ஆண்களின் சபலம் ஒரு அவலம்!
”நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.”
இந்த செய்தியில் தொடர்புள்ளவர்கள் நட்பை கேவலப்படுத்துகிறார்களா? அல்லது நம்பிக்கையை கேவலப்படுத்துகிறார்களா? அல்லது உறவுகளின் புனித தன்மையை கேவலப்படுத்துகிறார்களா? எல்லாவற்றையுமே என்று கசப்பாகவே நினைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.
திருமணம் ஆன பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்க முடிவதில்லை என்று பல நேரம் நினைத்துப் பார்ப்பேன். வயதில் உள்ள ஆணும் பெண்ணும் நெருக்கமாக பழகினால் அது பாலியில் உறவில் முடிந்துவிடும் என்று இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. எத்தனையோ சினிமாக்கள் நட்புக்கும் பாலினத்திற்கும் தொடர்பில்லை என்று காட்டிவிட்டார்கள். ஆனால், அது பொய்யான கற்பனையே!
நட்பு என்பது அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம், நெருங்க நெருங்க ஒத்த பாலினம் என்றால் இருவருக்கும் ஒரின ஈர்ப்பு மாதிரி ஈர்ப்பு இல்லை என்றால் ஒண்ணும் ஆகாது. ஆனால் எதிர்பாலினம் நட்பு கொள்ளும் போது ஈர்ப்பு இயற்கையிலேயே அமைந்துவிடுவதால் அன்பின் வெளிப்பாட்டில் தன்னையே கொடுக்கலாம், அல்லது உரிமை எடுத்துக் கொண்டு அடையலாம் என்றெல்லாம் சபலமாக ஆகிவிடும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.
என் நண்பர் ஒருவர் முன்பு ஒருமுறை அழகாக சொன்னார், ‘ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்றுதான் பொருள் என்று! அதாவது சூழ்நிலை அது போல் அமையாமல் போனால் அவன் யோக்கியனாகவே இருப்பான்’ என்ற பொருளில் சொன்னான். திகைத்தேன். அவர் சொன்னது சரியா தவறா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
வலிய வாய்ப்பு கிடைத்தால் எத்தனை பேர், சினிமா கதா நாயகர்கள், விரக பார்வையுடன் நெருங்கும் பெண்களுக்கு அட்வைஸ் மழை பொழிவது போல் செய்வார்கள் என்று தெரியவில்லை. நடப்பில் விழுக்காட்டு அளவில் ஆண்கள் தான் பெண்களை அதிகம் தூண்டுகிறார்கள்.
பெண்களை குறை சொல்ல முடிந்தால் எதோ ஒரு சபலம் என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். அதற்கு முழுப் பொறுப்பையும் ஆண் வர்க்கம் தான் ஏற்கவேண்டும். ஆண்களில் கேடுகெட்ட குணத்தை வைத்துதான் ‘அண்ணன் மனைவியை அம்மா’ என்ற பொருள்படவே நினைக்கும் அளவுக்கு தமிழ் சமூகத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள், நண்பர் மனைவியை ஏன் தன் சகோதரி என்று கருதமுடியவில்லை? கட்டுப்பாடு அற்றவர்களுக்கு எந்த உறவும் தடையில்லை போலும்.
உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது. பழக்கத்தை வைத்து தவறாக நடந்தால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள். அடிக்க வேண்டும்.
ஒரு சிலரின் ஈன செயலை வைத்து எல்லோரையும் எடை போட முடியாது. ஆனாலும் அந்த ஒரு சிலரில் ஒரு சிலருக்கு தவறுகள் நடப்பதற்கு சூழலே முக்கிய காரணமாக அமைந்துவிடும். மெக சீரியல்களும், சினிமாக்களும் சமூக சீரழிவுகள் பெருகுவதற்கு சொல்லிக் கொடுக்கின்றன. சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு தவறுதான்.
On another note : இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற ஒரு சங்கதி : தெரிந்த ஒருவர் தன் மாமியாரை உரசி உரசி பேசுவார், தவறான இடங்களில் தொடுவார், வேண்டுமென்றே மேலே படுவார். அப்படி ஒரு வக்கிர நினைப்பு, பெண்டாட்டி நன்றாக இருக்கும்போதே!! மாமியார் அவரை ஒரு முறை நன்றாக திட்டிய பிறகே அவருக்கு புத்தி வந்தது.
பல மெகா சீரியல்களின் பேச்சுகள் மட்டும் காதில் விழும்… அதிலேயே இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் அதிகம் எடுத்தாளப்படுகிறது.
எந்தவொரு நிலையிலும் ஆண் ஆணாகத்தான் இருப்பான். அதற்கு வசதி இருக்கும் பட்சத்தில் பெண்ணை அடையவே அவன் மனம் விரும்பும்.
தவறு யார் செய்திருந்தாலும், தண்டணையின் பெரும்பகுதியை பெண்ணே அனுபவிக்கிறாள். எனவே தவறுகள் நடைபெறாமலிருக்க அதற்கான வாய்ப்புக்களை முழுதும் அடைத்து விடுவதே (அல்லது அத்திசையில் முயற்சிப்பதே) சரியானது. அதாவது பெண்கள் அல்லது பொறுப்பிலுள்ளவர்கள், ஒரு அன்னிய ஆணுடன் பெண் தனித்திருக்கும் வாய்ப்புகளை முழுவதும் தவிர்க்க முயற்சிப்பதே சிறந்தது.
திருமணம் ஆன ஆண்கள் கூட வேறொரு பெண் தன்னை நேசித்தால் தன் ஆண்மையின் பெருமையாகத்தான் நினைக்கிறான். உறவுகள் புரிந்து கொள்ளப்படாதவரை…
பெண் என்பவள் யார்? அவள் தன்மைகள் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளப்படாதவரை இத்தகைய சமூக அவலங்கள் தொடர்கதைதான்.
-கோவி.கண்ணன்