திருமணம் ஆயிரங்காலத்து பயிரல்ல!
ஒழுக்கம் குறித்து அளவளாவல் நடக்கிறது. ஒழுக்கம் நடுவு நிலைக்குரியது. ஒரு ஓரப்பார்வையுடனான கருத்து கடும் பாவத்தை உருவாக்கும். கற்பனைவாதம் எழுப்பி பெண்ணுக்கு ஒழுக்கம் போதிப்பதன் முன்பாக, பெண்களுக்கான வாழ்க்கைச் சூழலை உருவாக்கித் தந்து, பொருளாதாரப் பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டு பேசலாம்.
கணவன் இல்லை. 2, 3 பெண் மகள்களுடன் தனித்திருந்து உணவு, உடை, வீட்டு வாடகை, நோய் செலவுகளுக்கான தேடலுக்கு வெளிக்கிளம்பியே ஆகவேண்டிய பெண்களுக்கு சமூகம் பொறுப்பேற்பதில்லை. ஹிஜாப் அணிந்த நிலையில், ஷேர் ஆட்டோவில் அன்னிய ஆண்களுடன் அமர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்லவும். வீடு திரும்பவும். எந்த பாதுகாப்பும் சமூகம் ஏற்படுத்தவில்லை.
”இப்படிச் செய்யலாமா? இஸ்லாம் என்ன கூறியிருக்கிறது”? குரலெழுப்புகின்றனர். இஸ்லாம் கூறுவதை முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை. இஸ்லாம் கூறியதை உள்வாங்கிய(!) முஸ்லிமிடம் எந்த நற்செயலுமில்லை. நஷ்டப்படுவள் பெண்ணாக இருக்கிறாள்.
கருவைத் தந்து தவிக்க விட்டு ஓடிவிடுகின்றனர். அனைத்துச் சுமைகளும் அவள் தலையில் வீழ்கிறது. சோற்றுப் பிரச்சினையை தீர்த்துவிட்டு ஒழுக்கம் குறித்து பேசலாம். பெண் வாழ்வுக்குரிய பாதுகாப்பு எதுவுமே இல்லாமல் ஒழுக்கம் குறித்து உரையாடுதல் கள்ளத்தனம். கற்பனைவாதம்.
இஸ்லாம் வாழ்க்கைக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. மூன்று தடவை சலாம் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழையனும். நபிகளார் அறிவுரை. இரவு 9 மணிவரை செல்போனில் உரையாடிக் கொண்டு தெருவில் பெண்கள் சுற்றக்கூடாது. ஆண்கள் மட்டும் ஊதியம் ஈட்ட வெளிவரணும். பெண்கள் உள்ளிருந்து குடும்பத்தை காபந்து காணணும். பெண்கள் கண்டிப்பாக வேலைக்குச் செல்லக் கூடாது. கொள்கை அளவிலாது ஏற்கனும். கால நகர்வில் கோட்பாடாக்கலாம்.
தமிழ்ச் சமூகம் நன்றானால் முஸ்லிம் சமூகமும் நன்றாகும். தனித்து முஸ்லிம்கள் மட்டும் சிறக்க வியலாது. வெகுஜனத் தமிழ் மக்களின் தரமே முஸ்லிம் சமூகத்தின் தரம். பிரித்துப் பார்க்கவியலாது. கைர உம்மத் கூறிக் கொள்வது பித்தலாட்டம். பெண்களுக்கு- 18 வயது பூர்த்தியாக வேண்டுமென்பது நடப்பு காலத்துக்கு ஒவ்வாதது. அனைத்துப் பண்புகளையும், இரகசியங்களையும், வாழ்க்கையையும் தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் 13 வயதிலேயே கற்பித்தாகிவிட்டது.
”திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்” பழம் சொல்லாடல் இன்று பொருந்தாது. பொருந்தமாட்டார்கள். விரும்பாத நிலையில் இரு பாலினத்தாரும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். 30 வயதில் பெண்ணுக்கு கர்ப்பப்பை கீழிறங்கி விடுகிறது. 40 வயதில் ஆணுக்கு கிட்னி செயலிழக்கிறது. நீரிழிவு நோய், மூட்டுவலி, மூலம், தைராய்டு தாக்குதலுக்கு ஆளாகி துணையை இழக்கின்றனர். சிலருக்கு 10 வருட வாழ்வு கிடைக்கிறது. வேறு சிலருக்கு 20 வருட வாழ்வு அமையலாம். இது எதார்த்தம். 80, 60 வருடம் சேர்ந்து நிம்மதியாக இணைபிரியாது நோயற்று வாழ்ந்தார்கள் கூறுவதற்கு, இன்று வழியில்லை.
திருமணச் செலவு. ஆடம்பரச் செலவுகள் முற்றிலுமாக, கண்டிப்பாகக் குறைக்கப்படவேண்டும். அலி ரளியல்லாஹு அன்ஹு, ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியவாறு நிக்காஹ் நிறைவேறவேண்டும் மிக எளிமையாக. தேநீர், மிக்ஸர் கொடுத்து அஸர், மஹ்ரிபு, இஷா நேரத்திருமணங்களுக்கு சமூகம் ஒத்திருக்கனும். மண்டப வாடகை, வீடியோ, அலங்காரச் செலவுகள், ஒருநாள் கூத்துக்கு 15 ஆயிரம் கோட்டு சூட்டு உடை. 25 ஆயிரம் பணத்தில் பட்டுப்புடவை. பிரியாணி, உப உணவு கடிக்க, பரணில் மூட்டை கட்டி இடும் சீர்வரிசைப் பாத்திரங்கள் இவையனைத்துக்கும் செலவிடக்கூடிய தொகையை பெண்ணின் பொருளாதாரப் பாதுகாப்புக்காக நிலம், வீடு, மனை, நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்யலாம். பெண் பெயரில். எதிர்காலப் பாதுகாப்புக்கு உதவும்.
குமரிப் பெண்களுக்குத் தரும் முக்கியத்துவம், கண்ணியம், மரியாதை, விதவைகளுக்கு, முதிர் பெண்களுக்கும் தரப்படனும். மணமுடிக்கனும். வெறுத்தல், ஒதுக்குதல், புறக்கணித்தல் நிகழ்த்தினால், அல்லாஹ்வின் லஹ்னத் இறங்கும் தண்டனைக்குத் தள்ளப்படுவோம்.
பொருளாதார வசதி, உடல் வலிமை உள்ளவர்கள் கட்டாயம் பலதார மணம் செய்வதில் முனைப்பு காட்டனும். ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்திடமும் தமது ‘மஹல்லாவில் வாழும் திருமணமாகாத ஆகாத இளம் ஆண்கள். குமரிப் பெண்கள். ஆண், பெண் விதவைகள் குறித்த முழுமையான தகவல்கள் கைவசமிருக்கனும். திருமணம் ஆகாத ஆண், பெண்ணுக்கு மஹல்லா மஸ்ஜித் சிபாரிசு செய்யனும். திருமணத்துக்குப் பிந்தைய பிணக்குகள், தலாக், குலா போன்றவைகளை போலீஸ் ஸ்டேஷன், வழக்காடுமன்றம், தொலைக்காட்சி சேனல்களுக்கு கொண்டு செல்லக்கூடாது. ஜமாத்துக்குள்ளாகத் தீர்த்துக் கொள்ளனும்.
ஒரு பொருளை உறபத்தி செய்யும் இயந்திரம் எவ்வளவு பணி செய்யும். எத்தனை நாட்கள் உழைக்கும் அறிந்து தயாரிக்கின்றனர் பொறியாளர்கள். அவர்கள் வரைமுறைப் படுத்திய அளவே இயந்திரம் உழைக்கும், பயனளிக்கும். அவர்கள் அறிவுறுத்தியவாறு கையாளனும்.
அல்லாஹ் குர்ஆனைத் தயாரித்து அதற்குள் மனிதன் வாழ்வதற்கான திட்டங்களை வகுத்து நிரப்பி தந்திருக்கிறான். அவன் திட்டத்தை முழுமையாக, பூரணமாக ஏற்றல். செயலில் காட்டுதல். அல்லாஹ் தத்துவம் உள்வாங்குதல், நம்புதல் கட்டாயக் கடமை. குர்ஆன் கூறும் திட்டத்துக்கு மாற்றமாக செயல்பட்டு வருத்திக் கொண்டால் குர்ஆன் பொறுப்பேற்காது. குர்ஆன் கூறும் கருத்து சரியானது. மனிதன் கண்டுபிடிக்கும் உபாயம் தவறானது. உணர்வதும், உள்ளேற்பதும், சாத்தியப்படுத்துவதும் தீர்வுக்கு வழியமைக்கும்.
-ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2013
source: http://jahangeer.in/?paged=5