ராமதாசுக்கு என்ன ஆச்சு?
ஆளூர் ஷாநவாஸ்
[ என்னதான் பிரச்சனை பா.ம.க.வுக்கு? அல்லது ராமதாசுக்குத்தான் என்ன ஆயிற்று?
இந்த ஒற்றை கேள்வியின் விடையில்தான், இன்றைய பிரச்சனைகளின் மொத்த சாரமும் அடங்கியிருக்கிறது.
பா.ம.க.வுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரிய வேண்டுமெனில், முதலில் பா.ம.க.வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.]
தர்மபுரியில் தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடத்தப்படும் சாதி வெறியாட்டங்களை காணும்போது, நாகரிகமுள்ள ஒரு சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்படுகின்றது. கல்லூரிக்கு சென்ற இடத்தில் காதல் வயப்பட்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடியைக் காரணம் காட்டி, ஒரு சமூகத்தையே குறிவைத்துக் குதறும் கொடூரம் அரங்கேறி வருகின்றது.
ஈராக்கைக் கைப்பற்ற ஒரு பேரழிவு ஆயுதம் போல், ஆப்கானைச் சூறையாட ஒரு இரட்டை கோபுரத் தாக்குதல் போல், பாபர் மசூதியை இடிக்க ஒரு ராமர் கோயில் போல், குஜராத் கலவரத்தை நடத்த ஒரு கோத்ரா ரயில் எரிப்பு போல், கோவை முஸ்லிம்களின் உயிரைப் பறிக்கவும், உடமைகளை அழிக்கவும் ஒரு போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை போல், தலித் மக்களை வேட்டையாடுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்தான், காதல் நாடகத் திருமணம்.
எளிய மக்களை வேட்டையாடும் முன் வலிமையானவர்கள் செய்யும் முதல் வேலை, அவர்களின் மீது தப்பபிப்ராயத்தை உருவாக்குவதே ஆகும். எளியோர் மீதான வெறுப்புணர்வை பொதுப்புத்தியில் ஆழ விதைத்த பிறகே, தன் திட்டத்தை செயல்படுத்துகிறது ஆதிக்க வர்க்கம். தாக்கப்படும் மக்கள் மீது மற்ற எவருக்கும் பரிவு வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதிலேயே பாசிசத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. ‘முஸ்லிம்கள் எங்கு பார்த்தாலும் குண்டு வைக்கிறார்கள்; அதனால் மோடி செய்தது சரிதான்’ என்று வெகுமக்களைச் சொல்ல வைத்ததுபோல், ‘தலித்துகள் எங்கு பார்த்தாலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்; அதனால் ராமதாஸ் செய்வது சரிதான்’ என்று சொல்ல வைக்கிறது பாசிசம்.
பாசிசத்திற்கு எப்போதுமே ஒரு எதிரி வேண்டும். அமெரிக்காவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் போல்; இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் போல்; இந்துத்துவத்திற்கு முஸ்லிம்கள் போல்தான்; ஆதிக்க சாதியினருக்கு தலித்துகள். எளிய மக்களை எதிரிகளாகக் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும், இந்துத்துவமும் என்ன செய்ததோ; என்னென்ன அடைந்ததோ, அதையெல்லாம் செய்யவும், அவற்றையெல்லாம் அடையவுமே இங்கே ‘பாட்டாளி மக்கள் கட்சி’ இத்தனையையும் அரங்கேற்றி வருகின்றது.
அப்படி என்னதான் பிரச்சனை பா.ம.க.வுக்கு? அல்லது ராமதாசுக்குத்தான் என்ன ஆயிற்று?
இந்த ஒற்றை கேள்வியின் விடையில்தான், இன்றைய பிரச்சனைகளின் மொத்த சாரமும் அடங்கியிருக்கிறது.
பா.ம.க.வுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரிய வேண்டுமெனில், முதலில் பா.ம.க.வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவரி கிராமத்தில் சஞ்சீவிராயக் கவுண்டர் – நவநீத அம்மாள் தம்பதியருக்கு, 1939 ஜூலை 25 இல் மகனாகப் பிறந்தார் ராமதாஸ். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற அவர், 1967 இல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். பணி நிமித்தமாக கிராமங்கள் தோறும் பயணித்த அவர், தன் சமூக மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொண்டார். பின்னர் அம்மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்கும் ஒருவராக உருமாறினார்.
1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னியர் சங்கத் தலைவர்களையும் தன் இல்லத்தில் ஒன்று கூட்டி, ஒரே சங்கமாக கட்டமைத்து, அக்கினி குண்ட அடையாளத்துடன் மஞ்சள் நிறத்தில் கொடியை வடிவமைத்து, வன்னியர்களை ஒருமுகப்படுத்தினார். 1980 முதல் 1985 வரை வன்னியர் வாழும் பகுதிகள் எங்கும் பயணித்து தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு சங்கத்தை வலுப்படுத்தினார். வன்னியர்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். பின்னர் அக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்.
சென்னை கோட்டை நோக்கி பட்டை நாமம் அடித்து போராட்டம்; சாலை மறியல் போராட்டம்; முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம்; ரயில் மறியல் போராட்டம் என 1986 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை போராட்டம் தீவிரம் பெற்றது. பின்னர் கும்மிடிப்பூண்டியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதைத் தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் ஏழுநாட்கள் தொடர் சாலை மறியல் நடத்தப்பட்டது. மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. வடமாவட்டங்கள் தனித்தீவுகளாயின. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டதன் விளைவாக 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த வன்னியர்களுக்கு வேலை கேட்டு 1988 இல், நிலம் மீட்பு போராட்டத்தை நடத்தியது வன்னியர் சங்கம். அப்போராட்டத்தின் விளைவாக வன்னியர்கள் 432 பேருக்கு வேலை கிடைத்தது. வன்னியர் சங்கத்திற்கு கிடைத்த இந்த வெற்றி, அம்மக்களை ராமதாசின் பக்கம் திருப்பியது. அவர் பின்னால் சென்றால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை வன்னியர்களிடம் விதைத்தது.
வன்னியர் சங்கத்தின், இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை எதிர்த்து 1989 இல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ். ‘ஓட்டுப் பொறுக்கிகளே! உள்ளே நுழையாதீர்கள்’ என்ற முழக்கத்துடன் காட்சியளித்தன வன்னியர் பகுதிகள். பல கிராமங்களில், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சாய்க்கப்பட்டன. இதனால் அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அடக்குமுறைச் சட்டங்கள், கைதுகள், சிறைகள் என ஒவ்வொன்றாய் வரிசைகட்டி நின்றன.
‘இனி சங்கமாய் இருந்தால் சரிப்பட்டு வராது’ என்பதை உணர்ந்த ராமதாஸ், புதிய அரசியல் கட்சியே தீர்வு என முடிவு செய்தார். 1989 ஜூலை 16 அன்று சென்னை மெரினா சீரணி அரங்கில் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ தொடங்கப்பட்டது. அந்த நாள் முதல் அக்கட்சிக்கு ஏறுமுகம் தான்.
1989 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்ட 107 சாதிகளுடன் வன்னியர் சமூகத்தையும் இணைத்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டாலும் இந்த உள்ஒதுக்கீடே ராமதாசின் முயற்சியினால் விளைந்ததுதான் என்ற எண்ணம் வன்னியர்களிடம் ஆழ வேரூன்றியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது.
1991 சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையில் அ.தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்ற வேளையில், தன்னந்தனியாக தேர்தலைச் சந்தித்த பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பா.ம.க.வின் முதல் சட்டப்பேரவை உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை பட்டத்து யானையில் அமரவைத்து பேரவைக்கு அனுப்பினார் ராமதாஸ்.
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிமடம், தாராமங்கலம், எடப்பாடி, பெண்ணாகரம் ஆகிய நான்கு தொகுதிகளையும், புதுவையில் ஒரு தொகுதியையும் கைப்பற்றி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது பா.ம.க.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து நான்கு இடங்களில் வென்று முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்ததோடு, மத்திய அமைச்சரவையிலும் பா.ம.க இடம் பெற்றது.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்று, மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்களைப் பெற்றது பா.ம.க.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 20 இடங்களைக் கைப்பற்றி, தமிழக அரசியலில் தனிப்பெரும் கட்சியாக அடையாளப்பட்டது பா.ம.க.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று, சிதம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் வென்றதோடு புதுவை நாடாளுமன்றத் தொகுதியையும் பா.ம.க கைப்பற்றியது. ராமதாஸ் மகன் அன்புமணி நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ரயில்வேதுறை இணையமைச்சர் பதவியும் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டது.
2006 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு தமிழகத்தில் 18 இடங்களையும், புதுவையில் இரண்டு இடங்களையும் வென்றது பா.ம.க. கலைஞர் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்ததன் மூலம், ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க கவனம் பெற்றது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, 7 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, அனைத்திலும் மண்ணைக் கவ்வியது. 2011 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 31 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம். அப்படி என்னதான் பிரச்சனை பா.ம.க.வுக்கு? இதுதான் பிரச்சனை; இந்த தோல்விகள்தான் பிரச்சனை. தேர்தல் தோல்விகள் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் கட்சியும் ஆட்டம் கண்டு வருவது ராமதாசை நிலைகுலையச் செய்துள்ளது.
வடமாவட்டங்களில் தனிப்பெரும் செல்வாக்குடன் அரசியல் நடத்திவந்த ராமதாசுக்கு முதல் தலைவலி விஜயகாந்தால் வந்தது. பா.ம.க.வுக்கு பெரிய அளவில் நிதி ஆதாரமாக விளங்கிய தெலுங்கு பேசும் வன்னியர்கள், மொழி அடிப்படையில் தே.மு.தி.க.வில் அடைக்கலமாயினர். அந்த எரிச்சலால்தான் செல்லுமிடமெல்லாம் விஜயகாந்தை காய்ச்சி எடுத்தார் ராமதாஸ்.
அடுத்த தலைவலி வேல்முருகனால் வந்தது. அவர் தொடங்கிய ‘தமிழக வாழ்வுரிமை கட்சி’, பா.ம.க.வைப் பெரிய அளவில் பாதித்தது. வேல்முருகனைப் போல ஏற்கெனவே முன்னணி தலைவர்கள் பலர் பா.ம.க.விலிருந்து விலகியுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன் விலகினார்; தலித் எழில்மலை விலகினார்; தீரன் விலகினார்; குணங்குடி ஹனீபா விலகினார்; பு.தா.இளங்கோவன் விலகினார்.
இப்படி எத்தனையோ பேர் விலகிச் சென்றபோதும் அமைப்பு ரீதியாக அது பா.ம.க.வை பாதிக்கவில்லை. ஆனால், வேல்முருகனோ ஆணிவேரையே அசைத்து விட்டார். கடலூரில் அவர் கூட்டிக் காட்டிய மாநாடு அவரது வலிமையை வெளிப்படுத்தியது. வேல்முருகன் பெயரைக் கேட்டாலே ரத்தக் கொதிப்பு வரும் அளவுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார் ராமதாஸ்.
தேர்தல் பின்னடைவு ஒருபுறம், விஜயகாந்த்; வேல்முருகன் கவலை மறுபுறம் என நிம்மதி இழந்து நிற்கும் ராமதாசுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது 2014 நாடாளுமன்றத் தேர்தல். எப்பாடுபட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். குறைந்தது இரண்டு தொகுதிகளாவது வென்றால்தான் மாம்பழம் சின்னத்தையும், கட்சியின் அங்கீகாரத்தையும் தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டு அவருக்கு. 1989 இல் கட்சி தொடங்கிய நாள் முதல் 2009 வரை சுமார் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தொய்வின்றி வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த ராமதாசுக்கு, இது வாழ்வா சாவா பிரச்சனை.
தனியாகத் தேர்தலை சந்தித்தால் என்ன நடக்கும் என்பது ராமதாசுக்கு நன்றாகவே தெரியும். 2009 தேர்தலிலும் 2011 தேர்தலிலும் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை கணக்கில் கொண்டு, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தம்மிடமிருந்து விலகி நிற்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்ற நிலையில், தம்மோடு அணிசேர யாருமே முயற்சிக்காதது அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. என்ன செய்தால் அவர்கள் நம்மை மதிப்பார்கள்; பழையபடி பேரத்திற்கு அழைப்பார்கள் என்று இரவு பகலாக சிந்தித்து ஒருவழியாக அவர் கண்டுபிடித்ததுதான் காதல் நாடகம்; கடத்தல் திருமணம்.
‘இந்துக்களுக்கு ஆபத்து’ என்று பிரச்சனையை எழுப்பி, எளிய மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரத்தை வென்றது பா.ஜ.க. அதே வழியில் இப்போது ‘பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு’ எனும் பிரச்சனையைக் கிளப்பி, ஒவ்வொரு பெற்றோரின் உணர்வுகளையும் தூண்டி அறுவடை எடுக்கத் துடிக்கிறது பா.ம.க.
தர்மபுரி தாக்குதல்களுக்குப் பின் ராமதாஸ் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் கவனிக்கத்தக்கவை. ‘தலித் இளைஞர்கள் வன்னிய பெண்களை இழுத்துக் கொண்டு ஓடிப்போகிறார்கள்’ என முதலில் கொளுத்திப் போட்டார்; அவரைத் தவிர மற்ற எந்த வன்னியர் அமைப்பும் அதைக் கண்டுகொள்ளவில்லை. உடனே ‘தலித் – தலித் அல்லாதவர்’ என்று ரூட்டை மாற்றினார்; லட்டர் பேடு சாதி சங்கங்களை தவிர பெரிய அளவில் வேறு எவரும் வரவில்லை.
‘முஸ்லிம்களே தலித்களால் உங்களுக்கு ஏற்படாத பாதிப்பா?’ என்று போகிற போக்கில் சொல்லிப் பார்த்தார்; எந்த முஸ்லிம் இயக்கமும் அதை காதில் வாங்கவில்லை. தலித் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்தியவர், பின்னர் ‘ஒழுக்கமான தலித் தலைவர்களோடு மட்டும் உறவாடுவேன்’ என்று புதிய அறிவிப்பு செய்தார். அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அல்ல; வன்முறைக் கும்பல்’ என்று விஷயத்திற்கே வந்து விட்டார்.
ராமதாசுக்கு இப்போது பெரிய நெருக்கடியே திருமாவளவன்தான். தேர்தல் தோல்வியால்; விஜயகாந்தால்; வேல்முருகனால் எல்லாம் ஏற்பட்ட நெருக்கடியை விட இது பெரிய நெருக்கடி. தலித்துகளை எதிரிகளாகக் காட்டி சாதி இந்துக்களை தூண்டிவிடுவது என்று அவர் போட்ட கணக்கு பலித்தது. ஆனால், அதற்கு தலித்துகள் எதிர்வினையாற்றுவார்கள்; அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல்வரை நெருப்பை அணையாமல் பாதுகாக்கலாம் என்ற அவரது எதிர்பார்ப்பு பொய்த்தது; அதைப் பொய்யாக்கியவர் திருமாவளவன்.
சேரியைக் கொளுத்தினால், பதிலுக்கு தலித்துகள் வன்னியர் குடியிருப்புகளைத் தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். தலித் இளைஞர்களைக் கொன்றால், பதிலுக்கு வன்னியர்கள் தரப்பில் சில தலைகள் உருளும் என்று எதிர்பார்த்தார். தலித் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட வன்னிய பெண்களின் பட்டியலை வாசித்தால், பதிலுக்கு சாதி இந்துக்களால் கைவிடப்பட்ட தலித் பெண்களின் பட்டியலை வாசிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். தலித் அல்லாதவர்களை ஒன்று திரட்டினால், தலித் அமைப்புகள் எல்லாம் சாதி அடிப்படையில் ஒன்று திரண்டு எதிர்க்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இதில் எதற்குமே திருமாவளவன் இடம் கொடுக்கவில்லை.
தர்மபுரி தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் எங்குமே நடைபெறவில்லை. காஞ்சிபுரம் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி அம்பேத்வளவன் படுகொலைக்கு பழிக்குப் பழியாக எவரும் கொல்லப்படவில்லை. சாதி இந்துக்களால் சூறையாடப்பட்டு கண்ணீருடன் வாழ்விழந்து நிற்கும் தலித் பெண்களின் பட்டியலைச் சொல்லி உணர்ச்சிகளைத் தூண்டவில்லை. தலித் அமைப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி ‘தலித் பாதுகாப்பு பேரவை’ ஏற்படுத்தவில்லை.
‘தலித் அல்லாத ஜனநாயக சக்திகள், பெரியாரிஸ்டுகள், இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள் ஆகியோரிடம் இந்தப் பிரச்சனையை விட்டு விடுகிறேன்; அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று நாகரிகமாக திருமாவளவன் ஒதுங்கிக் கொண்டார். அதேசமயம் பாதிக்கப்பட்ட தலித்துகளின் நியாயத்திற்காக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார்.
‘அவர் அந்தப் பக்கம் வலை விரித்து விட்டு, இந்தப் பக்கம் கல்லெறிகிறார்; வலையில் போய் மாட்டிக் கொள்ள நான் என்ன முட்டாளா?’ என்று அறிவுப்பூரவமாக கேட்டார் திருமாவளவன். ஒருபோதும் எதிரியின் திட்டத்திற்கு இரையாகிவிடக் கூடாது என்று சொல்லி, தன் சமூக மக்களை அவர் நெறிப்படுத்தினார். அதன் விளைவாகவே இத்தனை வன்முறைகளுக்குப் பின்னாலும் தமிழகம் பற்றி எரியாமல் இருக்கிறது.
வன்முறையாளர்கள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு, பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம், இன்று ஒரு தலைவனால் பெரும் மரியாதையைப் பெற்றுள்ளது. தலித்துகளின் சகிப்புத்தன்மையையும், அமைதியையும், ஆயுதமின்றி அறிவால் அவர்கள் கொடுத்துவரும் பதிலடியையும் எல்லோருமே இன்று வியந்து பார்க்கிறார்கள்.
தன் கனவுகளும், திட்டங்களும் அவற்றை அடைவதற்காக, தான் போட்டு வைத்திருந்த சதிகளும் காலாவதியாகி வருவதைக் கண்டு ‘இனி என்னதான் செய்வது’ என்று கைபிசைந்து நிற்கிறார், ராமதாஸ்.
[ சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2013 இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை ]