குழந்தைகளும் சுற்றுலாவும்
இது விடுமுறைக் காலம். விடுமுறையை எவ்வாறு கழிப்பது என்பதைப் பற்றி குழந்தைகளும் பெற்றோர்களும் சிந்திக்கின்ற நேரம் இது. மனிதன் தான் வசிக்கும் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று திரும்பவதற்குப் பயணம், சுற்றுலா, யாத்திரை என்ற சொற்கள் பாவிக்கப்படுகின்றன.
இச்சொற்களுக்கிடையே நுண்ணிய வேறுபாடு இருந்தாலும் எல்லாம் பயணத்தைத் தான் குறிக்கின்றன. அறபு மொழியில் ‘ரிஹ்லா’ என்ற சொல்லும் ‘ஹஜ்’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகின்றன. Tornus என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்ததான் Tour என்ற ஆங்கில வார்த்தை தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
வட்டச் சுழற்சி என்பது இதன் பொருளாகும். சுற்றுலா என்பது மக்கள் தமது வழக்கமான இருப்பிடத்தை விட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்குச் செல்வதும் சென்ற இடத்தில் அவர்களின் செயற்பாடுகளையும் அவர்களின் தேவைவையப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளையும் சுற்றுலா எனப்பொதுவாக வரைவிலக்கணப்படுத்தலாம்.
அதாவது சுற்றலா பல்வேறு நோக்கங்களைக் கொண்டது. மகிழ்ச்ச்சி, ஓய்வு, ஆரோக்கியம், விளையாட்டு, கல்வி, உறவு முறை, ஆன்மீகம், அந்தஸ்து, தொழில் என அதன் நோக்கங்கள் பரந்துபட்டது.
வரலாற்றுக் காலத்திலும் வராற்றுக்கு முந்திய காலத்திலும் மனிதன் உணவைத் தேடி, வாழுமிடத்தைத் தேடி பயணம் செய்துள்ளான். அந்தவகையில் ஆதமும் ஹவ்வாவும் உலகின் முதல் பயணிகள் என குர்ஆன் கூறுகின்றது. மக்கள்தொகைப் பெருக்கமும் பௌதீகக் காரணிகளும் மனிதனின் பயணத்தை அதிகரிக்கச் செய்தன. இந்தப் பயணம் தான் வீதிகளையும் கடல்வழிப் போக்குவரத்தையும் பின்னால் விஞ்ஞான முன்னேற்றத்தால் ஆகாய மார்க்கமாக பயணப்படுவதையும் கண்டுபிடிக்க உதவியது.
சுற்றுலா, போக்குவரத்து வாகனம், சுற்றுலா மையம், தங்குமிடம் என்ற மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. இப்னு கல்தூன் என்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர் சுற்றுலாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் கடிதங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் விளக்க முடியாததை ஒருவரை நேருக்குநேர் சந்திப்பதும் ஓர் இடத்தை நேரில் சென்று பார்ப்பதும் ஏற்படுத்துகின்றது என்கிறார்.
நம்மை நாம் முழுவதும் அறிந்து கொள்ள வேண்டுமானால் நாம் இருக்குமிடத்தை விட்டு சிறிது காலம் பிரிந்து வெளியில் சென்று விட்டு வர வேண்டும் என்பது மிகப் பெரும் உண்மையாகும். நமது வாழ்க்கையில் மாற்றத்தையும் சிந்தனையில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் நமது வாழிடத்தைச் சற்று மாற்ற வேண்டும் என்பது ஓர் அடிப்படை விதியாகும்.
இந்த அடிப்படையில் நோக்கும் போது சுற்றுலாவில் ஓய்வுச் சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, சமூகச் சுற்றுலா, வியாபாரச் சுற்றுலா, அரசியல் சுற்றுலா, மருத்துவச் சுற்றலா, ஆன்மீகச் சுற்றுலா என பல வகையறாக்கள் உள்ளன. எனவே நீங்கள் சுற்றுலா மேற்கொள்வதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
எந்தவகைச் சுற்றுலாவை மேற்ககொள்ளப் போகிறோம் என்பதை முதலில் தீர்மானித்தக்கொள்ள வெண்டும். கலாசார ஆன்மிகச் சுற்றுலாக்களிலும் பலவகைகள் இருக்கின்றன. உதாரணமாக முஸ்லிம்களைப் பொருத்தவரை உம்றா, ஹஜ் என இரு வகை யாத்திரைகள் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகளுடன் சுற்றுலா மேற்கொள்ளும் போது முன் ஆயத்தங்கள் இருந்தால் பதற்றத்தைக் குறைப்பதுடன் அதிக பயனையும் பெற்றுக் கொள்ளலாம்.
முன்னேற்பாடுகளுக்குப் போதிய கால அவகாசம் இருக்க வேண்டும். குழந்தைகள் தயாராகுவதற்கு முன்கூட்டியே அவர்களிடம் சொல்லி வைத்து விட வேண்டும். சுற்றுலா பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை அவர்களுக்கு வழங்கலாம்.
குழந்தைகள் சிலபோது சுற்றுலா மேற்கொள்ள பயப்படுவதுமுண்டு. ‘உன்னைக்கொண்டு போய் அங்கே விட்டவிட்டு வந்து விடுவார்கள்’ என்று பெரியவர்கள் சொல்லிவிட்டால் போதும் குழந்தைகள் பயந்து விடுவார்கள். எனவே, பயப்படும் குழந்தைகளை மனோரீதியாகவும் தயார் படுத்த வேண்டும்.
சுற்றுலாவுக்கென்று சிலவிதிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். விதிமுறைகள் அளவுக்கு மிஞ்சினாலும் குழந்தைகள் சுற்றுலாவை விட்டுத் தமது நண்பாகளுடன் பந்து விளையாடப் போய்விடுவார்கள். சுற்றுலா விதிமுறைகள் என்றதும் பெரிதாக யோசிக்காதீர்கள். உதாரணமாக வாகனத்தில் சண்டை போடுதல், தண்ணிர் குடித்தல், உணவருந்துதல், மலசலம் கழித்தல் போன்ற விதிமுறைகளைத்தான் குறிப்பிட விரும்புகின்றேன்.
சுற்றுலாவில் முதலுதவி செய்தவற்கான ஏற்பாடும் இருக்க வேண்டும். காரணம் விபத்துக்கள் ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்குறிய பொருட்கள் அடங்கிய பெட்டியொன்றை தயார் செய்யப்பட வேண்டும்.
சுற்றுலாவில் குழந்தைகள் விரும்பிக்கேட்கக் கூடிய பாடல்கள், விரும்பிப் பார்க்கக் கூடிய கார்டூன் படங்களை எடுத்துச்செல்ல வேண்டும். குழந்தைகளின் வயதுக்கேற்ப இவற்றைத் தெரிவு செய்யலாம். மிகச் சிறிய குழந்தைகளாக இருந்தால் விளையாட்டுப் பொருட்கள், பாடப்புத்தகங்கள், பொம்மை போன்றவற்றை எடுத்துச்செல்லலாம்.
சுற்றுலாவில் கமராவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுக்கு என்று சில கமராக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு போட்டோவை மாத்திரம் எடுக்கக் கூடியவையும் இருக்கின்றன. சுற்றுலாவில் குழந்தைகளுக்குப் பிடித்தமான விநோதமான படங்ளை எடுக்க இது வசதியாக அமையும். குழந்தைகள் பிடிக்கும் படங்களில் மிகச் சிறந்தவற்றுக்குப் பரிசும் வழங்கலாம். போட்டி நிபந்தனைகளை முன்கூட்டியே அறிவித்து விட வேண்டும்.
ஓவ்வொரு குழந்தைக்கும் தனியான பயணப் பொதிகளை, பைகளை ஏற்பாடு செய்ய வெண்டும். அவற்றில் அவர்களுக்கென பிரத்தியேகமான அவர்கள் விரும்பும் உணவு, ஆடை, விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை வைக்கலாம். தொலைந்து விடக் கூடிய மிகச் சிறிய பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். அதே வேளை குழந்தைகளின் பைகளின் அளவுகளையும் எண்ணிக்கைகளையும் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் வாகனத்தின் அளவு அதன் டிக்கி ஆகியவற்றையும் தீர்மானிக்க முடியும். ஓவ்வொரு பையிலும் குழந்தையின் பெயரை எழுதி ஒட்டி விடலாம். ஓவ்வொரு குழந்தையும் தனது பையை தானே தயார் செய்யத்தான் விரும்பும். எனவே, நீங்கள் அவர்களைக் கண்காணித்து தயார்படுத்தச் செய்யலாம்.
சிற்றுண்டிகள், பழங்கள், கேக், பிஸ்கட், சோடாக்கள் போன்ற பொருட்களை பைகளின் உள்ளே பொருத்தமான இடங்களில் வைக்க வேண்டும். இரண்டு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக நடக்கக் கூடிய, விளையாடக் கூடிய இடமாகப் பார்த்து வாகத்தை நிறுத்த வேண்டும்.
கொஞ்சம் வளர்ந்த பெரிய குழந்தைகளாக இருந்தால் வீதிகளின் வகைகள், வீதி ஒழுங்குகள், வீதிகளின் தூரம், கிலோமீட்டர் அளவு, அடுத்து வரும் நகரம் எது என்ற விளக்கங்களை முன்கூட்டியே சொல்லி வைக்கலாம். Navigator கருவியை இதற்குப் பயன்படுத்தலாம்.
வெளியே சிந்தாத குவளைகளை குழந்தைகள் குடிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதனால் குழந்தையின் ஆடை, வாகனத்தின் இருக்கை பாதிக்கப்படாமலும் குவளை விழாமலும் உடையாமலும் இருக்கும்.
சுற்றுலா என்பது மகிழ்ச்சி, ஓய்வு, மாற்றம், பயன் எனப் பல அம்சங்கள் நிரம்பியது என்பதை மறுத்தலாகாது. குழந்தைகள் – பெற்றோர்களுக்கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டால் சுற்றுலாவின் பயன் கிட்டவே கிட்டாது. எனவே எந்தவொரு விடயத்திலும் கடுமையாக நடக்காமல் மிகச் சூசகமாக நடந்துகொள்ள வேண்டும். சுற்றலா ஒரு சாகசச் செயலாகும். சாகசம் நிகழ்த்துவதாயின் பல தடைகளைத் தாண்டித்தான் ஆக வேண்டும். அதாவது சாகசத்தை உந்து சக்தியாக மாற்ற வேண்டும். நீங்கள் டென்ஷனாகி விட்டால் முழுக் குடும்பமும் டென்ஷனாகி விடும்.
முன்னைய சுற்றுலாவில் பல தடைகள் வந்திருந்தால் அவற்றை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள். அதை இந்தச் சுற்றுலாவில் வராமல் எவ்வாறு தீர்க்கலாம் என்பதைக் கண்டுபிடித்து முன்கூட்டியே தீர்த்து விடுங்கள்.
சுற்றுலாவில் வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான செயற்பாடுகளைத் தெரிவு செய்யுங்கள். சுற்றுலாவில் எல்லா இடங்களிலும் ஒரே வகையான செயற்பாடுகள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அனைவரும் விரும்பக் கூடிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். அவர்களின் விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். வீதி ஒழுங்குகளை மறந்து விட வேண்டாம்.
ஓட்டுனருக்குப் பக்கத்தில் குழந்தையை உட்கார வைக்க வேண்டாம். இருக்கைப் பட்டியைக் கட்டி விட வேண்டும். உங்களுக்குக் களைப்பு வரும்போது வாகனத்தை ஓட்ட வேண்டாம். அல்லது சாரதியை ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். நீங்கள் அல்லது சாரதி ஓய்வெடுப்பது முழுக் குடும்பமும் ஓய்வெடுப்பதற்குச் சமமானது. சுற்றுலா தொடங்க முன் இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்ளுங்கள்.
source: http://idrees.lk/?p=124