மனித பேச்சாற்றல் ஓர் அமானிதம்
எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா இவ்வையகத்தில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் அவ் உயிரினங்களைச் சார்ந்த அல்லது சாராத உயிரினங்களுடன் தமது உணர்வுகளை அல்லாஹுத்தஆலா அவைகளுக்கு கற்றுக் கொடுத்த பிரகாரம், அவைகளின் சக்திக்கு ஏற்றவாறு பரிமாறிக் கொள்வதை நாம் காண்கின்றோம்.
இவ்வடிப்படையில் மனிதனும் தன் சிந்தனையில் பரிமாறிக் கொள்ள அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு பேச்சாற்றலை வழங்கி உள்ளான். இன்நிஃமத் அல்லாஹுத்தஆலாவால் எமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உயரிய நிஃமத் என்ற வகையில் அல்லாஹுத்தஆலாவும் எம் உயிரலும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இன் நிஃமத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எமக்கு போதித்தார்களோ அவர்கள் போதித்த பிரகாரமே இன் நிஃமத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர் மறுமை நாளில் எனக்கு மிக அருகாமையில் இருப்பவரும் மிகச் சிறந்த பண்பாடுகளைக் கொண்டவருமே. உங்களில் எனக்கு மிகவும் வெறுப்புக்குரியவர். மறுமை நாளில் எனக்கு மிகத் தூரத்தில் இருப்பவரும் உங்களில் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவரும் அடுத்தவர்களை சாரூபவரும் பெருமை அடிப்பவருமே!
அல்லாஹுத்தஆலாவால் எமக்கு அளிக்கப்பட்ட இன் நிஃமத்தின் ஊடாக எமக்கு பிரயோசனம் அளிக்கக்கூடிய மறுமை வாழ்க்கைக்கு தேவையான நல்ல அமல்கள் மாத்திரமே புரிய வேண்டும். மாறாக எம்மால் பேச முடியும் என்பதற்காக எம்முடைய வாய்க்கு வந்ததை எல்லாம் எம்மால் பேச முடியாது நாம் ஒரு விடயத்தை இன்னும் ஒரு மனிதனுக்கு கூறுவது என்றால் அவ்விடயத்தைப் பற்றிய போதிய அறிவு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் கூறும் விடயம் நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லையாயின் நாம் மெளனமாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி மெளனமாக இருக்கட்டும் (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரரான ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகையில் ‘ஒரு மனிதனின் பேச்சு அதிகரித்தால் அவன் சொல்லும் பொய்களும் அதிகரிக்கும். ஒரு மனிதனின் செல்வம் வளர்ந்தால் அவன் செய்யும் குற்றங்களும் வளரும்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் மெளனம் என்பது அறிவு நிறைந்த ஒரு செயல். ஆனால் அதன் வழியில் செல்பவர்கள் மிகக் குறைவு எம் தாய் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் இச் சூழ் நிலையில் மிகவும் பொறுமையாகவும், நிதானத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும். எமக்கு கிடைக்கின்ற செய்திகள் தகவல்களின் உண்மை தன்மையை அறியாது அச் செய்திகளை அல்லது தகவல்களை பிறர் மத்தியில் குறிப்பிடக்கூடாது. அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிடும்போது.
முஃமின்களே! பாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்திகளை கொண்டு வந்தால். அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவைபற்றி நீங்களே கைசேதப்படுவீர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (ஸூரதுல் ஹுஜுராத் : 6)
அறியாமையின் அல்லது போதிய தெளிவின்மையின் காரணமாக நாம் வெளியிடும் வார்த்தைகளினால் சில சமயம் பெரும் ஆபத்துக்கு அது எம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.
ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து வெளிவரக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையை உரைக்கக் கூடிய வார்த்தைகளாகவே வெளிவர வேண்டும். ‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (ஸூரதுத் தவ்பா : 119)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘நிச்சயமாக உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சுவர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசுவதை கடைப்பிடிக்கிறார் என்றால் அவர் அல்லாஹுத்தஆலாவிடம் உண்மையாளர் என எழுதப்படுகின்றார். நிச்சயமாக பொய் பாவத்தின் பக்கம் வழிகாட்டும் பாவம் நரகத்தின் பக்கம் வழிகாட்டும் ஒருவர் அதிகம் பொய் உரைப்பவராக இருந்தால் அவர் அல்லாஹுத்தஆலாவிடம் பொய்யர் என எழுதப்படுவார்’ என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பீறினார்கள். (நூல்கள்: புகாரி முஸ்லிம்)
இவ்வைபயகத்தில் வாழும் காலத்தில் எமக்கு எதிராக யார் சூழ்ச்சி செய்தாலும் எம்முடைய உடமைகளுக்கும் உயிருக்கும் பங்கம் விளைக்க முயற்சி செய்தாலும் அல்லாஹுத்தஆலாவின் அனுமதி இல்லாமல் அத்தகையவர்களால் ஒன்றும் புரிய முடியாது என்பது உண்மை. இத்தகையவர்களுக்கு அந்த ரஹ்மானே! போதுமானவன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் எம்மால் முடிவுமான வரை அவர்களுக்கு நன்மையையே புரிய வேண்டும்.
இதனைப் பற்றி அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிடும் போது;
நன்மையும் தீமையும் சமனாகி விடாது (ஆதலால் நபியே தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்ளுங்கள் அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான மிக்க நெருங்கிய நண்பனைப்போல் காண்பீர்கள். பொறுமையுடையவர்களைத் தவிர மற்றொருவர் இதனை அடைய மாட்டார்கள் அன்றி பெறும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றொருவரும் இதனை அடைய மாட்டார்கள். (ஸூரா ஹாமீம் அஸ்ஸஜ்தா 34 : 35)
-jabir hashim
source: http://ipcblogger.net/mjabir/?p=1279