நிலம் என்னும் ஒற்றைச் சொல்லைத் திருக்குர்ஆனும், தமிழும் ஒரே கோணத்தில் பார்க்கின்றன
நிலம் என்னும் ஒற்றைச் சொல்லைத் திருக்குர்ஆனும், தமிழும் ஒரே கோணத்தில் பார்க்கின்றன. பெண்ணை ‘நிலத்’துக்கு ஒப்பிட்டு இறைவன் கூறியிருக்கிறான். தமிழ்த் தொன்மையும் நிலத்தை பெண்ணுடன் ஒப்பிட்டு ‘கன்னி’ எனக் கூறுகிறது. இறைவனின் மொழிகளுள் ஒன்று தான் தமிழ் உணரவேண்டும்.
‘நிலம்’ என்று மட்டும் இறைவன் கூறியிருக்கிறான். எந்தெந்த நிலம் பகுக்கவில்லை. ‘நஞ்சை’ விளை நிலம். நீர்வளமற்ற ‘புஞ்சை’ நிலம். வரண்ட நிலம், பாலை நிலம். மலை நிலம் தனித்துரைக்கவில்லை. இரகசியத்தை தன்னிடம் வைத்துக்கொண்டான்.
சில வகை நிலங்கள் அளவுக்கதிக விளைச்சலைத் தரும். ஒரு சில நிலங்கள் விலை மதிப்புள்ளவற்றை விளைவிக்கும். வேறு சில வகை நிலங்கள் மனிதன், விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன உடல் நலிவுக்கு நிவாரணம் பெற இயற்கை மருந்துச் செடிகளைத் தரும். சில நிலங்களில் விளையக்கூடியவை விலை போகாதவையாகவிருக்கும். அவை சில உயிரினங்களுக்கான உணவுகள். அவற்றில் பண ருசி கண்டால் உயிரினங்களுக்கு உணவில்லாது போகும். அதனதன் காரணங்கள் தேவையறிந்து இறைவன் படைத்திருக்கிறான். மதிப்பு வித்தையில் விளையாடியிருக்கிறான்.
நிலங்களைப் போலவே சில பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தன்மையுள்ளோராகவும், சிலர் ஒன்றுக்குமேல் இல்லாதோராகவும், சில பெண்கள் குழந்தைப் பேறே இல்லாதவர்களாகவும் இருப்பது இறை இரகசியம். மனிதன் அறியவியலாது.
விளை நிலம் பராமரிக்காது விட்டால் ‘களை’கள் பயிர் வளர்ச்சி தடுக்கும். புல் பூண்டுகள் வளரும். நிலத்தை ஆக்ரமிக்கும். அடுத்துள்ள நிலத்துக்காரர் வரப்பைத் தள்ளியமைத்து நிலத்தை களவாடுவார். புதர்மண்டி வீணாகும். நிலத்திலிருந்து பலன் பெறவும், பாதுகாக்கவும் களைகள் அகற்றுதல். ஆட்டுக்கிடை அமர்த்துதல். நிலத்தை உழுதல் செய்தல். ”தொளியடித்தல்” மூலம் நிலச் சேற்றை இயந்திரத்தால் கலக்குதல். முளைவிட்ட நாற்றை நடுதல். தண்ணீர் பாய்ச்சுதல். பாயும் நீரைத் தடுத்து தம் பக்கம் வேறு நிலத்தவர் கொண்டு செல்லாமல் இரவும், பகலும் கண்காணித்தல். உரமிடுதல். எலிப்பொறி கட்டுதல். விளைந்தபிறகு ஆட்கள் தேடிப்பிடித்து வந்து அறுவடை செய்தல் ஒரு வகை நிலத்தை பாதுகாத்தல் வழி பெறும் பலன்கள்.
நிலங்கள் அதனதன் தன்மைக்குத்தக்க பலனளிப்பவை. நிலத்துக்குக் கீழ் கிடைக்கக்கூடிய தங்கம் போன்ற பொருட்களை தமிழில் ‘கனிவளம்’ என்பர். இறைவனின் அருள், பேரூபகாரத்துக்கு அரபியில் ‘கனீமத்’ என்பர். சில நிலங்கள் தண்ணீர் மட்டும் தரும். சில தங்கம், வைரம் தரும். வேறு சில நிலக்கரி, எரி திரவம், கிரானைட் தருகின்றன. ஒவ்வொரு நிலத்துக்குள்ளும் ஒரு அற்புதத்தை இறைவன் புதைத்துள்ளது போன்று பெண்களுக்குள்ளும் மறைத்துவைத்துள்ளான்.
நிலத்தைப் போலவே பெண்ணும் பராமரிக்கப்படவேண்டியவள். நிலத்தை ஒருவர் எழுத்து மூலம், சாட்சிகள் வாயிலாக உரிமை பெறுவது போல், பெண்ணையும் எழுத்து மூலம் சாட்சிகள் முன்னிலையில் உரிமையாக்கிக் கொள்கின்றோம். மணமுடித்த பெண்ணை வீட்டில் குடியமர்த்துதல். அவளுக்குத் தேவையான உணவு, உடை, தேவைகள் அனைத்தும் தரப்படுதல். நோய்க்குச் செலவிட்டு பாதுகாத்தல். கர்ப்ப காலத்தில் சுடுசொல், கடுஞ்சொல் திட்டுதல் தவிர்த்தல். நம்மை நம்பி வந்தவள் நம் இரத்தத்தை வயிற்றில் சுமக்கிறாள்.
எண்ணம் மேலோங்குதல். ஆறுதல் வார்த்தைகள் கூறி ஆதாரவாக இருத்தல். பிறக்கும் குழந்தை எந்த இனமாகவிருந்தாலும் ஆணே காரணம். உணருதல். பாசத்தோடு வளர்த்தல் சிறப்புக்குரியன. இறைவன் தந்ததை வெறுப்பது இறைவனையே வெறுப்பது போன்றது.
சில விளைநிலங்கள் எளிதாக விளைவிக்கும். சில நிலங்களில் கடுமையாக உழைத்தால் தான் பலனடைய முடியும். சிலருக்கு இயல்பாக கருஉருவாகும். சிலருக்கு சிகிச்சைகள் செய்து கிடைக்கும். வேறு சிலருக்கு குழந்தை பிறப்பதற்கான வழி அடைப்பட்டிருக்கும். முயற்சிக்குப் பின் பலனில்லாது போனாலும், இறை எண்ணத்தை ஏற்கவேண்டும். எதிரெதிரே குற்றம் சுமத்தி வாழ்வை நாசப்படுத்திக் கொள்ளக்கூடாது.
ஒவ்வொரு பெண்ணுள்ளும் பல்வேறு விதமான பண்புகள், குணநலன்கள், ஆளுமை, திறமைகள், நுண்ணறிவை மறைத்து வைத்துள்ளான் இறைவன். நிலத்தின் தன்மை ஆராய்ந்து அதற்கொப்ப செயல்பட்டு பயனடைவது போல், பெண்ணுள் உள்ளவைகளும் கண்டெடுக்கப்பட்டால் அக்கணவனே வெற்றியாளன். வாழ்வு சிறப்பாக அமையும். உதாசீனப்படுத்தினால் தோல்வியும் விரக்தியும் ஏற்படும். நிலம் & பெண் இரண்டையும் ஒப்பீடு செய்து நிறுவியுள்ளதன் மூலம் இறைவனின் அளப்பரிய ஆற்றல் உணரனும், அகத்துள் ஆழப்பதிக்கனும்.
”ல அகலூ மின் ஃபவ்கிஹிம் வமின் தஹ்தி அர் ஜுலிஹிம்” (மாயித – 5:66)
வேதக் கருத்துகளை நிலைநாட்டினால் ரிஜ்க் மேலிருந்தும் பாதத்தின் கீழிருந்தும் வழங்கப்படும்.
மேலிருந்து இறைவன் தருவது மனைவி மூலமாக. கீழிருந்து தருவது நிலத்தின் வாயிலாக.
-சோதுகுடியான், முஸ்லிம் முரசு மார்ச் 2013
source: http://jahangeer.in/?paged=4