நேர்வழிப்படுத்தப்பட்ட சமூகம்!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
நேர்வழி செல்லும் இஸ்லாமிய இயக்கமொன்றின் பண்புகளை சென்ற முறை பார்த்தோம். இங்கு சுட்டிக்காட்டப்பட்ட ஒவ்வொரு பண்பும் விரிவான விளக்கத்தை வேண்டி நிற்கின்றது. எனினும், இஸ்லாத்தின் அடிப்படைகள் தொடர்பில் தெளிவு பெற்றுள்ளவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியுமான வழிகாட்டல் தத்துவங்களே இவை.
இஸ்லாம் இயற்கையின் மார்க்கமாகும். தன் வழிகாட்டல்கள் அல்லாஹ்வுடையதாகும்.
அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வின் படைப்புகளான மனிதர்களைக் கவரவே செய்யும்.
இந்த உண்மையைப் பரீட்சிக்க விரும்பினால் முன்னைய கட்டுரையில் கூறப்பட்ட வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்திப் பாருங்கள்.
இவற்றை நடைமுறைப்படுத்தும் இயக்கம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.
அந்த வழிகாட்டல்களைப் புறக்கணிப்பவர்களை சமூகம் மெல்ல மெல்ல ஒதுக்கிவிடும்.
இப்போது நேர்வழி செல்லும் ஒரு சமூகம் உருவாகும். இயக்கங்களின் தோற்றப்பாடுகள் களைந்து ஒரு சமூகம் உதயமாகும் தருணமும் இதுவே.
உண்மையில் நேர்வழி செல்லும் இயக்கமொன்றின் பண்புகளால் வழிநடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட சமூகமே இது. அதனால் ஏற்கனவே கூறப்பட்ட சிறப்பியல்புகள் அனைத்தும் அச்சமூகத்தின் பண்புகளாக மாறியிருக்கும். அத்துடன் இவற்றிற்கு மேலாகவும் இந்த சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதி விஷேட சிறப்பம்சங்களை நாம் இங்கு காணலாம். இவற்றையே நேர்வழி பெற்ற சமூகத்தின் பண்புகளாக இங்கு நாம் சுட்டிக்காட்டுகிறோம், அவையாவன:
சீரிய தலைமைத்துவம்
நேர்வழி பெற்ற சமூகத்தின் அதி விஷேட சிறப்பம்சம் அதன் தலைமைத்துவமாகும். இத் தலைமைத்துவம் பற்றி பல உப தலைப்புக்களில் நாம் பேச வேண்டியுள்ளது. அவற்றுள் முதன்மையானது இது மக்கள் விரும்பும் தலைமைத்துவமாக இருக்கும். அதாவது மக்கள் விரும்பித் தெரிவு செய்த ஒரு தலைவர் சமூகத்தை வழிநடத்துபவர்களாகவே இருப்பார். அவர் பலவந்தமாக அதனைக் கைப்பற்றியிருக்க மாட்டார். மேலும் அவர் பதவி ஆசையால் அப்பதவிக்கு வந்திருக்கவும் மாட்டார். அந்தத் தலைவர் மக்களுக்காக துஆ செய்வார். மக்கள் அவருக்காக துஆ செய்வார்கள்.
இரண்டாவது முக்கிய அம்சம் அந்தத் தலைவர் நேர்வழி செல்லும் ஒரு மனிதனுக்குரிய நான்கு பண்புகளையும் கொண்டிருப்பார். அப்பண்புகள் குறித்து இத்தொடரின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம்.
இஸ்லாம் பற்றிய தெளிவான விளக்கம்
தூய்மையான உள்ளம்
அனைத்து விவகாரங்களிலும் எடுத்துக்காட்டான வாழ்க்கை
அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்கான அர்ப்பண உழைப்பு
என்பவையே நேர்வழி செல்லும் ஒரு மனிதனது நான்கு சிறப்புக் குணங்களாகும். இவற்றுள் நான்காவது பண்பு அவரது தலைமைத்துவத்தின் திசையைத் தீர்மானிப்பதற்கு இன்றியமையாத பண்பாகும். நான்காவது பண்பு குறித்து தெளிவற்ற நிலையில் ஒருவர் சமூகத்தை வழிநடத்தினால் அவர் எத்திசையில் சமூகத்தை வழிநடத்திச் செல்வார் என்பது அவருக்கே புரியாதிருக்கும். அத்தகைய ஒருவர் நாற்பது வருடங்கள் தலைவராக இருப்பதை விட நான்காவது பண்பைப் பெற்ற ஒருவர் நான்கு வருடங்கள் தலைவராக இருப்பது மேலானது.
நேர்வழிக்குரிய நான்கு பண்புகளோடு தலைமைத்துவத்திற்கேயுரிய விஷேட பண்புகளையும் அவர் கொண்டிருப்பார். இவற்றைத் தலைமைத்துவப் பண்புகள் எனலாம். இவற்றுள் இரண்டு ஒரு தலைவருக்கு இன்றியமையாதவையாகும். அவையாவன:
நீதி: “நீதிக்கோர் உமர்” என்று கூறுவார்கள். காரணம், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம் உம்மத்தை வழிநடத்திய ஒரு மகத்தான தலைவர். “நீதிகொரு பிலால்” என்று எவரும் கூறுவதில்லை. காரணம் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீதி என்ற பண்பு இருக்கவில்லை என்பதல்ல. அவரிடம் அப்பண்பு வெளிப்படுதவற்குரிய தேவை இருக்கவில்லை. ஏனெனில், அவர் உம்மத்தை வழிநடத்தும் ஒரு தலைவராக இருக்கவில்லை. பக்கசார்புகள், பாரபட்சம், காய்தல் உவத்தல் என்பன ஒரு தலைவரின் மடியில் கூட அமர்ந்திருத்தலாகாது. உள்ளத்தில் எவ்வாறு இந்த மோசமான பண்புகள் இடம்பிடிக்க முடியும்? ஒரு தலைவரிடம் இருக்கவே கூடாத இப்பண்புகளை மக்கள் அவரிடம் இருப்பதாக உணரத் தலைப்படுவார்களானால் அந்த சமூகத்துக்கு ஒரு தலைவர் இருப்பதும் இல்லாதிருப்பதும் சமமே.
நிழலில்லாத மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷ் நிழலைப் பெறும் முதல் பாக்கியசாலி நீதியான தலைவனே. நீதியான தலைவன் தனக்குப் பின்னால் சமூகத்தை ஒன்றிணையச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பான். அதன் மூலம் அத்தலைவன் தனது தகுதியை உறுதி செய்வான். நீதி என்ற பண்பை இழந்த ஒரு தலைவன் சமூகத்தின் தலைவனாக இருந்தாலும் யதார்த்தத்தில் அவன் தனக்குச் சார்பான ஒரு குழுவின் தலைவனாகவே இருப்பான். காரணம் சமூகத்தை அரவணைக்கும் “நீதி” என்ற பண்பு அவனிடமில்லை.
இஸ்லாம் வலியுறுத்தும் “நீதி” சாதாரணமானதுல்ல. அது எதிரிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய “நீதி”யாகும். எதிரிகள் விடயத்தில் கூட அநீதியாக நடப்பதை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. அவ்வாறாயின், ஓர் உம்மத்தின் அங்கத்தவர்களிடையே நீதி செலுத்த முடியாத ஒரு தலைவர் பற்றி கூறுவதற்கு என்ன இருக்கிறது? அவர் ஒரு தலைவரல்ல என்று மட்டும்தான் கூற முடியும்.
ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய அடுத்த இன்றியமையாத தலைமைத்துவப் பண்பு “கலந்தாலோசனை” ஆகும். “கலந்தாலோசனை” என்பதன் பொருள் அற்புதமானது. அதனை இவ்வாறு விளக்கலாம்:
ஒரு தலைவர் எத்துணை சாணக்கியம் உள்ளவராக இருந்தாலும் சமூக வாழ்வின் சகல தளங்களிலும் தாக்கம் செலுத்தி, எதிர்பார்க்கப்படும் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு எனது தலை மட்டும் போதாது என்பதை அவர் உணர்ந்திருப்பார். அதனால் அவசியமான அத்தனை ஆலோசகர்களையும் உள்வாங்கிக் கருமமாற்றுவார். இந்தத் தேவை ஒரு தலைவரால் உணரப்படும்போதுதான் உண்மையான கலந்தாலோசனை உதயமாகிறது. இல்லாமல் ஒரு சிலரை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு நாலு வார்த்தை நாசூக்காக அவர்களிடமும் கதைத்து விட்டு செல்வது கலந்தாலோசனை என்பதன் பொருள் அல்ல.
ஒரு தலைவரிடம் இந்தப் பண்பு எப்போது வரும் என்பதையும் நாம் விளங்கியிருக்க வேண்டும். ஒரு தலைவர் இஸ்லாமியவாதி என்பதனாலோ அல்லது எப்போதும் இஸ்லாம் பற்றிப் பேசுபவர் என்பதனாலோ அவரிடமும் இப்பண்பு வந்து விடாது. சில தலைவர்கள் தொடர்ந்தும் தமது பதவியைத்தக்கவைத்துக் கொள்வதற்கான ஓர் உத்தியாக தானும் ஒரு மதப்பற்றுள்ளவர் மதசார்புடையவர் என்பதைக் காட்டிக் கொள்ள முனைவதுண்டு. “கலந்தாலோசனை” என்ற பண்பு இத்தகையோரில் அசுத்தப்படுமேயன்றி அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை இவர்களால் வெளிக்கொணர முடியாது.
எந்தத் தலைவரிடம் உம்மத்தை வழிநடத்துவதற்கான நிகழ்ச்சி நிரலும் செயற்திட்டமும் இருக்கிறதோ அவர்தான் உண்மையில் “கலந்தாலோசனை” என்ற பண்பை தன் தூய வடிவில் அமுல்படுத்துவார். தனக்கெனத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை வைத்திருப்பவர் ஒரு பேச்சுக்காக பிறரிடம் கலந்தாலோசனை நடத்துவாரோ தவிர, தனது நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே பேசப்படும் எந்தவொரு கருத்தையும் அது எத்துணை பெறுமதிமிக்கதாக இருந்தபோதிலும் அதற்கு செவிதாழ்த்தமாட்டார். காரணம், அவரது நிகழ்ச்சி நிரலின் நாயகன் அவர்தான். தனது நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்ல தனது அபிப்பிராயங்களே போதும் பிறருக்கு இந்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பது கூடத் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்றே அவர் கருதுவார்.
எனினும், உம்மத்துக்கான நிகழ்ச்சி நிரல் அவ்வாறானதல்ல. அதனை இரகசியமாக மூடிவைக்க முடியாது. தனியாக அமுல்படுத்தவும் முடியாது. எனவே, கலந்தாலோசனை தவிர்க்க முடியாதிருக்கிறது.
ஆக, உம்மத்தை வழிநடத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றினூடாகவே கலந்தாலோசனை என்ற பண்பு வலுவுள்ளதாக மாறுகின்றது. அதன் பின்னர் கலந்தாலோசனைக்குத் தேவையான இஸ்லாத்தின் நிபந்தனைகளையும் இணைத்துக் கொண்டால் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவப் பண்புகள் பூர்த்தியாகின்றன.
இங்கு உம்மத்திற்கான நிகழ்ச்சி நிரல் அல்லது செயற்திட்டம் யாது என்பது பற்றியும் நாம் விளங்கியிருக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை உம்மத்திற்கான செயற்திட்டத்தில் இரண்டு முக்கியம்சங்கள் இடம்பெற வேண்டும்.
ஒரு சிறுபான்மை இனம் என்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் நெருக்குதல்கள், நீதிகள், அபகரிப்புகள் போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்தல்.
ஒரு கொள்கையை சுமந்த சமூகம் என்ற வகையில் நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள், கடமைகள் என்பவற்றில் கவனம் செலுத்துதல்.
இந்த இரு அம்சங்களும் உட்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல் பற்றி ஒரு கணம் அமைதியாக சிந்தனை செய்யுங்கள். தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படுவோரில் இப்படியொரு வேலைத்திட்டத்தை சீர்தூக்கிப் பார்க்க முடியுமா? இந்த நிகழ்ச்சி நிரலை அரசியல்வாதிகள் தனியே சுமக்கவும் முடியாது ஆன்மிகவாதிகள் தனியே சுமக்கவும் முடியாது.
இங்குதான் வெளிப்படைத்தன்மையும் சமூக ஒருமைப்பாடும் சாணக்கியமுள்ள தலைமைத்துவமும் அவசியமாகின்றன. அந்தத் தலைமைத்துவம் இனம் என்ற வகையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். சமூகம் என்ற வகையில் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இத்தகைய ஒரு தலைமைத்துவம் நேர்வழி செல்லும் ஒரு சமூகத்தின் முதல் சிறப்பம்சமாகும். உறுதிமிக்க இத்தகையதொரு தலைமைத்துவத்தை உருவாக்க முயற்சி செய்யாமல் சமூகத்தை நேர்வழி செல்லும் சமூகமாக மாற்றுவது பகற்கனவாகும்.
உறுதிமிக்க இதுபோன்றதொரு தலைமைத்துவம் திடீரெனத் தோற்றம் பெறும் ஒரு தலைமைத்துவமல்ல. நேர்வழி செல்லும் இயக்கத்தின் பண்புகளோடு நீண்ட தூரம் பயணிக்கும் ஒரு பாதையினூடாகவே இத்தகையதொரு தலைமைத்துவத்தைத் தோற்றுவிக்கலாம். இந்தப் பாதையில் பயணித்தால் நேர்வழி செல்லும் தலைமைத்துவம் மட்டுமல்ல, அதற்குக் கட்டுப்படும் சமூகமொன்றும் உருவாகும். நேர்வழி செல்லும் சமூகத்தின் அடுத்த சிறப்பம்சம் இதுவே.
கட்டுப்படும் சமூகம்
நேர்வழி செல்லும் சமூகத்தின் இரண்டாவது பண்பு கட்டுப்படுவதாகும். அனைத்து உன்னதமான பண்புகளையும் கொண்ட ஒரு தலைவர் கிடைத்த பின்னரும் சமூகம் அவரது தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படவில்லையென்றால் அது நேர்வழி செல்லும் சமூகமாக இருக்க முடியாது. எனவே, தலைமைத்துவத்தை உருவாக்குவது போல சமூகத்தையும் உருவாக்கும் முயற்சியில் தொண்டர்கள், உரியவர்கள் ஈடுபட வேண்டும்.
கட்டுப்பாடு எனும் பண்பு எமது சூழலைப் பொறுத்தவரையில் பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றது அந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறாதவர் நேர்வழி செல்லும் சமூகமாக எமது சமூகத்தை மாற்ற முடியாது.
ஒருமுகப்பட்ட சிந்தனை: (இது பற்றி நேர்வழி செல்லும் இயக்கம் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம். தயவு செய்து அதனை மீட்டிக் கொள்ளுங்கள்.) அத்துடன் இனங்காணப்பட்ட முக்கியமான பல விடயங்களில் இஸ்லாத்தின் பொதுக் கருத்துடன் ஒருமித்து செயல்படும் ஒரு சமூக சூழலை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக ஒரு பரஸ்பரப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சமூகத்தில் விருத்தி செய்யப்படல் வேண்டும். அதனை சமூகத்தில் முன்கொண்டு செல்வதற்கான சக்தியும் ஒன்றுசேர்க்கப்படல் வேண்டும்.
பிளவுகளற்ற சமூகம்: கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து பிளவுகளைத் தவிர்க்கும் பண்பாட்டை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் கட்டுப்படும் தன்மையை விருத்தி செய்யலாம். இன்றுள்ள நிலை இதற்கு நேர் எதிரானதாகும் கருத்து வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தி பிளவுகளை ஆதரிக்கும் ஒரு பயங்கரமான சூழலுக்குள் இன்றைய சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் பயங்கரவாதம் ஒரு பொழுது போக்காகவும் மாறியுள்ளது. எவ்வாறு ஆபாச சினிமாக்கள் அதன் ஆபத்து உணரப்படாதளவு ஒரு பொழுது போக்காக மாறியுள்ளனவோ அதுபோல.
சமூகத்தை பிளவுகளுக்குள் தள்ளியிருக்கும் மற்றுமொரு முக்கிய காரணி எமது அரசியலாகும். ஒட்டு மொத்த சமூகத்திலும் நாம் வாழும் நாட்டிலும் எமக்கு எத்தகையதொரு பணியும் பொறுப்பும் இருக்கிறது என்பதை அறியாத ஒரு சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களால் எமது சமூகததிற்கு இந்த அவலம் ஏற்பட் டுள்ளது. தெளிவான கொள்கையும் செயற்திட்டமும் கொண்ட ஒரு மாற்று அரசியலால் இந்நிலையை மாற்றிய அமைக்கலாமா என்பது கூட ஊமை கண்ட கனவு போல விபரிக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.
இத்தகைய பாரிய சவால்களை எதிர்கொண்டுதான் கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது. இது விடயத்தில் எமது சவாலாக எமது சமூகமே திகழ்கிறது. எனினும் நேர்வழி நோக்கிச் செல்லும் பாதையில் நாம் பயணிப்பதாய் இருந்தால் இவற்றை எதிர்கொண்டேயாக வேண்டும். முயன்றால் முடியாதவொன்றை சீர்திருத்தப் பணியில் அல்லாஹ் வைக்கவில்லை.
அன்பும் சகோதரத்துவமும்
நேர்வழி செல்லும் சமூகத்தின் அடுத்த பண்பு அந்த சமூகம் அன்பினாலும் சகோதரத்துவத்தினாலும் பிணைக்கப்பட்டிருப்பதாகும். ஒரு கட்டிடத்தின் கற்களைப் போல, ஓர் உடம்பின் உறுப்புக்களைப் போல அவர்களது நெருக்கமும் பிணைப்பும் இறுக்கமானதாக இருக்கும் என அன்பு, சகோதரத்துவம் என்பவற்றால் கட்டமைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்துள்ளார்கள். ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட ஓர் அணைப் போல் முஸ்லிம் அணி திகழும் என அல்குர்ஆன் இதனைக் குறிப்பிடுகிறது. மேலும் ஈமான் என்றாலே அது அன்புதான் என்ற உண்மையையும் ஸுன்னா வலியுறுத்துகின்றது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தாதவரை ஈமான் கொள்ளவே மாட்டீர்கள்.”
மற்றொரு சந்தர்ப்பத்தில் ஈமானின் சுவையை விளக்க வந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதற்குரிய பண்புகளில் ஒன்றைப் பின்வருமாறு விளக்கினார்கள்: “ஒரு மனிதன் மீது அன்பு செலுத்தவும் வேண்டும். அவன் மீது கொண்ட அன்பு அல்லாஹ்வுக்காக ன்றி (பிற நோக்கங்களுக்காக) அமைந்து விடவும் கூடாது.”
ஆக, அன்பு, சகோதரத்துவம் என்பவற்றைப் புறக்கணிக்கும் சமூகம் ஈமானைப் புறக்கணிக்கும் சமூகமாகும். ஈமானைப் புறக்கணித்த பின் நேர்வழி செல்வது எங்கனம்?
வெறுப்பு, குரோதம், பொறாமை, பகைமை போன்ற கிருமிகள் முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுருவி அதனை சின்னாபின்னப்படுத்தியிருப்பதை இன்று நாம் காணுகின்றோம். நாளை நேர்வழி செல்லும் ஒரு சமூகமாக இதனைப் பரிணமிக்கச் செய்வதானால் இந்நிலையை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டிருப்போரின் தோளில் சுமத்தப்படுகின்றது. எனினும், அவர்களோ இந்த மாற்றம் குறித்து அலட்சியமாகவே இருக்கின்றனர். அவர்களது அலட்சிய மனப்பான்மைக்குப் பின்னால் பல்வேறு சாக்குப் போக்குகள் தொக்கி நிற்கின்றன. அவை மொத்தத்தில் சமூகத்தை வழிகேட்டின் பக்கமே இட்டுச் செல்கின்றன.
சிலர் சமூகத்தில் நடைபெறும் பாவங்களைக் காரணமாகக் காட்டி அன்பையும் சகோதரத்துவத்தையும் வழங்க மறுக்கிறார்கள். சிலர் கருத்து வேறுபாடுகளைக் காரணமாக வைத்து அன்பையும் சகோதரத்துவத்தையும் சிதைத்து விடுகின்றார்கள். இன்னும் சிலர் பிளவுபட்டுப் பிரிந்து நிற்பதை ஒரு யதார்த்தம் என்று அங்கீகரிப்பதன் மூலம் அன்புக்கும் சகோதரத்துவத்திற்கும் சவாலாக அமைந்து விடுகிறார்கள். மொத்தத்தில் இவர்கள் அனைவரும் அன்பையும் சகோதரத்துவத்தையும் குழிதோண்டிப் புதைப்பதில் ஒன்றுபடுகிறார்கள். நாளை எப்படி அந்த நேர்வழி பெற்ற சமூகம் உருவாகும்?
இறுதியாக, நேர்வழி பெற்ற சமூகத்தின் நான்காவது பண்பு பற்றி விளங்கிக் கொள்வோம். இதனை விளங்குவதன் நோக்கம் நேர்வழிபெற்ற சமூகம் அதன் தூய வடிவில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கான பிரயத்தனங்கள் பற்றியும் நாம் உணர வேண்டும் என்பதே.
நேர்வழி பெற்ற சமூகம், தெளிவான இலட்சியங்களையும் அவற்றிற்கான பணிகளையும் கொண்ட ஒரு சமூகமாகத் திகழும். இறைதிருப்தியையும் சுவனத்தையும் இலக்காகக் கொண்டு உலகில் நன்மைகளை வாழ வைத்து, தீமைகளை இல்லாமல் செய்து, அனைத்து அடக்குமுறையிலிருந்தும் மனித சமூகத்தை விடுவித்து அடிமை விலங்குகளை அகற்றி மனித சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு சுமைகளை இறக்கி, வைத்து அமைதியும் சுபிட்சமும் மேலோங்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி, படைத்த இரட்சகனை மனித சமூகம் அறிந்து வணங்கி வழிபடும் நிலையை ஏற்படுத்துவதே நேர்வழி செல்லும் சமூகத்தின் இறுதிப் பண்பாகும்.
இந்தப் பாரிய பணியை சுமக்காமல் தனது தனிப் பட்ட மற்றும் குடும்ப விவகாரங்களோடு சுருங்கிப்போன சமூகமொன்றை நேர்வழி செல்லும் சமூகம் என்று கூறுவதற்கில்லை. மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உருவாக்கிய சமூகம் எந்தக் காரணிகளால் எழுச்சி பெற்றது என்பதனை வரலாற்றில் படித்துப் பாருங்கள். இந்த உண்மைகளை இப்போது நாம் உணர்ந்து கொள்ள முடியும். இன்றைய சமூகத்தில் கொள்கை இலட்சியம், பணி மற்றும் பண்பாடு, வாழ்வொழுங்குகள் என்பன பெருமளவு மாற்றத்துக்கு உள்ளாகினால் மட்டுமே இன்றைய சமூகம் எழுச்சிப் பாதையில் பயணிக்க முடியும் அந்தப் பயணத்தை விரைவுபடுத்த நல்லுள்ளங்கள் ஒன்றிணையட்டும்!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/