தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு
கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி
முன்னுரை:
தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா…? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு!
தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது!
அது பற்றிய தகவல்களை, தடயங்களைப் புலப்படுத்தவே இக்கட்டுரை.
முஸ்லிம்கள் தமிழர்களா…?
முஸ்லிம்கள் தமிழர்களா…? என்ற கேள்வி கேட்போரும், கேட்க நினைப்போரும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அரபி, உருது, பார்சி மொழிகள் பேசக்கூடியவர்கள் தானே …! அப்படியே தமிழ் பேசினாலும் அவர்கள் ஓரளவு தானே! அதுவும் குறைந்த அளவு தானே! இப்படியிருக்க அவர்கள் எந்த வகையில் தமிழுக்குப் பணியாற்றியிருக்க முடியும்..? என்றெல்லாம் அறியாமல் சிலர் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் அறியாமை போக்கவும் தமிழுக்கு முஸ்லிம்களின் கொடை என்னவென்று அறிவிப்பது முஸ்லிம்களின் கடைமையாகும். அதனை ஓரளவு தெரியப்படுத்தவே ஸ.. இம்முயற்சி என்பேன்.!
இலக்கியம் என்பது என்ன?
தனிமனித சுயபுராணங்கள் பாடுவது இலக்கியம் ஆகாது ! இலக்கியம் என்பது ஒரு இலக்கு. ஒரு இலட்சியத்தை மையமாக வைத்து பாடுவது, எழுதுவதாகும் !
நமக்குத் தெரிந்தவை பண்டைய இலக்கியங்களான கம்பராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகியவைகளாகும்! இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுவதாகும்.
இலக்கியம் என்பது வாழ்க்கை நெறியாக இருக்க வேண்டும். அல்லது உயர்ந்த வாழ்க்கை நெறியில் சென்று வாழ்ந்து காட்டியவர்கலை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களின் பணிகளை விவரிப்பதாகவும் இருக்கலாம். அந்த வகையில் ஒரு இலக்கியம் இருக்கிறது! அதற்கு இலக்கணமும் இருக்கிறது! அந்த இலக்கியத்திற்கு வயது ஸ நூறல்ல, ஒருநூறல்ல.. 1431 ஆண்டாகிறது. அது எந்த இலக்கியம்? புரிகிறதா ஸ உங்களுக்கு ? தெரிகிறதா ஸ சொல்லுங்கள்!
முதல் இலக்கியம்
முஸ்லிம்களுக்கான முதல் இலக்கியம் அது. இல்லையில்லை உலக மக்கள் அனைவருக்குமான இலக்கியம் அது. ஹிதாயத் எனும் நேர்வழி நடப்போர் படிக்கும் இலக்கியம். அது பரிட்சைக்கு மட்டும் படிக்கும் இலக்கியமல்ல. இம்மையிலும், மறுமையிலும் நமக்கு ஈடேற்றம் தரும் இலக்கியம். நம்மைப் படைத்த இறைவனே நமக்காகப் படைத்த இலக்கியம்! தூய இலக்கியம்! மனிதநேய இலக்கியம்! எந்த அழுக்கும் படாத இலக்கியம்! புதிதாக எந்த திருத்தமும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அன்று தோன்றிய மாதிரியே இன்றும் புனிதமாய் ஸ இருக்கும் இலக்கியம்!
அதுதான் வல்ல அல்லாஹ் அருளிய அல்குர்ஆன் என்பதாகும்! வாழும் வகையை வாழ்க்கை நெறியை இதைவிட அழுத்தமாக, ஆழமாக, கடுமையாக எந்த இலக்கியமும் சொன்னதில்லை ! மற்ற இலக்கியங்களை மக்கள் பார்ப்பார்கள்! படிப்பார்கள்! ஆனால் திருக்குர்ஆன் எனப்படும் இந்த இலக்கியத்தை இன்றைக்கு உலகில் 150 கோடி முஸ்லிம்கள் ஓதுகிறார்கள். வாழ்க்கையை வாழ்க்கையாகக் காடும் கண்ணாடி இதுவென்பதால் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகள். இதிலிருந்தே கிடைக்கிறது என்றால் அந்த இலக்கியத்தின் மாட்சியை எப்படிப் புகழ்வது?
இதுவரை முஸ்லிம்களுக்கான இலக்கியம் எதுவென்று அறிந்தோம்? இனி .. முஸ்லிமகள் படைத்த இலக்கியங்கள்! எதுவென்று பார்ப்போம்! அந்தத் தமிழ் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம்!
பழந்தமிழ் இலக்கியம்
இலக்கியம் என்று பார்க்கும் போது .. மனிதர்கள் படைத்த முதல் இலக்கியம் முத்தான இலக்கியம் என்று சொல்லும் அளவுக்கு நம் நெஞ்சில் பளிச்சென மின்னுவது நாட்டுப்புற இலக்கியமாகும்! அந்த நாட்டுப்புற இலக்கியந்தான் காகிதம் கண்டுபிடிக்கப்படும் முன்பே மனித மனங்களில் இடம் பெற்ற இலக்கியங்களாகும் !
பாடறியேன்! படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஓடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவை நானறியேன்! என்று கூறும் அளவுக்கு நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மனதில் என்றும் வாழும் இலக்கியங்களாகும்.
தமிழர்கள் வாழ்வில் இசையும் இலக்கியமும் பிரிக்கமுடியாதபடி இரத்தமும் சதையுமாய் உடலோடு உணர்வோடு ஒட்டிப் பிறந்ததாய் இருக்கின்றது. நாட்டுப்புற இலக்கிய வரிசையில் தாலாட்டு இலக்கியம் முதன்மை பெறுகிறது என்று சொல்லலாம்.! முதன்மை பெறுகிறது என்பதை விட முதலில் காது வழியே உணரப்படும் இலக்கியம் தாலாடு இலக்கியமாகும். இந்தத் தாலாட்டு இலக்கியம் படிப்பதைக் காட்டிலும் அழகான குரலால் பாடும் போது கேட்டால் ஆனந்தத்தின் எல்லையையே தொட்டுக் காண்பிக்கும்.!
முஸ்லிம்கள் தமிழுக்கு நிறையவே பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இன்னும் சொன்னால் பிறமதப் புலவர்கள், கவிஞர்கள் பாடாத, புதிய வகை இலக்கியங்களை படைத்திருக்கின்றார்கள்! நாமா, கிஸ்ஸா, முனாஜத் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதுபோல நாட்டுப்புற இலக்கியங்களிலும் இவர்களின் முத்திரைகள் நிரம்பவே உண்டு! பங்களிப்புகள் உண்டு!
நாட்டுப்புற இலக்கியம்
அந்த நாட்டுப்புற இலக்கியத்தில் தாலாட்டு இலக்கியத்திலும் முஸ்லிம்களின் பங்கு நிறையவே இருக்கிறது. தாலாட்டென்பது தாய், தன் பிள்ளையை உறங்க வைக்க
ஆராரோ! ஆரிரரோ! என்று பாடுவதாகும்
மற்ற தாலாட்டெல்லாம் பிற மதத் தாலாட்டெல்லாம்
பிள்ளையை கண்ணே! மணியே! முத்தே எனப் பாடுவார்கள்.
அத்தை அடித்தாளோ
அரளிப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
யாரடித்து நீ அழுதாய்? என்று பாடுவார்கள்!
ஆனால் இஸ்லாமியத் தாலாட்டு சற்று வித்தியாசமானது. முஸ்லிம்கள் பாடும் தாலாட்டு வேறுவிதமாக அமைந்திருக்கும்! அவர்களுடைய தாலாட்டில் அல்லாஹ்வை வணங்கு! நபிநாதர் வழியே செல். சாலிஹான பிள்ளையே இப்படி தம் மார்க்கக் கொள்கைகளை உணர்த்தும் விதமாகப் பாடுவார்கள்.
இஸ்லாமியத் தாலாட்டு என்பது மர்ஹுமான கல்லிடைக்குறிச்சி எம். பீர் முஹம்மது ஒரு தாலாட்டுப் பாடலினைத் தொகுத்தளிதிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பலர் தாலாட்டுப் பாடல் தொகுப்பைத் தந்துள்ளனர். இளையான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பாத்திமுத்து சித்தீக் அவர்களும் தாலாட்டுப் பாடல்களை தொகுத்து தந்திருக்கிறார் என்று அறிகிறேன்.
முதுகுளத்தூர் இலக்கியம்
சான்றுக்கு ஸ.. எங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர். ஆதலால் முதுகுளத்தூரில் ஒரு இஸ்லாமியத்தாய் பாடும் தாலாட்டில் சில வரிகளை மேற்கோளாகக் காண்பிக்க விரும்புகிறேன். அந்தத் தாய் ஜனாபா செய்யிதம்மா பீவி அவர்கள். முதுவையின் அகுல்தார் வகையறாவைச் சேர்ந்தவர். மர்ஹும் சீனி முஹம்மது ராவுத்தரின் முதல் மகளாவார். பாராட்டுக்குரிய அந்தத் தாய் பாடிக்காட்டிய தாலாட்டு இதோ
ஆராரோ! ஆரிரரோ!
– என் கண்ணே
ஆராரோ! ஆரிரரோ!
பட்டமரம் தளிர்த்து
பழமாய் கனி சொரிந்து
கெட்டகுடி துலங்கி
கிளைகூட்ட வந்தவனே!
பட்டமரம் பால்வடியும் – நம்ம நபி
பயகம்பர் போறவழி!
உளுத்தமரம் பால்வடியும் – நம்ம ரசூல்
உத்தமரு போறவழி! யென்று பெண் குழந்தையை தாலாட்டுகிறார் !
இனி ஆண் குழதைக்கான தாலாட்டு
அல்லாஹ்வே! உன் காவல் ! நல்ல தம்பிக்கு ஒரு
ஆபத்தும் வராமல்!
நாயனே உன் காவல்! – நல்ல தம்பிக்கு
நாவேறு வராமல்!
வடிக்கனே உன் காவல் – நல்ல தம்பிக்கு
கண்ணேறு வாராமல்!
காத்துவா அல்லாஹ் நீ! என்றும் பாடியுள்ளார்.
இது இன்னும் எழுத்தில் வராத எழிலான தாலாட்டு இலக்கியம்! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல – இந்தச் சான்று!
இன்னொரு வித்தியாசமான தாலாட்டு. ஒரு முஸ்லிம் பெண், இந்து சமூகப் பெண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப் பாடல்.
(பாடியவர் : கதிஜா பீவி வயது 66 ஊர் : திருச்சி)
பட்டெடுங்க தொட்டில் கட்ட!
பவுன் எடுங்க காது குத்த!
காது குத்த வாராங்க – என் கண்ணுக்கு
காரணமா மாமன் பாரு!
இது தான் இலக்கியம்! இனி மற்ற இலக்கியங்களை இலக்கிய வாணர்களைப் பார்ப்போம்!
இலக்கியம் வளர்த்த இனியவர்கள்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காலத்தால் முந்தியது பல்சந்தமாலை என்பதாகும். சுமார் நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலில் யவனர், சோனகர், அஞ்சுவண்ணத்தார் என்று முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து இராமதேவர் என்பவர் இஸ்லாத்தைத் தழுவி யாக்கோபு சித்தர் எனப்பெயர் பெற்று வைத்திய நூல் ஒன்றினை எழுதியுள்ளார். வண்ணப்பரிமாப் புலவர் கி.பி. 1572 ல் ஆயிரமசாலா என்று ஒரு இலக்கியம் படைத்துள்ளார். அடுத்து ஆலிப்புலவரின் மிஃராஜ் மாலை நல்லதொரு இலக்கிய நூலாகும். கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாகும். இதனையடுத்து பின்னர் நூருதீன் பொன்னரிய மாலை காப்பிய இலக்கணப்படி முதலில் தோன்றிய தமிழ் இலக்கியம் கனகவிஷேகமாலை என்பதாகும். கனக கவிராயர் என்பவரால் கி.பி. 1648 ல் இயற்றப்பட்டதாகும். கிபி 1703 ல் இயற்றப்பட்டது தான் உமறுப்புலவரின் சீறாப்புரானமாகும். பெரும்பாலான முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தது சீறாப்புராணமேயாகும். இதை வெகுசிலரே படிப்பதும் பிறகு அதனைப் பட்டுத்துணி போர்த்தி பத்திரமாக வைக்கவும் செய்தார்கள்.
மலேசியாவில் நாச்சிகுளத்தார் எனும் செந்தமிழ்க் கவிமணி யூசுப் என்பவர் 1973 ஆம் ஆண்டில் சிறாப்புராணத்தை அந்தச் செய்யுளை சந்தி பிரித்து தனி நூலாக வெளியிட்டார். 1974 ல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் அன்றைய முதல்வர் சீறாவுக்கு சீரிய விழா என்று இரண்டு நாட்கள் கல்லூரியில் விழா எடுத்தார். இந்த விழாவையொட்டி நாச்சிகுளத்தாரின் சீறா நூல்கள் பல வாங்கப்பட்டு அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு, கட்டுரை வாசிக்கப்பட்டு அந்தக் கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் இடம்பெற்றது. இந்த விழாவையொட்டியே சீறா பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடையே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் சென்னையில் சீறாப்புராணச் சொற்பொழிவை சிலம்பொலி செல்லப்பனாரை தனி உரை நிகழ்த்த வைத்து அதனை நூலாக்கினார். பிறகே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் விழிப்புணர்வு ஏற்பட்டது எனலாம். ஆனால் இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற கொள்கை முழக்கம் உடையதாக இஸ்லாமிய இலக்கியக் கழகம் தனது முதல் மாநாட்டை (உலக அளவிலான) 1973ல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடத்தியது. திருச்சி திருப்பம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அந்த மாநாடு வெற்றியடைந்து எல்லோரையும் கவர்ந்து விட்டது. முஸ்லிம்கள் தமிழுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை பிற மதங்களும், உலகும் அறியவே உணர்த்தப்பட்டது.
அடுத்து இஸ்லாமிய இலக்கியக் கழகத்தார் நடத்திய இரண்டாவது மாநாடு சென்னையில் 1974 ல் நடைபெற்றது. 1978 ல் மூன்றாவது மாநாடு காயல்பட்டணத்தில். நான்காவது மாநாடு 1979 ல் இலங்கையில் நடந்தது. ஐந்தாவது மாநாடு டிசம்பர் 90 ல் கீழக்கரையில் நடைபெற்றது. ஏழாவது மாநாடு கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களை நெறியாளராகக் கொண்டு 2007 ல் சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்றது. இத்தகைய இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் ஆய்வரங்குகளில் 2000 க்கும் மேற்பட்ட இலக்கியங்கள் முஸ்லிம்கள் படைத்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. ஆய்வரங்குகளில் முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தவர்களும் இஸ்லாமிய இலக்கியங்களை ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை படித்தனர்.
சுமார் 800 க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் காலத்தால் அழியாத காவியங்களை இலக்கியங்களைப் படைத்துள்ளனர். இந்த ஏழாவது இஸ்லாமிய இலக்கிய மாநாடு இதயங்களின் இணைப்புக்கு இலக்கியம் என்ற புதிய இலட்சனையோடு முன்னிலும் உற்சாகமாக இலக்கியப் பணிகள் ஆற்றி வருகின்றது. அந்த மாநாட்டில் 260 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகள் தனி நூலாக்கப்பட்டன. இதுதவிர பேராசிரியர் சாயபு மரைக்காயரை பொதுச்செயலாளராகக் கொண்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பு மூலம் மாநில அளவில் 14 மாநாடுகள் நடத்தியுள்ளார். மாநாட்டின் ஆய்வரங்கக் கருத்துக்கள் நூலாக்கப்பட்டு இலக்கியங்களாகியுள்ளன.
காப்பியங்கள்
கி.பி. 1648 முதல் 1894 வரையிலான காலகட்டத்தில் பதினாறு இஸ்லாமியக் காப்பியங்கள் வெளிவந்துள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த சேகனாப்புலவர் மட்டும் நான்கு காப்பியங்கள் இயற்றியுள்ளார். வண்ணக்களஞ்சியப் புலவர் மூன்று இலக்கியங்கள் படைத்துள்ளார். தமிழக இலக்கிய வரலாற்றில் ஒரு புலவர் ஒன்றும் மேற்பட்ட காப்பியங்களைப் படைத்தவர்கள் என்ற பெருமையை மேற்கண்ட இஸ்லாமியப் புலவர்கள் பெறுகிறார்கள். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுவர். இதுபோல இஸ்லாமிய இலக்கியத்திலும் இரட்டைக் காப்பியங்கள் உள்ளன. இரட்டைக் காப்பியம் பாடிய புலவர்கள் இருக்கின்றனர். யாரது? தெரியுமா? உமறுப்புலவர் பாடிய சீறாப்புராணமும், பனீ அகமது மரைக்காயர் பாடிய சின்னச் சீறா இவைகள் தாம் இரட்டைக் காப்பியங்களாகும்.
நாவல்கள்
இஸ்லாமிய நாவல்கள் படைப்பு இலக்கியத்தில் சிங்கை ஜே.எம். சாலி அவர்கள் 60 க்கும் மேற்பட்ட நாவல்கள் படைத்து முதலிடம் பெறுகிறார். மர்ஹூம் ஹஸன் அவர்கள் மூன்று நாவல்கள் படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்றைய பல இளம் எழுத்தாளர்கள் நாவல்கள் பல படைத்துள்ளனர்.
சிறுகதைகள்
சிறுகதை இலக்கியத்தில் சம்மதமா .. என்ற சிறுகதைத் தொகுப்பை வி. நூர் முஹம்மது, மஹதி, திருச்சி குலாம் ரசூல், மகுதூம், ஜேயெம், ஆர்.பி.எம். கனி, சீதக்காதி, ஷேக்கோ, கருணாமணாளன், ஷாஹா, ஆர்.பி. மல்லாரி ரஷீத், ஈரோடு ரஷீது ஆகிய இவர்கள் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகள் ஆவார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் 20 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக் குவித்தவர்கள். இவர்களையடுத்து ஹிமானா சையத், ஆர்னிகா நாசர், தோப்பில் முஹம்மது மீரான், பேராசிரியர் அப்துல் சமது, பேரா. நத்தர்ஸா, முஹம்மது அலி ஜின்னா, தாழை மதியவன் இன்னும் பலர் சிறுகதை இலக்கியவாதிகளாக உள்ளனர்.
கவிதைத்துறை
கவிதை இலக்கியத்தில் இறையருட்கவிமணி கா. அப்துல் கபூர், இவருடைய சகோதரர் பேரா. முஹம்மது ஃபாரூக், புதுக்கவிதை இலக்கியத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான், பேரா.தி.மு. அப்துல் காதர், தேங்க ஷர்புத்தீன், ஹாமீம் முஸ்தபா, ஹெச்.ஜி. ரசூல், தக்கலை ஹலீமா, நை.மு. இக்பால், மணலி அப்துல் காதர், அப்துல் ரஹீம், மலேசியா ப.மு. அன்வர், கவிஞர் செ. சீனி நெய்னா முஹம்மது, இலங்கை எழுத்தாளர் டாக்டர் முத்து மீரான், டாக்டர் ஜின்னா ஷர்புதீன், அதிரை தாஹா, பேரா. ஹாஜாகனி, ஈரோடு தமிழன்பன், பேரா. தை.கா. காதர்கனி, இளையான்குடி கவிஞர் மு. சண்முகம், முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் மன்பஈ, எம்.எஸ்.எஸ். அப்துல் ஹமீது ( கலீபாக்கள் வரலாறு ) இன்னும் பல இலக்கியப் படைப்பாளர்கள் உள்ளனர்.
தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு
தமிழ்நாட்டில் பெண்கலும் இலக்கியத்துறைக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு 1972 ல் தூத்துக்குடி ஜனாப் முஸ்தபா ஹுசைன் அவர்களால் நர்கிஸ் இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இதழ் தொடங்கியது இஸ்லாத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் பெண்கள் பலர் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் சிறுகதை, நாவலாகவும் எழுத ஆரம்பித்தனர். 2001 ல் முஸ்தபா ஹுசைன் அவர்களின் மறைவுக்குப் பின்னார் அவருடைய மூத்த மகளார் அனீஸ் பாத்திமா அவர்களை ஆசிரியராகக் கொண்டு நர்கிஸ் குறிப்பாகப் பெண் இலக்கியவாதிகள் பலரை அறிமுகப்படுத்தி வளர்த்து வருகிறது. இதே காலகட்டத்தில் இதழ் ஆசிரியையாக இருந்தவர் ஹலீமா ஜவஹர். இவரை ஆசிரியையாகக் கொண்டு மலர்மதி என்னும் இதழ் வெளிவந்தது. இடையில் இதழ் நின்றுவிட்டது.
இன்றைய பெண் எழுத்தாளர்களில் முன்னோடியானவர் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்பவராவார். மர்ஹூமான இவர் 60 ஆண்டுகள் பத்திரிகையில் எழுதி சிறுகதை இலக்கியத்தின் பேரரசியாகத் திகழ்ந்தவர். அடுத்து மதுரை அல்ஹாஜ் சையது அப்துல் கபூர் அவர்களின் மனைவி ஹாஜியா ஜைனப் பேகம் சாஹிபா அவர்கள் 1942 முதல் 1967 வரை மார்க்கச் சொற்பொழிவாளராக திகழ்ந்தார். நாகூர் சித்தி ஜுனைதா அவர்களின் நெருங்கிய தோழியும் ஆவார். 2003 ல் வஃபாதானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ).
பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் பள்ளியின் முன்னால் தலைமையாசிரியை ஹாஜியா கமருன்னிஸா அப்துல்லாஹ், டாக்டர் நபீஸா கலீம், ஜனாபா ஹனீபா அப்துல் கரீம் ஆகியோர்களின் சமய இலக்கியப்பணிகள் போற்றுதற்குரியது.
தற்போது இளையான்குடியைப் பூர்வீகமாகக் கொண்டு ஹைதராபாத்தில் குடியிருந்து வரும் மிஸ்ரியா எனப்படும் பாத்திமுத்து சித்தீக், கிரசண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஷரீபா அஜீஸ், பேரா.சுமையா தாவூத், பேரா. ரஜப் நிஷா, பேரா. நசீமா பானு, பேரா. பர்வீன் சுல்தானா, யாஸ்மின் பாத்திமா, வழுத்தூர் அம்மாஜான், புலவர் அ. அஹமது பஷீரின் துணைவியான கதீஜா பேகம், மதுரை மஹபூப் பாளையம் பாரிசா ஆலிமா, காரைக்கால் சவ்தா உம்மாள், மு. பாத்திமா பீவி, பள்ளபட்டி மு. ரஷீதா, மதுரை பிறைப்பள்ளியில் பணியாற்றும் சகுபர் நிஷா, தேனி மஹ்தூம் ஆரிபா, மதுரை மு. ஜஹான், கவிக்கோவின் சகோதரி மதுரை ராயல் ஆங்கிலப்பள்ளியின் நிறுவனர் கோரிஜான், மதுரை சயீதாபானு, பள்ளபட்டி ஷம்ஸியா பேகம், கோவை கே. ஜெய்புன்னிஸா, கீழக்கரை மஹபூப் மஜீதா மைந்தன், திருச்சி பாலக்கரை எஸ். ஜான்பேகம் ஆகியோர்களும் கவிதைத்துறையில் இரவாஞ்சேரி ஜைபுன்னிஸா, அடியக்கமங்கலம் நஜ்மா முகியிதீன், திருச்சம்பள்ளி நூர்ஜஹான், திருமங்கலம் பாத்துமுத்து, நயிமுன்னிஸா ( ஜனாபா கமருன்னிஸா அவர்களின் மகள் ) மதுரைவாசியான இவர் மஸ்கட்டில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். சேலம கே. பரீதா பானு இன்னும் பலர் உள்ளனர்.
முடிவுரை
தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு நிறையவே இருக்கின்றது. இன்றைய விஞ்ஞான வெகுஜன ஊடகங்கள், பத்திரிகைகளும் இலக்கிய வளர்ச்சிக்கு பாலமாய் இருக்கின்றன. இன்றைக்கு இண்டர்நெட் வந்துவிட்டது. உலகம் உள்ளங்கையில் என்றபடி விஞ்ஞானம் பரவியுள்ளது. ஆனால் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இது குறையக்கூடாது. வாசிக்கும் பழக்கம் அதிகமானால் தான் இலக்கியங்கள் இன்னும் அதிகமாகும். சமுதாயம் பலம் பெறும். அதற்கு இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு அமைப்பினர் பல வகையிலும் இலக்கியம் வளர்க்க உதவி வருகின்றனர். இவர்கள் மூலம் புரவலர்கள் அறிமுகமாகி எழுத்தாளர்களை இனம்கண்டு அறிந்து ஊக்கப்படுத்துகிறார்கள் ! இதுதவிர தமிழக அரசோடு நட்பை வளர்த்து, அரசு மூலமும் சமுதாயத்துக்கு நன்மைகள் பல கிடைக்கச் செய்கின்றனர்.
இஸ்லாம் வாழ்க !
இஸ்லாமிய இலக்கியம் வளர்க !
ஆய்வுக்கு உதவியவை :
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆய்வுக் கோவை நூல், ஏழாவது மாநாடு 2007
source :http://mudukulathur.com/?p=6867