சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!
A.P.முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)
வானத்தினையும், பூமியையும் படைத்து, அதனை ஆராய்வதிற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் எல்லாம் வல்ல அல்லாஹ் அளித்துள்ளான்’ என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது.ஆனால் கல்வியிலும், சாதனையிலும் இன்றும் நாம் பின்னோக்கித் தான் உள்ளோம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
ஏன் நம்மிடம் திறமை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். திறமை இஸ்லாமியரிடையே பட்டை தீட்டப் படாத வைரம்போலவும், இலை மறை காயாகவும் உள்ளது. அதனைக் வெளிக்கொண்டு வருவது நமது கையிலேயே தான் உள்ளது என்றால் மறுக்க முடியாது என்பதினைக் கீழ்கொண்ட உதாரணங்களுடன் விளக்கலாம் என உள்ளேன்:
1) தமிழ் நாட்டில் பெண் ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் வருவது அரிது. அப்படி வந்தாலும் முக்காடுக்கு முழுக்குப் போடும் அதிகாரிகள் சிலர் வந்துள்ளனர். ஆனால் முழு முக்காடுப் போட்டு, அந்த முக்காடு என் பண்பாடுக்கு எடுத்துக் காட்டு என்றும் அதனை என்றும் கைவிடேன் என்று துணிச்சலாக சொல்லும் ஒரு பெண் ஐ. ஏ . எஸ். அதிகாரியாக சென்னை சைதாபேட்டை மாநகராட்சி பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்ற தமீம் அன்சாரி தேர்வாகி உள்ளார்.
2) அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் சமீப காலங்களில் வேட்டையாடப் படுகின்றனர் என்று நாம் பத்திரிக்கை வாயிலாக அறிவோம். அதில் முஸ்லிம்கள் உயர் பதவிக்கு வருவது மிகவும் அரிது. அந்த மாநிலத்தில் முன்னாள் ஜனாதிபதி பாக்ருதீன் அலி, முன்னாள் முதல்வர் டிமூர் போன்றவர்களுக்குப் பின்பு 60 ஆண்டுகள் சென்று ஒரு முஸ்லிம் பெண் உம்மெ பார்டினா ஆதில் 2012ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏஸ். பரிச்சையில் வெற்றி பெற்றுள்ளார்.
3) இமயமலையில் ஏறி வெற்றிக் கொள்பவர்கள் என்று பார்ப்போமேயானால் முஸ்லிம்கள் சிலரே! முதன் முதலில் துருக்கியினைச் சார்ந்த அலி மெஹ்ரக் என்ற முஸ்லிம் ஆணும், அதன் பின்பு மலேசியா பெண்மணியும், ஈரான் தேசத்தினைச் சார்ந்த இரண்டு பெண்மணிகளும் வெற்றி கொண்டுள்ளார்கள்.ஆனால் அந்த இமயமலை சிகரத்தினையும் சௌதி நாட்டில் ஜெத்தாவினைச் சேர்ந்த ரஹா மொபாரக் என்ற முஸ்லிம் பெண்மணி வெற்றி பெற்று இருக்கின்றார் என்று நினைக்கும்போது நமது நெஞ்சமெல்லாம் இனிக்கும். அதே நேரத்தில் ஒரு கசப்பான செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சென்னையின் பல பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத அல்லது பாதியில் விடுபட்ட சிறுவர்கள் 2000 பேர்கள் பட்டியல் எடுத்து அதில் எந்தப் பகுதியில் அதிகமான சிறுவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், ஆறு வயது முதல் பதினாலு வயதுவரை உள்ளவர்களில் தலா 192 பேர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனும், பெரம்பூரும் ஆகும்.
1) முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனில் சிறார்கள் கல்வி கற்பதும், பள்ளிக் கல்வியிலிருந்து பாதியில் நிற்பதும் உண்மையாகிறது.
2) வறுமைக் கோட்டினுக்குக் கீழே உள்ள முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாது நாலு காசு சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறார்கள்.
3) அப்படி அனுப்பப் படும் சிறார்கள் குற்றம் செய்யும் வேற்று சிறார்கள் துணைக் கிடைத்து வழி பிரண்டு போகிறார்கள்.
4) வசதி படைத்த பெற்றோர்கள் சிறார்களின் படிப்பில் கவனம் செலுத்தாது, அதிகம் செல்லம் கொடுத்து அந்த சிறார்கள் பாதியில் பள்ளிப் படிப்பினை விடும் நிலையும், படிக்காமல் அவர்களையும் தொழிலில் ஈடுபடுத்துவது.ஆகவே சமூதாய மக்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கவும், சாதனை புரியவும் கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது அவசியமே!
1) வயது ஆறிலிருந்து வயது பதினான்கு வரை பள்ளிப் படிப்பு சிறார்களுக்கு கட்டாயம். அதனை முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்லலாம்.
2) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள முஸ்லிம்கள் பலன் பெற அரசு திட்டங்கள் கிடைக்க வழி வகை செய்யலாம் பைதுல் மால் போன்று அமைப்பினை ஏற்படுத்தி சுய வேலைக்கு ஏற்பாடு செய்யலாம். 11.5.2013 அன்று சென்னை புதுக் கல்லூரியில் சிறுபான்மை துறை அமைச்சர் முகமது ஜான் அவர்களுடன், சகோதரர் ஜவஹிருல்லாஹ் சட்டமன்ற உறுப்பினருடன் நானும் கலந்துகொண்டேன்.
அப்போது அமைச்சர் கூறும்போது, ‘அரசு சலுகை பெற வரும் முஸ்லிம்கள் குறைவே’ என்று குறை பட்டார். அதே நேரத்தில் இன்று(19.5.2013) நடைப் பயிற்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது மண்ணடியில் உள்ள வியாபார முஸ்லிம் நண்பர் கேட்டார், ‘ஏன் அண்ணே, எங்கள் கடைக்கு தர்மம் கேட்டு முஸ்லிம்கள் தான் அதிகமாக வருகிறார்கள், எனக்குத் தெரிந்த ஏழ்மையான மற்ற மதத்தவர் தர்மம் கேட்டு வருவதில்லையே’ என்றார்.ஆகவே யாசகம் கேட்கும் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளதினையே அவர் கூற்றுக் கூறுகிறது.
3) அவர் கூற்று ஏழை மக்களிடம் கௌரவத்துடன் ‘கால் கஞ்சியானாலும் மூடிக் குடி’ என்ற நிலை மாறி கோழையாக கையேந்தும் நிலை ஏற்படுகிறது. அதனை சமூதாய இயக்கங்கள் போக்க வேண்டும்.
4) உயர்தர கல்வி நிலையங்கள் மூலம் படித்தால் தான் உயர் பதவி அடைய முடியும் என்ற நிலையினை மாற்றி சென்னை கார்ப்பரேசன் பள்ளியில் படித்த தமிம் அன்சாரியா போன்று நீங்களும் மாநகராட்சிப் பள்ளியில் படித்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தினை ஊக்குவிக்க வேண்டும்.
5) சாதனை பெண்களுக்குத் தடையில்லை என்பதினை உயரமான இமயமலையினை அடைந்த பெண்களின் கதையினை எடுத்துச் சொல்ல வேண்டும்.
6) முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கவும், கல்வி, சமூக, அரசியல் அமைப்புகளில் பங்கு பெறவும் வழி வகுக்க வேண்டும். முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குவைத், எகிப்து, ஈரான் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்தில் பங்கு பெறும்போது பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ள நமது நாட்டில் பெண்களின் சேவையினை ஒதுக்கித் தள்ளக்கூடாது.
சென்னையில் முஸ்லிம்கள் அமைப்பில் ஐ.ஐ.டி தொழில் கல்வி நிலையங்களில் சேர முஸ்லிம் மாணவர்களுக்கு பயிர்ச்சி கொடுக்க ஒரு குழு அமைத்தார்கள். அதில் சிலர் மாணவிகளைச் சேர்த்தால் பண்பாடு கெட்டுவிடும் என்றார்கள்.
அவர்களுக்கு சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பரிச்சையில் 1200 விழுக்காடுக்கு ஒரு முஸ்லிம் மாணவி 1190 எடுத்துத் தெரியிருக்கின்றார். அவர் கணிதம், கணினி, வணிக வியல் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்ணுக்கு 200 வாங்கி உள்ளார்.
அவர் ஐ.ஐ.டியில் சேர ஆசைப் பட்டால் அவருக்கு நாம் மத அடிப்படியில் பயிற்ச்சிக் கொடுக்க ஏன் மறுக்க வேண்டும். ஆகவே முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் சாதனைகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்கள் வளர்ச்சிக்குத் எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது.
source: http://mdaliips.blogspot.in/2013/05/blog-post_21.html