ஏன் பிறந்தோம்?!
[ சுனாமி வரும் என்று சொல்லும்போது பெட்டி படுக்கையுடன் உறவுகளுடன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்கிறோம். சுனாமியை விடப் பேரழிவுகளை உண்டாக்கப் போகும் உலகப் பேரழிவு நாளில் எந்தப் பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கப்போகிறோம் என்று சிந்திக்காமல் இருப்பது நியாயமா? சராசரி அறுபது வருடங்களில் மூன்றில் இருபங்கு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவே இத்தனை ஆர்வமும் ஏற்பாடுகளும் என்றால் முடிவற்ற வாழ்க்கைக்கு என்ன ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்?]
பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் சூரியனும் ஒரு நட்சத்திரம். சூரியனைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக ஒன்பது கோள்கள். (சென்ற வருடம் புளூட்டோவை சூரியக் குடும்பத்திலிருந்து ஊர்விலக்கம் செய்து விட்டார்கள்!) இந்த எட்டு அல்லது ஒன்பது கோள்களில் பூமியும் ஒரு கோள். இந்த பூமியில் சுமார் 72% கடல்களால் சூழப்பட்டு, மீதமுள்ள 28% நிலப்பரப்பை நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான நமது இந்தியாவை மாநிலம், மாவட்டம் , வட்டம் , ஊராட்சி , தெரு, புலம் எனப் பல்வேறு எல்லைகளாக வகுத்துக் கொண்டு நமக்கென ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் 10 x 12 அடியுள்ள படுக்கையறையில் 7 x 5 அடி கட்டிலில் அல்லது பாயில் வாழ்வின் மூன்றில் ஒருபங்கைக் கழிக்கிறோம்! நமது சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்றாலும் கிட்டத்தட்ட இருபது வருடங்களைத் தூங்கியே கழிக்கிறோம்.
பிரபஞ்சத்தில் நமது பூமியின் அளவு ஒரு நெல்லிக்காய் அளவென்றால் நம் வீடு அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாதத் துகளை விடச் சிறியது. குடிசையோ சொகுசு அரண்மனையாக எதுவாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் எல்லாமே துகளைவிடச் சிறிய அளவே. நமது வீட்டிற்கே இந்நிலை என்றால் வீட்டின் ஒரு பகுதியில் இருக்கும் நாம் எம்மாத்திரம்?
இத்தகைய அற்ப அளவுள்ள மனிதர்களில் சிலர், “கண்களால் கண்டால் மட்டுமே எதையும் நம்புவோம்” என்ற கோட்பாட்டில் இருப்பவர்கள் – பூமியிலிருந்து விண்ணில் ஒரு சில ஆயிரம் மைல்கள் மட்டுமே பயணித்து, “எங்கள் கண்களுக்கு எட்டியவரை இறைவன் என்ற எவனையும் நாங்கள் காணவில்லை” என்பது நியாயமா?
கோள்களும், பூமியும் அதன் துணைக்கோளான சந்திரனும் பூமியில் மனித இனம் தோன்றியதாக அறியப்பட்ட காலந்தொட்டு இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் இந்நொடிப் பொழுது வரை தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நியதிக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன; வரலாற்றிலோ அல்லது அறிவியல் ஆய்வுகளிலோ இவை என்றுமே இயக்கத்தை நிறுத்தியதாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதாகவோ அறிய முடியவில்லை. இனியும் அவை இயங்கிக் கொண்டிருக்கும்.
இப்படியாக, தங்களுக்கென வகுக்கப்பட்ட சுற்றுப்பாதையில் உலவி வரும் கோள்கள் ஒருநாள் ஒன்றோடொன்று மோதி இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போகும் என்று சொல்லப்பட்டால், அதைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்றச் செயல் மட்டுமின்றி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலுமாகும்!
நாமுறங்கும் நான்கு சுவர்களுக்குட்பட்ட படுக்கையறை ஒருநாள் இடிந்து தலையில் விழும் என்று சொன்னால் தூக்கம் வருமா? படுக்கை அறையுடன் வசிக்கும் வீடும் புலமும் தெருவும் வட்டமும் மாவட்டமும் மாநிலமும் நாடும் ஒட்டு மொத்த உலகமும் ஒருநாள் அழிந்து போகும் என்று சொல்லப்படும் போது எந்தளவு பதற்றப்பட வேண்டும்? ஆனால், இதனைக் கேள்விப்பட்ட எவரும் பதற்றம் அடைவதாகவோ /அடைந்ததாகவோ அறியமுடியவில்லையே! ஏன்?
கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அண்டம் இன்னும் சில நூறு ஆண்டுகள் இருக்குமென்று யாராவது அவர்களிடம் உத்திரவாதம் கொடுத்துள்ளார்களா? பூமி உருண்டை தோன்றி இத்தனை கோடி ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணித்துச்சொன்ன விஞ்ஞானிகளால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பூமி இருக்கும் என்று சொல்ல முடியவில்லையே! ஏன்?
சுனாமி வரும் என்று சொல்லும்போது பெட்டி படுக்கையுடன் உறவுகளுடன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்கிறோம். சுனாமியை விடப் பேரழிவுகளை உண்டாக்கப் போகும் உலகப் பேரழிவு நாளில் எந்தப் பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கப்போகிறோம் என்று சிந்திக்காமல் இருப்பது நியாயமா? சராசரி அறுபது வருடங்களில் மூன்றில் இருபங்கு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவே இத்தனை ஆர்வமும் ஏற்பாடுகளும் என்றால் முடிவற்ற வாழ்க்கைக்கு என்ன ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்?
அலுவலகத்தில் மேசை மேலிருக்கும் கணினியை உருவாக்கியவரைத் தெரியும்; அதனுள் இயங்கும் மென்பொருளை உருவாக்கியவரைத் தெரியும்; அலுவலக இடம், நாடு, நாட்டின் ஆட்சியாளர் பற்றியும் தெரியும். இவற்றையெல்லாம் உள்ளடக்கி இருக்கும் உலகத்தை உருவாக்கி அதன் அதிபதியாக விளங்குபவனைப் பற்றிச் சிந்திப்பதைத் தடுப்பது எது? தன் பிறப்பின் ரகசியங்களை முழுதும் அறிந்து கொள்ளவே ஆயுள் போதாத மனிதன், படைத்தவனைப் பற்றி தர்க்கித்துக் கொள்வது அறியாமையா அல்லது பிடிவாதமா?
முப்பாட்டன் – பாட்டன் – தந்தை – மகன் – பேரன்- கொள்ளுப்பேரன் என ஆறு தலைமுறைகளை மட்டுமே அறியக்கூடிய அளவில்தான் நமது உறவுகள் இருக்கின்றன. இவ்வுறவுகள் ஏன் ஏற்பட்டன? நாம் ஏன் இவர்களின் வழித் தோன்றலாகப் பிறந்த, சில வருடங்கள் மட்டும் இவர்களுடன் வாழ வேண்டும்?
சொற்ப வருடங்கள் மட்டுமே வாழ்ந்து சொந்தங்களை அழவைத்து இறுதியில் இறப்பதற்காகவா இவ்வுலகில் பிறப்பெடுத்தோம்? எங்கிருந்து வந்தோம் என்பதை ஓரளவு அறிந்துள்ளோம். எங்கு செல்வோம் என்றும் அறிந்து கொள்வது மானுடக் கடமையல்லவா?
எப்படிப் பிறந்தோம் என்பது தெரிந்து விட்டது; ஏன் பிறந்தோம் என்பதைத் தேட வேண்டியது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமை!