு மட்டுமில்லாமல், தம் ஒவ்வொரு செயலையும், நடவடிக்கையும் அதற்காகவே அர்ப்பணித்தார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தம் நாடு , மனைவி, மக்கள், சொத்து என எல்லாவற்றையும் இழந்து, இறுதியாக தம் உயிரையும் துறந்த மேன் மக்கள் அவர்கள்.

இஸ்லாத்தை ஏற்றதற்காகவே தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயிர் நீத்த அன்னை சுமையா ரலியல்லாஹ் அன்ஹா, பரந்த பாலைவெளியில் பாராங்கற்களுக்கு அடியில் கிடத்தப்பட்ட போதும் அஹத்.. அஹத் என்ற ஒற்றை சொல்லை மட்டுமே உயிர் மூச்சாக கொண்ட பிலால் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்களின் வாழ்வை உற்று நோக்கினால் இஸ்லாம் ஒரு மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி விட்டால் அது ஏற்படுத்த கூடிய தாக்கத்தின் பிடிப்பை உணரலாம்!

சுய ஒழுக்கத்தோடு, பிறர் நலனில் கொண்ட அக்கறைக்கும் அவர்களிடத்தில் உச்சவரம்பு கிடையாது. பிறருக்கும் ஈயவேண்டுமென்பதற்காகவே தம் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியவர்கள் அவர்கள். அபுபக்கர் சித்திக், அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்களின் வாழ்வியல் அதற்கோர் அழகிய சான்று.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு கட்டளை வந்துவிட்டால் தம் விருப்பு வெறுப்புகளை தூர எறிந்து விடுவார்கள்.

உங்களுக்கு விருப்பமானவற்றை (இறை வழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது (ஆல இம்றான்: 92) என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட மறுகணமே பெரும் செல்வந்தரான அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருக்கு மிகவும் விருப்பமான செழிப்பான, பயன்மிக்க பைரஹா எனும் ஈச்சந்தோப்பை, தனது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்கள்.

மேலும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ யூதர்களின் கைவசம் இருந்த கிணற்றை இறை பொருத்ததிற்காக பெரும் தொகை கொடுத்து வாங்கி மதின மக்களுக்கு பொதுவில் சதாகா செய்தார்கள்.

சகோதரத்துவத்திற்கு மார்க்க அகராதியில் பொருள் தேடினால் அங்கே அன்சாரிகள் என்று பதியப் பட்டிருக்கும். பெயரளவிற்கு இல்லாமல் மக்காவை துறந்து வந்த முஹாஜிரீன்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்திலும் சரிபாதியை கொடுக்க முன்வந்தார்கள் அவர்கள்.

இஸ்லாமிய பாடசாலையில் பெருமானாரிடமிருந்து பயின்றவர்கள் அப்படி செய்து காட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்.! அதனால் தான் நபித்தோழர்கள் இன்றும் வரலாற்று நாயகர்களாக நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதைப்போன்ற பக்கங்கள் வரலாறு முழுக்க இன்னும் அதிகமதிகம். ஆனால் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்ள முயல்கிறேன். மனித நேயப்பிறவி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை குறித்து முத்தாய்ப்பாய் இப்படி சொன்னார்கள்.

உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்றார்கள்

அல்லாஹ்வோ தம் மறையில்,

“அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள் அவர்களை அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான்” (அத்-தௌபா: 100)

அல்லாஹ் அவனது அடிமையாக ஒருவரை ஏற்றுக்கொள்வதே பிறவிப் பலன் அடையக்கூடிய விசயம். ஆனால் அந்த மக்களை திருப்தியுடன் தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் கூறுவது எவ்வளவு பெரிய விசயம்… சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.!

ரளியல்லாஹு அன்ஹு…. என சஹாபா பெருமக்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு வித வியப்பும், சிலிர்ப்பும் ஒரு கணம் நம் மனதில் தோன்ற தான் செய்கின்றன…

source:http://www.naanmuslim.com/2013/03/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb